Published:Updated:

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!
பிரீமியம் ஸ்டோரி
முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

கட்டுரை, படங்கள்: இரா.கலைச்செல்வன்

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

கட்டுரை, படங்கள்: இரா.கலைச்செல்வன்

Published:Updated:
முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!
பிரீமியம் ஸ்டோரி
முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

`குடகு வனப்பகுதியில் திடல்லி என்னும் பழங்குடியினரின் கிராமத்தில், மக்களின் நில உரிமைக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார் 47 வயதான முத்தம்மா.' இந்தச் செய்திதான், இந்தப் பயணத்திற்கான விதை. ஒரு பழங்குடிப் பெண், தன் மக்களுக்காக, தங்கள் உரிமைகளுக்காக உடை துறந்து நிர்வாணமாய்ப் போராடும் அளவுக்கு அங்கு என்ன பிரச்னை?

திடல்லி ஒரு வன கிராமம்தான். ஆனால், சிமென்ட் ரோடு போடப்பட்டிருந்தது. வன உரிமைச் சட்டம் 2006-ன் படி அந்தக் கிராமத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. முத்தம்மாவின் வீட்டை விசாரித்து, அங்கு சென்றோம். வீடு திறந்து கிடந்தது. படுக்கையும், கம்பளியும் அப்படியே தரையில் கிடந்தன. ஆனால் வீட்டில் யாருமே இல்லை.

“கடந்த வருடம் ஜூன் மாதத்தில், முத்தம்மா மற்றும் அவரின் தம்பி அப்பாஜி இருவரும் இணைந்து, காபித் தோட்டங்களில் அடிமைகளாகக் கிடந்த பழங்குடிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கான நில உரிமைப் போரட்டத்தைத் தொடங்கினார்கள்.

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

முதலில் எட்டுப் பழங்குடிக் குடும்பங்கள் திடல்லியில் குடிசை போட்டார்கள். பின்பு ஆறே மாதத்தில் அது 577 குடிசைகளாக உயர்ந்தன. கடந்த டிசம்பரில் வனத்துறையும் காவல்துறையும் இணைந்து ஓர் அதிகாலை நேரத்தில் மொத்த குடிசைகளையும் காலி செய்துவிட்டனர். அதை எதிர்த்துப் பெரிய போராட்டம் வெடித்தது. முத்தம்மாவும், சாமி என்பவரும் தங்கள் ஆடைகளைக் களைந்து போராடினர். பின்னர், அரசாங்கம் தலையிட்டு `அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். அதுவரை திடல்லியின் எல்லையில் அவர்களுக்குத் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்' என்று சொல்லி ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்கள். ஆனால், வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து மீண்டும் போராடிய பழங்குடிகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு வேறெங்கோ வைத்துவிட்டார்கள்” என்ற ஊர்க்காரர் போஜோவிடம்,  “முத்தம்மா இப்போது எங்கே?” என்று கேட்டோம்.

“முத்தம்மாவையும், அவரோட ரெண்டு பசங்களையும் காவல்துறை  கைது  செய்துட்டாங்க” என்றார். முத்தம்மாவைத் தேடி, சித்தாபுரா என்ற டவுன் காவல்நிலையத்திற்குப் போனோம். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமண்யாவிடம் பேசினோம்...

“முத்தம்மாவோட பசங்க திடல்லியில் காவல்துறை வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவைத் திருடியிருக்காங்க. அவங்களைக் கைது செய்யப் போகும்போது, காவலர்களைக் கடுமையாகத் தாக்க முயன்ற காரணத்திற்காக முத்தம்மாவைக் கைது செய்திருக்கிறோம்” என்று சொன்னார்.

போராட்டத்தின் உயிர்நாடியான முத்தம்மாவைச் சந்திக்க முடியாது என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து பழங்குடிகள் தங்கள் நிலத்திற்கு இப்போது திரும்புவதற்கான காரணங்கள் என்ன எனத் தேடத்தொடங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

காபித் தோட்ட ஷெட்களின் வாழ்க்கை என்பது கொத்தடிமைத்தனமானதுதான். இருந்தும், பிழைக்க வேறு வழியில்லாததால் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆனால், சமீப காலங்களில் காபித் தோட்டங்களில் வேலை செய்ய அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றன தோட்ட நிறுவனங்கள். பழங்குடிகளை விடக் குறைந்த கூலியை இவர்கள் வாங்குவதால், பழங்குடிகளுக்கான வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போதிருக்கும் பழங்குடித் தலைமுறை, காடுகளில் வாழ்ந்தவர்களும் அல்ல; நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களும் அல்ல. காலம் முழுக்கவும், தோட்டங்களில் அடிமைகளாக மட்டுமே இருந்தவர்கள். முத்தம்மா முன்னெடுத்த போராட்டத்தின் மூலமாகத் தங்களுக்கான நில உரிமை கிடைக்கும், வாழ்வாதாரம் கிடைக்கும், தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் வந்தவர்கள். இப்போது காடு, வீடு, தோட்டம், வேலை, உணவு, பணம் என ஏதுமில்லாமல் நம்பிக்கையைத் தொலைத்து நிற்கின்றனர்.

“திடல்லியில் பழங்குடிகள் குடியேறிய இடம் வனத்துறைக்குச் சொந்தமானதே கிடையாது. அது பொதுவாக அரசு நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பழங்குடிகளுக்குத் தாராளமாக அங்கு இடம் வழங்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பின்னணியில் சில அரசியல்வாதிகளின் விளையாட்டு இருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் ஓர் அதிகாலை நேரத்தில், குடிசைகளில் குடும்பத்தோடு வசித்து வந்த பழங்குடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்கள் கண்முன்னே, ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு அந்தக் குடிசைகளை அழித்தது மிகப் பெரிய வன்முறை'' என்கிறார் பழங்குடிகளின் நில உரிமை சம்பந்தமாகத் தொடர்ந்து இயங்கி வரும் வழக்கறிஞர் ஏ.கே. சுப்பையா.

திடல்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட 550-க்கும் அதிகமான பழங்குடிக் குடும்பங்கள், அங்கிருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் குஷால் நகர் அருகே பசவனெள்ளி மற்றும் பேடகுட்டா ஆகிய இரண்டு முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.  

பழங்குடிகளின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்கள் இன்று அந்த அகதிகள் முகாமில் தங்கியிருப்பதைப் பார்த்தால், நிச்சயம் பதறத்தான் செய்வார்கள்.

முத்தம்மாக்கள் ஏன் போராடுகிறார்கள்?!

பேடகுட்டாவில் அந்தப் புல் மேட்டில் தார்ப்பாய் கொண்டு கூடாரங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆண்கள் காய்கறிகள் வெட்டிக் கொண்டிருந்தனர்.  ஆங்காங்கே விறகு அடுப்பு பற்றவைக்கப்பட்டு, பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். “திடல்லியில இருக்கும்போது, ஒவ்வொருத்தருக்கும் வீட்டிற்கான இடமும், விவசாயத்திற்கு இரண்டு ஏக்கர் நிலமும் தர்றதா சொன்னாங்க. ஆனா, வெளியே வந்த உடனேயே ரேஷன் கார்டு இல்ல, அந்தக் கார்டு இல்லன்னு சொல்லி, கிட்டத்தட்ட 200 குடும்பங்கள நட்டாத்துல விட்டுட்டாங்க. எங்க போறதுன்னே தெரியாம அந்த 200 குடும்பங்களும் இப்ப எங்க அவதிப்பட்டுக்கிட்டு இருக்குன்னு தெரியல. நாங்க இங்க ஏதோ ஊர் பேர் தெரியாத இடத்துல கிடக்கோம். எங்களுக்கு எல்லாமே போச்சுங்க... எங்க மண்ணு, எங்க காடு, எங்க வேலை, எங்க வாழ்க்கை, மானம் எல்லாம் போயிடுச்சு. மிச்சமிருக்கிறது வெறும் உசிருதான்...'' என்று கண்ணீரோடு பேசும் சோபி பாட்டியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் பேத்தி நிகிதா.

பழங்குடிகளின் போராட்டத்தை முன்னெடுத்த முத்தம்மாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரின் தம்பி அப்பாஜி தலைமறைவாகியுள்ளார். பழங்குடிகளை ஒன்றிணைத்துப் போராட, அங்கு வேறு யாருமில்லை. பழங்குடிகளுக்கும்  மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிகாரிகள் சொல்லும் இடத்திற்குப் போகிறார்கள்; அவர்கள் செய்யச் சொல்வதைச் செய்கிறார்கள். வாழ்ந்த வாழ்விற்கான அடையாளங்களையும் தொலைத்து, வாழும் வாழ்விற்கான அர்த்தங்களையும் இழந்து, வாழப்போகும் வாழ்வும் கேள்விக்குறியான நிலையில் நிர்கதியாய் நிற்கிறார்கள்.

அங்கிருந்து கிளம்பும் நேரம்... மழை பெய்யத் தொடங்கியது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கூடாரங்களுக்குள் ஓடினார்கள். விறகடுப்பில் சமைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. முழுமையாக வேகாத சாப்பாட்டை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள். பற்ற வைத்திருந்த நெருப்பு, மழைநீர் பட்டு அணைந்தது. புகை கிளம்பியது. தார்ப்பாய் ஷெட்களுக்குள் அந்த மண், ஈரமாகி சொதசொதப்பானது. அந்த இரவை அவர்கள், அங்கு அப்படியேதான் கழிக்க வேண்டும். அந்த இரவை மட்டுமல்ல, கணக்கிட்டுச் சொல்ல முடியாத இனிவரும் இரவுகளையும்தான்.

“வனத்துறையினரால் நிச்சயம் காடுகளைக் காக்க முடியாது. அதைப் பழங்குடிகளால் மட்டுமே சாத்தியப் படுத்த முடியும். அறிவியல் ரீதியாகவே, ஆதிவாசிகள் இருக்கும் இடத்தில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகமாக இருக்கும். இயற்கையின் பல்லுயிர் சுழற்சியில் ஆதிவாசிகள் அத்தியாவசியமானவர்கள். அவர்களை இன்று அகதிகளாக அடைத்து வைத்திருப்பது ஆகப் பெரும் வன்முறை” என்கிறார் மதுரையைச் சேர்ந்த பழங்குடியினப் போராளியும், திடல்லி போராட்டத்தில் பங்குபெற்றவருமான தன்ராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism