Published:Updated:

இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

Published:Updated:
இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!
பிரீமியம் ஸ்டோரி
இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!
இணக்கம் வேண்டும்; மிரட்டல் வேண்டாம்!

த்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழகத் தலைமைச் செயலகத்துக்குச் சென்று மத்திய திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து ஆய்வு நடத்தியிருக்கிறார். அப்போது இருவரும் ஊடகங்களுக்குக் கூட்டாகப் பேட்டி அளித்திருக்கிறார்கள். மத்திய அமைச்சர் பேசியதோ 45 நிமிடங்கள். தமிழக முதல்வர் பேசியதோ ஐந்து நிமிடங்கள்தான். இதுமட்டுமல்ல, `நீங்கள் மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் உங்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லையெனில், பிரிவுதான்’ என்று மிரட்டும் தொனியில் மெட்ரோ ரயில் துவக்க விழாவின்போதும் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர்.

மத்திய அரசுக்கு என்று அதிகாரங்கள் இருப்பதைப்போல மாநில அரசுகளுக்கும் அதிகாரங்கள் உண்டு. மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் சில துறைகள், மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் சில துறைகள், பொதுப்பட்டியலில் சில துறைகள் என்பதே, நம் அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்பு. மாநில அரசுகளைவிட மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, மாநில அரசுகள் அடிமையாக இருக்கவேண்டும் என்றோ, மாநில அரசுகளை மத்திய அரசு விருப்பம்போல் ஆட்டிவைக்கலாம் என்றோ அர்த்தம் இல்லை.

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்றால், அதை முறைப்படுத்த மத்திய அரசுக்கு ஏராளமான வழிகள் உண்டு. மத்திய அமைச்சர் ஒருவர், மாநில அரசின் செயல்பாடுகளில் வெளிப்படையாகத் தலையிடுவதும், கிட்டத்தட்ட மிரட்டல்விடும் தொனியில் பேசுவதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இன்று முதலமைச்சராக இருந்தால், வெங்கய்ய நாயுடுவோ அல்லது வேறு மத்திய அமைச்சரோ தலைமைச் செயலகத்துக்குள் வந்து ஆய்வு என்ற பெயரில் இப்படி அதிகாரம் செலுத்தத் துணிவார்களா? `யானை இளைத்தால் எலிக்குக்கூட இளக்காரம்’ என்பதைப்போல் அல்லவா இருக்கிறது? 

மத்திய அரசின் திட்டங்களையும் நிதி உதவிகளையும் மக்களின் நலனுக்காகப் பெறும் பொருட்டு நம் மாநில அரசு, மத்திய அரசோடு இணக்கமான உறவைப் பேண வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மாநில உரிமையையே பறிக்கும் வகையில் மத்திய அரசு எவ்வளவு அதிகாரம் செலுத்தினாலும் அதை மௌனமாக ஏற்றுக்கொள்வது என்பது, மாநில சுயாட்சிக்காக முதல் குரல் கொடுத்த தமிழகத்துக்கே தலைக்குனிவாகும்.

ஒரு முழு நேர ஆளுநரைப் பெறுவதற்குக்கூடத் தகுதி இல்லாத மாநிலமாக இன்னமும் தமிழ்நாட்டைக் கருதும் மத்திய அரசு, தமிழக அரசை பலவீனமான ஒரு கொத்தடிமையைப்போல நடத்துவது மத்திய - மாநில உறவுகளை எந்த வகையிலும் மேம்படுத்தாது.

தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் பல நிகழ்வுகளைக் கவனித்தால், ‘மடியில் கனம் இருப்பவர்கள் என்பதால், இவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்' என்ற நினைப்பில் மத்திய அரசு செயல்படுவதாகவே தெரிகிறது. வழக்குகளில் சிக்கியிருக்கும் அல்லது சிக்குவதற்கு ஏதுவாக மாட்டியிருக்கும் ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால், மடியில் கனம் இருக்கலாம். அவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தங்களை அவமானப்படுத்துவதாகத் தமிழக மக்கள் கருதினால்... நேர் எதிரான விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பதை மத்தியில் ஆட்சி செய்வோர் புரிந்துகொண்டால் நல்லது.