Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

#MakeNewBondsஜா.தீபா, படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

#MakeNewBondsஜா.தீபா, படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 36
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

மினாவுக்குத் திருமணம் ஆகும்போது எங்களுடன் கல்லூரிக்கு வரவேண்டிய வயதில் இருந்தாள். திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவளின் பார்வை அவளுடையதாகவே இல்லை. மிரட்சிகொண்டவளாக இருந்தாள். வாப்பாவைத் தவிர வேறு ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு, அந்த வயதில் திருமணம் என்பது எந்தவிதமான நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது இப்போது புரிகிறது.

திருமண நாளன்று பயத்தில் அவள் மயங்கி விழுந்தாள். அது அவளுடைய கல்யாண ஆல்பத்தில் பதிவாகவில்லை.  வாப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடிப்போய் நிற்கும் அவளின் உம்மா போல தன்னுடைய கணவனுக்கும் சேவகம் செய்ய வேண்டும் என்பதுதான் அவள் கற்ற பாடமாக இருந்திருக்கும். ஒரு தோழனாகவும் கணவன் இருக்க முடியும் என்பதற்கு அவளுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் போனதுதான் அந்தத் திருமணத்தின் பெருஞ்சோகம்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

ஆமினாவின் திருமண வாழ்க்கை சோகமானதாகத்தான் இருக்கும் என்று நானே முடிவு செய்துகொள்கிறேனோ என்றெல்லாம்கூட நினைத்துப் பார்த்திருக்கிறேன். 30 வயதான ஒருவர் 17 வயதான சிறுமியைத் திருமணம் செய்து, உடனே வெளிநாட்டு வேலைக்குத் தனியே போய்விட்டார் என்கிறபோது ஆமினா மகிழ்ச்சியாகத்தான் வாழ்கிறாள் என்பதற்கான உத்தரவாதம் ஏதும் என்னிடம் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு  ஒரு ஆவணப்படப்பிடிப்புக்காக ஆமீனாவுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்த  ஊருக்குப் போயிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவரிடம், அவள் பெயரையும் விபரங்களையும் சொல்லி ‘வீட்டைக் கண்டுபிடிக்க முடியுமா?' என்று கேட்டேன். ‘இங்கே வீட்டுக்கு ஒரு ஆமீனா இருப்பாவளே’ என்றார். அந்த பதிலில் வலிகொண்ட அர்த்தம் வேறொன்று உள்ளது என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆமினாவுக்கு என்று மட்டும் இல்லை. திணிக்கப்படும் பட்சத்தில் வாழ்க்கை அனைவருக்கும் இப்படித்தான் அமையும்.

திருமண உறவு சிறப்பாக அமைந்திட என்ன தேவை என்று பேசப்படும்போதெல்லாம் புரிந்துகொள்ளுதல் மட்டுமே மையத்தீர்வாக முன்வைக்கப்படுகிறது. உண்மையிலேயே புரிந்துகொள்ளுதல் மட்டுமே போதுமானதுதானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36இங்கு எல்லோருக்கும் எல்லாம் புரியத்தானே செய்கிறது. எந்தச் செய்கை ஓர் ஆணைக் காயப்படுத்தும் என்பதும், எந்த வார்த்தை பெண்ணைத் துன்புறுத்தும் என்பதும் புரியாதவர்களா நாம்? பலநேரங்களில் “புரிந்துகொண்டோம்” என்பதின் விளக்கம், பிரிந்து செல்வதாக அமைந்துவிடுவதின் ரகசியம் என்ன? புரிதலின் அர்த்தம்தான் என்ன? 

பெரியம்மாவுக்கு, பாடுவதென்றால் கொள்ளை விருப்பம். முறையாக சங்கீதம் பயின்று நன்றாகப் பாடத் தெரிந்தவர். ஆனால், பாட மாட்டார். எந்தப் பொது இடத்திலும் பாடக் கூடாது என்று மிரட்டியபடியே இருப்பார் பெரியப்பா. தன் சொல் மீறி எங்காவது பாடிவிடுவாளோ என்று தோன்றிவிட்டால், கண்களை உருட்டியபடி முறைத்தபடி நிற்பார். இது தன் மனைவிக்கு எத்தனை பெரிய அவமானத்தையும் உளச்சிக்கலையும் தேடித் தந்திருக்கும் என்பது அவருக்குப் புரியாமலா இருந்திருக்கும்?

பெரியம்மாவின் மனதில் அது எவ்வளவு பெரிய மோசமான விளைவை ஏற்படுத்தியிருந்தது என்பதை முழுமையாக உணராமலேயே அவர் தன் காலத்தைக் கடத்திவிடுவாரோ என்பதுதான் என்னுடைய வருத்தம். பெரியப்பாவைப் பொறுத்தவரை, அது அந்த ஒருநாளின் ஒரு சம்பவம். அவ்வளவேதான்.

உண்மையில் புரிந்துகொள்தல் என்பது எந்த உறவுக்கும் அடிப்படைதானே தவிர, அதுவே தீர்வாகிவிடுவது இல்லை.

என்னுடைய பெற்றோருக்கு மத்தியில் எதற்கெல்லாம் விவாதம் வரும் என்பதைச் சிறுவயதில் இருந்தே கவனித்து வருகிறேன். அதுவல்ல விஷயம். அந்த விவாதம் எப்படி நடைபெறுகிறது என்பதுதான் என்னை யோசிக்க வைத்திருக்கிறது. உரத்த குரலெடுத்து தன்பக்க நியாயத்தை மட்டும் வலியுறுத்திவிட்டு அப்பா அங்கிருந்து நகர்ந்துவிடுவார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, உள்ளே மோதும் எண்ணங்களை அடக்கி அதைச் சுமந்தபடிக்கு அடுத்தடுத்த வேலைகளுக்குள் தன்னை நுழைத்துக்கொள்வாள் அம்மா. வீட்டு வேலைகளில் சலிப்பில்லாமல் பெண்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதன் பின்னால் இருக்கும் உளவியல் இதுதான்.

தன்னிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப் பழகிக்கொள்கிறார்கள் என்பதைத்தான் குழந்தைகள் அதிகம் கவனிக்கின்றனர். ஆண்-பெண் உறவை, முதலில் குழந்தைகள் அறிந்துகொள்வது தாய் தந்தை வழியாகத்தான். அந்த அறிதல்தான் அவர்களைச் செம்மைப்படுத்தவோ, சேதப்படுத்தவோ செய்கிறது.

நான் நினைத்ததைப் படிக்க வேண்டும் என்று விரும்பியவர் என்னுடைய அம்மா. ஊடகம் தொடர்பான படிப்பைத் தேர்ந்தெடுக்கப்போகிறேன் என்றதும், என் அப்பாவிடம் பேசி அவரைச் சம்மதிக்கவைத்ததும் அம்மாதான். வேலைக்காக சென்னைக்குத் தனியாக வந்து தங்க வேண்டும் எனும்போதும் மகிழ்ச்சியுடன் அனுப்பிவைத்தார். காரணம் என்னுடைய அம்மா பள்ளிக்காலத்தில் விளையாட்டு வீராங்கனை. மருத்துவப் படிப்புக்காகத் தேர்வானவர். ஆனால், இவை எதையும் அம்மாவால் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோக முடியவில்லை. காரணம் மற்றவர்களுக்கு எளிமையானதுதான் – ‘பொண்ணுங்களுக்கு எதுக்கு விளையாட்டும் படிப்பும்?’

இதனாலேயே “வீட்டு வேலையெல்லாம்கூட பிறகுதான். முதல்ல படி” என்பதுதான் அவர் எனக்கும் என்னுடைய சகோதரிக்கும் வலியுறுத்தியது.

நான் காதல் திருமணம் செய்துகொண்டவள். இதற்காக மிகவும் நேசித்த எனது குடும்பத்தை பலமாக எதிர்க்க வேண்டியிருந்தது. என் பெற்றோரிடம் லட்சங்களில் சம்பளம் வாங்கும் மணமகன்களின் பட்டியல் இருந்தது. வசதி வாய்ப்புக்குக் குறைவில்லாத வாழ்க்கையைத் தரக்கூடியவர்கள் என்ற ஜாதகங்களும் இருந்தன. பெண்ணைத் திருமணம் செய்து தரும்போது மணமகன் வீட்டில் பெண் வீட்டார் கேட்டுத் தெளிவு பெறத் தவறிவிடும் முக்கியமான  விஷயம் ஒன்று உண்டு. அதையே என் பெற்றோர் முன் கேள்வியாக வைத்தேன். ‘நீங்கள் எனக்காகப் பார்க்கும் மாப்பிள்ளை, என்னுடைய கனவை நிறைவேற்ற உறுதி தருவாரா?’ என்பது என் கேள்வி.

நான் ஊடகங்களில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என் கனவு. அதன் நிமித்தம் தொடர்ந்து பல நாள்கள் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க வேண்டியிருக்கும், நேரங்காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டி வரும். முக்கியமாக ஆண்கள் அதிகம் பணி செய்யும் துறை இது. ‘இதற்கெல்லாம் ஒப்புக் கொள்வாரா?’ என்ற எனது கேள்விகளுக்கு அவர்களது பதில் வெறும் மௌனமே. இந்த மௌனம் சம்மதத்துக்கானது அல்ல. நடக்காது என்பதற்கான முதல் சமிக்ஞையே அந்த மௌனம்.

சில வருடங்களுக்கு முன், ஆந்திர மாவட்டம் ஒன்றில் மீனவர்களுக்கும் காவல் துறையினருக்கும் மிகப்பெரிய போராட்டம் கலவரமாக நடந்து முடிந்திருந்தது. காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு மீனவர் இறந்து போயிருந்தார். கொந்தளிப்பான மனநிலையில் இருந்த அந்த மக்களை ஒரு ஆவணப்படத்துக்காக சந்தித்துப் படம் பிடிக்க வேண்டியிருந்தது. சிலருடைய தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் எங்கள் குழுவினரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். எங்களை அனுப்பி வைத்த நிறுவனம், எங்களை யாரென்றே தெரியாது என்று கைவிரித்துவிட்டது.

மூன்று நாள்கள் காவல் நிலையத்தில் இருக்க வேண்டியதாயிற்று. எங்கள் குழுவில் நான் மட்டுமே பெண். எனக்குக் கொஞ்சம் தெலுங்கு தெரியும். என்னுடைய தெலுங்கு நெல்லூர் பகுதியின் உச்சரிப்பில் இருந்ததால், அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி ‘நீ நெல்லூர் நக்சலா?’ என்றார். விதவிதமாகக் கடுமையான முறையில் விசாரிக்கப்பட்டேன். இவை எல்லாம் எனக்குப் பழக்கம் இல்லாதது. நேரம் ஆக ஆக என்னுடைய நம்பிக்கையைச் சிறிது சிறிதாகத் தளரவிட்டுக் கொண்டிருந்தேன். நடப்பவற்றை ஊகிக்க முடியாமல் சோர்வடைந்தேன். பிறகு, வந்த இரண்டு நாள்கள் நான் மட்டும் தனி அறையில் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் வற்புறுத்தினார்கள்.

‘இந்தப் படத்துக்கு முழுப்பொறுப்பும் என்னைச் சேர்ந்தது. நீங்கள் தண்டிக்க விரும்பினால், என்னை வைத்துக்கொண்டு வேலைக்காக வந்த அவர்களை விட்டுவிடுங்கள். குறிப்பாக, எங்களுடன் வந்த பெண்ணைத் தனியாக எங்கும் அனுப்ப முடியாது’ என்று எதிர்ப்பு தெரிவித்து எனக்காக வாதாடி உரக்கக் குரல் கொடுத்த நண்பர் அய்யப்பனைத்தான் நான் திருமணம் செய்துகொண்டேன்.

அந்தக் காவல் நிலையத்தில் வயதான எழுத்தர் ஒருவர் மட்டும் கொஞ்சம் கரிசனத்தோடு நடந்துகொண்டார். என்னைத் தனியாக அழைத்து `அம்மாயி, நீ என் மகள் வயதில் இருக்கிறாய்... பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஆபத்தான வேலை வேண்டாம். உன் பெயரும் புகைப்படமும் இந்தக் காவல்நிலையத்தில் பதிவாகும். இது தெரியவரும்போது, உன்னை யார் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள்?’ என்றார். மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துப் போகும்போதும் மூன்று முறை என்னிடம் அவர் சொன்னது, ‘நீ ஒரு பெண் என்பது முக்கியம் அம்மாயி.’ அந்த அக்கறை என்னை அசைத்தது. அதே நேரம் அவர் கூற்றுப்படிப் பெண் என்பது எதற்கெல்லாம் முக்கியம் என்கிற கேள்வியும் பதிலின்றி என்னுள் புதைந்தது!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

என் நெருங்கிய தோழி மாலா மிகுந்த தைரியசாலி. அவளது ஊர் சாதி சண்டைக்கு பெயர்பெற்ற ஊர் என்பதால், கல்லூரிக்குக் கொண்டுவரும் பையில் எப்போதும் கூர்முனை கொண்ட கையடக்க அரிவாளை வைத்திருப்பாள். தன்னை ‘ஏட்டி' என்று அழைத்த சக மாணவனை ‘ஏல... என்ன? வாய் நீளுது’ என்று அதிரும்படி சட்டையைப் பிடித்துக் கேட்டுத் திகைக்கச் செய்தவள்.

தொலைபேசியில் பேசும்போதெல்லாம் அவள் கணவரைப் பற்றி விசாரிப்பேன். ஒவ்வொரு தடவையும் ஏதேனும் ஒரு பதில் சொல்வாள் அல்லது கேள்வியை வெறுமையாய்க் கடந்துவிடுவாள். அவர்களுக்குள் உள்ள பிரச்னை அப்படிப்பட்டது. குடித்துவிட்டுத் தெருவில் இழுத்துப் போட்டு அடிக்கும் அவரிடமிருந்து தப்பிக்க, சுடுகாட்டில் சில இரவுகளைக் கடத்தியவள். குழந்தைகளுக்காகக் கணவனை மன்னிக்கிறாள் என்பது தெரியும். குழந்தைகளுக்காக மனைவி தன்னைச் சகித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதால், ஒவ்வொரு கணமும் குடியால் அவர் தப்பித்துக்கொண்டே இருக்கிறார்.

வளர்ந்த பிறகு அல்ல, பிறந்த கணத்திலேயே பெண் என்பதால் பதற்றம் உருவாக்கப்படுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்து, பின் அரை மணி நேரத்தில் பிரசவ அறையில் இருந்து தனியறைக்கு மாற்றப்பட்டேன். முதல் வாழ்த்தினைப் பதிவு செய்தவர் அந்த மருத்துவமனையின் பெண் பணியாளர். ‘பொன்னியம்மனுக்கு வேண்டிக்கோ கண்ணு... மூணாவது  புள்ளையாவது ஆம்பளையாப் பொறக்கும், என் தங்கச்சி மவ அப்படி வேண்டிக்கிட்டுத்தான் அவளுக்குப் பையன் பொறந்தான்’ என்றார்.

சந்திக்கும் நபர்களில் சிலர் இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததற்கு ஆறுதலும் தேறுதலும் வழங்கி வருகிறார்கள். ‘இயேசு உங்களை இரட்சிப்பார்’ என்றார் எங்கள் தெருவாசி ஒருவர். ‘ ‘கமலஹாசன், ரஜினிகாந்த், ஒபாமா இவங்களுக்கெல்லாம் ரெண்டு பெண் குழந்தைங்க... அவங்க நல்லா இல்லியா...? அப்புறம் இவருக்குக்கூட...'' என்றார் ஒரு நண்பர் அடுத்த பட்டியலை யோசித்தபடி. அவருக்கிருந்த அக்கறையில் உலக மக்களின் ரேஷன் கார்டுகளில் இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட தகப்பனாரின் பெயர்களை எல்லாம் சொல்லியிருப்பார் என்றுதான் நினைத்தேன். வம்படியாகப் பேச்சை மாற்ற வேண்டியிருந்தது.

இங்கு பெண் குழந்தைகள் வளர்வதில் உள்ள சிக்கல்களும், பாதுகாப்பற்றத் தன்மையும் தான் இப்படிப் பேசவும் யோசிக்கவும் வைக்கிறது.

வேலைக்குப் போகிற திருமணமான பெண் முதலில் தொலைப்பது ஓய்வை, பிறகு தனக்கான பொழுதுகளை. குழந்தைகளை வேறு ஒருவர் பராமரிப்பில் விட்டுவிட்டு வேலைக்குப் போகும் பெண்களின் மனம் கொள்கிற குற்ற உணர்ச்சியையும் பதைபதைப்பையும் யாரால், எப்படி விவரித்துவிட முடியும். கைக்குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு பால் சுரக்கும் கனத்த மார்போடு மாலையில் வலியோடு ஓடிவரும் பெண்களை நாம் சந்திக்காமலா இருக்கிறோம்?

சானிட்டரி நாப்கின்களை மாற்றிக்  கொள்வதற்கு இடம் தேடி நாடு முழுவதும் இந்த நொடியிலும்கூட பலர் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பார்கள். அப்போது ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அதன் தொடக்கத்தை இப்போதெல்லாம் சில வீடுகளில் பார்க்க முடிகிறது. அதே சமயம் வீட்டு வேலை செய்கிற கணவனை, மனைவிகள் குற்ற உணர்வுடனேயே எதிர்கொள்கிறார்கள் என்பதும் சொல்லப்பட வேண்டியது. இந்தக் குற்றஉணர்வு எனக்குள் தாங்காமல் பார்த்துக் கொள்கிற என்னுடைய மாமியாரை நினைத்துப் பலமுறை நெகிழ்ந்திருக்கிறேன்.

குழந்தை தூக்கத்தில் இருந்து விழித்து அழுதால் ‘புள்ள அழுது... அவ ஏதோ எழுதிட்டு இருக்கா..நீ போய்த் தொட்டில ஆட்டு’ என்று அய்யப்பனை அனுப்பிவைப்பார்.

வாழ்நாள் முழுவதும் முதுகு ஒடிய வீட்டு வேலை பார்த்துக் கூலி வேலைக்கும் சென்று குழந்தைகளை வளர்க்க அவர் பட்டக் கஷ்டங்களில் சிறுதுளி கூட நான் அனுபவித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். பள்ளிக்கூடம் பக்கம் போகாத அவர்தான், தன் பிள்ளைகளுக்கு அவர்கள் மனைவிகளைப் பற்றி இப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்... ‘நம்ம வீட்டுப் புள்ளைங்கனு ஆனதுக்கப்புறம் அவங்க சந்தோஷமும் சோக்கேடும் நமக்கும் சேர்த்துத்தான் மக்கா’ என்று.

அனுபவ  உறுதி கொண்ட ஒருவரால் ஆணையும் பெண்ணையும் சமமாகப் பாவிக்க முடியும் என்பதைக் கற்றுத்தந்த மனுஷி அவர்.

சாதி, வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம், உணவுமுறை என எல்லாவற்றிலும் வெவ் வேறு திசைகளில் பயணிக்கும் குடும்பம் எனக்கும் என் கணவருக்கும். கருத்து வேறுபாடுகள், பழக்கவழக்கங்களால் ஏற்படும் முரண்கள் என யாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு வைத்திருந்த நம்பிக்கையையும் மதிப்பையும் வாழ்க்கையில் எப்போதுமே  தொடரவேண்டும் என்பதில் இருவருமே அக்கறை கொண்டிருக்கிறோம். 

நம்முடைய சுயத்தையும் விட்டுத்தராமல் மற்றவர்களின் சுயத்தையும் கருத்தில்கொள்கிற உறவே நெடுங்காலம் வாழ்கிறது. திருமணமான புதிதில் துணையை மகிழ்விக்க வேண்டித் தரப்படுகிற வாக்குறுதிகளும், அதீத அக்கறையும் காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்துவது நம் சுயத்தை நாம் மறைத்துக்கொள்வதால்தான்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

சமீபத்திலும்கூட மாலாவிடம் பேசும்போது வழக்கம் போல் அவள் கணவரைப் பற்றி விசாரித்தேன், பட்டென்று சொன்னாள் ‘எப்ப சாவாருன்னு இருக்கு’.

‘நீ தைரியமான பொண்ணுல்லா... இப்படி வெறுத்திட்டியே” என்றேன்.

“இப்பவும் தைரியம்தான். இவன் கூட வாழ, தைரியம் இல்லைனா முடியுமா? இல்லாட்டி புள்ளைங்க நடுத்தெருவுலலா நிக்கும்.”

ஒருவரைக் கொலைசெய்ய வேண்டும் என்று நினைப்பது தவறுதான். ஆனாலும் கூட ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்தி வன்மமான மனநிலைக்குத் தள்ளிவிட்ட அந்தக் கணவனுக்கு இதனால் கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இருக்கப்போவதில்லை.

யானைக்கும் பாகனுக்குமான உறவு அன்னியோன்யமானது, அதே சமயம் ஆபத்தானதும். யானையின் பலமறிந்த பாகன் அதை அடக்கி ஆள்வதோ, அதன் பலவீனத்தைக்கொண்டுதான். யானை தன் நிலை திரிந்து என்றேனும் கட்டுப்பாட்டை மீறும்போது, அங்கு முதல் பலி ஆவது பாகன் தான். 

ஆண் பெண் உறவென்பது யானைக்கும் பாகனுக்குமான உறவாக இருப்பதாலேயே நாம் மீண்டும் மீண்டும் சிடுக்குகளையேப் பின்னிக்கொண்டிருக்கிறோம்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

நீ என்றான பிறகு
காரணங்களிலிருந்து விலகியே நிற்கிறாய்
அற்ப வாதங்களின் அருகில்
செல்ல நேர்கையில்
திசைகள் பிரிகின்றன.

நெருக்கமான கணங்களில்
திணறுகிறது
நீ அழுத்தும் அன்பு.

பிரிவது இன்னும் தடித்த தூரத்தில்
என்பதற்காகவாவது நாம்
பிரிய முயற்சி செய்யலாம்.

ஆனபின்னும்
மீதூர்ந்த காற்றின் சுவை தேடி
மருகுகிறது தேகம்

கம்பக்கட்டு வானத்தில்
தெறித்துப் போவது
நீ சுழற்றிய நான்

- அய்யப்பன் மகாராஜன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

சிவாஜி கணேசன் போன்ற மூத்தக் கலைஞர்கள் முன்பு கால் மேல் கால் போட்டு உட்காருவதால் நான் அவர்களிடம் மரியாதைக் குறைவாக நடப்பதாக எழுதுகிறார்கள்.  ஓய்வாக இருக்கும்போது இப்படி உட்காருவது என் வழக்கம். சிறு வயதிலிருந்தே நான் அப்படித்தான் பழகியிருக்கிறேன். இப்படி உட்காருவது மோசமான பழக்கம் என்று யாரும் என்னிடம் சொன்னதில்லை.

 - ஒரு நேர்காணலில் நடிகை சில்க் ஸ்மிதா

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

மிகமிகச் சிக்கலான விஷயத்தில்கூட அற்புதமான, நல்லதொரு ஆலோசனையை ஒரு குழந்தையால் தர முடியும் என்பது பெரியவர்களுக்குத் தெரிவதில்லை. ஐயோ! கடவுளே... அந்த அழகான குஞ்சுப்பறவை மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் உங்களைப் பார்க்கும்போது நீங்கள் அதை ஏமாற்றுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? குழந்தைகளைப் பறவைகள் என்று நான் சொல்வதற்குக் காரணம், இந்த உலகத்திலேயே ஒரு பறவையைவிடச் சிறந்ததாக, நல்லதாக வேறெதுவுமே இருக்க முடியாது.

- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

ந்த உலகத்தில் எத்தனையோ அழகான பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் முகத்தின் சிறு சுருக்கமும் கூட எனது வாழ்வில் இனிமையான நினைவுகளை  மீட்டுத் தந்துவிடக்கூடிய வல்லமையை நான் வேறு எங்கு காண்பேன்? எனது முடிவில்லாத வலிகளையும், ஈடுசெய்யமுடியாத இழப்புகளையும் உன் இனிய முகம் பார்த்தே கடந்துவிடுவேன். உனது இனிய முகத்தை முத்தமிடும்போது எனது வலிகளையும் முத்தமிட்டு அனுப்புகிறேன்.

- கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

ந்தக் கால்களால் எனக்கு அவமானமும் புண்படுத்துதலும் தொடர்ந்துகொண்டே இருந்தது. “இது என்னுடைய கால்கள். நான் யார்... எங்கிருந்து வருகிறேன் என்பதைச் சொல்கிற கால்கள். இந்தக் கால்களை நினைத்து நான் பெருமையடைகிறேன். எனது இந்த வளைந்த கால்கள்தான் பாலைவனத்தின் ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்ட வைத்தது... என்னுடைய மெதுவான நடை என்பது ஆப்பிரிக்கப் பெண்களுக்கேயான பிரத்யேக நடை. இது என்னுடைய பாரம்பரியத்தைப் பேசுகிறது.

- வாரிஸ் டைரியின் சுயசரிதை Desert Folwer-ல் இருந்து...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 36

ம், நான் இதோ வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்,
சிரிக்கிறேன், பாடுகிறேன், உறங்குகிறேன்
தூக்கமாத்திரைகளைத் தேடி மருந்துக் கடைகளில்
ஏறி இறங்குவதில்லை நான்.
நீங்கள் ஒவ்வொருவரும் மண்ணாகிவிடும்போதும்
மிஞ்சியிருப்பேன் நான்.
மையால் கருமைப்படுத்திய என் இரு விழிகளுக்கும்
தொலைவில், வெகு தொலைவில், ஒரு வற்றாத
நீர்நிலையைப் போல என் கண்ணீர் தேங்கி நிற்கிறது.
இருப்பினும் நான் அழுவதை நீங்கள்
காண மாட்டீர்கள் ஒருபோதும்.

- தனது சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் கமலாதாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism