
மருத்துவர் கு.சிவராமன்
`காலையில 7.20 மணிக்கு அவ பெரியவளாகிட்டா. பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கான பலனை சரியா குறிச்சுத் தரச் சொல்லு. `அவ ஜென்ம நட்சத்திரம் மகம்’னு மறக்காம சொல்லு...' என அம்மா அன்றைக்குச் சொல்லி பஸ் ஏற்றிவிட்டபோது, ‘என்னத்தைச் சொல்றா? எதுக்கு அவசர அவசரமா என்னை கிராமத்துக்குத் தனியா அனுப்புறா? பஞ்சாங்கம் பார்க்கிற அளவுக்கு என்ன புனிதம் இது?’ - புரியவில்லை.
காலாபாணி ஜெயிலில் இருக்கும் கைதிக்கான சாப்பாட்டுத் தட்டை ஜெயில் கதவின் கடைசிக் கம்பி வழியாக `சர்...’ என்று அனுப்புவார்களே... அப்படி அன்றைக்கு என் பள்ளித்தோழன் கிச்சான், வெளி அறையில் தனியே பசியோடு உட்கார்ந்திருக்கும் அக்காவுக்கு அவளுக்கான சாப்பாட்டை ஏன் அவள் கையில் கொடுக்காமல் தட்டைத் தரையோடு உரசியபடி அனுப்பினான்? என்ன புதிர் இது? - தெரியவில்லை.
இப்போது, ``சார், கரெக்டா தேதி வருது. அப்புறம் சாமி பார்க்க முடியாமப்போயிடும். `அந்த அம்மனே என் வயித்துல குழந்தையா பிறக்கணும்’னு மாவிளக்கு எடுக்க நேர்ந்திருக்கேன். `தள்ளிப்போக' மாத்திரை குடுங்க!’’ என ஒரு பெண்மணி கேட்டார். ``மூளை இருக்கா உங்களுக்கு? நீங்க கும்பிடுற அத்தனை பொம்பளை சாமிகளுக்கும் பீரியட் வரும்ல. எவ்ளோ கஷ்டப்பட்டு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு, இப்பத்தான் சைக்கிள் சரியா வருது. இந்தச் சமயத்துலதான் கருத்தரிப்பு சாத்தியமாகும்.

இந்த நேரத்துலபோய் சாமி பேரைச் சொல்லி மருந்தைச் சாப்பிட்டு, சங்கடத்தை விலை கொடுத்து வாங்குறீங்களே...’’ எனக் கத்தியது, என்ன சங்கடம் இது? எனப் பெரும்பாலானோர் யோசிப்பதில்லை.
ஆனால், இன்றும் புதிராகவோ புனிதமாகவோ, ஓய்வாகவோ சங்கடமாகவோ, உடைத்து எறியவேண்டிய சங்கிலியாகவோ, சமூகத்தின் ஒவ்வொரு விளிம்பும் ஒவ்வொருவிதமான புரிதலை, இந்த மாதவிடாய் குறித்துப் பெண் குழந்தை மனதில் ஆழமாகப் புதைத்துக்கொண்டே இருக்கிறது.
சீக்கிய மதம் தவிர, அநேகமாக அனைத்து மதங்களும் இந்த மாதவிடாயைத் தீட்டாக, விலக்காக, கட்டாய ஓய்வாகப் பார்ப்பதுதான் இந்த `நானோ’ உலகிலும் உலக வழக்கு. `கோயிலுக்குள் வராதே; சர்ச்சில் கம்யூனியன் கிடையாது; தொழுகை வேண்டாம்’ என அத்தனை மதங்களும் ஒன்றாக நிற்கும் ஒரே விஷயம் இதுதான். ஒருவேளை இந்த மாதவிடாய் இல்லை என்றால், இந்த மானுடப் பிறப்பு என்ற ஒன்று இல்லை என்பது மட்டும் எல்லா சாமிகளுக்கும் தெரியும்.
மாதவிடாய்த் தொடக்கத்தை ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்துக் கொண்டாடும் இந்தக் கூட்டம்தான், அந்தச் சமயத்தில் `சாமியைக் கும்பிட வராதே’ `சடங்கு, சாங்கியத்தில் எதையும் தொடாதே’ எனப் பயப்படவும் செய்கிறது. இன்னொரு பக்கம், `என்னது ஓய்வா... ஓரமா?
எங்க கம்பெனி சானிட்டரி நாப்கின்ஸைப் பயன்படுத்தினா, நீ லாங் ஜம்ப், ஹை ஜம்ப் மட்டுமல்ல... சர்க்கஸ்கூட செய்யலாம்’ என எல்லா நிறுவனங்களும் சங்கடம் நீக்குவது மாதிரி சந்தையைப் பிடிக்க அத்தனை ஊடகங்களிலும் சொல்லிவருகின்றன.
உண்மையில் மாதவிடாய் என்பது, கன்னிப்பெண்ணின் இதழோரத்து ஈரம் மாதிரியான ஹைக்கூ கவிதை; அவள் அலுவலகத்திலோ அடுப்பங்கரையிலோ நெற்றிப்பொட்டில் துளிர்க்கும் வியர்வை மாதிரி ஒரு மாபெரும் உழைப்பு; அகம் மகிழ்ந்து அவள் மனம்விட்டு சத்தமாகச் சிரிக்கும்போது இமையோரத்தில் பனிக்கும் நீர் மாதிரியான ஒரு பெருமிதம். சில நேரங்களில் மட்டும், `இந்த மாசமும் வந்திடுச்சா?’ எனப் பின்னிரவில் ஏக்கத்துடன் கவிழ்ந்து படுத்து அழுகையில், தலையணையை மட்டுமே ஆதரவாக அணைத்து உறிஞ்சும் கண்ணீர். மாதவிடாயின்போது வரும் குருதியோட்டம், மானுடம் முதலான அத்தனை பாலூட்டிகளின் அடையாளம். சினைமுட்டையை வந்து சேர விந்துவுக்கு விரித்துவைக்கும் சிவப்புக் கம்பளம் அது. கருவாகக் கருத்தரிக்காதபோது முட்டையோடு பெருமிதமாக வெளியேறும் வைபவமே தவிர, ஒதுக்கியது, ஓரங்கட்டியது, ஓய்வாக இருக்கச் சொன்னது எல்லாம் ஆணாதிக்க மத(ன)த்தின் வெளிப்பாடே.
``பயங்கரமா வலிக்குது மம்மி. வாந்தி வருது, தலைவலிக்குது. ஸ்கூலுக்கு நான் போகலை’’ என அழும் 11 வயதுக் குழந்தைகளை, ``லீவா! நாளைக்கு எக்ஸாம். இந்த மாத்திரையைப் போட்டுகிட்டு போ’’ என விரட்டும் கூட்டம் ஒருபக்கம். ``ஒரு எம்.ஆர்.ஐ பார்த்துடலாமா?’’ என டாக்டர் கேட்க, ``வரும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு அல்ட்ரா சவுண்ட் எடுத்துட்டு வந்துட்டோம்’’ எனச் சொல்லும் அம்மாக்கள் இன்னொரு பக்கம். ``அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வா..! வந்து லைன்ல நில்லு’’ என்ற தாவணித் தோழியின் பேச்சைக் கேட்டு, கொளுத்தும் வெயிலில் நின்று `நீராரும் கடலுடுத்த...’ பாடலின் பாதியிலேயே `சொய்ங்...’ என சோகையால் மயங்கி விழும் கிராமத்துப் பெண்கள் மற்றொரு பக்கம்... என மாதவிடாயில், 11 - 12 வயதில் இன்றும் கசங்கிக் கண்ணீர்விடும் குழந்தைகளே அதிகம்.
நெடுங்காலமாக இந்தியப் பெண்ணுக்கு 14 - 15 வயதில் நடந்த இந்த மாதவிடாய் தொடக்கம், இன்றைக்கு பெரும்பாலும் 12 வயதைச் சுற்றியே நிகழ்கிறது. குழந்தைப் பருவ கவனிப்புகளும், அக்கறைகளும், மருத்துவமும், ஊட்டச்சத்து உணவும் கணிசமாகக்கூடியதுதான் இந்த மாற்றத்துக்கான முக்கியக் காரணம். அதே சமயம், இன்னும் கத்திரிப்பூ பாவாடையைக் கையில் தூக்கி, தன் ஒல்லிக்குச்சிக் கால்களால் பாண்டி ஆடும் கோதை 13 - 14 வயதில் பூப்பெய்த, போக்மேனும் டூமும் விளையாடும் குண்டு ஷ்ரேயாவோ 6-ம் வகுப்பின் ஆரம்பத்திலேயே பூப்பெய்துகிறாள். அதற்குக் காரணம், சிப்ஸையும் சிக்கன் லெக்பீஸையும் அடிக்கடி கொறிக்க ஷ்ரேயாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. கல்கோனா மிட்டாயைத் தம்பிக்குத் தெரியாமல் வாய்க்குள் ஒதுக்கி ரசிப்பவள்தான் கிராமத்துக் கோதை. ``ஃப்ரைடு ரைஸுக்கு உருளைக்கிழங்குப் பொரியல் மட்டும்தான் அவளுக்கு வேணும். சிக்கனைத் தவிர, வேறு எதுவும் தொட்டுச் சாப்பிட மாட்டேங்கிறா’’ எனச் சற்று உருண்டு, பருத்து உட்கார்ந்திருக்கும் தன் பெண் குழந்தையைக் கூட்டிவரும் அவளின் செல்ல அம்மாவுக்குத் தெரியாது... இந்த போஷாக்குத் தரப்போகும் பின்னாள் பிணக்கு.

குண்டான பெண் குழந்தையும், உடற்பயிற்சி இல்லாத குழந்தையும் அநேகமாக சீக்கிரத்தில் பூப்பெய்துவிடும். மாதவிடாய் தொடங்கும் வயது குறையக் குறைய, அவர்களுக்குப் பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி (PCOD - Polycystic Ovarian Disease) முதல் மார்பகப் புற்றுநோய் வரை வரும் வாய்ப்பு அதிகம். இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, மாதவிடாய் சுழற்சி சீரற்றுப்போகும் வாய்ப்பும் உண்டு. 28 நாள்களுக்கு ஒருமுறை வரவேண்டிய இந்த நிகழ்வு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என நிகழும். அப்படித் தள்ளிப்போகும் மாதவிடாயால் சிலருக்குப் பிற்காலத்தில் கருமுட்டை வளர்ச்சி பாதிப்பும், வெடிப்பில் தாமதமும்கூட நிகழலாம். அழுது அடம் பிடித்தாலும் கூடுதலாகச் சாப்பிடும் தயிர்ச்சோற்றுக்கும் சிக்கனுக்கும் விதிக்கும் சின்ன தடைதான், பின்னாளில் அவள் கருத்தரிப்பு கம்பெனிகளில் காத்திருக்காமல் வைத்திருக்க உதவிடும். உடனே தடாலடியாக, `அய்யய்யோ... நீர்க்கட்டியா?’ எனச் சினைப்பை நீர்க்கட்டிக்கான மருத்துவத்தை 13 வயதில் ஆரம்பிப்பது அபத்தம்.
உணவுக் கட்டுப்பாட்டையும் உடல் உழைப்பையும் அந்தக் குழந்தைக்கு அதிகபட்சம் கற்பிப்பது மட்டுமே இந்த நீர்க்கட்டியை வராமல் விரட்டும். ``ஸோ... நீ டாக்டர் அங்கிள் சொன்ன மாதிரி 5 மணிக்கு கிரவுண்டுல போய் ஓடுறே. இனி உனக்கு சிக்கன் கிடையாது’’ எனச் சொல்லி அலாரம் வைத்துக் கொடுத்துவிட்டு பெற்றோர் அவர்கள் அறையில் போய்ப் படுத்துக்கொண்டால், எந்தக் குழந்தையும் 5 மணிக்குப் புரண்டுகூடப் படுக்காது. `இறுதிச்சுற்று’ மாதவன் மாதிரி எழுப்பி விட்டுவிட்டு, கூடவே ஓட வேண்டும். முதலில் கொலைவெறியோடு அந்தக் குழந்தை உங்களைப் பார்த்தாலும், பின்னாளில் நிச்சயம் கொஞ்சும்; பெருமையுடன் அரவணைத்துக்கொள்ளும்.
ஏனென்றால், பூனை மீசையை முறுக்கிக்கொண்டு சைக்கிளில் சுற்றும் பாலக(இளைஞ)னுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்தில்கூட நம் பெண் குழந்தைகள் பலருக்குக் கிடைப்பதில்லை. ``இவ்ளோ நாள் போனது இருக்கட்டும். நீ இப்போ பெரிய மனுஷிங்கிறதை நினைவுல வெச்சுக்கோ. பசங்க கண்ணு, அவங்க அங்கிள் கண்ணு எல்லாம் சரி கிடையாது’’ எனப் பயமுறுத்தி, தன் ஜன்னலுக்கு வெளியே மட்டும் தெரியும் உலகத்தை ஊறுகாய் போட்டுக்காட்டுவது தொடங்கும். `அப்படின்னா, உன் செல்போனைத் தா... நான் கேண்டி க்ரஷ் விளையாடுறேன்’ என ஆரம்பிக்கும் பெண் குழந்தைக்கு, அன்று முதல் சிறகுகள் சிறுத்துப்போய் உடல் பருக்கும்... பிராய்லர் கோழிபோல! பருத்த உடல் மாதவிடாய்ச் சீர்கேட்டுக்கான முதல் நுழைவாயில்.
குழந்தையின் பருத்த உடலைக் குறைப்பது எப்படி என்பது, கிட்டத்தட்ட `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?’ என்கிற மாதிரி லேசில் கண்டறிய முடியாத சிக்கல். மரபால் வந்ததா... உடன் உட்கார்ந்து அதிகம் சாப்பிட்டதால் வந்ததா... வேலையே செய்யாததாலா... எது காரணம் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் தீர்வு கிடைக்கும். நீர்க்கட்டிகளைக் குறைக்க/நீக்க, முதலில் உணவிலிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும். மாதவிடாயைச் சீர்ப்படுத்த, முதலில் உணவில் ஹை கிளைசிமிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நவீன மருத்துவ அறிவியல், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆளுமைசெய்யும் இன்சுலின் சுரப்பானது, 12 - 13 வயதில் கொஞ்சம் கட்டுப்பாடற்றுச் சுழல்வதால், அகோரப்பசியும் (Hyperinsulinimic), அதையொட்டி சினைப்பையில் நீர்க்கட்டியும் வருகின்றன. அதனால்தான், நிறைய நீர்க்கட்டி இருந்தால் அலோபதி, ரத்த சர்க்கரைக்கான மாத்திரையைப் பரிந்துரைக்கிறது. `வெள்ளை மாத்திரை ஒண்ணு, பெரிய மாத்திரை ரெண்டு, பச்சை மாத்திரை ஒண்ணு, சரியா?’ என, தான் சாப்பிடும் இந்த ரசாயனக் குமிழ்கள் எதற்கு... ஏன்... உள்ளே போய் என்ன செய்யும் என எந்தப் புரிதலுமே பெருவாரியான மக்களுக்கு இல்லை. அதைப் புரியவைக்கும் அளவுக்கான நேரமும் மருத்துவ உலகில் சிலருக்கு இல்லை; மனசோ பலருக்கு இல்லை. விளைவு? `நீர்க்கட்டி போய் மாதவிடாய் சீராகணும்’ என அன்று அவளுக்கு ஆரம்பிக்கும் இந்த மருத்துவம், அவளின் பேரன், பேத்தி காலம் வரை தொடர்கிறது... இன்னும் கூடுதல் நோயுடன் கூடுதல் வேதனைகளுடன் அதைவிடக் கூடுதல் மாத்திரைகளுடன்!
- பிறப்போம்...

சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள்... பூப்பெய்திய பிறகு மாதவிடாய் சரியே இல்லை... என்ன சாப்பிடலாம்?
* காலை பானம்: பால் வேண்டாம். கருப்பட்டி காபி அல்லது எலுமிச்சை/ஆரஞ்சு பழச்சாறு 200 மி.லி (10 மி.லி பழச்சாறு. மீதி 190 மி.லி இளஞ்சூட்டு நீர் - சிறிது தேன்).
* காலை உணவு: பழத்துண்டுகளுடன் கம்பு-சோள தோசை (கம்பு இரும்பு டானிக்; சோளம் புரத டானிக்).
* காலை பள்ளிச் சிற்றுண்டி: கொய்யாப் பழத்துண்டு அல்லது எள் உருண்டை.
* மதியம்: காய்கறி சாலட், கீரைக்கூட்டு அல்லது மீனுடன் சிவப்பரிசி, கறுப்பரிசி அல்லது பழுப்பரிசிச் சோறு.
* மாலை: பால் சேர்க்காத தேநீர், சுண்டல்.
* இரவு: முழுத்தோலுடன்கூடிய கோதுமை ரொட்டி, காய்கறி சிறுதானிய உப்புமா.
மிக முக்கியமாக : கணக்கு, உயிரியல் பாடம் மட்டுமல்லாமல் நீதிபோதனை மற்றும் விளையாட்டுப் பாடங்களுக்கெல்லாம் ட்யூஷன் வைக்கும் பெற்றோரின் `வியாதி'யையும் குணப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் பெண்களை விளையாட, நடனம் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தினசரி ஓட்டமும் நடையுமான பயிற்சியுடன் ஏதேனும் விளையாட்டு – மொத்தமாக 1-2 மணி நேரத்துக்கு.