Published:Updated:

பாகிஸ்தான் இன்று!

பாகிஸ்தான் இன்று!
பிரீமியம் ஸ்டோரி
News
பாகிஸ்தான் இன்று!

மருதன்

`பாகிஸ்தானில் கிரிக்கெட், பயங்கரவாதம் தவிர்த்து வேறு என்ன இருக்கிறது? மக்கள் என்ன செய்கிறார்கள்? பாகிஸ்தானிய மக்கள் இந்தியர்களை வெறுக்கிறார்களா?'

இப்படிப்பட்ட கேள்விகள் சமூகவலை தளங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. ஒன்று பாகிஸ்தானைப் பற்றி உலகத்துக்கு  எதுவும் தெரியவில்லை. இரண்டு, பாகிஸ்தானைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் குறுகுறுப்பு அநேகமாக எல்லோரிடமும் இருக்கிறது. நிஜத்தில் எப்படி இருக்கிறது பாகிஸ்தான்?

பாகிஸ்தான் இன்று!

பாகிஸ்தானில் வாழ்தல்

அறுபதுகளில் ஒரு கிரேக்க வடிவமைப் பாளரால் உருவாக்கப்பட்ட இஸ்லாமாபாத், அதிகாரமும் செல்வமும் வைத்திருப்பவர் களுக்கான பிரத்யேக சொர்க்கபுரியாகத் தொடக்கம்முதல் இன்றுவரை நீடிக்கிறது. ஒவ்வொரு செக்டாரிலும் பளபளக்கும் பங்களாக் களும் ஷாப்பிங் மால்களும் பளிச்சிடுகின்றன. நவீன மருத்துவமனைகள், பிரமிக்கவைக்கும் வணிகக் கட்டடங்கள், பசுமைத் தோட்டங்களால் நிறைந்திருக்கும் வில்லாக்கள் என்று ஒரு நவீன நகரத்துக்கான எல்லா இலக்கணங்களையும் கொண்டிருக்கிறது இஸ்லாமாபாத். ``எப்போது சென்று பார்த்தாலும் எங்காவது ஓர் இடத்தில் ஏதாவதொரு கட்டடத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்'' என்கிறார்கள் அங்கே சென்றுவந்தவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இஸ்லாமாபாத்தின் பிரதான சாலைகளில் பாதசாரிகளைக் காண்பது அரிது. எல்லோரிடமும் கார் இருக்கிறது. குறைந்தது 50 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் இருந்தால்தான் இங்கே வீடுபோல் ஒன்றை வாங்கமுடியும். இதுகூட மூன்று வருடங்களுக்கு முந்தைய கணக்குதான்! விலைவாசி விஷயத்தில் நார்வேயின் தலைநகரம் ஓஸ்லோவோடு சிலர் இஸ்லாமாபாத்தை ஒப்பிடுகிறார்கள். இதுபற்றி 'டான்' பத்திரிகையில் பல பாகிஸ்தானியர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக் கிறார்கள். ‘`25 ஆண்டுகளாக இஸ்லாமாபாத்தில் வசிக்கிறேன். இங்கே வீடு வாங்குவது குறித்துக் கனவுகூடக் காணத் தொடங்கவில்லை’' என்கிறார் ஒருவர்.

``அரசு உடனடியாகத் தலையிட்டு இஸ்லாமா பாத்தை அனைவருக்குமான நகரமாக மாற்ற வேண்டும்'’ என்று அவசரமாக இறைஞ்சுகிறார் இன்னொருவர். ஆம், ஏழைகளும் இருக்கிறார்கள். மினி வேன்களில் வேலைக்கு வந்துசெல்லும் இவர்கள் அருகிலுள்ள ராவல்பிண்டியில் தங்கியிருக்கிறார்கள்.

இஸ்லாமாபாத்தும் ராவல்பிண்டியும் இரட்டை நகரங்கள். ஆனால், அசுத்தம், குப்பைக்கூளங்கள், இடிபாடுகள், சாக்கடை நீர், பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள், குப்பங்கள் என்று இஸ்லாமாபாத்துக்கு நேர் எதிராக இருக்கிறது ராவல்பிண்டி. இங்கிருந்து குதிரைவண்டி அல்லது மினி வேன் பிடித்து இஸ்லாமாபாத் சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் இரவு வீடு திரும்பும் ராவல்பிண்டிவாசிகள் அநேகம் பேர். இப்படிச் சில மைல் தொலைவில் செழுமையும் ஏழ்மையும் அருகருகில் நிறைந்திருக்கும் பல பகுதிகளைப் பாகிஸ்தானில் பார்க்கமுடியும். இதுவே உலக நியதியும்கூட என்ற வகையில் பாகிஸ்தான் உலகின் மற்றொரு நாடு, அவ்வளவுதான்.

பாகிஸ்தான் இன்று!

வேறெந்த அண்டை நாடுகளையும்விடப் பயங்கரவாதத்துக்கு அதிகம் பலியான நாடு பாகிஸ்தான். இந்தியாவில் ஒரு சங்கடம் என்றால், இங்கே ஒரு கலகம் வெடித்தால், அதைக் கண்டு பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சிகொள்கிறார்கள் என்று நினைப்பது தவறு. பிரச்னை என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியும். நண்பர்களை, உறவினர்களை, குழந்தைகளைப் பலிகொடுப்பது என்றால் என்னவென்பதை அவர்கள் அறிவார்கள். பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அந்நாட்டு மக்களின் உணர்வுகளைத்தான் முழுக்க முழுக்கப் பிரதிபலிக்கிறார்கள் என்று நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மிகப் பெரும்பாலான மக்கள், `இந்தியாவுடன் நல்லுறவு கொள்ளவே விரும்புகிறார்கள்' என்கிறார்கள் பாகிஸ்தானை நேரடியாக அறிந்தவர்கள்.

பாகிஸ்தானில் கூட்டுக்குடும்பங்கள் அதிகம். ஒரே வீட்டில் அல்லது முடிந்தவரை அருகருகில் வசிக்கவே ஒரு குடும்பத்தினர் விரும்புகின்றனர். அதிகாரம் ஆண்களிடம் குவிக்கப் பட்டிருக்கிறது. குடும்பத்தில் மூத்த ஆணின் ஆலோசனைகள் மதிக்கப் படுகின்றன. பஞ்சாப் போன்ற இடங்கள் தவிர்த்து, பெரும்பாலும் பெண்கள் வீட்டு வேலைகளே செய்கின்றனர். வசதி படைத்த வீடுகள் பலவற்றில் முன்பகுதி ஆண்களுக் கானதாக இருக்கிறது. இங்கே மட்டும்தான் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் பெண்களைக் கொல்லும் வழக்கம் இன்னமும் கிராமப்புறங்களிலிருந்து அழிந்துவிடவில்லை. அதே சமயம் புர்கா அணியாத, வசதி படைத்த பெண்களையும் காணலாம். மேற்கத்திய நாகரிகத்தால் கவரப்பட்டு, உயர் கல்வி படித்த இந்தப் பெண்கள் ஏராளமான கனவுகளுடன் இருக்கிறார்கள்; சுதந்திரமாக ஷாப்பிங் மால்களில் நடைபோடுகிறார்கள்; ஃபேஸ்புக், டி.வி, நெட்ஃபிளிக்ஸ் பார்க்கிறார்கள்.

பாகிஸ்தானின் குழப்பங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் அந்நாட்டின் அரசியல் சமூக வரலாறே காரணம். சிவிலியன் அரசைவிட ராணுவமே அங்கு அதிகம் ஆட்சி செய்திருக்கிறது. கெட்ட செய்திகளுக்காகவே அதிகம் அந்நாடு விவாதிக்கப்பட்டிருக்கிறது. நிலையான ஆட்சி என்பது அநேகமாக என்றுமே அங்கு நிலவியதில்லை. அதே சமயம், அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றைய தேதிவரை பாகிஸ்தானுடனான உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது அமெரிக்கா. நவீன அடையாளங்கள் பலவற்றைக் கொண்டிருந்தாலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வேரை இன்றுவரை அவர்களால் ஒழிக்கமுடியவில்லை.

பாகிஸ்தான் இன்று!

அரசியல் எப்படியிருக்கிறது?

ஒவ்வொரு பாகிஸ்தான் அதிபரும் தன் பதவிக்காலத்தின் பெரும்பகுதியை இரு விஷயங்களுக்காகச் செலவிடுவது வழக்கம். ஒன்று, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள. மற்றொன்று, தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள. நவாஸ் ஷெரிஃப்புக்கு முதல் கவலை இல்லை என்பதால், இரண்டாவதில் தன் முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறார்.

உண்மையில், அவருடைய அச்சம் இன்னொரு ராணுவக் கலகம் அல்ல. இன்று அது செய்வது கடினம் என்பது அவருக்குத் தெரியும். காரணம், 2008 முதல் சிவிலியன் அரசு, ராணுவத்தைவிடச் சற்றே கூடுதல் பலத்தை அங்கே பெற்றிருக்கிறது. இதன்பொருள் இந்தியாவில் இருப்பதைப்போல் ராணுவம் முழுக்கவும் சிவிலியன் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டது என்பதல்ல. இன்னமும் ராணுவம் சில பகுதிகளில் தனித்த செல்வாக்குடன்தான் இருக்கிறது.

நவாஸின் கவலை வேறு. உலக அளவில் பல நாட்டு அரசியல் தலைவர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்திய பனாமா ஆவணங்களில் நவாஸ் ஷெரிஃப்பின் உறவினர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து  நவாஸ் பதவி விலகவேண்டும் என்னும் கோரிக்கை பலமாக எழுந்தது. அவரைப் பதவி நீக்கம் செய்யத் தேவையில்லை என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துவிட்டாலும் விசாரணைகள் இன்னமும் முடிந்தபாடில்லை.

பாகிஸ்தான் இன்று!

இந்தியா, அமெரிக்கா, சீனா!

பாகிஸ்தானின் சமகால அரசியல் வரலாறு என்பது இந்த மூன்று முக்கிய நாடுகளுடன் அது கொண்டிருக்கும் உறவு அல்லது பகையை மையப்படுத்தியே அமைந்திருக்கிறது. முதலில், இந்தியா. கடந்த மே மாதத் தொடக்கத்தில் எல்லைக்கோட்டுக்கு அருகிலுள்ள கிருஷ்ணா காத்தி செக்டாரில் இரண்டு இந்திய வீரர்களின் சடலங்கள் துண்டிக்கப்பட்ட தலைகளுடன் கண்டெடுக்கப்பட்டன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிப் பாகிஸ்தான் நடத்தியுள்ள இந்த மோசமான ஊடுருவலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கட்டுப்பாட்டுக் கோட்டிலுள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள்மீது இந்தியா தாக்குதல் தொடுத்திருக்கிறது.  ஒரு பக்கம், எல்லையில் பதிலடி; இன்னொரு பக்கம், சர்வதேச அழுத்தம். இரண்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் நவாஸ் ஷெரிஃப்.

அடுத்து அமெரிக்கா. சவுதி அரேபியாவின் தலைநகரம் ரியாத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. சவுதி மன்னரும் டொனால்ட் ட்ரம்ப்பும் கைகுலுக்கிக்கொண்ட இந்த மாநாட்டில், நவாஸ் ஷெரிஃப் காணப்படவில்லை. சின்னச்சின்ன நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் மேடையேறி உரையாற்றியபோது, சக்திவாய்ந்த அணு ஆயுத நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை நவாஸின் இமேஜுக்கு விழுந்த அடியாகவே உலகம் பார்க்கிறது. இது போதாதென்று தன் உரையிலும் ட்ரம்ப், பாகிஸ்தானை உதாசீனம் செய்திருக்கிறார். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளைப் பட்டியலிட்டுப் பேசியபோது... அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவற்றைக் குறிப்பிட்ட ட்ரம்ப் இறுதிவரை பாகிஸ்தானின் பெயரை உச்சரிக்கவில்லை.

மூன்றாவது, சீனா. இந்தியா, அமெரிக்காவோடு ஒப்பிடும்போது சீனா ஒரு நல்ல ஆறுதல். சமீபத்தில் சீனா அறிமுகப்படுத்தியுள்ள ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தில் 130 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஐரோப்பா, ஆசியா இரண்டையும் கடல் மற்றும் நில மார்க்கமாக ஒன்றிணைப்பதே இந்தப் பெரும் திட்டத்தின் நோக்கம். சீனா இதன் மையமாக இருக்கும். இதன் பொருள், உலகிலுள்ள மூன்றில் இரு பங்கு நாடுகள் சீனாவின் இந்த நோக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளன என்பதே. இந்தியா இத்திட்டத்தைவிட்டு கடுப்புடன் ஒதுங்கி நிற்பதற்கு முதல் காரணம் பொறாமை என்றால், இரண்டாவது காரணம், இத்திட்டத்தில் பாகிஸ்தானும் இணைந்திருக்கிறது என்பதுதான். இந்தியாவை எரிச்சலடைய வைப்பதைத் தவிர, வேறு இன்பம் பாகிஸ்தானுக்கு இருக்க முடியுமா? இதுதான், `அரசியல்வாதிகளின் பாகிஸ்தான்'.  ஆனால், `மக்களின் பாகிஸ்தான்' வேறு வடிவில், அதே நாட்டில் உயிர்ப்புடன் இருக்கிறது. இந்த பாகிஸ்தானை நம்மால் புரிந்துகொள்ள முடியும்... கொஞ்சம் முயன்றால் நெருங்கிச்செல்லவும் முடியும்.