Published:Updated:

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
பிரீமியம் ஸ்டோரி
லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

வெ.நீலகண்டன், நியாஸ் அகமது, ப.விஜயலட்சுமி

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

வெ.நீலகண்டன், நியாஸ் அகமது, ப.விஜயலட்சுமி

Published:Updated:
லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
பிரீமியம் ஸ்டோரி
லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

லங்கிப்போய் நிற்கிறது ஐ.டி துறை. கேன்டீன், கஃபேக்கள் என ஐ.டி நண்பர்கள் எங்கு சந்தித்துக்கொண்டாலும் பேசும் ஒரே விஷயமாக மாறியிருக்கிறது லே ஆஃப். காக்னிஸன்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ என இந்தியாவின் ஏழு முன்னணி ஐ.டி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 56,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது என்கிற முடிவை எடுத்திருக்கின்றன. வேலையை விட்டு நீக்கப்படுபவர்கள் வேலையைச் சரியாகச் செய்யாதவர்களோ, பெர்ஃபாமென்ஸ் காட்டாதவர்கள் இல்லை. அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களைக் குறிவைத்தே லே ஆஃப் அதிக அளவில் நடக்கிறது.

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

எல்லோருக்கும் தரப்படும் ஒரே பதில், ‘பெர்ஃபாமன்ஸ் சரியில்லை’ என்பதுதான். ஐ.டி நிறுவனங்களில் இது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இப்போது நடப்பது வேறு. கடந்த மாதம் வரை சிறந்த ஊழியர்களாகக் கொண்டாடப் பட்டவர்கள், ஆன்சைட் பணிக்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள், ஏழு ஆண்டுகளுக்கு மேல் நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள், புராஜெக்ட் மேனேஜர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள், லட்சங்களில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எனப் பார்த்து பார்த்துத் தூக்குகிறார்கள்.

 90-களில் இந்தியாவில் அறிமுகமான தகவல் தொழில்நுட்பத் துறை, இளைஞர்களுக்கு வண்ணமயமான ஒரு வாழ்க்கையை உருவாக்கித் தந்தது. அதுவரை கனவாக மட்டுமே இருந்த விஷயங்களை அது சாத்தியப்படுத்தியது. வீடு வரை வந்து அழைத்துச் செல்ல ஏ.சி வாகனம், குளிரூட்டப்பட்ட பிரமாண்ட  கண்ணாடி மாளிகையில் பணிச்சூழல், வித்தியாசமான வேலை நேரம், விருப்பமான உடை அணியும் உரிமை, கலாசாரச் சுதந்திரம்... என மரபான வேலைச்சூழலுக்கு மாற்றாக ஐ.டி பணிச்சூழல் இருந்தது. `ஆன்சைட்’ என்ற பெயரில் செலவில்லாத வெளிநாட்டுப் பணி வாய்ப்பும் பலருக்கு வாய்த்தது. 35 வயதுக்குள்ளாகவே வீடு, கார் எனப் பல தலைமுறையாக நீடித்த கனவுகள் நிறைவேறின. ஐ.டி என்றாலே, வங்கிகள் கடனை அள்ளித் தந்தன. ரியல் எஸ்டேட் உள்பட பிற துறைகளும் ஐ.டியோடு சேர்ந்து வளர்ந்தன. ஐ.டி ஊழியர்களின் பிள்ளைகளுக்கு என `சர்வதேசத் தரத்திலான’ தனியார் பள்ளிகள் முளைத்தன. பொதுச் சமூகத்திலிருந்து விலகி தனிச் சமூகமாக ஐ.டி ஊழியர்கள் இந்தியாவில் வளர்ந்து நின்றார்கள்.

இப்போது ஐ.டி துறைமீது மெள்ள இருள் படிகிறது. அந்த இருளில் எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள் நம் சகோதரர்கள். ``உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. புராஜெக்ட்களும் அவற்றுக்கான காஸ்டிங்குகளும் குறைந்துவிட்டன. அதனால் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவே ஆள்குறைப்புக்குக் காரணம்’’ என்று ஐ.டி நிறுவனங்கள் முணுமுணுக்கின்றன. ஆனால், அவர்களின் வருடாந்திர பேலன்ஸ் ஷீட்டை ஆராய்ந்து பார்த்தால், உண்மை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு சர்வதேச ஐ.டி நிறுவனங்களில் எதுவும் வருவாய் இழப்பைச் சந்திக்கவே இல்லை. சராசரியாக, குறைந்தபட்சம் நான்கு சதவிகித வளர்ச்சியுடன்தான் இந்த நிறுவனங்கள் இயங்கியுள்ளன. பிறகு என்னதான் காரணம்? ``தற்போதைய ஆள்குறைப்பு நடவடிக்கைக்கான காரணம், ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்தான்’’ என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 “இந்த ஆள்குறைப்பு என்பது, நேற்று யோசித்து இன்று எடுத்த நடவடிக்கை அல்ல. இரண்டு ஆண்டுகளாகவே ஆள்குறைப்புப் பேச்சுகள் ஐ.டி காரிடார்களில் ஒலித்துக்கொண்டிருந்தன. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியக் காரணம் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி. டெஸ்ட்டிங் போன்ற பல பணிகளை இப்போது இயந்திரங்களே செய்துவிடுகின்றன.  ``100 மணி நேர வேலையை 30 மணி நேரத்தில் இயந்திரங்கள் முடித்துவிடுகின்றன. இதற்கு முன்பு பத்து பேர் பார்த்த வேலைக்கு இப்போது இரண்டு பேர் போதும். மீதம் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கார்த்திக்.

``புராஜெக்ட் டெவலப்மென்ட், சாஃப்ட்வேர் டெவலப்மென்ட், புராடெக்ட் டெவலப்மென்ட், சர்வர் மேனேஜ்மென்ட், டேட்டா சொல்யூஷன் என ஐ.டி-யில் எக்கச்சக்கப் பிரிவுகள் இருக்கின்றன. புராடெக்ட் டெவலப்பர்களுக்கு இப்போதைக்குப் பிரச்னை இல்லை.  புராடெக்ட் சப்போர்ட் ஊழியர்களுக்குத்தான் இது போதாதகாலம்’’ என்கிறார்கள் ஐ.டி துறையினர்.

` ஆட்டோமேஷன் வளர்ச்சியால் 2021-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மட்டும் 6.4 லட்சம் பேர் வேலை இழக்கப்போகிறார்கள்’ என்கிறது ஹெச்.எஃப்.எஸ் என்னும் திறனாய்வு நிறுவனத்தின் அறிக்கை.
ஆட்டோமேஷனைக் கடந்து தற்போதைய ஆள்குறைப்புக்கு  இன்னொரு காரணமும் இருக்கிறது. அது ஐ.டி துறைக்கான காரணம் மட்டுமல்ல;  நாளை எந்தத் துறையில் பிரச்னை வந்தாலும் இந்தக் காரணம்தான் முதன்மையாக இருக்கப்போகிறது. அது `மண்ணின் மைந்தர்கள்தான் அனைத்திலும் முதன்மை’ என்ற கோஷம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

இந்தியாவில் நடக்கும் 60 சதவிகித மென்பொருள் வேலைகள் அமெரிக்காவுக்காகத்தான் நடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் 30 லட்சம் இந்தியர்களில் பாதிப்பேர், ஐ.டி நிறுவனங்களின் ஆன்சைட் பணிகளுக்காக அங்கு சென்றவர்கள். இனி அவ்வளவு எளிதாக ஐ.டி பணிகளுக்காக அமெரிக்கா செல்ல முடியாது. ஹெச்-1 பி விசாவுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விசா கட்டணமும் அதிகமாக்கப்பட்டுள்ளது.  இதை எதிர்கொள்ள ஐ.டி நிறுவனங்கள் தயாராகிவிட்டன. இன்ஃபோசிஸ் நிறுவனம், 10 ஆயிரம் அமெரிக்கர்களைப் பணியில் சேர்க்கவிருக்கிறது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளும் இது மாதிரியான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன.

உலகளாவிய ஐ.டி நிறுவனங்கள் அனைத்தையும் முதலீட்டாளர்களே ஆட்சி செய்கிறார்கள். முதலீட்டாளர்களின் குறிக்கோள் நாட்டுக்குச் சேவையாற்றுவதல்ல; லாபம் மட்டும்தான். குறிப்பிட்ட ஆண்டுக்குள் ஆபரேட்டிங் மார்ஜினை அதிகப்படுத்த நிறுவனங்களை முதலீட்டாளர்கள் நிர்பந்திக்கிறார்கள். ஐ.டி நிறுவனங்களைப் பொறுத்தவரைப்  பெரும் செலவு என்பது ஊழியர்களுக்கான சம்பளம்தான். லாபத்தை அதிகரிக்க ஆள்குறைப்பு எளிய வழி.

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?
லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

தொகுப்பு: கெளதம் தத்தா,
இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

லாபத்தை அதிகரிக்க இன்னொரு எளிய வழியும் ஐ.டி நிறுவனங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் 588 பொறியியல் கல்லூரிகள் முளைத்திருக்கின்றன. இந்தியா முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் 16 லட்சம் பொறியாளர்கள் வெளிவருகிறார்கள். இதுதவிர,  கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை முடித்துவிட்டு ஐ.டி வேலை நாடி வருபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள். ஆனால் நாஸ்காம் அறிக்கைப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐ.டி துறையில் உருவான வேலைவாய்ப்பு வெறும் 11 லட்சம்தான். கோடிக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இந்தக் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கின்றன ஐ.டி நிறுவனங்கள்.

10 பேரைத் தேர்வுசெய்ய நடத்தப்படும் நேர்காணலில் 100 பேர் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஒன்றரை லட்சம் சம்பளத்தில் ஒருவரை வேலைக்கு வைத்திருப்பதற்குப் பதில், 25,000 ரூபாய் சம்பளத்தில் ஆறு பேரை வேலைக்கு எடுப்பது ஐ.டி நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்கிறது. அதுவும் இப்போதைய லே ஆஃப்க்கு  முக்கியக் காரணம்.

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

`லே- ஆஃப்’ என்ற பெயரில் ஒருவரை நிரந்தரமாக வேலையைவிட்டு அனுப்ப முடியுமா?

``நிச்சயமாக அனுப்ப முடியாது'’ என்கிறார் வழக்கறிஞர் லீ.பர்வீன் பானு.

`` `லே- ஆஃப்’ என்ற வார்த்தையை ஐ.டி சமூகம் மட்டுமின்றி, பொதுச் சமூகமும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறது. `லே- ஆஃப்’ என்பது தற்காலிக ஏற்பாடு. தொழில் தாவா சட்டம் இதைத் தெளிவாக வரையறுத்து வைத்திருக்கிறது. ஓர் ஆண்டுக்கு 45 நாள்களுக்கு மட்டுமே ஓர்  ஊழியரை `லே- ஆஃப்’  செய்ய முடியும். அந்தக் காலகட்டத்தில் சம்பளம், அலவன்ஸ் அனைத்தும் வழங்க வேண்டும். 45 நாள்களுக்குப் பிறகு முழுமையாகப் பணி வழங்க வேண்டும். ஆக `லே- ஆஃப்’  என்பதை, `பணி நீக்கம்’ எனப் புரிந்துகொள்வது தவறு.

240 நாள்களுக்கு மேல் ஒருவர் வேலை செய்தால், அவரை நிரந்தர ஊழியராக்க வேண்டும். எந்த ஊழியரையும் உடனடியாக வேலையைவிட்டு நீக்க முடியாது. ஒருவேளை ‘டெர்மினேஷன்’ செய்யத்தக்க குற்றத்தை ஊழியர் செய்திருப்பதாக நிர்வாகம் கருதினாலும்கூட முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். விளக்கம், திருப்தி அளிக்காதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம். அந்த நடவடிக்கையையும் உச்ச நீதிமன்றம் வரை கொண்டுசென்று கேள்விக்கு உள்ளாக்க முடியும். சூப்பர்வைஸிங் போன்ற நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் தொழில் தாவா சட்டப்படி நிவாரணம் கோர முடியாது.  ‘தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட’த்தின் கீழ் அவர்கள் நீதிமன்றத்தை நாடி நிவாரணம்  பெறலாம்” என்கிறார் பர்வீன் பானு.

ஐ.டி ஊழியர்களை, சங்கம் அமைக்கவிடாமல் தடுக்கும் ஐ.டி நிறுவனங்கள், தங்களுக்கென `நாஸ்காம்’ என்ற அமைப்பை உருவாக்கி, சலுகைகளுக்குக் குரல்கொடுக்கின்றன. அரசின் பொருளாதாரம் மற்றும் தொழிற்கொள்கை முடிவுகளில் நாஸ்காம் அமைப்பு பெரும் ஆளுமை செலுத்துகிறது.

``ஐ.டி துறை பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே, இந்த வேலை இழப்புகள் எதனால் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்று ஐ.டி நிறுவனங்களில் லட்சக்கணக்கானோர் வேலைசெய்கிறார்கள். திறமைக் குறைவான  ஊழியர்கள் வெளியே போவதும், திறமையானவர்கள் உள்ளே வருவதும் மிகவும் இயல்பான விஷயம். 40 லட்சம் பேர் வேலைசெய்யும்  ஒரு துறையில், 10 சதவிகித ஆள்குறைப்பு என்பது  பெரிய விஷயம் அல்ல. ஐ.டி துறையில் மற்ற துறைகளைவிட சம்பளம் அதிகம். அதே அளவுக்கு வேலையும், தரம் குறித்த எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்யும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாதவர்களும் டெக்னாலஜியை அப்டேட் செய்து கொள்ளாதவர்களும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் சிக்குகிறார்கள். ஐ.டி நிறுவன ஆள்குறைப்பு என்பது, ஐ.டி நிறுவனங்களின் நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய கிளையன்ட்டுகளின் நடவடிக்கை. புராஜெக்ட் கொடுப்பவர்களின் எதிர்பார்ப்பு என்னவோ அதை  நிறைவேற்றுவதுதான்  ஐ.டி நிறுவனங்களின் பிசினஸ் மாடல்” என்கிறார்  நாஸ்காம் அமைப்பின் மூத்த இயக்குநர் புருஷோத்தமன்.

லே ஆஃப் பூதம்! - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்?

ஐ.டி நிறுவனங்களுக்கு, அரசுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்குகின்றன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 99 ஆண்டுகளுக்குச் சொற்பக் கட்டணத்தில் குத்தகைக்குத் தருகின்றன. நாடே மின்தடையில் தவித்தாலும் தடையற்ற மின்சாரத்தை வழங்குகின்றன. இன்னும் பலப்பல சலுகைகள். எல்லாம் எதற்காக? வேலைவாய்ப்புக்காக. ஆனால், லாபத்தையும் பன்னாட்டு கஸ்டமர்களின் நலனையும் மட்டுமே நோக்கமாகக்கொண்டு ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.காக்னிசென்ட் நிறுவனம் ஆள்குறைப்புக்கான நடவடிக்கையில் இறங்கியபோது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நேரடியாகத்  தலையிட்டார். தெலுங்கானா மாநிலத் தொழிலாளர் நலத்துறை உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்டது. நிறுவனம் பணிந்தது. 

தமிழகத்தில் சாதனைப் புத்தகம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.  பல ஆயிரம் தொழிலாளர்கள் பரிதவித்து நிற்கும் இந்த நேரத்தில், இந்த விவகாரத்தை ஒரு பிரச்னையாகவே கருதவில்லை அரசு. இந்தப் பலவீனம்தான் ஐ.டி நிறுவனங்களின் பலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism