Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

#MakeNewBondsபாரதி கிருஷ்ணகுமார், படங்கள்: அருண் டைட்டன்

ன்னையர் தினத்தன்று அதிகாலையில் இதனை எழுத நேர்ந்தது தற்செயலானதுதான். எனினும் தனித்துவமானது.

அம்மா இறந்த அன்றைக்குத்தான் அம்மாவைத் தெரிந்து கொண்டேன். உயிருக்குப் போராடியபடி படுத்திருந்தாள்.  ஒரு கையளவு காற்று அவள் மார்புக்கும், நாசிக்கும் இடையில் சூறைக்காற்றாகச் சுழன்று கொண்டிருந்தது.  ஓரிடத்தில் அது  நிலை குத்திய நேரத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள். ``மருத்துவமனைக்குப் போலாமா?'' என்று கேட்டபோது, `அப்பா சம்மதிக்க வேண்டுமே' என்றாள்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

உறங்கிக்கொண்டிருக்கும் அப்பாவை எழுப்ப முடியாது. உறக்கத்திலும் அதிகாரம் விழித்துக்கொண்டிருக்கும். அப்பாவின் உத்தரவிற்குக் காத்திருந்தாள். ``அவரை எழுப்பட்டுமா?'' என்று கேட்டபோது, அவரது உறக்கம் கலையக் கூடாது என்பதற்காக அவள் உயிரை விடத் தயாராக இருந்தாள்.

எப்போதும் வீட்டில் இரவில் உறங்கிக் கிடக்கும் நான் விழித்திருந்த இரவு அது. என் பதைபதைப்பை உணர்ந்து `குடிக்க ஏதாவது கொடு' என்றாள். அவள் தாகத்திற்காகக் கேட்கவில்லை என்பதும், என் தவிப்பைத் தணிக்கத் தான் கேட்டாள் என்பதும் இப்போது தான் புத்திக்குப் புலப்படுகிறது.

இளஞ்சூடாய்க் கலந்து கொண்டுவந்து கொடுத்ததை லேசாக எழுந்தமர்ந்து குடிக்கத் துவங்கினாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

அப்போதும் `அப்பாவை எழுப்பி விடாதே' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுழன்று கொண்டிருந்த சூறைக்காற்று, அவள் அதைக் குடிக்கவிடாமல் விசிறியடித்துக் கொண்டேயிருந்தது.

அவள் குடிப்பதற்கு உதவும் பொருட்டு, எனக்கு அமுதூட்டிய அவளுடைய மார்பில் கை வைத்து மேலும் கீழுமாய் ஆசுவாசப்படுத்திக் கொண்டே இருந்தேன். அவள் வயிற்றில் கருவாய் உருக்கொண்டபோது, காதால் கேட்டிருந்த இதயத்தின் துடிப்பை,   இப்போது என் விரல்கள்  கேட்டுக்கொண்டிருந்தன.

``ஆஸ்பத்திரிக்குப் போகலாம்மா... அவர எழுப்புறேன்'' என்றதும் பதற்றம் கொண்டாள். கைகளால், கண்களால், தலையால், உடலால் அதை மறுத்தாள். தானே முயன்று தாழ்ந்து படுத்துக்கொண்டாள்.  விளக்கை  அணைத்துவிட்டு என்னையும் உறங்கச் சொன்னாள். இடதுபுறமாக சுவரைப் பார்த்துப் படுத்துக் கொண்டாள். கையளவு காற்று ஏதோ ஒன்றை உந்தித் திறந்து விடுகிற வேகத்துடன், அவளுடைய மார்புக்குள்ளிருந்து வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டே இருந்தது. ``அம்மா'' என்றேன். உறங்கிவிட்டிருந்தாள்.

அவள் எப்போதும் அமர்ந்து கொள்கிற நாற்காலியில் அமர்ந்து அவள் முதுகைப் பார்த்தபடி இருந்தேன். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கனத்துக் கடந்து போனது. எதையோ திறக்க முயன்றுகொண்டிருந்த காற்று, எப்படியோ திறந்துகொண்டு வெளியேறி இருந்தது.அம்மாவின் தலை, தலையணையில் இருந்து இறங்கி இருந்தது. எல்லாம் புரிந்தது. ஒன்றுமே புரியாமலும் இருந்தது. அப்பாவை எழுப்பினேன். அம்மாவோ என்றென்றைக்குமாக உறங்கி இருந்தாள். இறந்தது அம்மா தான். இறந்து கிடந்தது அம்மாவல்ல. அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம். உச்சி வெயிலில் ஏற்றிவைத்த விளக்கு போல வெளுத்திருந்தது அம்மாவின் முகம்.

எல்லா அம்மாக்களுக்குமான இந்த இறுதி நிமிடங்கள் தான், இங்கு எல்லாப் பெண்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான அனுமதிக்கப்பட்ட சுவாசப்பாதை. அதற்குள்தான் சுவாசித்து, ஜீவித்துக் கிடக்க வேண்டுமென விதித்திருக்கிறோம்.

மூன்று தலைமுறைகளுக்கு முன்னே எல்லாப் பாட்டிகளும், தாத்தாக்களின் முன்பு நின்று பேசிவிட முடியாது. ஆனால் ஐந்து, பத்து, பன்னிரெண்டு என்று குழந்தைகள் பெற்றுக்கொண்ட இயற்கையின் ரகசியத்திற்குள்ளேதான் பெண்களுக்கான விடுதலையின் சாவி ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது. அடுத்த தலைமுறையில் அம்மாக்கள், அப்பாக்களிடம் எதிரே நின்று பேச ஆரம்பித்தார்கள். கதவுக்குப் பின்னே முகம் மறைத்துப் பேசிய காலம் மறைந்து, கண்ணுக்கெதிரே நின்று பேசக் கிடைத்த உரிமை, காலத்தின் கருணையா? ஆண்களின் பெருந்தன்மையா? என்பதெல்லாம் அனுபவத்தில் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள். எதிரே நின்று பேச முடியுமே தவிர எதிர்த்துப் பேசி விடவே முடியாது.

அப்பாக்கள் பிழையாக உளறிக் கொட்டினாலும், ``நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்'' என்பதுதான் வழங்கப்பட்ட கருத்துச் சுதந்திரம். கணவர்களோடு மனைவிகள் சமமாக அமர்ந்து பேசும் காலம் வந்துவிட்டது. நின்றுகொண்டே இருக்க வேண்டுமென்பதில்லை. ``எதுக்கு உளர்றீங்க'' என்று பிழைகளைச் சுட்டிக்காட்டும் உரிமைகூட சில இடங்களில் வந்துவிட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன.

ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, ``அப்பா எனக்குக் குடிக்க தண்ணி கொண்டு வா'' என்று உத்தரவிடும் `அதிகாரம்' இப்போது மகள்களுக்கு வந்துவிட்டது. என்றபோதும் ஒரு பெண்ணாகப் பாட்டிக்கு இருந்த எல்லாப் பெருந்துன்பங்களும், அவமதிப்பும், நிராகரிப்பும் மகளுக்கும் இருக்கிறது என்பதுதான்  பெண்ணைப்  பெற்றவனுக்கெல்லாம் அடிவயிற்றில் துயரமாய் இறுகிக் கிடக்கிறது. பல தருணங்களில் அந்தக் கட்டி, கரைந்து அடிவயிறெங்கும் பரவிச் சுழல்கிறது. ஆனால் எப்போதும் அது பிணைந்து கிடக்கிற பாம்புகளைப் போல அடிவயிற்றிலேயே கிடக்கிறது. ஆண்கள் ஏன் இப்படிப் பெண்களை அடிமை கொண்டு திரிகிறார்கள் என்று மானுட வரலாறு பேசுகிறது. `உடைமைச்' சமூகத்தின் இயல்பு அது என்று சுட்டுகிறது. தனி உடைமைச் சமூகத்தின் பண்பு   எப்போதும்   கீழ்மையானதுதான். எல்லாவற்றையும் தனக்கானதாக மட்டுமே கருதும் தனி உடைமைச் சமூகத்தில் எல்லா உயிர்களும் ஒன்றை ஒன்று அடிமை கொள்வதற்கே அலைகின்றன.

ஆண்கள் பெண்களை அடிமை கொள்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளை அடிமைகளாகவே வளர்க்கிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அடிமைகளாகவே ஆக்குகின்றனர். அரசு தன் குடிமக்களை அடிமைகளாகத்தான் நடத்துகிறது. உடைமைச் சமூகம் ஆண்களை அடிமைகளாக்கி விடுகிறது. அதிகாரத்தின் அடுக்குகள் எப்போதும் அடிமைத்தனத்தின் அஸ்திவாரத்திலேதான் எழுப்பப்படுகிறது. “பெண்கள் தங்களுக்கான விடுதலையை ஆண்களிடமிருந்து பெற இயலாது” என்று நான் சொல்வதை, அதன் விரிந்த பொருளில் வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுதந்திரமான மனிதர்கள் ஒரு போதும் பிறரை அடிமை கொள்வதில்லை.

ஆனால், சமூக அமைப்பு, மானுட வரலாறு என்பதன் பேரால், நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைகளை ஒப்புக்கொள்ளவே முடியாது. எதன் பொருட்டும், அதை நியாயப்படுத்தி விடவும் இயலாது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்கள் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரமொன்று நினைவுக்கு வருகிறது. 90 சதவிகிதக் கணவன்மார்கள் தங்கள் மனைவிகள் மீது  ஏதேனும் ஒரு விதத்தில் ஏதேனும் ஒரு வகையான வன்முறையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஐந்து சதவிகிதக் கணவன்மார்கள் மீது அவர்களின் மனைவிகள் ஏதேனும் ஒரு விதத்தில் வன்முறையைச் செலுத்துகிறார்கள்.மீதமுள்ள ஐந்து சதவிகிதக் கணவர்கள்தான் தகுதியுள்ள ஆண்களாக, தாங்கள் அறிந்த பெண்களின் மீது எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தாத பண்பாளர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டம் நினைவுக்கு வருகிறது. நம் காலத்தின் மகத்தான ஒப்பற்ற எழுச்சி அது. அதன் கோரிக்கைகள், அவை நிறைவேறிய விதம் இவற்றைக் காட்டிலும் அந்தப் போராட்டம் நடந்த விதம் எனக்குப் பெருமகிழ்ச்சி தந்தது. மின்சாரமின்றி, காவல்துறையின்றி இரவில் மெரினாவில் பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு, பெருகி, கொப்பளித்துக்கொண்டிருந்த தருணங்களில், எல்லா வயதுப் பெண்களும் அவர்களுக்கு நடுவே பத்திரமாகப் பாதுகாப்பாகச் சென்று வர முடிந்தது. அதுதான் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது. மெரினாவில் அந்தப் போராட்டக் களத்தில் காணப்பட்ட மாண்பும், பண்பும் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறையாக மாறினாலே பெரும்பான்மையான குற்றங்கள் நிகழாது போய்விடும். எப்போதாவது நடக்கும் இத்தகைய அற்புதங்கள் எப்போதும் நடக்க வேண்டும்.

அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, காவல்துறை பெரும் வன்முறையை அவிழ்த்துவிட்டது. அதற்கான உளவியல் வேறு ஒன்றுமில்லை. காவல்துறையின் கண்காணிப்பும், தயவும் இல்லாமலேயே பண்புடையவர்களாக மாணவர்களும், இளைஞர்களும் நடந்துகொண்டது அதிகாரத்திற்குப் பெரும் அச்சத்தை உண்டாக்கிவிட்டது. அவர்களது இருப்பையே அது கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் மாற்றிவிட்டது. எனவே, தாங்கள் `இருப்பதை' உணர்த்தவே வன்முறையில் இறங்கியது காவல்துறை. இப்படித்தான், தான் `இருப்பதை' உணர்த்தத்தான் எல்லா இடங்களிலும் மனிதர்கள் வன்முறையை ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இங்கோ மனிதர்கள் விடுதலையை வேண்டுவதற்குப் பதிலாக மேலும் மேலும் அடிமைகளை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

தன் தோள்களின் மீது எத்தனை பேர் ஏறி அமர்ந்திருந்தாலும், தான் ஏதேனும் ஒரு தோளின் மீது ஏறி அழுத்துவதில் பெருவிருப்பம் கொண்டிருக்கிறார்கள். உடைமைச் சமூகமோ காதல், அன்பு, உழைப்பு, கடவுளின் கருணை என எல்லாவற்றையும் அடிமை கொண்டுவிட்டது. அனைத்திற்கும் ஒரு விலை வைத்து, விலைப்பட்டியல் எழுதிக் கிடைத்த இடத்தில் கட்டி விடுகிறது. அதனாலே தான் விடுதலை உணர்வற்ற சமூகங்கள் எப்போதும் ஒரு பதற்றத்திலேயே இயங்குகின்றன. எது கிடைத்தாலும் அது தனக்கென ஒளித்து வைத்துக் கொள்கிறது. எப்போதும் பிறருக்குத் தர மறுக்கிறது.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

இதுதான் இங்கு ஒட்டு மொத்த வாழ்வா என்று சிலர் சலித்துக் கொள்ளக்கூடும். விதிவிலக்குகளே இல்லையா என்று வியக்கவும் கூடும். விதிவிலக்குகள் எப்போதும் இருக்கும். ஆனால் விதிவிலக்குகள் ஒருபோதும் பொதுவிதி ஆவதில்லை. உண்மையில் இந்த உலகம் என்பது பல்லுயிர் நிறைந்த ஒரு காடு. அதில் ஆண், பெண் என்பது எல்லா உயிர்களிலும் காணப்பெறும் உயிரின் தொடர்ச்சிக்கான இன உற்பத்திக்கான இயற்கையின் பழைய ஏற்பாடு. சில வகையான விலங்குகளிலும் தாவரங்களிலும் இந்தப் பால் பேதமின்றி ஓர் உயிரே ஆணும் பெண்ணுமாய் இருப்பதை நாம் அறிவோம். அத்தகைய ஒரு படைப்பாக நாம் இல்லாது போனோமே என்பது துயரம் தருகிறது. ஒரே உயிரில் இருபாலும் இணைந்திருந்தால் பேதங்களே இருக்காது. ஒருவேளை, இந்தப் பேதங்களை அறிந்தபின்பு அனுபவத்தில் இருபாலும் ஓர் உயிரில் குடி கொண்டிருக்கலாம். இயற்கையின் ரகசியங்கள் அவ்வளவு எளிதிலா புலப்பட்டுவிடுகிறது?

நமக்குள் ஆண், பெண் என்று இயற்கை உண்டாக்கி வைத்த பழைய ஏற்பாடு தொலைந்து அது பால் பேதமாக, பாகுபாடாகத் திரிந்து போன புதிய ஏற்பாடு எப்போதோ அமலுக்கு வந்துவிட்டது. பெண் தலைமை ஏற்றிருக்க, இருந்ததையும் கிடைத்ததையும் எல்லோரும் பகிர்ந்துண்டு வாழ்ந்த ஆதிப் பொதுஉடைமைச் சமூகத்தில் பால் பேதங்களில்லை.  பாகுபாடுகள் இல்லை. இன்பமே வாழ்வாக, இயற்கையே துணையாக மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பது நமது முந்தைய வரலாறு. நமது மூதாதையர்களின் வரலாறு.

எப்போது ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் ஆரம்பமானதோ, எப்போது பெண்ணின் தலையறுத்து ஆண் தலைமை கொண்டானோ அப்போதே எல்லாப் பாகுபாடுகளும் இங்கு பெருக்கெடுத்தன. பாகுபாடுகளைப் பேணிப் பாதுகாக்கும் தத்துவங்களை, சமயங்களை, சாதிகளை, கதைகளை, சடங்குகளை அதிகாரம் உருவாக்கி உலவவிட்டது. பண்ணை அடிமைகள் இன்றி பண்ணைகளை எப்படி நடத்துவதாம்? பால் அடிமைகள் இன்றி குடும்பம் எப்படி நடக்கும்? பாமர அடிமைகள் இன்றி அரசுகள் எப்படி இயங்கும்? அன்பால் ஆளப்பட வேண்டிய உலகம், அதிகாரத்தினால் இயங்கத் துவங்கியபோதே எல்லாமே அடிமைத்தனம் கொண்டதாகி விட்டது.

உலகின் அதிசயங்கள் எல்லாமே அடிமைகளால் கட்டப்பட்டவை என்பது அதிசயமே இல்லை. அதிசயங்கள் கட்டப்பட்டது போலவே, வாழ்வும் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் எல்லாமும் பாகுபாடுகளாய்ச் சிதைந்து போனது.

இருபால் என்பது இயற்கையின் கொடை. பால் பாகுபாடு, உடைமைச் சமூகம் உருவாக்கிய இழிவான தடை. வேறுபாடுகளைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். புரிந்துகொள்ளலாம். ஆனால் பாகுபாடுகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. எங்கே பாகுபாடு இருக்கிறதோ, அங்கே வன்முறை இருக்கும். வன்முறை இன்றி பாகுபாடுகள் சாத்தியமில்லை. இரையை நோக்கும் பசி கொண்ட விலங்கின் பார்வை போல வன்முறை கசிந்துகொண்டே இருக்கும் சமூகம் இது. பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் மாண்புகள் இல்லை, மனிதம் இல்லை, உயிரே இல்லை. அது செத்தாருள் வைக்கப்பட்ட சமூகம்.

இந்தச் சமூகம் மீண்டு வாழ்வது எங்ஙனம்? அன்பால் அன்றி வேறு எதனாலும் அது சாத்தியமில்லை. அன்பின் வழியது உயிர்நிலை.

அன்பின் வழி உலகம் உய்ய வேண்டுமானால், உடைமைச் சமூகம் ஒழிந்தே ஆக வேண்டும். அதை ஆணும் பெண்ணும் இணைந்துதான் நடத்த வேண்டும். பேரன்பினால் நிகழ்த்த வேண்டும். `ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது' என்பார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஆணும் பெண்ணும் சேர்ந்தாக வேண்டும். தனி உடைமைக்கு எதிராகச் சேர வேண்டும். அதிகாரத்திற்கு எதிராகச் சேர வேண்டும். சேர்ந்து, இணைந்து, காதலாய்க் கனிய வேண்டும். அதுவே மானுடம் என்பதன் நீதியும், நியதியும் ஆகும்.

விலங்கிலிருந்து தன்னை உயர்த்தி தன்னைத்தானே விலங்குகளின் அரசன் என்று எழுதி வைத்துக்கொண்டான் மனிதன். தன்னிடம் மொழி இருப்பதால், பிற உயிர்கள் மீது மனிதன் செலுத்தும் அதிகாரம் அது. கடலுக்கு வீணாகப் போய்ச்சேரும் நதியின் நீரை நாமே பயன்படுத்த வேண்டுமென்று மனிதன் எழுதுவதுகூட அதிகாரத்தின் மொழிதான். அது அறியாமையின் மொழியும்கூட. பெய்கிற மழையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போல கடலுக்கும் பங்குண்டு. கடல்தான் மழையைத் தந்தது. மழை தந்த கடலுக்கே அதன் பங்கை மறுப்பது போலத்தான் பிற உயிர்களின் பங்கை மனிதன் மறுத்துக்கொண்டே இருக்கிறான்.

பிறர் பங்கைத் திருடுவது தனி உடைமையின் தலைமைப் பண்புகளில் ஒன்று. இனவிருத்தி என்பது இயற்கையின் கட்டளை. இனவிருத்திக்கான உடல் இன்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை தந்த பேரின்பம். அதைச் சிற்றின்பம் என்பது பேதைமை. பெரும்பாலான விலங்குகள் ஆதிக்கம் செலுத்தித்தான் இணை சேருகின்றன. மனிதன் அன்பால், காதலால் இன்பத்தோடு இணை சேர வேண்டியவன்.

திருக்குரானில் ஒரு வாசகம் உண்டு. `ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாக இருங்கள்'. ஆடையாக இருப்பது என்பது எப்போதும் உடனிருப்பது, உடலோடு இருப்பது, மானம் காப்பது, அழகு சேர்ப்பது, நோய் வராது தடுப்பது. அன்பிருந்தாலன்றி ஒருவருக்கு ஒருவர் ஆடையாய் இருந்திட இயலாது. பிறந்த மேனியாய் உயிரின் தொடர்ச்சியை நிகழ்த்துபவர்கள் ஆடையாய் இருக்க வேண்டுமென்பது பேரழகானது.

இந்தப் பேரழகு இல்லாது போனால், அங்கு இருபாலர் என்பது பால்பேதமாக, பாகுபாடாகக் குரூரம் கொள்கிறது. அன்பால் ஆகாத ஆண்பால், பெண்பால் உறவு குறித்துப் பேராசான் காரல் மார்க்ஸ் இப்படி எழுதினார்.

`அன்பும், காதலும் இல்லாத ஆண் பெண் உறவென்பது ஒரு பலமுள்ள மிருகம், இன்னொரு பலவீனமான மிருகத்தின் மீது ஆட்சி செலுத்துவதன்றி வேறில்லை'.

பாகுபாடுகள் உள்ளதால் இந்தச் சமூகத்தில் மாக்களாய் வாழ்கிறோம். இனி ஆண்பால், பெண்பால், அன்பால் மக்களாக வேண்டும்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

புரட்சி உலகத்தின் விதி அது துப்பாக்கியும் குண்டும் மட்டுமல்ல அது புரட்சியை விரும்பாதவர்கள் செய்யும் புரளி மனிதனை மனிதன் சுரண்டும் முறையை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டமே புரட்சி.

– சர்தார் பகத்சிங்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

யிரினங்களில் சிறந்தவன் மனிதனே. அவனுக்கு அந்தச் சிறப்பைத் தருவது சிந்தனையே.

–அரிஸ்டாட்டில்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

காதலால் மனித வாழ்க்கை மயங்கிச் சிலிர்க்கிறது மானிடக் காதலில் மர்மத்தை வைத்து, கற்பனையை வளர்த்து, மனதில் அன்பைப் பெருக்கெடுக்கச் செய்யும் ஆற்றல் காதலுக்கும் உண்டு.

- எமர்சன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

துன்பப்படுவதற்கு ஓர் அர்த்தம் இருக்குமென்றால், மனிதன் துன்பப்படவும் தயாராக இருக்கிறான்.

– Dr. விக்டர் ஃப்ராங்கல்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 37

சியால் மடிவதைக் காட்டிலும், பசியை மடியச் செய்யும் முயற்சியில் மடிவதே மேலானது.

- கேசதேவ்