Published:Updated:

குடியால் அழிந்தது போதும்! - திறக்காதே மூடு

விகடன் விமர்சனக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியால் அழிந்தது போதும்! -  திறக்காதே மூடு
குடியால் அழிந்தது போதும்! - திறக்காதே மூடு

#BanTasmacஜெயராணி, படங்கள்: க.தனசேகரன், தே.சிலம்பரசன், ரமேஷ்

பிரீமியம் ஸ்டோரி

குன்றத்தூரில் வாழும் கெளரிக்கு, மூன்று பெண் குழந்தைகள். வீட்டு வேலைகள் செய்து மகள்களை வளர்த்தெடுத்தார். 20 வயதான மூத்த மகள் ராஜேஸ்வரியை, மதுரவாயலைச் சேர்ந்த 26 வயதான பாஸ்கருக்கு மணமுடித்தார். மணமுடிக்கும் தருவாயிலேயே பாஸ்கருக்குத் தீராதக் குடிப்பழக்கம் இருந்தது.

20 வயதுடைய ஓர் இளம்பெண்ணுக்கு, திருமணம் பற்றி என்னென்னவோ கனவுகள் இருக்கும். ஆனால், தினசரி அடிகளும் உதைகளும், பாலியல் துன்புறுத்தல்களும், வசவுகளுமே வாழ்வனுபவமாகக் கிடைத்தன. `குடிக்கிறவன் அடிக்கத்தான் செய்வான். பொம்பள அதை எல்லாம் தாங்கிக்கிட்டுத்தான் குடும்பம் நடத்தணும்’ என்ற அறிவுரைகளுக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. பகலும் இரவுமாகக் குடித்துக்கிடந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், பிள்ளைகளோடு அம்மா வீட்டுக்கு வருவதும், பிறகு மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. திருமணம் முடிந்த நான்காவது ஆண்டில் அதாவது, கடந்த டிசம்பர் 30-ம் தேதி நள்ளிரவு, கொடுமையான தாக்குதலைத் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார் ராஜேஸ்வரி.

70 சதவிகிதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கே நாள்களில் மகள் மரித்தபோது கௌரி வெடித்து அழுத அழுகை, சொற்களுக்குள் அடங்காத துயரம். `குடிகாரக் கணவனின் கொடுமைகளாலேயே தன் மகள் தீக்குளித்தாள்!' எனப் பதிவுசெய்ய, அவர் காவல்நிலையத்துக்கு அலைந்தார். ஆனால், `மருத்துவமனையில்தான் பதிவுசெய்ய வேண்டும்' எனச் சொல்லி, படிப்பறிவற்ற அவரைத் திசை திருப்பினார்கள். ராஜேஸ்வரியின் அநியாயச் சாவு, பதிவுசெய்யப் படாமலேயே முடிந்தது. ஆனால், கௌரியின் துயரம் முடியவில்லை. மகளைப் பறிகொடுத்த முப்பதாவது நாளில் மர்மமாக இறந்துகிடந்தார் மருமகன் பாஸ்கர். இந்த மரணமும் அதற்கான காரணமும் எதிலுமே பதிவுசெய்யப்படவில்லை. மனைவி இறந்த துக்கத்தில் பாஸ்கரன் குடித்தே இறந்துவிட்டதாக, பச்சாத்தாபத்தோடு சொல்லப்பட்டது. தாயையும் தந்தையையும் ஒரே நேரத்தில் இழந்து, மூன்றரை வயது மற்றும் ஒன்றரை வயதேயான குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றன.

குடியால் அழிந்தது போதும்! -  திறக்காதே மூடு

இது கௌரியின் கதை. கெளரியைப்போல, பெற்ற பிள்ளையின் சாவைப் பார்க்கும் பெருந்துயரத்தை நெஞ்சில் ஏந்தும் இந்தத் தலைமுறைப் பெற்றோரின் கதை. மதுப்பழக்கம், `குடிநோய்' ஆக மாற்றப்பட்ட இந்த 15 ஆண்டுகளில், தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் `பெருமைகள்’ ஏராளம். குடிப்பவர் எண்ணிக்கையிலும் குடிக்கும் அளவிலும் முன்னிலை வகிக்கிறது தமிழகம். இந்தியாவிலேயே தற்கொலைகளில் இரண்டாம் இடம். சாலை விபத்துகளில் முதல் இடம். இளவயது மரணங்களில் முதல் இடம். கணவனை இழந்த 30 வயதுக்குட்பட்ட பெண்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு.

இங்கே பெண்களுக்கு எதிரான  வன்முறைகளில் 85 சதவிகிதத்துக்கு குடியே காரணம். குடித்துச் சாகிறவர்களின் எண்ணிக்கையும் இங்குதான் அதிகம். ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர். ஆனால், கௌரியின் கதையைப்போல மறைக்கவும் திரிக்கவும்பட்டவை இந்தக் கணக்கிலேயே சேராது. தற்கொலை என்றால் எதற்கான தற்கொலை, விபத்து என்றால் எப்படியான விபத்து என்பதற்கான உண்மையான காரணங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. குடியால் நிகழும் தற்கொலைகள், குடும்பத் தகராறில் மனமுடைந்த மரணங்களாக்கப் படுகின்றன; வாகன விபத்துகள்/சாலை மரணங்கள், இன்ஷூரன்ஸுக்காகவும் குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றவும் ராஷ் டிரைவிங் என மாற்றிப் பதிவுசெய்யப் படுகின்றன. குடியால் மாரடைப்பு, குடியால் ஸ்ட்ரோக், குடியால் கல்லீரல் நோய் போன்றவை, காரணம் மறைக்கப்பட்டு வெறும் நோய் தாக்குதலாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அரைகுறையான கணக்குகளே குரல்வளையைப் பிடிக்கும்போது, நேர்மையான ஆய்வுகள் செய்யப்பட்டால் குடியால் தமிழகம் அடைந்திருக்கும் இழப்புகள்  நூற்றாண்டு காலத்துக்கு ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுதான் பின்னணி. அதிலும் பெண்கள் திரண்டுவந்து போராடுவதன் காரணம் அவர்கள் படும் பாடும், அடையும் இழப்புகளும்தான்! எந்த வீடும் எந்தத் தருணத்திலும் இழவு வீடாக மாறக்கூடிய அவலம் பெருகிநிற்கும் சூழலில் மதுச்சீரழிவு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் அமைதி காப்பது சகிக்க முடியாததாக இருக்கிறது. அதுசரி, சட்டமன்றத் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ வந்தால் ஓட்டு வாங்க `மதுவிலக்கு' என்ற முழக்கம் பயன்படும். இப்போது பேசுவதால் அவற்றுக்கு என்ன லாபம்? ஆனால், மக்கள் போராட்டங்கள் அப்படியான லாபங்களை முன்வைத்து நடப்பதில்லை. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் சில ஆண்டுகளாகவே பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான சமீபத்திய காரணம் இது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் `நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை, 2017 - மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியபோது, சில மாநில அரசுகள், பல மது ஆலை உரிமையாளர்கள், பல டாஸ்மாக் உரிமம் பெற்றவர்கள் மற்றும் `குடி’மக்கள் ஆகியோர் கடுமையான அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும், நமது `நீதி’ அமைப்பின்மேல் இருந்த நம்பிக்கையில் இந்த மார்ச் 31-ம் தேதி வரையிலும் கால அவகாசத்தை நீட்டிக்கச் சொல்லி காத்துக் கிடந்தன. ஆனால், குடியால் பெருகும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு `மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கெடுபிடி செய்யவே, தமிழக அரசு திணறத் தொடங்கியது.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க, டாஸ்மாக் கடைகளைத் திறப்பது, பார்களுக்கு டெண்டர் விடுவது, கமிஷன் பார்ப்பது போன்ற பொதுநலச் சேவைகளுக்கு மட்டுமே பழக்கப்பட்டவர்களுக்கு, `மூடுதல்’ என்பது முற்றிலும் புதிய அனுபவம். அதனாலேயே `மூடுதல்' என்ற வார்த்தையை `இடமாற்றம் செய்வது’ எனத் தமிழக அரசு அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது. `இடமாற்றம் செய்வது' என முடிவுசெய்த பிறகு, நெடுஞ்சாலை முழுக்க 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி, அவரவர் தலையிலா வைத்துக்கொள்ள முடியும் அல்லது காடுகளுக்குள் கொண்டுபோக முடியுமா?

`யார் செத்தால் எனக்கு என்ன, கொள்ளை லாபம் மட்டுமே குறிக்கோள்’ என்ற டாஸ்மாக்கின் டேக்லைனுக்கு நியாயம் செய்தாக வேண்டு மானால், நேராக அவற்றைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு `ஷிஃப்ட்’ செய்வதைத் தவிர, வேறு வழியில்லை. ஆகவேதான் குடியிருப்புப் பகுதிகளில் அவசர அவசரமாகக் கடைகளைத் திறக்க அது முனைப்புக் காட்டுகிறது. அத்துடன் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்டதாக மாற்றும் சதியும் நடந்தேறுகிறது.

ஆனால், என்ன செய்தாலும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க, மக்கள் முன்புபோல் இல்லையே! தமக்கு எதிரான அநீதிகளை அவர்கள் தட்டிக்கேட்கும் சமூக மாற்றம் நிகழ்ந்திருக்கும் காலகட்டம் இது. கடந்த சில ஆண்டுகளாகவே டாஸ்மாக்குக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்தப் புதிய போர்க்குணம் மதுவுக்கு எதிரான அவர்களின் பழைய வெறுப்புணர்வைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது.

குடியால் அழிந்தது போதும்! -  திறக்காதே மூடு

திருப்பூர் சாமளாபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது எனப் பெண்கள் கூடி போராடியதில், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சாமானியர்கள். குடியின் பாதிப்பை நேரடியாக அனுபவித்தவர்கள் அல்லது கண்ணாரக் கண்டவர்கள்.

கணவனால் துயரப்படும் பெண்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், ஏதும் அறியாத பிஞ்சுகள் குடி எனும் புதைகுழியில் சிக்கி, முளைக்கும் முன்னரே கருகுவதைத் தாய்மார்களால் ஏற்க முடியவில்லை. குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதன் காரணம், தம் பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற பரிதவிப்புதான்.

எந்த ஒரு சீரழிவும் வெகுகாலத்துக்குக் `கொண்டாட்ட முகமூடி'யை அணிந்து கொண்டிருக்க முடியாது. குடிநோயாளிகளைச் சகிக்க முடியாமல் குடும்பங்களும் சமூகமும் துயரப்பட்டு நிற்கின்றன. அந்த அவதியிலிருந்தே மக்கள் போராட்டங்கள் வெடிக்கின்றன. அறியாமை மிகுந்த சமூகம் எந்த அவலத்துக்கும் எதிர்வினையாற்ற தன் நல்வாழ்வை விலையாகக் கொடுத்து, அதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்ளும். தமிழக மக்கள், கடந்த சில ஆண்டுகளாகவே மதுச் சீரழிவுக்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். ஆனால், கடந்தமுறை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, அதைக் கண்டுகொள்ளவே இல்லை. 2015-ம் ஆண்டில் மதுத் தீங்குக்கு எதிராக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் பெண்களும் பொதுமக்களும் உக்கிரமாகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட ஜெயலலிதா `படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என அறிவித்தார். அதன்படி, கடந்த மே மாதம் 500 கடைகளை மூட உத்தரவிட்டார். மதுவிலக்கு குறித்து அவருக்கு அடுத்தடுத்து என்ன செயல்திட்டம் இருந்தது என நமக்குத் தெரியாது. எடப்பாடி முதல்வர் ஆனதும், மேலும் 500 கடைகள் மூடப்படும் என அறிவித்தார். ஆனால், உண்மையிலேயே டாஸ்மாக்கை மூடும் எண்ணம் கொண்ட அரசாக இருந்திருந்தால் நெடுஞ்சாலை கடைகளை மூட்டைகட்டி, குடியிருப்புப் பகுதிகளுக்குக் கொண்டுவர இவர்கள் முயற்சி செய்வார்களா?

ஜெயலலிதா அறிவித்தபடி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவேண்டிய அ.தி.மு.க (அம்மா) அரசு, புதிய தலைவலிகளை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறது. சசிகலா குடும்பத்தாரின் `மிடாஸ்' நிறுவன பிசினஸ் பாதிக்கப்படும் என்ற வருத்தம் அதற்கு. அதுமட்டுமல்ல, மக்கள் போராட்டங்களை காவல் துறையைக்கொண்டு ஒடுக்கி, தமிழகத்தை போலீஸ் ஸ்டேட்டாக மாற்றவும் முயல்கிறது. மக்களின் கால்களில் கை வைக்கவே காவலர்களுக்கு அதிகாரம் இல்லாதபோது, தலையைக் குறிபார்த்து அது தாக்குதல் நடத்துகிறது. மரியாதைக்குரிய காவல் துறையினர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், மக்கள் போராட்டங்கள் காவலர்களுக்காகவும் தான் நடக்கின்றன. காவலர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம்தானே! காவலர்களில் பலர் இளவயதில் மாரடைப்பால் இறப்பதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கும் மதுப்பழக்கம் காரணமாக இருப்பதை அவர்களால் வெகுகாலத்துக்கு மறைக்க முடியாது. தமிழகத்தில் உருவாக்கப்படும் குழப்படிகள், அரசு என ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை வலுக்கச்செய்யும் நிலையில், காவல் துறையின் கட்டவிழ்ப்பு அதற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.

அதனாலேயே `மூடு டாஸ்மாக்கை மூடு!’ என்ற மக்கள் போராட்டங்கள் அதிகரிக்கின்றன. அந்த முழக்கம் ஒன்றே மாற்றுத்தீர்வுகளை நோக்கி அரசை நகர்த்தும். மதுக்கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான நெருக்கடியை அது கொடுக்கும். தமிழக அரசின் மதுக்கொள்கையில், கள்ளச்சாராய ஒழிப்பு குறித்துதான் விளக்கப்பட்டிருக்கிறது. மெத்தனால் என்ற எரிசாராயத்தில் செத்தவர்களின் கணக்கை டாஸ்மாக் வழங்கும் எத்தனால் என்ற `நல்ல’ சாராயத்தை அளவில்லாமல் குடித்துச் செத்தவர் களின் எண்ணிக்கை மிஞ்சுகிறது. ஆனாலும், நல்ல சாராயத்துக்கான எந்த விதிமுறைகளும் கடந்த ஆட்சிகளில் புதிதாக வகுக்கப்படவில்லை.

அத்துடன் பொதுவான மதுக்கட்டுப் பாட்டுக்கான எந்த விதிமுறையும் அதில் இல்லை. 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுவை விற்கக் கூடாது, பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களிலிருந்து 50 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளை அமைக்கக் கூடாது என்ற இரண்டே விதிகள், போனால் போகட்டும் எனச் சேர்க்கப்பட்டன. இவை இரண்டுமே மதிக்கப் படவில்லை என்பதற்கான ஆதாரம்தான், சமூக வலைதளங்களில் அவ்வப்போது சுற்றுக்கு வரும் பள்ளிச் சீருடையுடன் மாணவ-மாணவிகள் டாஸ்மாக்கில் நிற்கும் புகைப்படங்களும் வீடியோக்களும்! குடியிருப்புப் பகுதிகளில் கடைகளை வைக்க எதிர்ப்பு பரவுவதால் பள்ளி கேன்டீனிலும் வழிபாட்டுத்தளங்களுக்குள்ளும் மதுவைக் கொண்டுபோனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

குடியால் அழிந்தது போதும்! -  திறக்காதே மூடு

பல தன்னார்வ இயக்கங்கள், மதுக்கட்டுப் பாட்டுக் கொள்கைக்கான மாதிரி வரைவை பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளன. டாஸ்மாக்கை மூடு என்பதோடு சேர்த்து மக்கள் பல கோரிக்கைகளை முன்வைக்கவேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது, குடிமுறிவு மற்றும் மறுவாழ்வு மையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவது.

இரண்டாவது கோரிக்கை, மதுத்தீங்கு குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை முடுக்கிவிடுவது. தமிழகக் குடிகாரர்களில் 40 சதவிகிதம் பேர் படிப்பறிவு குறைந்த அடித்தட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மதுத்தீங்கு குறித்த அறிவை இதுபோன்ற கட்டுரைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு நேரடியாகப் போய் சேரும் வகையில் வானொலி, சுவரொட்டிகள், தொலைக்காட்சி ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து புதிதாகக் குடிக்க வருபவர்களை, குறிப்பாக பருவ வயதினரைத் தடுக்கும் வேலையை அரசு தொடங்க வேண்டும். மது குடித்தால் கேடு உண்டாகும் என்பதை, பாட்டிலை வாங்கிப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் படுமோசமான நிலையே நிலவுகிறது. பெற்றோரின் கண்ணீரையும் மனைவியரின் கோபத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பருவ வயதினரையும் இளைஞர்களையும் டாஸ்மாக்கின் பக்கம் போகாமல் தடுக்கும் வழிகள் எதுவுமே நம்மிடம் இல்லை. மது விற்பனையில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் அரசு, குடிநோய் சிகிச்சைக்கு சில நூறு கோடி ரூபாய் ஒதுக்கும் அரசு, மதுவுக்கு எதிரான விழிப்புஉணர்வுப் பிரசாரத்துக்கு அரசு ஒதுக்கியிருக்கும் நிதி வெறும் ஒரு கோடி ரூபாய்தான்.

எயிட்ஸ், பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், காலரா, டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா என விதவிதமான வைரஸ்களுக்கு எவ்வாறெல்லாம் பிரசாரம் நடந்தன! இங்கே எவரையுமே கொல்லாத `எபோலா'வுக்குக்கூட எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என எவ்வளவு விரட்டல்கள்! ஆனால், கண்ணுக்கு எதிரே இத்தனை பேர் குடித்துச் சாகும்போது அது குறித்து அரசு சார்பில் யாரேனும் பேசினார்களா? ஆளும் கட்சி பேசியதா? ஊடகங்கள்தான் பேசினவா? தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் மதுவால் சாகிறார்கள். ஆனால், ஏன் இந்தச் செய்தி பரபரப்பாக்கப்படவில்லை? டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளை யடிக்கும் அரசியல்வாதிகளிடம்தான் மக்கள் தமக்கான நீதியைப் பெற வேண்டும் என்பது வேதனையான முரண்.

குடி என்பது, வெறும் ஆரோக்கிய சீர்கேடு மட்டும் அல்ல; அது மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்கிறது. தமக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகச் செயலாற்றவிடாமல் முடக்குகிறது. அவர்களின் நுண்ணறிவையும் நுண்ணுணர் வையும் கெடுக்கிறது. நாட்டின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுக்கிறது. ஏற்கெனவே, தமிழகம் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படும் நிலையில் மக்கள் தம் திராணி அனைத்தையும் திரட்டிப் போராடவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இப்போதுகூட நடக்கும் பொதுவான மக்கள் போராட்டங்களில் பெண்களும் மாணவர்களுமே பெரிதளவில் கலந்துகொள்கின்றனர். நடுத்தர வயது
ஆண்கள் எங்கே போனார்கள்? கட்சி சார்பில் நடத்தப்படும் மறியல், கடை அடைப்பில் மட்டுமே போதையில் இவர்களைப் பார்க்க நேர்கிறது. ஒரு தலைமுறையை முடக்கிவிட்டு அடுத்த தலைமுறையைக் குறிவைத்து அடங்காப் பசியுடன் அலைகிறது மதுச் சீரழிவு.

`2020-ம் ஆண்டில், அதிக இளைஞர்களைக்கொண்ட இளமையான நாடாக இந்தியா இருக்கப்போகிறது' என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அந்த இளைஞர்கள் ஆரோக்கியத்தை இழந்தவர்களாக, அறியாமை மிகுந்தவர்களாக, நாட்டின் அவலங்களை எதிர்க்க முடியாதவர்களாக இருக்கப்போகிறார்கள் என்பது மறைக்கப்பட்ட உண்மையாக உறங்கிக்கிடக்கும். இந்த நாட்டின் மனிதவளமும் பேராற்றலும் எத்தகைய அவலத்தில் தத்தளிக்கின்றன பாருங்கள்!

மதுவும் மதமும்தான் இந்தியாவில் மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள், சமூகவிரோதிகளின் கூட்டுதான் இந்தியர்களைக் குடிகாரர்களாக்குகின்றன. இந்தச் சூழ்ச்சிக்காரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்வதுதான் மக்களுக்கு இருக்கும் உடனடியான சவால். தலைமேல் குண்டு போட்டுக் கொல்வது மட்டுமல்ல, ஆபத்தான அணுமின் நிலையங் களையும் திட்டங்களையும் நம் தலைமேல் கட்டுவது மட்டுமல்ல, போதைப்பழக்கத்தைப் பரவச் செய்து உடல்நலனைக் கெடுத்து, சிந்திக்கவிடாமல் செய்வதும் இன அழிப்புச் சூழ்ச்சிதான். அந்தச் சூழ்ச்சிக்கு யார் துணை போனாலும், அது இனத் துரோகம்தான். தமிழகக் குடும்பங்கள் இவற்றை உணர்ந்து தன்னெழுச்சிப் பெற்றாலேயொழிய மீள முடியாது.

மக்களுக்கு நல்லது செய்வதுதான் அரசின் கடமை. அடித்தட்டு மக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காக்கும் ரேஷன் கடைகள் மூடப்படுகின்றன. குடிநீர் கிடைக்க வில்லை. அரசுப் பள்ளிகளின் தரமும் எண்ணிக்கையும் குறைக்கப் படுகிறது. இயற்கைவளங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. சாதியவாதமும் மதவாதமும் தலைதூக்குகின்றன. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இவற்றைத்  தடுக்க வழிசெய்யாமல் மதுக்கடைகளைப் பாதுகாக்க ஓடோ ஓடென்று ஓடுகிறது தமிழக அரசு. மாநிலக் கட்சிகளை அழித்தொழித்துவிட்டு அரியணையில் அமரத்துடிக்கும் பா.ஜ.க-வின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் இருக்க வேண்டுமானால், ஆளும் கட்சி மட்டுமல்ல... எதிர்க்கட்சி உள்பட அனைத்து மாநிலக் கட்சிகளுமே மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே, இனி அவை பிழைக்க முடியும்.

கருணாநிதி, ஜெயலலிதா காலம்போல் இது இல்லை. கால மாற்றத்தைப் புரிந்துகொண்டு மக்கள் சேவைக்குத் தயாராவதே தமிழக அரசியல்வாதிகளுக்கான தற்காப்பு!

மது அருந்துவதால் உண்டாகும் தீவிர பாதிப்புகள் இவை.

குடியால் அழிந்தது போதும்! -  திறக்காதே மூடு* 21 வயதுக்குக் கீழ் மது அருந்தும் பழக்கமிருந்தால், இந்தப் பாதிப்புகள் பன்மடங்கு மூர்க்கமாக இருக்கும்.

மூளை, நுரையீரல், எலும்பில் காசநோய் வரலாம். சிறுநீரகங்கள் பழுதடையும்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும்.

தசைகள் தளர்ச்சியடையும். உடல் உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.

நரம்பு மண்டலம் பலவீனமடைந்து, நரம்புத்தளர்ச்சி வரும். கை, கால்களில் நடுக்கம் இருக்கும். வலிப்புநோய் வரலாம்.

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கணையம் பாதிக்கப்படும். இன்சுலின் சுரப்பதில் குறைபாடு ஏற்பட்டு, நீரிழிவுநோய் வரும்.

ஹார்மோன்கள் சுரப்பதில் குறைபாடு இருக்கும் என்பதால், ஆண்மைக்குறைவு ஏற்படும். உடல் உறவில் நாட்டம் குறையும்.

நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுக்கோளாறுகள் வரும்.

இதயநோய்கள் வரும் வாய்ப்புகளும் அதிகம். மதுவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவுகள், அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

பார்வை பறிபோகும்.

வயிறு தொடர்பான பிரச்னைகள் அதிகம் வரும். வயிறு வீக்கம், வலி, வயிற்றுப்புண் வரும். கல்லீரல் அதிகமாகப் பாதிக்கப்படும்.

மூளை வளர்ச்சி பாதிப்பதுடன் ரத்தக்கசிவும் ஏற்படும். சிந்திக்கும் ஆற்றல், நினைவாற்றல் குறையும். மனச்சிதைவு நோய் வரும். குழப்பமான மனநிலை இருக்கும். வார்த்தைகள் தெளிவின்றி பிறழும்.

டீன் - ஏஜ்  குடிகாரர்கள்

தமிழகத்தில் வயது வந்த ஆண்களில் 30-35 சதவிகிதம் பேர், குடிப்பழக்கம் உள்ளவர்கள். இதனால் 40 வயதுக்குட்பட்ட இளவயது மரணங்கள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன. குடிகாரக் கணவனால் படும் துயரங்கள், தமிழகப் பெண்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டன. ஆனால் எது புதிது எனில், தம் பருவ வயது மகனைப் போதையில் பார்ப்பது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் மதுவுக்கு அறிமுகமாகும் வயது 25. ஆனால் இப்போது, 12-13 வயதில் பிள்ளைகள் மதுவைச் சுவைக்கின்றனர். உடல் உறுப்புகள் 13-21 வயது வரைதான் வேகமாக வளர்ச்சியடைகின்றன எனும்போது, அந்த வயதுகளில் மது அருந்துவது உடல் உறுப்புகளைச் சிதைத்து, நிரந்தர நோயாளிகளாக மாற்றி, ஆயுளையும் குறைத்து விடுகிறது.

மருத்துவர்கள் எங்கே?

தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது, அதில் 13 சதவிகிதம் பேர் தினமும் குடிப்பவர் எனும்போது அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநலப் பிரிவுகள் எத்தனை பேருக்குச் சிகிச்சை அளிக்க முடியும்? அதுமட்டுமின்றி, குடி முறிவுச் சிகிச்சைக்கு என பிரத்யேகமாகப் பயிற்சிபெற்ற மனநல மருத்துவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர் மட்டுமே இருக்கிறார் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கல்லீரல் நோயாளிகள் உள்ளனர். கல்லீரல் வீக்கம், கல்லீரல் புற்றுநோய், லிவர் சிராசிஸ், ஹெபடைட்டிஸ் பி, சி எனக் குடி நோயாளிகள் கடுமையான கல்லீரல் பாதிப்பால் அவதிப் படுகின்றனர். சிராசிஸ் முதல் சைக்கோசிஸ் வரை குடிநோயாளிகள் எதிர்கொள்ளும் உடல்/மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பிரத்யேகக் குடி முறிவுச் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும். ஐந்நூறு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நூறு சுகாதார நிலையங்களையாவது திறப்பது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு