Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

#MakeNewBondsகவிஞர் நரன், படங்கள்: அருண் டைட்டன்

`மகளை மகன்போல் வளர்க்கத் துணியும் நாம்,
மகனை மகள்போல் வளர்க்கத் துணிவதில்லை!'

- Gloria Steinem

ன்னுடைய ஆறாவது வயதில், என் தந்தை காலமாகிவிட்டார். அவரின் முகம், இப்போதுகூட

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

புகைமூட்டமாகத்தான் ஞாபகமிருக்கிறது. பால்யத்திலிருந்து இளமைக்காலம் வரை, என் வீட்டுக்குள் மூன்று பெண்களுக்கு மத்தியில்தான் நான் வளர்ந்தேன். ஒருவர், தனது இருபத்துச் சொச்சம் வயதில் கணவனை இழந்த என் அம்மா. இன்னொருவர், என்னிலும் மூன்று வயது மூத்த அக்கா. மற்றொருவர், என்னைவிட இரண்டு வயது குறைவான, மூளை வளர்ச்சியற்ற என் தங்கை. அதனாலேயே ஒரு பெண்ணின் அத்தனை உடல் மற்றும் மன உபாதைகளையும் என் கண்முன்னே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

என் அம்மா, சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தினார். நானும் என் அக்காவும் பள்ளிக்குச் செல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் அங்குதான் வேலைசெய்வோம். எங்கள் இருவரின் பால்யங்களும் கண் முன்னே அங்கே சிதைந்துகொண்டிருந்தன. அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையான உழைப்பு. இளம் வயதிலேயே கணவனை இழந்த ஒற்றை மனுஷியான என் அம்மாதான், தனியே நின்று சமூகத்துடன் போராடி மூவரையும் வளர்த்தார். அவருக்கு எங்களைத் தவிர்த்து வேறு நினைவுகளே இல்லை என நினைக்கிறேன். அந்தச் சிறுவயதில் பல நேரங்களில் இப்படி யோசித்திருக்கிறேன், `அம்மா ஏன் வேறொரு திருமணம் செய்துகொள்ளவில்லை? அதைப் பற்றி ஏன் ஒருவரும் அவரிடம் பேச முன்வரவில்லை? இதே ஓர் ஆண் தன் இளம் வயதில் ஏதோ ஒருவகையில் மனைவியை இழந்திருந்தால் அல்லது பிரிந்திருந்தால், இந்தச் சமூகம் அவரிடம் மறுமணத்தைப் பற்றி எப்படியெல்லாம் வலியுறுத்தியிருக்கும்!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

குடும்பம் பரிசளிக்கும் பெண் விரோதக் கருத்துகளில் ஒன்று `தாய்மை'. இங்கே பெண்கள் நசுக்கப்படுவதற்கான முக்கியக் காரணமே தாய்மைதான். `என் அம்மாவின் சமையல் ருசி, கைப்பக்குவம் யாருக்கும் வராது' என்று திருமணத்துக்கு முன்பும், `என் மனைவி நன்றாகச் சமைப்பார்' என்று திருமணத்துக்குப் பிறகும், எல்லா இந்திய வீடுகளிலும் எதிரொலிக்கும். `தாயன்பைப்போல தூய்மையானது' என, தாய்மை உணர்வு தொடர்ச்சியாகப் புனிதப்படுத்தப்படுகிறது. இப்படிப் புனிதப்படுத்துதலின் வழியே ஆண்களின் தொடர்ச்சியான அடக்குமுறைகளையும், அதனால் உண்டாகும் வலிகளையும் பெண்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதைப் பழக்கப்படுத்துகிறோம். அதன் வழியே திருமணத்துக்குப் பிறகான காதலும் சிநேகமும் சுதந்திரமான காமமும் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. அதனாலேயே இங்கே ஒவ்வோர் அம்மாவும் இந்தப் புனிதமாக்கலை, பெண் விரோத எண்ணங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறவர்களாக மாறிவிடுகிறார்கள்.

னக்குத் திருமணமான புதிதில், ஒருமுறை ஊரிலிருந்து என் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். நான் துடைப்பத்தால் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தேன். பாத்திரம் துலக்கினேன். இவற்றை எல்லாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா ஒருகட்டத்தில் கோபமாகி, ``பொட்டையாடா நீ?'' எனக் கத்தினார். 

என் வீட்டில் நானும் என் மனைவியும் எங்களுக்குள் பேசி, வேலைகளைப் பிரித்துக்கொண்டிருந்தோம். சிறு வயதிலிருந்தே எங்கள் கடையில் இந்த வேலைகளை நான் பல ஆண்டுகளாகச் செய்திருக்கிறேன். என் கல்லூரிப் படிப்பு முடியும் வரை டீ ஆத்தியிருக்கிறேன், வடை சுட்டிருக்கிறேன், காய்கறி நறுக்கியிருக்கிறேன், கடையைப் பெருக்கி, நீர் தெளித்திருக்கிறேன். கடைக்கும் வீட்டுக்குமாகத் தண்ணீர்க்குடம் சுமந்திருக்கிறேன். அதே வேலைதான் இங்கேயும். அப்போதெல்லாம் இல்லாமல் இப்போது மட்டும் அவை எப்படிப் பெண்களின் வேலையாக மாறின?

திருமணத்துக்கு முன் வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ தன் மகன்கள் வேலைக்காகச் செல்லும்போது தானே சமைத்துச் சாப்பிடுவதை எண்ணிப் பெருமிதப்படும் பெற்றோர்கள், திருமணத்துக்குப் பிறகு, அதைத் தொடரும்போது ஏன் பதற்றமடைகிறார்கள்? அப்போது மட்டும் சமையலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதும், துணி துவைப்பதும் பெண்ணின் வேலைகளாக மாறிவிடுவது எப்படி?

சாதிகளும் மதங்களும்தான் ஆதியிலிருந்தே பெண்ணைப் புனிதமாக்குவதன் வழியே அடிமைப்படுத்துதலையும் முனைந்து செய்தன. `கணவனுக்குக் கீழ்ப்படிதலை' எல்லா மதங்களும் இறை நம்பிக்கையுடன் இணைத்துக் காட்டின. `ஆணுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை' என்று எல்லா மதங்களும் ஒருசேர வலியுறுத்துகின்றன. குறிப்பிட்ட நாளிலோ நிரந்தரமாகவோ கருவறைப் பிரவேசத்துக்குப் பெண்களை அனுமதிக்காத கோயில்கள் இன்னும்கூட இருக்கத்தானே செய்கின்றன!

நான் பிறப்பால் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்திலிருந்து வந்தவன். சிறுவயதில் தேவாலயங்களுக்குச் செல்லும்போதெல்லாம் கேட்பேன், `தேவாலயங்களை அலங்கரிப்பது, பாடல்களைப் பாடுவது, ஆலயத்தைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை மட்டும் கன்னியாஸ்திரீகள் செய்கிறார்களே ஏன்? ஓர் ஆண் பாதிரியாரை பால் பேதமின்றி எல்லோரும் போய்ப் பார்த்துவிட முடிகிறது. கன்னியாஸ்திரீகள் மட்டும் ஏன் மனிதர்கள் அணுக முடியாதபடி ஒளித்து வைக்கப்படுகிறார்கள்?''

பெண்ணைச் சமமாகவும் அன்பாகவும் நடத்தச் சொல்லும் எல்லா மதங்களும், மதச் சடங்குகளும் தலைமை இடங்களில் ஏன் பெண்ணை வைத்ததில்லை? இந்த நாட்டின் எல்லா மதத்தின் இறப்புச் சடங்குகளிலும் பெண்கள் புதைகுழி வரையோ அல்லது சிதை எரிப்புக் கூடங்கள் வரையோ அனுமதிக்கப்படுவதில்லையே, ஏன்?

ன்னுடைய உறவுக்காரப் பையனுக்கு, வீட்டில் கோலாகலமாகத் திருமணம் செய்துவைத்தனர். திருமணமாகிச் சில மாதங்களிலேயே மணப்பெண் தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். பையனிடம் விசாரித்தால், `அந்தப் பெண்ணுக்கு செக்ஸில் ஆர்வமில்லை' எனக் கூறினான். அந்தப் பெண்ணோ, `அவர் என்னைத் துன்புறுத்துகிறார். இரவு முழுவதும் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்கிறார்' என்று அழுதிருக்கிறார். உண்மையில், அந்தப் பையன் அவளிடம் மிக மோசமான முறையில் நடந்திருக்கிறான்; அவளைப் பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறான். அதைத் தாங்க முடியாமல்தான் அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளார். ஆனால், இருவீட்டாரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? மணப்பெண்ணை அழைத்து, `கல்யாணம்னா அப்படித்தான்மா இருக்கும். நீதான் கொஞ்சம் பொறுத்துப்போகணும்' என்று அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தனர்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

இந்தச் சமூகத்தில் திருமணம் என்பது எவ்வளவு வெளிப்படையான பேரம். இதுவரை அறிமுகமே இல்லாத ஓர் ஆணுக்கு, மொத்த குடும்பமும் சேர்ந்து ஒரு பெண் உடலைத் தேர்வுசெய்து கொடுக்கிறது. அப்படித் தேர்வுசெய்து கொடுக்கப்பட்ட உடல், வன்முறைக்கு உட்படுத்தப்படும்போது அது வெறும் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னையாக மட்டுமே கருதுகிறது.

சாலையில் சம்பந்தமில்லாத ஒருவன் காயப்படுத்தும்போது மட்டும்தான் அது சமூகப் பிரச்னையாகவும், பொதுப் பிரச்னையாகவும் அணுகப்படுகிறது. அதுவே வீட்டுக்குள் ஒரு பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, இங்கே குடும்பச் சண்டையாகச் சுருக்கப்படுகிறது என்றால், குடும்பம் என்பதன் நோக்கம்தான் என்ன?

லகத்தின் எல்லா நாடுகளையும்விட இந்தியாவில்தான் நிர்வாணச் சிலைகள் அதிகம். காமத் துய்த்தலில் அவ்வளவு வெளிப்படையான கலைப் படைப்புகள் இந்தியக் கோயில்கள் எங்கிலும் நிறைந்திருக்கின்றன. `காமசூத்ரா' என்கிற மிகச்சிறந்த படைப்பை அளித்ததும் இந்த நாடுதான். அதேசமயம், உடலுறவு சார்ந்த புரிதல் இல்லாத நாடும் இதுதான். காமத் துய்த்தலில் பெரும்பாலும் இங்கே நிகழ்வது வன்புணர்வே. எதிர்பாலினரின் உணர்வுக்கும் உடலுக்கும் துளியும் மதிப்பளிக்காமல், ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடலுறவால் அந்த உறுப்பையும் மனதையும் சிதைவுறுத்துகிறோம். மனைவியின் பாலியல் மகிழ்ச்சி குறித்து ஆதுரமாக விசாரிக்கும் கணவன்களைக் காணவே முடியாத தேசம் நம்முடையது. ஆனால், அதே பெண்ணை, வீழ்த்தும் ஆயுதமாகப் புவி முழுவதும் நிறைந்திருக்கிறது `பாலுறவு'.

ண்-பெண் ஒழுக்கம் சார்ந்த எல்லா தராசுப் பிடிப்புகளிலும் அத்தகைய பாரபட்சம் காட்டுகிறோம். இப்போதும் இந்த நாட்டின் ஏதோ ஒரு மூலையில் விபசாரம் குற்றமில்லை (மும்பை, கொல்கத்தா); வேறொரு மூலையில் விபசாரம் குற்றம்.  இதில் குற்றம், குற்றமில்லை, உடல் சேவை, தொழில் என்ற தர்க்கங்களைத் தாண்டி இருவரின் பங்களிப்பும் இருக்கும் அந்த ஒரு செயலில், பெண் மட்டுமே இங்கே குற்றவாளியாகவும், அதற்குக் காரணமானவராகவும் முன்வைக்கப்படுகிறார். இந்த இடத்தில் பெண் உடலைப் பாலியல் பண்டமாகவே வைத்துப் பார்த்தாலும், இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட எல்லா பண்டங்களிலும் கொடுப்பவர், பெற்றுக்கொள்பவர் இருவருமே குற்றவாளிகள்தான். ஆனால், விபசாரத்தில் மட்டும் ஏன் பெண்களை மட்டுமே குற்றவாளியாக்குகிறோம்?

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

குடும்பம் என்பது, ஆண்களின் அதிகாரத்திலேயே சுழல்கிறது. ஆனால், பெண்களால் தாங்கள் வேதனைக்கு உள்ளாவதாக ஆண்கள் நகைச்சுவையாகப் பேசிக் கடப்பதைப் பார்க்கலாம். வீட்டின் எல்லா முடிவுகளையும் பெண்களே எடுப்பதாகவும், வீட்டை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு பிம்பத்தை ஆண்கள் தொடர்ந்து உருவாக்குகிறார்கள்.

என் தோழி ஒருவர், காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். முற்போக்காளர்கள் எல்லாம் இல்லை. காதல்தான் அவர்களை இணைத்தது. ஆனால், காதலுக்கு முன்பு வரை உறங்கிக் கொண்டிருந்த சாதி, திருமணத்துக்குப் பிறகுதான் விழித்துக்கொண்டது. பிள்ளைகள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரிய குழப்பம். இறுதியில் கணவரே வென்று, தன்னுடைய சாதியையே குடும்பத்தின் சாதியாக மாற்றிக்கொண்டார். இது தோழி வீட்டில் மட்டும் அல்ல, ஊரில் எங்கும் காணக்கூடிய பொதுவான ஒன்று. இங்கே பல நேரங்களில் சாதியை மறுத்து, திருமணம் செய்துகொள்பவர்கள், மீண்டும் சாதிய அடையாளத்துக்குள் தள்ளப்படுகின்றனர். கலப்புத் திருமணம் செய்த பலரும் திருமணத்துக்குப் பிறகு, கணவனின் சாதியைத்தான் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இருவருடைய சாதிகளில் எது ஆதிக்கச் சாதியோ அதைப் பின்பற்றுகிறார்கள். அதிலும்கூட முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.

கரத்தின் மிகப்பெரிய உணவகத்தில் தலைமைச் சமையல் கலைஞராக வேலைசெய்யும் நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும். நான் ஒருமுறை, `வீட்டில் நீங்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். `எப்போதாவது அரிதாக!' என்று அவர் பதில் சொன்னார். இத்தனைக்கும் அவர் மனைவியும் ஒரு நிறுவனத்தில் பணிக்குச் செல்லக்கூடியவர். இது எவ்வளவு பெரிய சுரண்டல்! அந்தப் பெண், வேலைக்கும் சென்றுகொண்டு, வீட்டையும் பராமரிக்க வேண்டும். துணி துவைப்பதற்குத் தரமான இயந்திரங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் எல்லா அழுக்கு உடைகளையும் அந்த இயந்திரத்துக்குள் போடுவதும் பெண்கள்தான் என்பதுபோலவே ஊடக விளம்பரங்களில் காட்டப்படுவதற்கும் இதற்கும் நிறையவே தொடர்பு உண்டு.

ன் தோழியும் அவரின் இணையும் மணவாழ்க்கையிலிருந்து விலகிச்சென்றார்கள்.

ஆனாலும், பொது இடங்களில் பார்த்துக் கொள்ளும்போது விலகிச் செல்லாமல் பரஸ்பரமாகக் கைகுலுக்கிக்கொண்டு தேநீர் அருந்துவார்கள்.அவர்கள் வாசித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வார்கள்.

ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மிகுந்த பதற்றத்துடன் மருத்துவமனைக்குச் சென்று, அருகில் இருந்து கவனித்துக்கொண்டார் அந்தத் தோழி. அதற்கு முன்பாக நான் சந்தித்த எல்லா மணமுறிவாளர்களும் இதற்கு முன் தம்மோடு சேர்ந்து வாழ்ந்த மனுஷியை/மனிதனை எதிரில் சந்திக்க நேர்ந்தால், குறைந்தபட்சம் அந்தச் சந்திப்பைத் தவிர்க்க முயல்வார்கள்; அல்லது விரோதியைப்போல் முகத்தை வைத்துக்கொண்டு விலகிச் செல்வார்கள். எனக்கு இந்தச் செய்கை ஆச்சர்யமாக இருந்தது. நான் இதுபற்றி நேரடியாகக் கேட்கும்போது, `எதற்காக விரோதி போன்று பார்க்க வேண்டும்? எங்களுக்குள்ளிருந்த காதலில்தான் விரிசல். எங்களின் நட்பு எப்போதும்போல் இருக்கிறது' என்றார். இந்தப் புரிதல் பெண்களுக்கே உரியது. 

இங்கே நம்முடைய பார்வைகள் மிகவும் குறுகலானவையாக மாறிவிட்டன. இங்கே பெண்ணின் ஒவ்வொரு சிறிய வெற்றியும் சந்தேகத்துக்குள்ளாகிறது. ஆனால், அந்தச் சிறிய வெற்றியையும் பெண்கள் நிறையவே போராடித்தான் பெறவேண்டியிருக்கிறது. பெண்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இங்கே, ஆண்களால் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் தன்னை மீறி நகர்ந்து செல்லும்போது பெண்களைத் தடுத்து நிறுத்த ஆண்கள் பாலியல் புகார்களை ஆயுதங்களாக மாற்ற முனைகிறார்கள். புனைவான கதைகளை அந்தப் பெண் மீது உருவாக்குகிறார்கள். என் பிள்ளைகளின் காலம் அத்தகைய கதைகளால் உருவாகிவிடக் கூடாது. அது ஆண்-பெண் நேசத்தின் அன்பின் பகிர்வுகளால், பாகுபாடுகளற்ற உறவுகளால் உருவாக வேண்டும்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

பெண் யானை

கூர்க் காதல் அங்குசத்தால்
குருதி வழிந்தோடையிலும்
தட்டித் தடவும்
மாவுத்தனின் மன்றாட்டங்களில்
கசிந்துருகி
கால் மடித்து
காது கைப்பிடிக் கொடுத்து
முதுகமர்த்தும்
பெண் யானை மனம்
வியப்பிலும் பெருவியப்பே!

- அனுராதா ஆனந்த்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

ரித்தவளின் உறுப்பில்
விரலைச் செலுத்தியவனின்
அலறலைக் கேளுங்கள்
மரிக்காத சிசு
கடித்துக் குதறிய
கறுப்புக் குருதி சரித்திரம்.
(அநீதி இழைக்கப்பட்ட பெண்மைக்குச் சமர்ப்பணம்)

- பாலைவன லாந்தர்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

ண்மையை உடுத்திக்கொண்டு
நான் ஆடிய நடனம்
உனக்குப் பிடித்திருக்கவில்லை
 
பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த
உன்னையும்கூட
என் உடலசைவுகளே வதைத்திருக்கின்றன
 
`ஆடைகளைத் திருத்து' - என
அங்கிருந்தே ஆணையிட்டாய்
தாண்டவத் தருணத்தில்...
கண்கள் காட்சியிழந்தும்,
செவிகள் சத்தமிழந்தும்
உயிர் சுவாசமிழந்தும்
போவதே இயற்கை.
 
நடப்பதில் அவமானமுற்றவனாய்
உன் தலை கவிழ்ந்திருந்தது
பின், நடனக்காரிகளுக்கு
நன்றிகாட்ட தேவையில்லையென
எழுந்து சென்றாய்.
 
என் பார்வை
மொத்தமாகக் குவிந்திருந்த
அவ்விடத்தில் நீ இல்லை
துண்டிக்கப்பட்ட என் இதயத்தை
வெற்று இருக்கை
பரிதாபமாகப் பிரதிபலிக்க...
 
சுழன்று ஆடுகிறேன்.
நிறுத்தினால்
செத்துவிடும் வேகத்தோடு!

- ஜெயராணி