Published:Updated:

“வாழ்க்கை ரொம்ப மீனிங்ஃபுல்லா இருக்கு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“வாழ்க்கை ரொம்ப மீனிங்ஃபுல்லா இருக்கு!”
“வாழ்க்கை ரொம்ப மீனிங்ஃபுல்லா இருக்கு!”

இரா.கலைச் செல்வன், படம்: எஸ்.குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி

`சானியா எல்லாம் சும்மா ஃபேஷன்தான்',  `அவருக்கு இனி டென்னிஸ் கரியரே இல்லை' எனப் பலரும் கிண்டல் அடித்தபோதுதான், இரட்டையர் பிரிவில் இறங்கி, சர்வதேச லெவலில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் சானியா மிர்ஸா. இன்று சானியா வாங்காத இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களே இல்லை. சென்னை வந்திருந்த சானியாவைச் சந்தித்தேன்.

`` `ஒற்றையர் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை’ என நீங்கள் எடுத்த முடிவு உங்கள் டென்னிஸ் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எந்தத் தருணத்தில் இந்த முடிவை எடுத்தீர்கள்? இதற்காக எப்போதாவது வருத்தப்பட்டது உண்டா?''

``நான் எடுத்த முடிவு சரியானதா எனத் தெரியாது. ஆனால், எடுத்த முடிவை நான் சரியாக்கிக் கொண்டேன். என்னை மாதிரி வேறு யாருக்காவது மூன்று அறுவைசிகிச்சைகள் நடந்திருந்தால், அவர்கள் எழுந்து நடக்கவே சிரமப் பட்டிருப்பார்கள். ஆனால், நான் எழுந்து ஓட வேண்டும்; மீண்டும் விளையாட வேண்டும் என நினைத்தேன். பல மாதங்கள் யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். அதன் பலனாக இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இடத்துக்கு வந்தேன். அந்த வெற்றி என் முடிவைச் சரியாக்கியது.''

“வாழ்க்கை ரொம்ப மீனிங்ஃபுல்லா இருக்கு!”

``மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து உலகின் நம்பர் 1 ஜோடி என்ற உச்சம் தொட்டீர்கள். ஏன் திடீரென அவரைவிட்டுப் பிரிந்தீர்கள்?''

“மார்ட்டினா, மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனை. டென்னிஸ் உலகில் எங்கள் பார்ட்னர்ஷிப் அளவுக்குப் பெரிய வெற்றிகளைக் குறைந்த காலத்தில் யாரும் செய்யவில்லை. அவரோடு சேர்ந்து விம்பிள்டன் வென்ற நாளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. என்ன செய்ய... சில `டெர்ம்ஸ்' சரியாக வரவில்லை. பிரிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம். ஆனால், எங்களுக்குள் பெர்சனலாக எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போதும் நேரில் சந்தித்தால் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வோம்.''

``சானியாவுக்குப் பிறகு டென்னிஸில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எவரும் வரவில்லையே?''

“நிறைய இளம்பெண்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் என்னுடைய அகாடமியில் பயிற்சிபெறும் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தொம்பரே,  கர்மன் கவுர் என்ற மூன்று பேருமே அடுத்த தலைமுறை டென்னிஸ் வீராங்கனைகளாக  விரைவில்  உருவெடுப்பார்கள்.''

``மேரி கோம், சாய்னா, சிந்து, தீபா, சாக்‌ஷி என இந்திய விளையாட்டுத் துறையில் பெண்கள் தொடர்ந்து சாதிக்கிறார்களே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

“20 ஆண்டுகளுக்கு முன்பு நான் டென்னிஸ் விளையாடத் தொடங்கியபோது, ‘உங்க பொண்ணை விளையாட அனுப்பாதீங்க. நிறம் கறுத்துட்டா எதிர்காலத்தில் கல்யாணம் பண்ணிவைக்கிறது கஷ்டம்’னு சொன்ன ஊர் இது. இங்கிருந்து இவ்வளவு பெண்கள் வந்து சாதிக்கிறார்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஜிம்னாஸ்டிக்ஸ் இந்தியாவில் கவனிக்கப்படாத ஓர் விளையாட்டு. அதிலிருந்து திடீரென தீபா கர்மாக்கர் உருவாகிறார். மல்யுத்தத்தில் ஒரு சாக்‌ஷி மாலிக் உருவாகிறார். இதுபோன்ற வெற்றிக்கதைகளை வைத்து வெறும் படங்கள் மட்டும் எடுக்காமல், அந்த விளையாட்டுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.”

``டென்னிஸ் வீராங்கனையாக மட்டும் அல்லாமல் இன்னமும் ஒரு ஃபேஷன் ஐகனாகவும் நீங்கள் பார்க்கப்படுகிறீர்களே?’’

``என் உடையையும் உடல் அழகையும் பாராட்டுவது மகிழ்ச்சிதான். ஆனால், அது எனக்கு முக்கியம் அல்ல. என் விளையாட்டுத் திறனுக்காகப் பாராட்டுக்களைப் பெறுவதுதான் எனக்குப் பெருமை. `என்ன மாதிரியான கேம் ப்ளான் வெச்சிருக்கீங்க, எப்படி விளையாடப் போறீங்க..?' என்ற கேள்விகளை விடவும், `அடுத்த மேட்ச்க்கு என்ன டிரெஸ் போடப் போறீங்க, என்ன கலர்..?' என்பன போன்ற கேள்விகளையே அதிகம் எதிர் கொள்கிறேன். என்னிடம் கேட்பது ஓகே-தான். ஆனால், இதே கேள்விகளை ஒரு ஆணைப் பார்த்து ஏன் யாரும் கேட்பதில்லை? பெண் இங்கு இன்னும் ஒரு போகப்பொருள்தான்.''

``உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்?''

``ரொம்பவே நல்லா இருக்கார். டென்னிஸில் என் வெற்றிகளுக்காக நான் தொடர்ந்து போராடுகிறேன். கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை அடைய மாலிக் போராடிக் கொண்டிருக்கிறார். ஒருவருக்கொருவர் துணையாக நின்று, விளையாட்டு வாழ்க்கையை சீரியஸாக ஆடிக் கொண்டிருக்கிறோம். கூடவே, அப்பா, அம்மா, தங்கச்சி என அழகான மனிதர்கள் சுற்றியிருக்க, வாழ்க்கை ரொம்ப மீனிங்ஃபுல்லாக இருக்கிறது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு