நான் முன்னர் வேலை பார்த்த இடத்தில் எனக்கு ஒரு ஹீரோ இருந்தார். எப்போதும் வெளிர்நிறச் சட்டை, அடர்நிற பேன்ட்டில்தான் அவரைப் பார்க்கவே முடியும். எனக்குத் தெரிந்து பேன்ட் நிறத்துக்கு ஏற்ப சாக்ஸ் அணிபவர் அவர் மட்டுமே. அவர் நடப்பதிலிருந்து, வேலை செய்யும் முறை வரை அனைத்தையும் `இப்படி ஒரு ஜென்டில்மேனா?’ என்று வாயைப் பிளந்து பார்ப்பேன். அத்தனை ஸ்மார்ட்! பள்ளிகளில் கேட்பதுபோல அந்த அலுவலகத்தில் யாராவது என்னிடம், `நீ என்னவாக விரும்புற?’ எனக் கேட்டிருந்தால், மொபைலில் இருந்த அவரின் புகைப்படத்தைக் காட்டியிருப்பேன். உண்மையாகவே அவர் படத்தை அப்போது மொபைலில் வைத்திருந்தேன்.

அவர் வேறு டீம். சில மாதங்களில் அவருடன் இணைந்து ஒரு வேலை செய்யவேண்டியிருந்தது. அதற்காக நடத்தப்பட்ட முதல் மீட்டிங் அது. நானும் ஸ்கை புளூ சட்டையை மடித்துக்கூட விடாமல், இன்டர்வியூவுக்கு வந்தவனைப்போலப் போயிருந்தேன். மீட்டிங் தொடங்கிய மூன்றாவது நிமிடம் அவருக்கு ஓர் அழைப்பு வந்தது.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 6

``ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க...’’

எனக்கு வைப்ரேட் ஆனது. குத்துப்பாட்டு ஒன்றும் மோசமில்லை. ஆனால், அவரிடம் அந்த இடத்தில், அவ்வளவு சத்தத்தில், அப்படி ஒரு ரிங்டோனை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. `மீட்டிங்கில் இருக்கிறேன்...’ என அவர் கட் செய்த அடுத்த பதினான்காவது நிமிடம் இன்னோர் அழைப்பு.

``ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க...’’

அந்த மீட்டிங் முடிவதற்குள் என் மொபைலில் இருந்த அவரது புகைப்படத்தை அழித்துவிட்டேன். `எப்படி ஒருவர் தனக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மனிதனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க முடியும்?’ என யோசித்துக்கொண்டிருந்தேன். மீட்டிங்குக்கு வரும்போது மொபைலை சைலன்ட்டில் போட வேண்டும் என கார்ப்பரேட்டில் கால்பதித்த நாளிலிருந்து பல நூறு முறை நாம் கேட்டிருப்போம். ஆனால், எத்தனை பேர் அதைச் செய்கிறோம்? மறப்பது மனித இயல்புதான். அப்படியென்றால், ஒருமுறை அழைப்பு வந்த உடனே சைலன்ட்டில் போட வேண்டும் அல்லவா? ம்ஹூம். கடைசி வரை `நாக்க முக்க’தான்.

மொபைல் என்பது இப்போது தனிப் பொருள் அல்ல. அதுவும் நம் உடலின் ஓர் அங்கம். நாம் யார் என்பதை அடையாளப்படுத்தும் விஷயங்களில் மொபைலும் ஒன்று. பேருந்துப் பயணத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். திடீர் எனக் கிளம்பும் `ஹலோ...’
 
300 டெசிபலைத் தாண்டி ஒலிக்கும். இயல்பாகவே அத்தனை தலைகளும் சத்தம் வரும் திசை நோக்கித் திரும்பும். சில `உச்’கள் கொட்டப்படும். சிலர் முனகத் தொடங்குவார்கள். சத்தமாகப் பேசும் அந்த நபர் அங்கு அசூயையாக உணரப்படுவார். எந்த ஒரு தனிமனிதனின் மதிப்பையும் மொபைலால் உயர்த்தவும் முடியும்; பாதாளத்தில் தள்ளவும் முடியும்.

போன மாதம் நடந்தச் சம்பவம் இது. எனக்கு நெருக்கமான திரைத்துறை நண்பருடன் அவரும் வந்திருந்தார். இருவருக்கும் பல வருடப் பழக்கம். வேலை நிமித்தம் அவரது மொபைலில் சில புகைப்படங்களை எங்களுக்குக் காட்டினார். ஒவ்வொரு படமாக `ஸ்வைப்’ செய்துகொண்டே வந்தவர், கடைசியாகச் செய்த ஸ்வைப்தான் பிரச்னை. அவரை அழைத்து வந்த திரைத்துறை நண்பரின் அந்தரங்கப் படம் ஒன்றும் அதில் இருந்தது. ``விளையாட்டா எடுத்துவெச்சேன்’’ என அவர் சொன்னதை நண்பர் கேட்கவில்லை. அத்தனை வருடப் பழக்கத்தை அந்த ஒரு புகைப்படம் நொடியில் சிதைத்துவிட்டது.

இதை ட்விட்டரில்தான் படித்தேன். ஒருவர் தனது மொபைலை எங்கேயோ வைத்துவிட்டுத் தேடியிருக்கிறார். உதவும் நோக்கில் அவரின் பாஸ், அந்த நபரின் எண்ணை அழைத்திருக்கிறார். அவரது கெட்ட நேரம், மொபைல் பாஸ் நின்ற இடத்துக்கு அருகே கீழே கிடந்திருக்கிறது. மொபைலுக்குப் பொய் சொல்லத் தெரியாது. `Brainless idiot calling’ என்பதைப் பளிச் எனச் சொல்லியிருக்கிறது. அவர் வேலையில் கில்லியாக இருந்திருக்கலாம். ஆனால், இனி?

இதுவும் பலருக்கும் நடந்திருக்கக்கூடிய சம்பவம்தான். குழந்தை கேட்கிறதே என மொபைலைக் கொடுப்போம். திடீர் என ஏடாகூடச் சத்தத்துடன் ஒரு வீடியோவை அது திறந்திருக்கும். அவசர அவசரமாக வாங்கி, அதை மூடுவதற்குள் நம் மரியாதை மாயவரம் தாண்டியிருக்கும்.

உங்கள் மொபைலைக் கொஞ்சம் எடுத்துப் பாருங்கள். வால் பேப்பர் என்ன... ரிங்டோன் என்ன... உங்கள் பாஸ் பெயரை எப்படிப் பதிந்திருக்கிறீர்கள்... என்னென்ன படங்கள், வீடியோக்கள் இருக்கின்றன? வாட்ஸ்அப் வழி வந்த பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். ஆனால், உங்கள் மொபைலில்தான் இருக்கும்.

`உன் நண்பனைக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ எல்லாம் இப்போது கிடையாது. நமது மொபைல்தான் நமது நண்பன். நம் பிராண்ட் அம்பாஸிடர்.

நிஜத்தில் மட்டுமல்ல; டிஜிட்டலிலும் நாம் சுத்தமாக இருக்க வேண்டும். எப்படி? சொல்கிறேன்!

- பெர்சனல் பேசுவோம்...