``டிஜிட்டல் சுத்தமா... அது என்ன? மொபைலை க்ளீனா வெச்சிருக்கிறதைப் பத்தியா?'' எனச் சென்ற வார அத்தியாயத்தைப் படித்த நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பியிருந்தார்.

``நேரில் சொல்கிறேன்’’ என்று பதில் அனுப்பினேன். தற்செயலாக, அதற்கு அடுத்த நாள் வெளியான `லென்ஸ்’ திரைப்படத்துக்கு நண்பரும் நானும் சென்றோம். பிளம்பர் ஒருவன் புதுமணத் தம்பதியின் வீட்டில் கேமராவை ஒளித்துவைத்துவிடுவான். அந்த வீடியோ, இணையத்தில் ஏற்றப்படுவதால் நிகழும் விளைவுகளே கதை.

படம் முடிந்ததும், அந்த நண்பரைப் பார்த்தேன். வியர்த்துப் போயிருந்தார். அவர் மொபைலில் இருந்த 1 ஜி.பி-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அவரே அழித்தார்.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 7

``இப்ப நீங்க அழிச்சீங்களே, அதுதான் டிஜிட்டல் குப்பை. இதுவும் பெர்சனல் ஹைஜீன்தான்’’ என்றேன்.

வியர்வை தாங்கிய சட்டை, நாற்றமடிக்கும் சாக்ஸ், வளர்ந்து கிடக்கும் நகங்கள்... இவை போலத்தான் உங்கள் மொபைலும், அதனுள் இருக்கும் விஷயங்களும். ஞாயிற்றுக் கிழமையானால் துணிகளை மடித்து வைப்பது, வீட்டை ஓரங்கட்டுவதுபோல மொபைலையும் கொஞ்சம் கவனியுங்கள். உங்களுக்கே தவறு எனத் தெரியும் வீடியோக்கள், படங்களை உடனடியாக அழித்துவிடுங்கள். கேமராவும் மெமரியும் இருக்கிறதே என்பதற்காக, நினைத்ததையெல்லாம் படம் பிடிக்காதீர்கள்; கண்டதையும் டவுன்லோடு செய்யாதீர்கள். நீங்கள் செய்யாவிட்டாலும், வாட்ஸ்அப் மூலம் நமக்குப் பிடிக்காத விஷயங்கள்கூட நம் மொபைலில் அதுவாக நுழைந்துவிடக்கூடும் என்பதை மறக்காதீர்கள்.

மொபைலுக்கு மட்டுமல்ல, உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை முழுவதற்குமே பொருந்தும் ஒரு சின்ன டெஸ்ட்... கூகுளுக்குச் சென்று, `black colour pen’ எனத் தேடிப் பாருங்கள். அதன் பின்னர் சில நாட்களுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் என நீங்கள் எந்த இணையதளத்துக்குச் சென்றாலும், பிளாக் கலர் பென் விளம்பரங்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும். நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்துமே (Byte) டிஜிட்டல் கல்வெட்டில் செதுக்கப்படுகிறது. அதை அழிக்கவே முடியாது. கூகுளில் உங்கள் பெயரைப் போட்டு `இமேஜஸ்’ பக்கத்தைப் பாருங்கள். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயத்தையெல்லாம் அது சொல்லும். எப்போதாவது விளையாட்டுக்கென, உங்கள் இமேஜைப் பாதிக்கும் புகைப்படத்தையோ, வீடியோவையோ அல்லது ஒரு செயலையோ நீங்கள் பகிர்ந்திருந்தால் போதும்... அதைக் காலத்தால்கூட அழிக்க முடியாது. அதனால்தான் நிஜ வாழ்க்கையைவிட விர்ச்சுவல் வாழ்க்கையில் நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது. பொது வாழ்க்கைக்கும் அந்தரங்க வாழ்க்கைக்குமான இடைவெளியைத் தொழில்நுட்பம் வெகுவாகக் குறைத்திருக்கிறது. தனிநபர் ஒழுக்கம் மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.

சரி, மொபைலின் உள்ளே சுத்தம் செய்துவிட்டோம். போதுமா? ஓர் உண்மையைச் சொல்கிறேன். நம்பினால் நம்புங்கள். நம் வீட்டுக் கழிப்பறைச் சுவர் மீது இருக்கும் பாக்டீரியாக்களைவிட நம் மொபைலில் அதிக பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

யோசித்தால், இது ஏன் என்பது எளிதில் புரியும். கழிப்பறை அசுத்தமானது. அதனால் அடிக்கடி சுத்தம் செய்வோம். ஆனால், மொபைல் அசுத்தமானது என்கிற எண்ணமே நமக்கு வராது. நிஜத்தைச் சொல்லுங்கள்... அதே கழிப்பறையில் இருக்கும்போது நம்மில் எத்தனை பேர் மொபைலை அங்கு பயன்படுத்துகிறோம்?

சாப்பிட்ட கையோடு மொபைலில் பேசுகிறோம். புழுதி பறக்கும் தெருக்களிலும் மொபைல் நம் கைகளில்தான் இருக்கிறது. உலக அசுத்தங்கள் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மொபைல் பயணிக்கிறது. அந்த மொபைலைக் குழந்தைகள் வாயில் வைத்து விளையாட அனுமதிக்கிறோம். மொபைல் பேசிய கையோடு உணவருந்தச் செல்கிறோம். மொபைலை கடைசியாக எப்போது சுத்தப்படுத்தினீர்கள் என்று நினைவிருக்கிறதா?

``அது என்ன தண்ணீரில் ஊறவெச்சுக் கழுவுற பொருளா?’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதனால்தான் நாம் கூடுதல் கவனத்தோடு அதைப் பராமரிக்க வேண்டும். நம்மோடு, நம் உடலோடு அதிக நேரம் ஒட்டிக்கொண்டிருக்கும் விஷயம் மொபைல். அதை நாம் எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்?

அசுத்தமான மொபைலால் இன்னின்ன பிரச்னைகள் வரும் என ஏதாவது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தால்தான் நாம் விழித்துக்கொள்ள வேண்டுமா? மொபைல்களில்கூட ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வந்துவிட்டது. நாம், நமக்கு இயற்கையிலேயே இருக்கும் சர்வைவைல் இன்ஸ்டிங்ட்டையாவது பயன்படுத்த வேண்டாமா?

நாம் ஒரு ‘கம்ப்ளீட்’ மனிதராக மாற, டிஜிட்டல் சுத்தம் மிக மிக அவசியம்!

- பெர்சனல் பேசுவோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism