Published:Updated:

ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!

ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!
பிரீமியம் ஸ்டோரி
ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!

சுகுணா திவாகர், ஓவியம்: ஹாசிப்கான்

ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!

சுகுணா திவாகர், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!
பிரீமியம் ஸ்டோரி
ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!

காரல் மார்க்ஸுக்கு இது இரண்டாம் நூற்றாண்டு. மார்க்ஸ் பிறந்து, 200 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால்,  இரு நூற்றாண்டுகளைக் கடந்தும் விவாதிக்கப்படும் மிகச் சில சிந்தனையாளர்களில் மார்க்ஸ் முக்கியமானவர்.

காரல் மார்க்ஸின் வரலாற்றைப் படிப்பவர்கள், ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் கடந்துவிட முடியாது. மார்க்ஸின் குழந்தைகள், வறுமையின் காரணமாகத் தொடர்ந்து இறந்தன. ஃபிரான்சிஸ்கா என்கிற குழந்தை இறந்தபோது, குழந்தையின் சடலத்தைப் பின்னறையில் வைத்துவிட்டு, முன்னறையில் மார்க்ஸின் குடும்பம் செய்வதறியாது இரவெல்லாம் விழித்துக்கிடந்தது. மறுநாள் குழந்தைக்கான சவப்பெட்டி வாங்குவதற்குப் பணம் இல்லை. மார்க்ஸ் நாடு, நாடாக அரசுகளால் துரத்தப்பட்டு இங்கிலாந்தில் வசித்துவந்த காலம். தங்களைப்போலவே பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து வந்திருந்த நண்பர் ஒருவரிடம் கடன் பெற்றுதான் குழந்தைக்கான சவப்பெட்டி வாங்கப்பட்டது. ‘என் குழந்தை பிறந்தபோது அதற்குத் தொட்டில் இல்லை. இறந்தபோது சவப்பெட்டி வாங்க வசதியில்லை’ என்று எழுதினார் மார்க்ஸின் மனைவி ஜென்னி. பால் வற்றிப்போன தன் மார்புகளைத் தன் குழந்தையொன்று அழுந்தக் கடித்ததால் ரத்தம் வடிந்ததை, தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார் ஜென்னி.

ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!

மேல்கோட்டு அணிவது என்பது நம் ஊரில் ஆடையலங்காரமாகவும் ஆடம்பரமாகவும் இருக்கலாம். ஆனால், குளிர் நடுக்கும் ஐரோப்பிய நாடுகளில் அது அத்தியாவசியம். குடும்பச் செலவுகளுக்காகப் பலமுறை தன் கோட்டை அடகுவைத்திருக்கிறார் காரல் மார்க்ஸ். ‘நியூயார்க் டிரிப்யூன்’ பத்திரிகையில் வருமானத்துக்காகக் கட்டுரைகள் எழுதியபோது காகிதங்கள் வாங்கப் பணம் இல்லை; காகிதங்கள் இருந்தாலும் தபாலில் அனுப்ப அஞ்சல்தலைகள் வாங்கப் பணம் இல்லை. தனது ஆய்வுகளுக்காகப் படிப்பதற்கு பிரிட்டிஷ் நூலகத்தில் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டார். ஆனால், அவரால் அங்கு செல்ல முடியவில்லை. காரணம், பிரிட்டிஷ் நூலகத்தின் உடை ஒழுங்கு, கோட்டு அணிவது. மார்க்ஸின் கோட்டோ அடகுக்கடையில் இருந்தது. தன் குழந்தையின் பழைய ஷூக்களைக்கூட  அடகுவைத்திருக்கிறார்.

காதலைத் தவிர மார்க்ஸிடமிருந்து வேறு எதையுமே பெறாத ஜென்னி, தன் வாழ்நாளை வறுமையிலும் வியாதியிலும் கழித்தார். ஏழ்மைக்குப் பலியான குழந்தைகள், மேல் கோட்டு, படுக்கைகள், தொட்டில் என மார்க்ஸ், வாழ்க்கையில் இழந்தவற்றைப் பட்டியலே போடலாம். ஆனால் மார்க்ஸோ, ``உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. உங்களுக்காக ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது!” என்றார்.

`இந்த உலகம் ஏன் ஒடுக்குமுறைகளால் சூழப்பட்டிருக்கிறது? ஏழை, பணக்காரர் என்ற இரண்டு பெருத்த இடைவெளிகள் ஏன்?’ என்ற கேள்விகளுக்குப் பதில் தேடவே மார்க்ஸ் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அதற்கு முன்னால் இருந்த சிந்தனையாளர்களிடமிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என்பதையும் அவரே சொன்னார். “இதுவரை இருந்த எல்லா தத்துவங்களும், இந்த உலகத்தைப் பற்றியே விளக்கிக்கொண்டிருந்தன. நம்முடைய வேலை, உலகத்தை விளக்குவதல்ல; மாறாக மாற்றியமைப்பது.’’

தத்துவம் - நடைமுறை ஆகியவற்றை இணைப்பதற்கான சிந்தனைமுறையைத்தான் மார்க்ஸ் உருவாக்கினார். அதற்காக அவர் படித்த புத்தகங்கள் ஏராளம். சமயம், தத்துவம், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என மார்க்ஸ் படிக்காத, தொடாத துறைகளே இல்லை. எல்லாவற்றின் வழியாகவும் சமூக மாற்றத்துக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினார். அதுவே ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யானது. ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில்தான் சோஷலிஸப் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் நினைத்தார். ஆனால் அவர் இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரஷ்யாவில் முதல் சோஷலிஸப் புரட்சி ஏற்பட்டது. ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா, லாவோஸ் என உலக உருண்டையின் பல பகுதிகளில் சிவப்பு படர்ந்தது.

நமது சமகாலமும் வருங்காலமும் கற்றுக்கொள்வதற்கென சில விஷயங்கள் மார்க்ஸிடம் இருக்கின்றன. மார்க்ஸ் தனது தத்துவங்களை வெறுமனே கனவாகவோ  லட்சியவாதமாகமோ வைக்கவில்லை. பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளின் வழியாகத் தன் கோட்பாடுகளை உருவாக்கினார். குறிப்பாக, ‘உபரி மதிப்பு’ என்னும் அவரது கருத்தாக்கம் முக்கியமானது. உழைப்பு, உற்பத்தியின் மூலம் உருவாகும் பொருள்கள் நுகர்வுக்குப் பிறகு எஞ்சியிருப்பது ‘உபரி மதிப்பு’. அதுதான் லாபமாகவும் மூலதனமாகவும் மாறுகிறது. இந்த மூலதனம் மீண்டும் உழைப்பின் மூலம் உற்பத்திப் பொருள்களாகி வர்க்கங்களை உருவாக்குகிறது. ‘கேப்பிடலிஸம்’ என்பதை ‘முதலாளித்துவம்’ என்று மொழிபெயர்க்கும்போது அதற்கு வில்லத்தனமான அர்த்தம் உருவாகிறது. சமூக இயக்கத்தில் மூலதனத்தின் பங்கை ஆராய்வதே மார்க்ஸின் நோக்கம். அதனால்தான் ‘கேப்பிடலிஸம்’ என்பதை ‘முதலீட்டியம்’ என மொழிபெயர்த்தார் தமிழின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளரான ராஜன்குறை.

வரலாற்றை மார்க்ஸ் அணுகிய முறை முக்கியமானது. வரலாறு என்பது, அரசர்களின் போர்களைப் பற்றிப் பேசுவது அல்ல; மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து வரலாற்றை அணுகும்போதுதான் சுரண்டலுக் கான காரணங்களும், சமூக மாற்றத்துக்கான வழிகளும் தெளிவாகின்றன என்பது மார்க்ஸின் ஆய்வுமுறை. இன்றளவும் கறுப்பர்கள், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்டோர் வரலாற்றை விசாரணை செய்வதற்கு மார்க்ஸிய ஆய்வுமுறை உதவுகிறது. வரலாற்றை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும், மாற்றியமைப்பதற்கும் மார்க்ஸின் சிந்தனைகள் நமக்குப் பயன்படுகின்றன.

எல்லாவற்றையும்விட முக்கியம், மார்க்ஸின் சிந்தனைகளில் அடிநாதமாக இருந்த மனிதநேயமும் சகமனிதர்கள் மீதான அன்பும். அவர் மனிதகுல வரலாற்றில் ‘உழைப்பின்’ பாத்திரத்தை வலியுறுத்தினாலும் மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாகப் பார்க்கவில்லை. ``போதுமான உழைப்பு, ஓய்வு, கொண்டாட்டம் ஆகியவை எல்லா மனிதர்களுக்கும் சமமாக வேண்டும்’’ என்றார். இந்தப் பார்வைதான் இப்போது எல்லோருக்கும் அவசியம். மார்க்ஸியவாதிகளுக்கு அப்பாலும் பலரையும் மார்க்ஸின் சிந்தனைகள் பாதித்திருக்கின்றன.

காந்தி, மார்க்ஸ் வலியுறுத்திய மனிதநேயத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், ‘முதலாளி களிடமிருந்து வன்முறை மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளி வர்க்கத்திடம் ஒப்படைப்பது’ என்பதை ஏற்க முடியாமல் ‘தர்மகர்த்தா’ முறையை முன்வைத்தார். காங்கிரஸ்காரராக இருந்தபோதும் ஜவஹர்லால் நேருவுக்கு சோஷலிஸக் கருத்துகளின்மீது ஆர்வம் இருந்தது. அம்பேத்கர் ‘புத்தரா, காரல்மார்க்ஸா’ என்ற புத்தகத்தை எழுதி, ‘மார்க்ஸின் வழியைவிட புத்த தம்மமே தீர்வு’ என்றார். ஆனால், அவர் இந்திய வரலாற்றைச் சாதியத்தின் வரலாறாக அணுகி ஆய்வு செய்ததற்கும் ‘குடும்பம்’, ‘அகமண முறை’ ஆகியவற்றுக்குப் பின்னால் இருந்த சாதியத்தை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கும் மார்க்ஸிய ஆய்வுகள் நிச்சயம் தூண்டுகோலாக இருந்திருக்கும். சட்ட அமைச்சராக இருந்தபோது தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொண்டுவந்து மே 1-ஐ விடுமுறை நாளாக அறிவித்தவர் அம்பேத்கர்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் கம்யூனிஸக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் முதன்முதலில் வெளியிட்டவர் அவரே. குழந்தைகளுக்கு ‘ரஷ்யா’ என்று பெயர் சூட்டினார். அவரது ‘குடியரசு’, ‘விடுதலை’ இதழ்களில் ரஷ்ய சமதர்மக் கருத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. 1932-ம் ஆண்டில் சோவியத் பயணம் மேற்கொண்ட பெரியார், சோஷலிஸ மாற்றங்களை நேரடியாகக் கண்டு வியந்தார். ‘சோவியத் குடியரசின் குடிமகனாக ஆகவேண்டும்’ என்று விண்ணப்பிக்கும் அளவுக்கு அவருக்கு ரஷ்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சோவியத்திலிருந்து திரும்பிய பிறகு கம்யூனிஸக் கருத்துகளைப் பிரசாரம் செய்தார். அரசின் நெருக்கடிகளால் அவர் அதைக் கைவிட்டபோதும் அவ்வப்போது சமதர்மக் கருத்துகளில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

`தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்றழைக்கப்பட்ட சிங்காரவேலர், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் தலைமகன் ஜீவா இருவரும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து உருவானவர்களே. 1952-ம் ஆண்டில் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் பெரியார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு எம்.ஆர்.ராதா போன்ற பெரியார் இயக்கத் தொண்டர்கள்தான் அடைக்கலம் கொடுத்தனர்.

தமிழகம், இந்தியா என்றில்லை, உலகம் முழுவதுமே மார்க்ஸின் சிந்தனைகளால் தாக்கத்துக்குள்ளான மனிதர்கள் அதிகம். ஒடுக்குமுறை, சுரண்டல், வறுமை, பட்டினி  இருக்கும்வரை மார்க்ஸின் பெயரை உச்சரிக்கும் ஒருவராவது இருப்பார் என்பதுதான் சிவப்பு யதார்த்தம். ‘மதம் மனிதனுக்கு அபின்’ என்ற மார்க்ஸ், அது நிராகரிக்கப்பட்டவர்களுக்கான நம்பிக்கையாக இருந்ததையும் ஏற்றுக்கொண்டார்.

‘மதம், இரக்கம் மறுக்கப்பட்டவர்களின் இரக்கமுள்ள ஆன்மா; ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு’ என்றார். அதேபோல்தான் சுரண்டலுக்கு ஆளாகும் அனைவருக்கும் மார்க்ஸ் ஒரு நம்பிக்கைக்குரிய சிந்தனையாளராக இருக்கிறார். மார்க்ஸின் இறுதிச்சடங்கின்போது, இடுகாட்டில் பேசிய ஏங்கெல்ஸ் ‘`மார்க்ஸ் என்ற மகத்தான சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திவிட்டான்” என்றார். மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்தியிருக்கலாம். ஆனால், மார்க்ஸைப் பற்றிச் சிந்திப்பது உலகம் முழுக்க ஒரு காட்டுத்தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், காரல ்மார்க்ஸ், ‘ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெருமூச்சு!’