Published:Updated:

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8

கார்க்கிபவா

ந்த வாரம் வேறு ஒரு பிரச்னையைப் பற்றி எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது அலுவலகத்தில் என் இருக்கைக்கு எதிரே இருந்த பெண் ஒருவரைக் கவனித்தேன். முகத்தில் இருந்த பருவைக் கிள்ளிக்கொண்டிருந்தார். அவர் இப்படிச் செய்வதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவர் அறிந்துதான் கிள்ளுகிறாரா அல்லது அனிச்சையாகச் செய்கிறாரா என்ற சந்தேகத்தை அவரிடமே கேட்டுவிட்டேன். பதறிப் போய்விட்டார்.

``எங்கம்மாகூட இதுக்காகத் திட்டிட்டே இருப்பாங்க. ஆனா, பரு வந்தா அதுல இருக்குற கொழுப்பைக் கிள்ளி எடுக்காம என்னால எந்த வேலையையும் செய்ய முடியாது. `ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ்’ல எழுதுற அளவுக்கு இது கெட்டப் பழக்கமா?’’ என்றார்.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 8

டீன் ஏஜைத் தாண்டும்போது, காதலைக் கடக்காதவர்களைவிட பருக்கள் வராத ஆட்கள் குறைவு. `அது ஹார்மோன் இன்பேலன்ஸ்’, `எங்க பாட்டிக்குக்கூட வந்துச்சாம்’, `பரம்பரை பிராப்ளம்’, `நிறைய எண்ணெய் உணவா சாப்பிடுறேன்’... இப்படி ஏகப்பட்ட காரணங்களைச் சொல்வோம், சொல்வார்கள். உண்மையான பிரச்னை, பரு வருவது அல்ல; அதைக் கிள்ளிவிடுவதுதான். ``அட, ஆமாப்பா ஆமா’’’ எனச் சொல்லும் ஆட்கள்தான் மெஜாரிட்டி என்கின்றன ஆய்வுகள்.

பரு என்பது என்ன? எண்ணெய், பாக்டீரியாக்கள் மற்றும் சில கழிவுகளைக் கொண்ட முட்டை அது. அந்த முட்டை, பபுள் ஷீட்டைப்போலத்தான். உடைக்க உடைக்க ஜாலியாக இருக்கும். ஆனால், உள்ளே இருக்கும் பாக்டீரியாக்கள் அலாவுதீன் விளக்கில் இருந்து வெளிவரும் பூதம்போல ரிலீஸ் ஆகிவிடும். இந்த பாக்டீரியாக்கள், அலாவுதீன் பூதத்தைப்போல நல்ல பூதமும் அல்ல. அருகில் இருக்கும் இடங்களில் பரவி,  இன்னும் சில முட்டைகளை உருவாக்கிவிடும். அது மட்டுமல்ல, இதனால் தோலின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாக்டீரியாவை இன்னும் ஆழமாக ஊடுருவ வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறீர்கள். `ஐ யம் சிங்கிள் யா’ என இருக்கும் பாக்டீரியாவுக்கு, உங்கள் கைகளின் வழியாகப் புது பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். அவை இரண்டும் குடும்பம் நடத்தி, குட்டிபோட்டு... இவையெல்லாம் உங்கள் கன்னங்களில்தான் நடக்கும். பருவத்தே பயிர் செய்யலாம். பருவில் செய்யலாமா?

`சரி, கிள்ளினால்தான் என்ன? என் பரு; என் கன்னம்; என் கைகள்’ என்கிறீர்களா? பருவில் இருக்கும் கொழுப்புப் படிந்த கையுடன் ஒருவர் உங்களுக்கு கைகொடுத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? சீரியஸாக மீட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது உங்களையே அறியாமல் பருவைக் கிள்ளிக்கொண்டிருந்தால், உங்கள் பாஸ் என்ன நினைப்பார்?

இதற்குத் தீர்வுதான் என்ன? பருக்களுக்கும் ஆயுள்காலம் உண்டு. அதுவாக முடிந்தால், தானாக உதிர்ந்துவிடும். கிள்ளிவிட்டால்தான் அது நீட்டிக்கப்படும்.

எப்படித் தடுப்பது?

1) வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதுதான் பல பிரச்னைகளுக்குத் தீர்வைத் தரும். நீங்கள் கைகளால் உடைத்த பருக்களின் தடம் ஆறத்தான் பல நாள்கள் ஆகியிருக்கும். இன்னொரு பருவைக் கிள்ளுவதற்கு முன்னர் இதை நினைவில்கொள்ளுங்கள்.

2) எப்போதெல்லாம் பருவைக் கிள்ளத் தோன்றும்? பொதுவாக, எந்த வேலையையும் செய்யாமல், எதையாவது யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான்.  அந்தச் சமயங்களில் புத்தகங்கள் படிக்கலாம்; சிறிது நேரம் வீடியோகேம்ஸ்கூட விளையாடலாம். `பிஸியாக இருக்கும் கைகள், பருக்களைத் தேடாது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

3) கண்ணாடியைப் பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு முறை கண்ணாடியைப் பார்க்கும்போதும், அந்தப் பரு உங்களை உறுத்தலாம். `எப்படியாவது அதை நீக்கிவிட வேண்டும்’ என்ற ஆர்வம் இன்னும் அதிகமாகும். அதனால் உங்கள் விரல்கள் உங்களுக்கே தெரியாமல், ஒரு விநாடியில் கிள்ளிவிட்டுப் போகும். அதனால், `பருக்கள் இருப்பவர்கள் கண்ணாடியை அதிகம் பார்க்க வேண்டாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் செல்ஃபிக்களும் அடக்கம் மக்களே!

4) வீட்டில் இருக்கும்போது கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் ஷாக் ஆவது புரிகிறது. ஆனால், கிளவுஸ் மாட்டிய கைகளால் பருக்களை கிள்ளுவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை. வேறு எந்த விஷயமும் உங்களை அடக்க முடியாது என்னும்போது கிளவுஸ் மாட்டுவதுதான் தீர்வு.

`சரி... கிள்ளுவதை நிறுத்திவிடுகிறேன். ஆனால், கிள்ளாமல் இருந்தால், எனக்குக் கைகள் எல்லாம் நடுங்குகிறதே...’ என்கிறீர்களா? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஸ்மார்ட்போனை எடுங்கள். `Pimple popper' என்ற ஆப்-ஐத் தேடி டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். நீங்கள் நிஜத்தில் செய்துகொண்டிருந்ததை டிஜிட்டலாகச் செய்து விளையாடலாம்.

ஸ்மார்ட்போனில் விளையாடலாம். நிஜத்தில் விளையாடுவதுதான் ரிஸ்க்!

- பெர்சனல் பேசுவோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz