Published:Updated:

“சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்!”
“சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்!”

பரிசல் கிருஷ்ணா

பிரீமியம் ஸ்டோரி

த்து ஆண்டுகளுக்கு முன்புவரை நமக்கு கிரிக்கெட் என்பதே சச்சின் அவுட் ஆகும்வரை தான். சச்சின் இல்லாத மேட்ச்சைப் பார்ப்பதும், சுவிட்ச் ஆஃப் செய்த டி.வியைப் பார்ப்பதும்  ஒன்றாகத்தான் இருந்தது. அது சச்சின் காலம்!

அப்படிப்பட்ட சச்சின் காலத்திற்கே அழைத்துச் செல்கிறது `சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம். தோனியின் வாழ்க்கையைச்சொன்ன `எம்.எஸ்.தோனி' படம்போல இல்லாமல், இப்படத்தை ஆவணப்படமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன்.

சச்சின் ‘விளையாட்டி’ல் தடம் பதிக்கும் முன், விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலத்தில் இருந்து தொடங்குகிறது படம்.  ஒரு விடுமுறைக்கு, காஷ்மீர் சென்ற அக்கா எல்லோருக்கும் ஒவ்வொரு பரிசு கொடுக்க, சச்சினுக்குக் கிடைத்தது கஷ்மீரி வில்லோ கிரிக்கெட் பேட். அங்கிருந்து தொடங்கியதுதான் சச்சினின் ஓட்டம், அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.

“சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்!”

சச்சினின், வாழ்க்கை இந்தியர்கள் ஒவ்வொருவரோடும் பின்னிப் பிணைந்தது. அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டைப் பார்த்த ஒவ்வொருவரும், இந்தப் படம் பார்க்கும்போது, குறிப்பிட்ட மேட்சின்போது தாங்கள் எங்கே இருந்தோம், யாரோடு பார்த்தோம் என்பதைப் பொருத்திப் பார்த்து நினைவுகளில் மூழ்குகிறார்கள். கைத்தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.

எல்லாக் காட்சிகளிலும் சச்சின் விளையாடுகிறார்; அல்லது நம்மோடு பேசுகிறார். சின்னத்திரையில் கண்ட இந்தப் பாணியை பெரிய திரைக்குக் கடத்திக் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். 

ஹீரோயிஸக் காட்சிகளும் உண்டு. ஆனால் எல்லாமே நிஜமாகவே நடந்து, நாம் பார்த்தவை. பங்கேற்ற முதல் டெஸ்ட்டில் முதல் போட்டியில் 15 ரன்களில் அவுட். அதே தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி. தோற்றால் பாகிஸ்தான் ஜெயிக்கும். டிரா செய்தே ஆகவேண்டிய கட்டாயம். முதல் போட்டியில் அவுட் ஆக்கிய அதே வக்கார் யூனுஸ் போட்ட பவுன்சர் சச்சினின் மூக்கைப் பதம் பார்க்க, ரெஸ்ட் எடுக்கச் சொல்கிறார்கள். 16 வயது குட்டிப்பையன் ‘ம்ஹும்’ என்று தலையசைத்துவிட்டு, தொடர்ந்து விளையாடி எடுத்த 57 ரன்கள் இந்தியாவைத் தோல்வியிலிருந்து காப்பாற்றுகிறது. தெரிந்த மேட்ச், தெரிந்த முடிவு ஆனாலும் அந்தக் காட்சி நமக்குள் அதிர்வலைகளை உருவாக்கி அலறவைக்கிறது.

ஓர் ஆதர்ச நாயகனுக்கே கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் நாம்.  படம்  முழுவதும்  அத்தனை லெஜென்டுகள் பவனிவருகிறார்கள். வார்னே, கங்குலி, ஷேவாக், தோனி, யுவராஜ் என்று எல்லாரும் வந்து சச்சினுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு பவுலர் தனக்கு எப்படியான பந்துகளைப் போடவேண்டும் என்று சச்சின்தான் தீர்மானிக்கிறார். “எனக்கு அவர்களிடமிருந்து எப்படியான பந்துகள் வரவேண்டுமோ, அதற்கு ஏற்ப முதலில் சில பந்துகளை எதிர்கொள்வேன். அதை வைத்து அடுத்தடுத்த பந்துகளை, அவர்கள் நான் நினைத்தபடியே போடுவார்கள்” என்கிறார் சச்சின்.

“சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்!”

ஷார்ஜாவில் செஞ்சுரி அடித்து, அணியை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்ற நாளில் அங்கே புயல் வீசியது. அது நிஜமாகவே சினிமாவுக்கான காட்சி. அதை அப்படியே காண்பித்திருக்கலாம். தவறிவிட்டார்கள். அதேபோல சச்சினின் முதல் செஞ்சுரி, முதல் ஒன் டே இவற்றையும் காணோம். 200 ரன் எடுத்ததை எந்த பில்டப்பும் இல்லாமல் கடக்கிறார்கள். இப்படிக் குறைகளில்லாமல் இல்லை.

15-வது நிமிடத்தில் வருகிறது அந்தக் காட்சி. சச்சினை, ரமாகாந்த் அச்ரேக்கரிடம் கூட்டிச் செல்கிறார் அண்ணன் அஜித். முதல் பந்தில் சொதப்புபவர், அடுத்த பந்தை எதிர்கொள்கிறார். சச்சினின் தற்போதைய முகம் க்ளோஸப்பில். கட். சின்ன சச்சினின் கூர்மையான பார்வை. கட். பவுலர் ஓடிவருகிறார். கட். அச்ரேக்கர் பார்த்துக் கொண்டிருக்கிறார். கட். சச்சினின் க்ளோஸப்.

அப்போது வருகிறது ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. `ஹே...ஹே...' என்று அவர் குரல் கூடவே ஒலிக்க, சச்சின் ஒரு ஃப்ரெண்ட் ஃபுட்டில் வைத்து, அந்தப் பந்தை ஸ்ட்ரெய்ட் டிரைவில் பவுண்டரிக்கு அனுப்புகிறார்.

அச்ரேக்கர் திரும்பி, அஜித்திடம் கேட்கிறார்: “உன் தம்பி பேர் என்ன சொன்னே?”

ஒட்டுமொத்த தியேட்டரும் கதறுகிறது: “சச்சின்ன்ன்ன்ன்ன்ன்... சச்சின்..!”

அந்த மாயம்தான் இந்தப்படத்தின் அச்சாணி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு