Published:Updated:

நிமிர்ந்து நின்ற தமிழர் கலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிமிர்ந்து நின்ற தமிழர் கலை!
நிமிர்ந்து நின்ற தமிழர் கலை!

வெ.நீலகண்டன், படங்கள்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவே ஒன்று கூட, ஒரு நாடகம் அரங்கேறியது. ஹரியானாவைச் சேர்ந்த  குனித்சிங்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டெபாஸ்ரீ சக்கரவர்த்தியும் கட்டியக்காரர்கள். ராஜஸ்தானைச் சேர்ந்த மகாதேவ்தான் விதூஷகன். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்திரா திவாரிதான் குறவஞ்சி. மாளவிகாவாக நடிப்பவர் தெலுங்கானாவைச் சேர்ந்த பாக்யஸ்ரீபயிற்சியளித்து, நாடகத்தை வடிவமைத்தவர், நமது பாரம்பரிய தெருக்கூத்துக் கலைஞர் புரிசை சம்பந்தம். இயக்கியவர் கர்நாடகாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அரங்கியல் கலைஞர் சிதம்பரராவ் ஜம்பே.

சென்னைக்கு இது புது அனுபவம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் சென்னைக்கு வந்து, தமிழகத்தின் தொன்மக்கலையான தெருக்கூத்தைக் கற்றுக் கொண்டு,  அதன் நுட்பத்தை  `மாளவிகாக்னிமித்ரம்' என்ற சம்ஸ்கிருத நாடகத்தில் கலந்து, `விதுஷாவின் விதூஷகன்' என்ற பெயரில்  இந்தியில் அறங்கேற்றம் செய்தார்கள். பெசன்ட் நகர், ஸ்பேஸஸ் அரங்கில் இரு நாள்கள் நடந்த இந்த நாடகம், மொழிச்சிக்கல் கடந்து அவ்வளவு உயிர்ப்பாக இருந்தது. 

நிமிர்ந்து நின்ற தமிழர் கலை!

டெல்லியில் இருக்கும் தேசிய நாடகப்பள்ளி தான் இந்தக் கலை ஒருங்கிணைப்பை ஏற்பாடு செய்திருந்தது. மத்தியக் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இது, ஆசியாவின் மிகச்சிறந்த நாடகப் பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது.  ஒவ்வோர் ஆண்டும் இந்தியா  முழுவதுமிலிருந்து 26 மாணவர்கள் இந்தப் பள்ளிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள். நடிப்பு, வடிவமைப்பு, இயக்கம் என மூன்று பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் மூன்றாண்டுப் படிப்பு. எல்லோரும் இந்தப் படிப்பில் சேர்ந்துவிடமுடியாது. நாடகப் பின்புலம் கொண்ட பட்டதாரிகள் மட்டுமே சேரமுடியும். குறைந்தது, ஆறு நாடகங்களில் நடித்திருக்க வேண்டும். லைட்டிங் தொடங்கி ஸ்கிரீன் டிசைனிங் வரை அரங்கக் கலையின் அத்தனை நுட்பங்களையும் தளும்பத் தளும்பக் கற்றுக்கொள்ளலாம். 

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மரபுக் கலைகள் ஒரு பாடமாக இருக்கின்றன. ஏதேனும் ஒரு மாநிலத்திற்குச் சென்று, 40 நாட்கள் அங்கே தங்கி, அம்மண்ணின் ஆதிக்கலைகளை பாரம்பர்யமான கலைஞர்களிடம் கற்று, அங்கேயே அதை நிகழ்த்திக் காண்பிக்க வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தைத் தேர்வு செய்திருக்கிறது தேசிய நாடகப் பள்ளி.
 
தமிழகத்தின் மூத்த கலைஞர்கள் பங்கேற்ற தெருக்கூத்துத் திருவிழாவோடு தொடங்கியது இம்மாணவர்களுக்கான பயிற்சி முகாம். தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் என பல்வேறு மரபுக் கலைகள் கற்றுத்தரப்பட்டன. தொடர்ந்து இந்த மாணவர்கள் மத்தியில் தம் குழுவோடு தங்கி  தெருக்கூத்தைக் கற்றுத்தந்தார் பாரம்பர்ய தெருக்கூத்துக் கலைஞர் புரிசை சம்பந்தம்.

பயிற்சியின் இறுதியில், இப்படியொரு தேசிய  நாடகத்தை மிகவும் மென்மையான கதையோட்டத்துடன், மெதுவாக நகரும் சம்ஸ்கிருத நாடகப் பாணியில் உக்கிரக் கலையான தெருக்கூத்தை உள்வாங்கி அற்புதமாக நடித்தார்கள் மாணவர்கள்.

`மாளவிகாக்னிமித்ரம்' காளிதாசர் முதன்முதலில் எழுதிய சமஸ்கிருத நாடகம். விதிஷா நாட்டு மன்னன் அக்னிமித்ரனுக்கும், நடனப்பணிப்பெண் மாளவிகாவுக்கும் இடையிலான காதல்தான்  கதை. மன்னனின் இரு மனைவிகள் அந்தக் காதலுக்கு இடையூறாக நிற்க, அவரது அந்தரங்க உதவியாளரான விதூஷகன், சில ஆலோசனைகள் சொல்லி இணைத்து வைப்பான். நகைச்சுவையும் காதலும் நிறைந்த அந்த நாடகத்தை தெருக்கூத்து வடிவத்துக்கு மாற்றினார்கள்.  உடை, மேக்கப் என ஒட்டுமொத்த அரங்கியல் வடிவமும் மாறி விட்டது. கூடவே, தெருக்கூத்தின் அடையாளப் பாத்திரங்களான கட்டியக்காரனும், குறவஞ்சியும்.
மாணவர்கள் எவரும் சாதாரணமானவர்கள் அல்லர். பெரிய பின்புலம் உண்டு எல்லோருக்கும். நாடகத்தின் உயிர்ப்புப் பாத்திரமான விதூஷகனாக நடித்த மகாதேவ்,  15 ஆண்டுகள் `போக் தியேட்டர்' என்ற புகழ்பெற்ற நாடக இயக்கத்தில் செயல்பட்டவர். 

``என் தியேட்டர் அனுபவத்தில் தெருக்கூத்துக்கு நிகரான ஒரு கலையைக் கண்டதில்லை.  பாடல், நடனம், வசனம் எல்லாவற்றையும் ஒருவரே சுமந்து, பார்வையாளர்களோடு நேரடியாக  இணையும் கலை. பரதமுனியின் நாட்டிய சாஸ்திரம் சொல்லும் சகல அம்சங்களும் தெருக்கூத்தில் இருக்கின்றன. இந்தக் கலையில் பெரும் பாரம்பர்யம் கொண்ட சம்பந்தம் குருஜியிடம் கற்றுக்கொண்டது பெரும் வாய்ப்பு...'' என்று நெகிழ்ந்து போகிறார் மகாதேவ்.

ஒரு காலத்தில் தெருக்கூத்தில் பெண்களே நடிக்க மாட்டார்கள். ஆண்கள்தான் பெண் வேடம் தரித்து ஆடுவார்கள். இப்போது சில   பெண்களும் அரிதாரம் பூசுகிறார்கள். ஆனால், கூத்தைத் தொய்வில்லாமல் நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லும் கட்டியக்காரன் வேடம் ஆண்களுக்கானதுதான். அந்த மரபையும் உடைத்தார்கள்.  இரண்டு கட்டியக்காரர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த டெபாஸ்ரீ சக்கரவர்த்தி என்ற பெண்ணும் ஒருவர்.

நிமிர்ந்து நின்ற தமிழர் கலை!

டெபாஸ்ரீ மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமான நடிகை. டி.வி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

`மாளவிகாக்னிமித்ரம்' நாடகத்தின் நாயகி தெலுங்கானாவைச் சேர்ந்த  பாக்யஸ்ரீ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஓர் ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றியவர்.

``ரிப்போர்ட்டர் வேலைக்கு மத்தியில நேரம் கிடைக்கிறப்போ நடிக்கிறதுண்டு. ஒரு கட்டத்துல, வேலையை விட்டுட்டு,  இதுதான் நம்ம எதிர்காலம்னு தேசிய நாடகப்பள்ளியில சேர்ந்துட்டேன். ஏற்கெனவே தெருக்கூத்து, தேவராட்டம், ஒயிலாட்டமெல்லாம் எனக்குக் கொஞ்சம் பரிச்சயமிருக்கு. தெருக்கூத்தைப் போலவே தெலுங்கானாவுல `புர்ரகதம்'-ன்னு ஒரு கலை இருக்கு. அதைவிடவும் கலர்ஃபுல்லாவும், உக்கிரமாகவும் இருக்கு தெருக்கூத்து...'' என்கிறார் பாக்யஸ்ரீ

``எனக்கும் இது புது அனுபவம்தான்'' என்கிறார் புரிசை சம்பந்தம். புரிசை தெருக்கூத்துப் பரம்பரையின் ஐந்தாம் தலைமுறைக் கலைஞர். உலக அளவில் தெருக்கூத்தைக் கொண்டு சென்று பிரபலமாக்கியவர்.
``கலை, மொழிகளுக்கு அப்பாற்பட்டது. பரிவர்த்தனைகளுக்கு இசையும் கலையே காலம் கடந்து வாழும். தெருக்கூத்தைப் பொறுத்தவரை அது மொழிகளால் வரையறுக்க முடியாத கலை. எல்லா மக்களுக்கும் மண்ணுக்கும் தட்ப வெப்பத்துக்கும் பொருந்திப்போகும். நம்மை அறியாமலே பாத்திரங்களோடு ஐக்கியப்படுத்திவிடும். ஏற்கெனவே நாடகப்பரிச்சயம்  இருந்ததால், இக்கலையை மாணவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொண்டார்கள். இதுமாதிரி ஒருங்கிணைவு கட்டாயம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்'' என்கிறார் அவர்.

``இந்தியாவின் முன்னோடி நடிப்புக் கலையான தெருக்கூத்தைப் பாரம்பர்ய அறிவும், உடல்திறனும் இருந்தால்தான் ஆடமுடியும். நீண்ட நெடிய வரலாறு கொண்ட கலை இது. இளம் கலைஞர்கள் தங்கள் உடல்மொழியை செப்பனிட்டுக் கொள்ளவும், அடவுத்திறனை வளர்த்துக் கொள்ளவும் தெருக்கூத்தை முழுமையாகப் பயில வேண்டும்'' என்கிறார் சிதம்பர ராவ் ஜம்பே.

தெருக்கூத்தைப்போல வண்ணமயமான, உணர்ச்சிமயமான நூற்றுக்கணக்கான கலைகள் தமிழகத்தில் உண்டு. அவற்றின்மீதும் கவனம் செலுத்த வேண்டும், தேசிய நாடகப்பள்ளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு