Published:Updated:

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!
பிரீமியம் ஸ்டோரி
நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

அதிஷா

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

அதிஷா

Published:Updated:
நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!
பிரீமியம் ஸ்டோரி
நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

வெற்றிகளைவிட அசாதாரணங்களை உடைத்துப்பார்க்கும் முயற்சிகள் எப்போதுமே மேலானவை. அவை தோல்வியிலேயே முடிந்தாலும், அதுதான் மாற்றத்துக்கான முதல் படி. அப்படிப்பட்ட ஒரு முயற்சியை சமீபத்தில் நிகழ்த்திக்காட்டினார் கென்யாவைச் சேர்ந்த எலியூத் கிப்சோகே. அந்த முயற்சிக்கு, ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே தலைவணங்கியிருக்கிறது.

மாரத்தான் ஓட்டக்காரர்களின் ‘தல’ எலியூத் கிப்சோகே-தான். 2013-ம் ஆண்டு முதல் தலைவனை அடித்துக்கொள்ள உலகத்திலேயே ஆள் கிடையாது. `மாரத்தான் போட்டிகளின் உசேன்போல்ட்’ எனச் சொல்லலாம். ஆனால், மாரத்தான் ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள். காரணம், எலியூத் உசேனுக்கும் மேல!

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

எலியூத் செய்தது, 42 சொச்சம் கிலோமீட்டர்கொண்ட மாரத்தான் தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் ஓடிக் கடக்கும் முயற்சி. `#Breaking2’ எனப் பெயரிடப்பட்ட இந்த முயற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது நைக் நிறுவனம். இதற்காக, கடந்த ஏழு மாதங்களாகத் தீவிர பயிற்சியில் இருந்தார் எலியூத். அவர் மட்டுமல்ல, மாரத்தான் போட்டிகளில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் எத்தியோப்பியாவின் லெலிசா டெசிசாவும், எரித்ரியாவின் ஜெர்சனேய் தடேசே உள்ளிட்ட மூவரும் களம் கண்டனர். இவர்களில் எலியூத் கிப்சோகேதான் இரண்டு மணி நேரம் 25 நொடிகளில் பந்தய தூரத்தை ஓடி முடித்து சாதனை படைத்தார்.
இரண்டு மணி நேரத்துக்குள் ஓட முடிக்கவில்லைதான்... முயற்சி தோல்விதான்... என்றாலும், இதுவே மாரத்தான் குல வரலாற்றையே புரட்டிப்போடும் சாதனை. மற்ற இருவரால் எலியூத்தை நெருங்கக்கூட முடியவில்லை.

2014-ம் ஆண்டில் கென்யாவின் டென்னிஸ் கிப்ருட்டோ கிமட்டோ என்கிற ஓட்டக்காரர், `2 மணி நேரம் 2 நிமிடம் 57 விநாடி’ ஓடியதுதான் இதுவரைக்குமான சாதனையாக இருந்தது. அதைவிட இரண்டரை நிமிடங்கள் குறைவான நேரத்தில் ஓடி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் எலியூத்.

`இரண்டு மணி நேரத்தில் ஒரு மாரத்தானை ஓடி முடிப்பது என்பது, மனிதனால் சாத்தியமே இல்லாத ஒன்று’ எனக் கடந்த 25 ஆண்டுகளாக எல்லா ஆராய்ச்சியாளர்களும் சொல்லி விட்டார்கள்.

ஓட்டப்பந்தயக்காரர்களின் பைபிளான ‘ரன்னர்ஸ் வேர்ல்டு’ இதழ் `2075-ம் ஆண்டு வரை இதற்கான சாத்தியங்களே இல்லை’ என 10,000 ஓட்டக்காரர்களின் பெர்ஃபாமன்ஸ்களைக் கணக்கிட்டுக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்துச் சொன்னது. எலியூத்தின் இந்தச் சாதனை முயற்சி குறித்த செய்திகள் வந்தபோதும், உலக ஓட்டக்காரர்கள் ஒன்றுகூடி ‘அது அத்தனை சுலபம் அல்ல... தோத்துடுவீங்க’ என்றது. `இவர்களால் வெல்ல முடியாது. பெரிய ரிஸ்க் எடுக்குறீங்க’ என்று நைக் நிறுவனத்துக்கும் ஏராளமான நெருக்கடிகள். ஆனால், மனிதகுலத்தின் மிகப்பெரிய பலமே எப்போதும் தன்னுடைய சாதனைகளைத் தானே உடைத்து முன்னேறுவதுதானே!

இப்போது எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சிதான். இனி இந்த 25 விநாடிகளையும்கூட குறைத்து முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. நாளைக்கே ஓர் இளைஞன் எலியூத்தின் சாதனையை உடைத்தெறிவான். ஆனால், அதற்கான விதை எலியூத் போட்டது.

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

‘`நம் குழந்தைகள், உலகில் எதுவுமே சாத்தியம்தான் என்ற நம்பிக்கையை இந்தச் சாதனையின் மூலம் பெறுவார்கள். அதிகமான கவனம், உறுதியான மனநிலை... எல்லாவற்றுக்கும் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் போதும். அவை உங்களை எங்கோ கொண்டு போய்விடும். அந்த நம்பிக்கையை இன்று நான் பெற்றேன். அதைத்தான் இன்று உலகுக்குக் கொடுத்துள்ளேன்’’ ஓட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்கள் முன்னால் மூச்சுவாங்க அமர்ந்த எலியூத், உதிர்த்த முதல் சொற்கள் இவை.

இந்தச் சாதனைக்கு என ஏழு மாதங்கள் விநாடி விநாடியாக உழைத்திருக்கிறார்கள் இதன் ஒருங்கிணைப்பாளர்கள். ஓட்டக்காரர்கள் மூன்று பேரும் சாப்பிடும் உணவு, தூங்க வேண்டிய நேரம், செய்யவேண்டிய பயிற்சிகள், அவர்களுடைய உடல்நிலையைக் கவனிப்பது, காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, அறிவியல்ரீதியிலான சோதனைகள்... என மூன்று பேரையும் கசக்கிப் பிழிந்தெடுத்திருக்கிறது நைக் டீம். ஓட்டத்தின்போது கூடவே ஓட நூற்றுக்கணக்கான மாரத்தான் சாம்பியன்கள், ஓடுவதற்கு ஏற்ற காலநிலை உள்ள இத்தாலியின் மோன்சா ஃபார்முலா ஒன் ட்ராக் என ஏராளமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டியது, மற்ற இருவரையும்விட எலியூத் எல்லா பயிற்சிகளையும் மிகவும் மகிழ்ச்சியோடு செய்திருக்கிறார் என்பதுதான். எலியூத் சாதனை படைக்க காரணமே அதுதான். ஏன் எனில் அவர் வளர்ந்தவிதமே அப்படித்தான்.

எப்போதும் 100% ஒழுங்கு, 100% உழைப்பு, 100% கட்டுப்பாடு. இதுதான் எலியூத்தின் ரகசியம். கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் எலியூத். தினமும் ஐந்து கிலோமீட்டர் ஓடித்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவருக்கான ஓட்டப்பயிற்சி தொடங்கியது அங்கேதான். அதுபோக வீட்டில் பால் கறந்து தன்னுடைய சைக்கிளில் கட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் மிதித்துக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவதும் அவருடைய தினப்படி வேலைகளில் ஒன்று. இந்த இரண்டோடு ஓட்டப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்துகொண்டிருந்தார். ‘7 habits of highly effective people’ நூலை எப்போதும் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருப்பாராம் எலியூத். அவருடைய இந்தக் கடுமையான உழைப்புதான், 2003-ம் ஆண்டில் 18-வது வயதில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் உலக சாம்பியனாக மாற்றியது.

மாரத்தான் என வந்துவிட்டால், அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வார் எலியூத். அவர் உசேன்போல்ட்போல கொண்டாட்ட ப்ரியர் அல்ல. எலியூத் உசேனுக்கு எதிர் திசையில் பயணிப்பவர். அது கொண்டாட்டங்கள் குறைந்த, உழைப்பு அதிகமுள்ள, பயிற்சி என்பதே வழிபாடுபோல இயங்கும் ஒரு வாழ்க்கைமுறை. காரணம், மாரத்தான்கள் உசேன்போல்ட் ஓடுகிற குறைந்த தூர ஓட்டம்போல் அல்ல. அது நீண்ட தூரத்துக்கு நீண்ட நேரத்துக்கு உங்களுடைய உடல் வலிமையைச் சோதிக்கக்கூடியது.

ஒரு மாரத்தான் சாம்பியனால் சராசரியாக ஒரு மைல் தூரத்தை 4 நிமிடம் 41 விநாடியில் கடப்பதுதான் ஓரளவு சாத்தியமான ஒன்று. ஆனால், இந்த இரண்டு மணி நேரச் சாதனையைச் செய்ய, ஒவ்வொரு மைலையும் 4 நிமிடம் 35 விநாடியில் ஓடிக் கடக்கவேண்டியிருக்கும். பத்து விநாடி குறைத்து ஓடுவது, ஒருசில மைல்களுக்கு ஈஸிதான். ஆனால், மாரத்தான் தூரமான 26.2 மைல்களுக்கு தம் கட்டி ஓடுவது உடல்வலிமையைவிட மனவலிமையைக் கோருவது. உங்களுடைய இதயத்தை பல மடங்கு அதிகமாகப் பயன்படுத்தவேண்டியிருக்கும். அதற்குத் தேவை ஆழ்ந்த கவனமும் பிசகாத நம்பிக்கையும்தான். அதனாலேயே கொண்டாட்டங்களைத் தவிர்த்து ஒரு யோகியைப்போல வாழ்கிறார் எலியூத்.

எலியூத் தன் ஒவ்வொரு மாரத்தான் போட்டிக்கு முன்பாகவும் தன் சொந்த ஊருக்குப் போய்விடுவார். மலைப்பாங்கான அந்த ஊர், ஓட்டப்பயிற்சிக்கு ஏற்ற இடம். ஆனால், அதிக வசதிகள் இருக்காது. அங்கே ஓடுகிற லோக்கல் இளைஞர்களோடு சேர்ந்துகொள்வார். அதே ஊரில் அவருக்கு மிகப்பெரிய பங்களாவும் வசதிகளும் இருந்தாலும், இளைஞர்கள் தங்கி பயிற்சிபெறும் குட்டி அறைகளில் போய்த் தங்கிக்கொள்வார்.

அவர்களோடு தினமும் கடினமான மலைப்பாதைகளில் பயிற்சி செய்வார். அவர்கள் சாப்பிடும் உணவைத்தான் சாப்பிடுவார். அவர்களோடுதான் உறக்கம். அவர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பங்கிட்டுக்கொள்வார். இந்த வேலைகளில் கிச்சனில் காய்கறி நறுக்குவது தொடங்கி அனைவருக்குமான கழிவறையைச் சுத்தம் செய்வது வரை எல்லாமே உண்டு.

நீ எலியூத் போல ஓடிக்கொண்டே இரு!

‘`பணத்தை மட்டுமே நினைத்து உழைப்பவர்கள், செய்யும் வேலைகளில் வெற்றி கிட்ட எந்த வழிகளையும் கையாள்வார்கள். நம்முடைய நோக்கம்தான் நமக்கான பாதைகளைத் தீர்மானிக்கிறது. என்னுடைய நோக்கம் எளிமையானது. அது வெற்றியை அடைய ஒரே ஒரு வழியைத்தான் வைத்திருக்கிறது. அந்த வழிக்குப் பெயர் உண்டு. அதுதான் `கடின உழைப்பு.’ சொகுசான வாழ்க்கையில் இருப்பவரால் எல்லைகளை உடைத்து முன்னேறவே முடியாது’’ என்பதுதான் எலியூத்தின் எளிமையான வழி.

2013-ம் ஆண்டு தொடங்கி அவருக்கான வெற்றிகளைப் பெற்றுத்தருவது இந்த எளிமைதான். 2015-ம் ஆண்டில் பெர்லின் மாரத்தானில் எலியூத் ஓடுகிறார். ஓட ஆரம்பித்து முதல் கிலோமீட்டரை தாண்டுவதற்குள் இரண்டு ஷூக்களில் இருந்தும் சோல் வெளியே பிதுங்கிவர ஆரம்பித்துவிட்டன. கணுக்காலில் அடிக்கிறது. போட்டியிலிருந்து விலகிவிடச் சொல்லி எல்லோரும் கதறுகிறார்கள். ஆனால், கிழிந்த ஷூக்களோடு ஓடி சாம்பியன் பட்டத்தை வென்றார் எலியூத். இந்த மனஉறுதிதான் எலியூத்தை கென்யாவின் ஒவ்வோர் ஓட்டக்கார இளைஞனுக்குமான நாயகனாக மாற்றியிருக்கிறது.

மாரத்தான் ஓடுகிறவர்கள் எப்போதும் சொல்வதுதான், `ஓடுவது என்பது ரேஸில் ஜெயிப்பதற்காக அல்ல; அது ஒரு சுயபரிசோதனை. நம்முடைய எல்லைகள் என்ன, நம்மால் அதைத் தாண்ட முடிகிறதா, நம்மால் நம்மையே வெல்ல முடிகிறதா... என்பதற்கான டெஸ்ட்.’ அதைத்தான் எலியூத் செய்திருக்கிறார். மனிதர்களாகிய நம்மால் நம்முடைய சாதனைகளை வெல்ல முடிகிறதா என முயன்று, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார். நாளைக்கே ஓர் இளைஞன் எலியூத்தின் சாதனையை முறியடிக்கலாம். ஆனால், அதுதான் எலியூத்தின் உண்மையான வெற்றி. காரணம், எலியூத் கொடுத்திருப்பது ‘எதுவுமே சாத்தியம்தான்’ என்கிற அடுத்த தலைமுறைக்கான அசைக்க முடியாத மாபெரும் நம்பிக்கையை!