Published:Updated:

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

சுகுணா திவாகர், படங்கள்: ஏ.சிதம்பரம், வி.ஸ்ரீனிவாசலு

ஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கிற நேரத்தில் வந்திருக்கிறது ‘நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத் தடை’ என்கிற மோடி அரசின் அறிவிப்பு.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கியே மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள்மீது தாக்குதல், மாட்டிறைச்சியை விற்பவர்களாக, சாப்பிடுபவர்களாகத் தாங்கள் சந்தேகப்படு பவர்களை எல்லாம் அடித்து உதைத்தல் எனப் `பசுவதைத் தடுப்பு' என்னும் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்தனர் சிலர். உத்திரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் கிராமத்தில் முகமது இக்லாக் என்னும் இஸ்லாமியரைக் கொலை செய்தனர். மாட்டுத்தோலை உரித்ததற்காக நாட்டின் பல பகுதிகளில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினர். இப்போது அவர்கள் கையிலேயே சட்டத்தைத் தந்திருக்கிறார் மோடி.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

இந்துத்வா அரசியலை முன்னெடுக்கிற வர்களின் அரசியல் ஆயுதங்களில் ஒன்று ‘பசுவதைத் தடுப்பு’. அதனால்தான் ஏற்கெனவே பா.ஜ.க எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆள்கிறதோ அங்கெல்லாம் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளனர்.  மாட்டைக் கொன்றால் மகாராஷ்டிராவில் ஐந்து ஆண்டுகள் சிறை, மத்தியப்பிரதேசத்தில் ஏழு ஆண்டுகள் சிறை, ஹரியானாவில் பத்தாண்டுகள் எனச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்பது இந்து மத அடிப்படைவாதிகளின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால் ‘பசுவதைத் தடுப்புச் சட்டம்’ என்ற பெயரில் கொண்டுவராமல் ‘சந்தைகளில் இறைச்சிக்காகக் கால்நடைகளை விற்கத் தடை’ என்று   தந்திரமாக ச் சட்டம்  கொண்டுவந்திருக்கிறார் மோடி!

விவசாயத்தைப் பாதுகாக்க, கால்நடைகளைப் பாதுகாக்க என்று இந்த அறிவிப்புக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ‘பசு புனிதமானது’ என்கிற மதவாத அரசியல்தான் இதன் அடிப்படை. பசுவைப் புனிதமாகக் கருதி அவற்றைக் காப்பதே இந்தியக் கலாசாரம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

பசு புனிதமா?

வேதகாலத்தில் உயர்சாதியினரும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா தொடங்கி அம்பேத்கர் வரை பலர் சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

“விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான ஆர்கியம் அல்லது மதுபர்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு சடங்கு குறித்துப் பிற்கால வேத நூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. விருந்தினர்களைக் கௌரவிக்க பசுக்களைக் கொல்லும் நடைமுறை பண்டைக் காலத்திலிருந்தே இருப்பதாகத் தெரிகிறது. ‘விருந்துக்குப் பொருத்தமான பசுக்கள்’ என்ற பொருள் தரும் அதிதினிர் (Athithinir) என்ற சொல் ரிக் வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது. திருமண விழாவின்போது பசு பலி தரப்பட்டது குறித்து ரிக்வேதப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. ஆட்சியாளர்களோ, மரியாதைக்குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால், மக்கள் காளைகளையோ, பசுக்களையோ பலியிட்டார்கள் என்று அய்த்தரேய பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்கிறார் ஆய்வாளர் டி.என். ஜா. ‘புனிதப்பசு என்னும் கட்டுக்கதை’ என்று ஒரு நூலே எழுதியிருக்கிறார் அவர்.

“மத நூல்களிலும் தர்மசாஸ்திர நூல்களிலும் மட்டுமல்ல, ஆரம்பகால இந்திய மருத்துவ நூல்களும் மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்களைப் பற்றிப் பேசுகின்றன” என்கிறார் டி.என்.ஜா. மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல் ஆகியவற்றுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்திய மருத்துவ நூல்களான சரக சம்ஹிதமும் சுஸ்ருதா சம்ஹிதமும்  பரிந்துரைக்கின்றன. அப்படியானால் எப்போது பசு புனிதமாக்கப்பட்டது?

வேள்விகளில் மாடுகள், குதிரைகள் போன்றவை பலியிடப்பட்டன. இந்த வேள்விகளால் கால்நடைச் செல்வங்கள் அழிவதைப் பௌத்தம் கடுமையாக எதிர்த்தது. ஒருகட்டத்தில், வைதீகத்தைவிட பௌத்தத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தது.

‘பௌத்தத்தைவிடத் தங்களை மேலானவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் காட்டிக்கொள்வதற்காகவே பிராமணர்கள் முற்றிலுமாக இறைச்சி உண்ணுவதைக் கைவிட்டனர்’ என்றார் அம்பேத்கர். ஒருகாலகட்டத்தில் தலித்துகள் அல்லாத சாதி இந்துக்கள் மாட்டிறைச்சியை அசுத்தமாகக் கருதினர். எனவே ‘முற்றிலுமாக இறைச்சி உண்ணாத உயர்சாதியினர், ஆடு, கோழி சாப்பிட்டு மாட்டிறைச்சியை விலக்கிவைத்த சாதி இந்துக்கள், மாட்டிறைச்சி உண்ணும் தீண்டத்தகாதவர்கள் என மூன்று பிரிவுகள் உருவாயின” என்றார் அம்பேத்கர்.

இன்றளவும் பசுவைப் புனிதமாகக் கருதும் கலாசாரம் என்பது வட இந்தியாவில்தான் செல்வாக்குடன் இருக்கிறதே தவிர, தென்னிந்தியாவில் அத்தகைய மனப்போக்கு குறைவே. காரணம், ‘பசு புனிதம்’ என்று சொல்லி மாட்டிறைச்சியை விலக்கிவைத்த கலாசாரத்தைத் தமிழ் இலக்கியங்கள் எதிலும் பார்க்கமுடியாது.

" `புலையன் ஆவுரித்துத் தின்றான்,  பாணன் கன்றை உரித்துத் தின்றான்' என்று நற்றிணையிலும், வீரர்கள் கொழுத்த பசு இறைச்சியை உண்டனர், விருந்தினர்க்கு மாட்டு இறைச்சியும் வெண்ணரிசிச் சோறும் கொடுத்தனர் என்கிற செய்திகளும்கூட சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்களில் விவரிக்கப்படுகின்றன. உழவர்கள் கூடப் பசு இறைச்சியைத் தின்றதை அகநானூறு பதிவுசெய்கிறது” என்கிறார் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!
நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!
நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

‘சரி, இதெல்லாம் பழைய கதை. ‘பசு புனிதம்’ என்பதுதானே இன்றைய இந்துக்களின் கலாசாரம்’ அதை மறுக்கமுடியுமா? தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் சில இடைநிலைச் சாதியினர் மாட்டுக்கறி உண்கின்றனர். பெரும்பாலான இடைநிலைச் சாதியினர் மாட்டிறைச்சி உண்பதில்லை. கேரளாவிலோ தலித்துகள், முஸ்லிம்கள் மட்டுமல்ல, பெரும்பாலான இந்து இடைநிலைச் சாதியினரும் மாட்டிறைச்சி உண்கின்றனர். மீனும் மாட்டு மாமிசமும் கேரளாவின் அடையாள உணவுகள். எனவே 'பசு புனிதம்' என்பது ஒட்டுமொத்த இந்துக்களின், இந்தியர்களின் கலாசாரம் அல்ல.

காந்தி மதநம்பிக்கை கொண்டவர். பகவத்கீதையை மதித்தார். ராமனைத் தன் ஆதர்சமாக முன்வைத்தார், பசுவதையையும் மதமாற்றத்தையும் அவர் ஏற்க வில்லை. ஆனால் அவற்றைத் தடுப்பதற்குச் சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று மற்றவர்கள் சொன்ன போது, அதைக் கடுமையாக எதிர்த்தார். 1924-ல் “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து ராஜ்யம் அல்ல. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம் மற்றும் பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்குச் சான்றாக இருக்கும்” என்றார் காந்தி. இந்த விஷயத்தில் காந்தியின் வழியைப் பின் தொடர்ந்தார் நேரு. இத்தனைக்கும் காங்கிரஸ் ஆண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதன்முதலில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

‘பசு புனிதம்’ என்பது வடமாநிலங்களில் இந்து உயர் சாதியினரின் நம்பிக்கையாக மட்டும் இருந்தது. ஆனால், அதை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலாக மாற்றியது தொடக்ககால இந்துத்துவ வாதிகள். 1881-ல் முதன் முறையாக ‘கோரக்‌ஷண சபா’ என்ற முதல் பசுப்பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினார், ஆரிய சமாஜத்தைத் தோற்று வித்த தயானந்த சரஸ்வதி. தொடர்ச்சியாக ஆரிய சமாஜம், இந்துமகா சபா, ஜனசங்கம் என்று இந்துத்துவ அமைப்புகள் பசுப்பாதுகாப்பு அரசியலை முன்னெடுத்தன.

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, காங்கிரஸில் இருந்த இந்துத்துவவாதிகளின் செல்வாக்கையும் மீறி தேசிய அளவில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர மறுத்தார். ஒருபுறம், தன் சொந்தக் கட்சிக்காரர்களே மதச் சார்பின்மைக்கு எதிராக இருந்தபோதும், “நான் பதவி விலகும் சூழல் ஏற்பட்டாலும், பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர மாட்டேன்” என்று உறுதியாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார்.

விவசாயத்துக்காகத்தானா?

தங்களுடைய மதவாத அரசியலை மறைக்க ‘கால்நடைகளைக் காக்கவும் விவசாயிகளைப் பாதுகாக்கவும்தான் இந்தத் தடை’ என்கிறார்கள் மோடி பக்தர்கள்.

டெல்லியில் பல நாட்களாக நிர்வாணப் போராட்டம் வரை நடத்திய தமிழக விவசாயிகளைச் சந்திக்க முன்வராத நரேந்திர மோடி, ‘விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் மாட்டிறைச்சித் தடையைக் கொண்டுவருகிறார்’ என்று சொல்வதை நம்புவது, ‘கேப்பையில் நெய்தான் வடிகிறது’ என்று ஒப்புக்கொள்வதற்குச் சமம். ‘இறைச்சிக்காகக் கால்நடைகளை வெட்டக்கூடாது’ என்ற மோடி அரசின் தடை, உண்மையில் விவசாயத்தையும் விவசாயிகளையும் குழிதோண்டிப் புதைக்கும் செயல்.

பால் வற்றிப்போன, வயதான மாடுகளைப் பராமரிப்பதற்கு என்ன வழி என்பதற்கு இதுவரை பசுப்பாதுகாப்பாளர்களிடம் எந்த பதிலும் இல்லை. ஏற்கெனவே பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் இருந்து மேற்குவங்கம் வழியாகத் திருட்டுத்தனமாக வங்காளதேசத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி கால்நடைகள் (அதன் மதிப்பு 3,126 கோடி) கொண்டுசெல்லப்படுகின்றன. விவசாயிகள் வேறு என்னதான் செய்வார்கள்?

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

உண்மையில்  நகரமயமாக்கல், தொழில்வளர்ச்சி, விவசாயம் செய்வதற்கு இளைஞர்கள் முன்வராதது, அரசின் கொள்கைகள் போன்றவைதான் விவசாயிகள் அழிவுக்குக் காரணங்களாக இருக்கின்றனவே தவிர, மாட்டிறைச்சி இல்லை.

 ‘பசுப்பாதுகாப்பு’ என்பதற்குப் பால் உற்பத்தி முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடைக் கணக்கெடுப்பின்படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்தரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவுக்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால், இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அசாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கிறது.

மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால், பசுவதை தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன.

உதாரணமாக கடந்த  2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின்படி,  `ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாகச் சரிவடைந்து வந்துள்ளது. இத்தகைய கால்நடைகள் பால்சுரப்பதை நிறுத்தியபிறகோ, வயதானபிறகோ, அவற்றை இறைச்சிக்காகவும் விற்கக்கூடாது என்றால், அதை வளர்ப்பதை நிறுத்தத்தான் செய்வார்கள். புதிய தடைச் சட்டத்தின்படி ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்குதான் கால்நடைகளை விற்கவேண்டுமாம். வயதான, பால் சுரக்காத மாட்டை ஒரு விவசாயியிடம் இன்னொரு விவசாயியிடமிருந்து ஏன் வாங்கப்போகிறார்?

நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு!

விவசாயிகள் மாடுகளை வளர்க்கவே முடியாத சூழல் உருவாகுமானால் அது இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கான உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்கும். இறைச்சி, பால் மற்றும் பால்பொருள்களையும் கூட இறக்குமதி செய்ய வேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும்.

2016ஆம் ஆண்டுக் கணக்கின்படி உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவும் பிரேசிலும்தான் முதலிடம் வகிக்கின்றன (மொத்த ஏற்றுமதியில் 20%). ‘முஸ்லிம் பெயரில் இந்த ஏற்றுமதி நிறுவனங்களை நடத்துபவர்களில் கணிசமானவர்கள் உயர்சாதி இந்துக்கள்’ என்பது அம்பலப்படுத்தப்பட்டு, ‘உள்ளூரில் பசுவதைத் தடுப்பு, வெளிநாட்டில் ஏற்றுமதியா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இப்போது மோடி அரசின் ‘இறைச்சித் தடை’ சந்தைகளுக்கு மட்டும்தானா, வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் விரியுமா? ஒருவேளை, வீம்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதித்தால், அது பொருளாதாரத் தற்கொலையாகத்தான்  இருக்கும்.

ஒருபுறம் சிறுபான்மையினரின், தலித்துகளின், அனைத்துச் சாதியைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் உணவு உரிமையை மறுக்கும் எதேச்சதிகார ஆணவம், விவசாயிகளை அழிக்கும், கால்நடைகளையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் முட்டாள்தனம் இவை இரண்டும் இணைந்ததுதான் மோடியின் ‘இறைச்சிக்குத் தடை'ச் சட்டம். மொத்தத்தில், இந்தத் தடை நாட்டுக்கும் வீட்டுக்கும் மாட்டுக்கும் கேடு.