
விகடன் டீம், படங்கள்: வீ.சக்தி அருணகிரி
டெல்டா பஞ்சமோ, சுனாமி தாக்குதலோ, டிசம்பர் மழையோ... எங்கெல்லாம் துயரத்தின் குரல்கள் எழுகின்றனவோ அங்கெல்லாம் வாசகர்களோடு இணைந்து துயர்துடைக்கக் களம் இறங்குவது விகடனின் வழக்கம். அத்தகைய முயற்சிகளில் ஒன்று `அறம் செய விரும்பு'.
இந்த ஆண்டு விகடனுடன் இணைந்து அறம் செய்ய ஜி.ஆர்.டி குழுமம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கின்றனர்.

தமிழக அளவில் அரசுப் பள்ளிகள் சிலவற்றைத் தேர்வு செய்து, அந்தப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் அப்பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றவும், மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் தொடர் உரையாடலை நிகழ்த்தி, அவர்களின் தேவைகளை, பிரச்னைகளைப் புரிந்து, தீர்வு காண நிறையக் கனவுகளோடு களத்தில் இறங்குகிறோம்.
`இந்தத் திட்டத்துக்குப் பங்களிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?' -ஜி.ஆர்.டி குழுமத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரனிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.
``ஓர் ஊரை மேம்படுத்த அந்த ஊரில் வசிக்கும் மக்கள் அனைவரையும் அறவழியில் அழைத்துச் செல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக உதவி செய்யத் தேவை இல்லை; அந்த ஊரில் உள்ள பள்ளியை மேம்படுத்தி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தாலே அந்த ஊர் மேன்மை அடையும். இதை நாங்கள் வெறும் வார்த்தைகளாகச் சொல்லவில்லை. எங்கள் வாழ்க்கையிலிருந்து சொல்கிறோம்.
எங்களின் பூர்வீகம் கும்பகோணம். சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன். வறுமை சூழலில்தான் வளர்ந்தேன். அந்தச் சமயத்தில் குடும்பத்துக்குத் துணையாக இருந்தவர் என் தாய்மாமா. ‘நாம் இந்த வலிகளிலிருந்து, வறுமையிலிருந்து விடுபட நமக்கு இருக்கிற ஒரே பிடிமானம் கல்விதான்... கல்வி மட்டும்தான் நம்மை மீட்கும்’ என்பார் என் அம்மா. அவை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். இன்று நாங்கள் பொருளாதார ரீதியாக இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோமென்றால், அந்த ஊக்கம்தான் காரணம். அதுதான், என்னைக் கல்விக்காக உதவி செய்யவும் தூண்டுகிறது” என்கிறார் அவர்.

ராஜேந்திரனின் மூத்த மகனும் ஜி.ஆர்.டி குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான ஜி.ஆர்.அனந்த பத்மநாபன் நம் உரையாடலில் இணைந்துகொண்டார்.
“சமூகத்தின் வளர்ச்சி, இறுக்கத் திலிருந்து விடுதலை அடைவதில் இருக்கிறது. அந்த விடுதலையை, நம்பிக்கையைப் பள்ளிகள், மாணவர் களின் மனதில் விதைக்க வேண்டும். அதற்கு சகல வசதிகளோடு பள்ளிகள் இயங்க வேண்டும். சுகாதாரமான குடிநீர், போதுமான கழிவறை, மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள விளையாட்டு, அறிவியலைப் புரிந்துகொள்ள நவீன உபகரணங்கள் என ஒரு பள்ளி அனைத்துப் பரிமாணங் களிலும் முழுமையாக இருந்தாலே அந்தச் சமூகம் படிப்படியாக முழுமை பெற்றுவிடும். அப்படியான ஒரு சமூகத்தை உண்டாக்குவது எங்கள் கனவுகளில் ஒன்று. அதற்காகத்தான் இந்த ஒரு கோடி ரூபாயை வழங்கி இருக்கிறோம்.''
ஜி.ஆர்.டி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் ராஜேந்திரனின் இளைய மகனுமான ஜி.ஆர்.ராதாகிருஷ்ணனும் உற்சாகத்தோடு பேசுகிறார்.
``தொடக்கத்திலிருந்தே நாங்கள் சிறியதும் பெரியதுமாக சில சமூகப் பணிகளை செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் நிறுவனம் எந்த ஊரில் கிளை தொடங்கினாலும், அந்த ஊரில் உள்ள 11 மாணவர்களின் கல்விச் செலவுகளை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக் கிறோம். ஆனால், இன்னும் எங்களால் சென்றடைய முடியாத கிராமங்களுக்குச் சென்று எல்லா நிலைகளிலும் வாழ்கிற மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினோம். அது ஒரு பெரும் பணி. அதனால்தான், விகடனுடன் கரம் கோத்திருக்கிறோம்” என்றார்.
`அறம் செய விரும்பு' திட்டத்தின் முதல்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரி அரசு நடுநிலைப் பள்ளியைத் தேர்வுசெய்து, பணிகளைத் தொடங்கிவிட்டோம். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சென்னையின் அசல் முகங்கள். அந்த மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் ஈரம் கசியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இந்தப் பள்ளியை மேம்படுத்துவதால் அந்தப் பகுதியே நிச்சயம் மாறும் என்று நம்புகிறோம்.

செம்மஞ்சேரி அரசுப் பள்ளி மாணவர்களை சந்தித்து உரையாடினோம். அனைவரும் உற்சாகமாகப் பேசினார்கள். நம்மோடு இணைந்து அந்த மாணவர்களே மாற்றத்தை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற மிகப்பெரிய நம்பிக்கை உருவானது.
அடுத்தகட்டமாக, ராமநாதபுர மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய (அகதிக் குழந்தைகள்) தொடக்கப் பள்ளி, கடலூர் பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப் பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம்.
பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், முன்னாள் மாணவர் அமைப்புகள், அரசுபள்ளி ஆசிரியர்கள், ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் முதலானவர்களும் இந்தத்திட்டத்தில் பங்களிக்கலாம். எங்களுடைய திட்டங்களை கடந்து உங்கள் யோசனைகளையும் முன்வைக்கலாம்.
இது நம் பணி... வாருங்கள் இணைந்து அறம் செய்வோம்!