Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

#MakeNewBondsகரன் கார்க்கி

பெண்ணைவிட ஆண், வலிமையானவன்; எதையும் தாங்கும் மனத் திடம் உள்ளவன்; எதையும் செய்து முடிக்கக்கூடியவன் என்பது போன்ற பாசாங்கான வார்த்தைகளை, இந்த உலகம் எவ்வளவோ பொய்களை நம்புவதுபோல்தான் எப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையா? ஆண்-பெண் முரண்பாடுகள், முன்பைவிட தற்போது மிக அதிக அளவில் பெருகத் தொடங்கி, வேகமாக வளர்ந்திருப்பது ஏன்? உண்மையில், அது வளரவில்லை. ஆண்டாண்டு காலமாக இருந்தது, அமுங்கிப் புதைந்துப் புழுங்கியது, இப்போதுதான் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது.

கல்யாணமான தினத்தில், என் மனைவியிடம் எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அதில் ஒன்று என் கவிதைகளை அவளிடம் சொல்லி, கருத்துகள் கேட்பது.  ஆனால், சமூகம் எனக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தது. உறவுக்காரப் பெண்களின் கேலியும் சிரிப்புமாக, சிரிப்பும் கிசுகிசுப்புமாகப் பலகாரங்களுடன் அறைக்கு வந்த என்  மனைவியிடம், ஆண்-பெண் வாழ்க்கை குறித்து எப்போதோ  எழுதிய கவிதை ஒன்றைத் தந்து வாசிக்கச் சொன்னேன். அவள் வெறுமனே சிரித்துக்கொண்டிருந்தாள். வாசிக்கச் சொல்லிக் கெஞ்சும் அளவுக்குப் போய், மன்றாடவும் செய்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, அவளுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது என்பது. தமிழ் மட்டுமல்ல ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் என உலகின் எந்த மொழியையும் அவளுக்கு வாசிக்கத் தெரியாது என்பது. ஆனால், தமிழில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய நூறு பெண்களில் அவளும் ஒருத்தி.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

முதல் நாள் இரவு கடந்து, விடியற்காலையில் என் உறவுக்காரப் பெண்கள் (அம்மா, சித்தி, அத்தை) என் துணைவி மீது நிகழ்த்திய வன்கொடுமையான கேடுகெட்ட பரிசோதனைகள்தான் என்னை அதிர வைத்தன. கன்னித்திரை என்ற விஷயத்தையும், அது திருமணத்துக்கு முன்பு கிழிபடாமல் இருந்ததா என்பதையும் அவர்கள் பரிசோதித்துத் தெரிந்து திருப்தியடைந்தனர். வெள்ளைத் துணியில் உள்ள குருதிக்கறையை வைத்து அதைத் தீர்மானிக்கிறார்கள். ஒருவேளை குருதிக்கறை இல்லையென்றால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகும்? வாழ்நாள் முழுக்க அந்தப் பெண் குறித்து என்ன கருத்தை என் உறவுக்காரப் பெண்கள் கொண்டிருப்பார்கள். இவ்வளவுக்குப் பிறகு, அந்தப் பெண்கள் மீது புதுப்பெண் அன்பும் மரியாதையும் கொண்டிருப்பாளா... இல்லை பேய்களைப்போல பார்ப்பாளா?

என் கோபமெல்லாம், என்மீது அக்கறைகொண்டதாகக் கருதும் என் உறவுக்காரப் பெண்கள் மீதுதான். என்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

அம்மாவும் இதில் விதிவிலக்கல்ல. என்னோடு வாழ, பொதுமக்கள் முன்னிலையில் உறுதியெடுத்துக்கொண்டவளின் கன்னித்தன்மையைச் சோதிக்கும் இவர்கள், அவளுடைய கல்விகுறித்து எப்போதும் சிந்தித்ததில்லை. அவளோடு இணைந்து வாழும் அளவுக்கு எனக்கு உடல் தகுதி இருக்கிறதா என யோசித்ததில்லை. இருவருக்கும் இடையிலான குணநலன்கள் பொருந்துகின்றனவா என ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. இவற்றில் எதைச் சரி செய்ய வேண்டும் என்ற எந்த அறிவுமே இல்லாமல், பல கனவுகளோடு மணமாகி வந்த அவளை வீட்டுக்குள் நுழையும்போதே துடைப்பானால் பெருக்கவும், படியை எத்தி உதைத்துத் தள்ளவும், விளக்கேற்றவும் சொல்லும் இவர்கள்தான்; தன் மகனோடு இரவைக் கழிக்கப் படுக்கையறைக்கு பூ அலங்காரம் செய்து மணமூட்டி வாழ்த்தி அனுப்பும் இவர்கள்தான் விடிந்த பிறகு, அவளது வெள்ளைப் புடவையில் குருதிக்கறையைத் தேடும் கேடுகெட்ட அசிங்கமான ஆய்வைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

வெள்ளை உடையில் குருதிக்கறை இல்லாமல் போனால், அந்தப் பெண்ணைத் திருப்பி அனுப்பிவிடுவார்களா அல்லது அவளை வாழ்நாள் முழுவதும் `குற்றவுணர்ச்சி’ விலங்கை மாட்டிச் சித்ரவதைக்கு ஆளாக்குவார்களா? `அர்த்த மோனங்கள்’ என்ற மாக்ஸிம் கார்க்கியின் புதினத்தில், இதே சடங்கு விவரிக்கப்பட்டிருக்கும். திருமணத்துக்கு முன்பே அந்த நாவலை நான் வாசித்திருந்ததால், அந்தச் சடங்குமுறை என்னைப் பதற்றமடையச் செய்தது.

ஆனால், இவ்வளவு அறிந்தபிறகும், நியாய உணர்ச்சி கொப்பளிக்கும் நான்கூட வெறுமனே ஒரு சராசரி ஆண்தான். மனைவிக்கு காபி போட்டுத் தரும் வழக்கமோ, உடல் நலமற்றச் சூழலில் வேலையைப் பகிர்ந்துகொள்ளும் ஆளோ கிடையாது. லேசான காய்ச்சல் எனக்கு வந்தால், நான் ஓய்வாகப் படுத்துக்கொள்கிறேன். உடனே துணைவியார், முருங்கைச்சாறோ அல்லது சுடுநீரோ ஏதோ ஒன்றுடன் கை கால்களை அழுத்திவிடுவது போன்ற ஏதேனும் ஒன்று மிக இயல்பாக நடக்கிறது. அதே அவளுக்கு உடல்நிலையில் சிக்கல் ஏற்படும்போதோ, சின்ன ஓய்வு. மற்றபடி எல்லா வேலைகளும் நடந்தபடியே இருக்கின்றன.

அதிகாலையில் தொடங்கி இரவு 10 மணி வரை ஓயாத வேலை. அதைப்பற்றி எந்த அலுப்புமே இல்லை. பணச்சிக்கலின்போது மட்டுமே முணுமுணுப்பு. மற்றபடி ஒன்றுமில்லை. `உனக்கு உடல்சோர்வா? நான் துணி துவைக்கிறேன்’ என்ற வார்த்தைகளையே எனக்குச் சொல்லத் தோன்றாத குற்றவுணர்ச்சியோடு இதை எழுதுகிறேன். அவளுக்கு மட்டுமே இந்த வேலைகள் என்கிற நிர்பந்தம் எப்படி? ஆணுக்கு எப்போதும் கூடுதல் சலுகைதான். அதைக் குற்றவுணர்ச்சியோடு அனுபவிப்பது ஒரு வகை. இது சலுகை அல்ல. ஆண் என்பவன் இப்படியும், பெண் என்பவள் அப்படியுமாக இருப்பதே தர்மம். பாரம்பர்யம், பண்பாடு என்கிற கேடான பண்பு நம்மில் இல்லை எனச் சொல்ல முடியுமா?

என் அளவில் உறுதியாகச் சொல்ல முடியும். என் குடும்பம் குடும்பமாக இருக்க ஒற்றைக் காரணம், என் துணைவியார் மட்டுமே. அந்த நுட்பமான பணியை என்னால் ஒருபோதும் செய்ய முடியாது. அதற்காக `நான் அவளுக்குக் கைகளைக் கூப்பி நன்றியுடன் வணக்கம் சொல்வேன்’ என்று பல காலமாக எனக்கு நானே சொல்லிக்கொண்ட காலம் இருந்தது. பிறகு, உண்மையில் அது ஒரு பாசாங்கான மனநிலை என்பதைக் கண்டுகொண்டேன். காரணம், அது வெறுமனே சோம்பல்மிக்க, லாபமிக்க ஒரு சரணாகதி.

என் எட்டு வயதிலிருந்து பதினாறு வயது வரை அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால், வீட்டுவேலைகளை நானேதான் செய்வேன்.  விடியற்காலை குழாயடிக்குப் போய் தண்ணீர் கொண்டுவருவது, வீட்டிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள ஆவின் பூத்திலிருந்து பால் வாங்கி வருவது, சோறு வடிப்பது, சாம்பார் வைப்பது, அப்பளம் பொரிப்பது, ரேஷன் கடைக்குப் போய் பொருள் வாங்கி வருவது உள்பட எல்லாமே என்னுடைய வேலைகள்தான். சில வேளைகளில் என் தாய்-தந்தையரின் உடைகளைத் துவைப்பது, அம்மியில் தேங்காய், மிளகாய், மஞ்சள் அரைப்பது, சாமியறையில் உள்ள பித்தளை உருப்படிகளைத் தேய்த்துக் கழுவி, சாமி சொம்பில் கார்ப்பரேஷன் குழாயில் கை படாமல் தண்ணீர் பிடித்துவைத்து, வெள்ளிக்கிழமை காலையில் அதைக் கூரையில் ஊற்றுவது... இதையெல்லாம் பார்க்கும் பக்கத்து வீட்டு ஆள்கள் ‘பாரு, சகுந்தலா பையன் எவ்ளோ பொறுப்பா இருக்கிறான்’ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.

அம்மாவுக்கு உடல் நலமடைந்ததும் எனக்கு விடுதலை கிடைத்தது. அந்த இடத்துக்கு என் தங்கைகள் வந்துவிட்டனர். நிலைமை இப்படியிருக்க, மணமான புதிதில் என் துணைவியாருக்கு உதவ நான் தண்ணீர்க் குடத்தைத் தூக்கி வருவதைப் பார்த்த என் உறவினர்  `கல்யாணமாகி பொண்டாட்டி வந்திருக்கிறா, ஆம்பளப்புள்ள நீ தண்ணி தூக்கிட்டு வர்றியே! இன்னாடா இதெல்லாம்..? இப்படியெல்லாம் செஞ்சீன்னா, உம் பெஞ்சாதி உன் தலைமேல ஏறி உக்காந்துடுவா. நாலு பேர் உன்னைக் கிண்டல் பண்ணுவாங்க. போ, அவளை வந்து தூக்கிட்டுப் போகச் சொல்லு’ என, என் உறவினர் வழியே சமூகத்தின் குரல் ஆணைப் பாதுகாத்து, அந்தத் தண்ணீர்க் குடத்தை அவள் மீது சுமத்தியது. அதைப்பற்றி அப்போது எனக்கு எந்த விதமான குற்றவுணர்வும்  எழவில்லை.  இப்படியாகத்தானே பெண் சுமக்கிறவளாக, ஆண் சுகம் காண்கிறவனாகத் தொடர்ந்து கட்டமைக்கப்படும் சமூகத்தில், உண்மையான அன்பினால் பகுத்தறிவால் மட்டுமே சுமத்தலும் பகிர்தலும் இருபாலருக்கும் சமமாக பாவிக்கப்படும்.

ஆண், தன் காதல் கதைகளை  எப்போதும் வெளிப்படையாகப் பேசுவதில் பெருமைகொள்கிறான். அது, அவனுடைய தனி உரிமை என எதன் பொருட்டு நியாயப்படுத்தப்படுகிறது? அப்படி ஒரு பெண், தன் முன்னாள் காதல்குறித்து தன் கணவனுடனோ, காதலனுடனோ பேசிவிட முடியுமா? ஆணுக்கு மட்டுமான கேடுகெட்ட சிறப்புச் சலுகைகள் வெளிப்படையானவை; பெருமைமிக்கவை; கூச்சமோ, வெட்க உணர்வோ அதற்குக் கிடையாது. கூச்சமும் அச்சமும் பெண்களுக்குரியன. ஆனால், அவர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்; கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற பாசாங்கான கேலிக்கூத்துகள் நொறுங்கித் தகர்ந்து விழத் தொடங்கியுள்ளன.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

மிகச் சமீபத்தில், என் தோழியின் வீட்டுக்குப் போயிருந்தேன். நான் அங்கு போய்ச் சேரும் முன்னே அங்கு வந்திருந்த இரண்டு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நாங்கள் நால்வரும் உணவருந்தி பேசிச் சிரித்து, பிறகு மாலை வேளையில் கடற்கரைக்குப் போய் உலாவி,  இலக்கியக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, இரவு வீடு திரும்பி உண்டு, உறங்கி, மறுநாள் அவரவர் வேலைக்குக் கிளம்பிப் போகிறோம். மீண்டும் இதேபோல் சந்திப்போம். ஆனால், எங்களுக்கான புரிதல்கள் எங்களுக்கு மட்டுமே. வெளியிலிருந்து எங்களைக் காணும் ஆணின் கண்களில் மட்டுமல்ல, பெண்ணின் உள்ளத்திலும் எழும் விதவிதமான கற்பனைக்கோளாறுகள், கேள்விகள் பற்றி நான் சிந்திப்பதுண்டு.

அதனாலேயே என் தோழியின்மீது நான் பெருமிதம்கொள்கிறேன். காரணம், அவர்தான் எங்களை இயல்பாகப் பழகவும், அதில் உள்ள சமூக உளவியல் சிக்கல்களைக் கடந்து வெளிவரவும் அனுமதிக்கிறார். இந்த நட்பு உளப்பூர்வமாக மேலும் வளர, நாங்கள் ஆண்-பெண் வலுகாட்டும் ஆதிப்பண்பு குறித்து வெட்கம்கொள்கிறவர்களாக இருக்கிறோம். இந்தப் பண்பை எங்களுக்குத் தருவது எது? நாங்கள் கலை, இலக்கியத்தோடு தொடர் புடையவர்கள் என்பதா? பகுத்தறிவாளர்கள். பெண், ஆண் சமத்துவம் குறித்த கவனமா, ஒட்டுமொத்த மானுடம் குறித்த அரசியல் புரிதலா... எது? இதற்கான விடை, என் தோழிக்குத் திருமணமாகப்போகும் முதல் நாளிலேயே எனக்கோ என் நண்பர்களுக்கோ கிடைத்துவிடும். ஆனால், அதற்கும் புரிதலுள்ள மணமகன் எங்கள் தோழிக்குக் கிடைக்கவேண்டும். நம் சமூகத்தில் புரிதலுள்ள ஆண்கள் இல்லாமலில்லை. ஆனால், ஒரு சமூகத்துக்கே அந்தப் புரிதல் வரவேண்டும்.

அன்பினால் விளைந்த சகிப்புத்தன்மையைப் பலவீனமாக்கி, அதையே நசுக்கிச் சாறு எடுத்துச் சுவைக்கும் கலாசாரப் பின்புலம் நமக்கு. இறந்தவனின் உடலோடு துயரத்திலிருக்கும் அவன் மனைவியையும் சேர்த்து எரித்து `இதுதான் பண்பாடு, இதுதான் கலாசாரம்’ எனக் கூவிய சமூகத்தில், நாம் பேசவேண்டியவை ஏராளம் உள்ளன. சில வேளைகளில் பெண்களே இதுபோன்ற அநீதியான சடங்குகள் குறித்து நியாயம் பேசுகிறவர்களாக ஆக்கப்பட்டிருக் கிறார்கள்.

நான் அறிந்தவரையில் ஆணும் பெண்ணும் பதின்வயதுவரையிலும்கூட மிகத்தூய மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். பிறகுதான் அவர்கள் உள்ளத்திலே ஊற்றெடுக்கும் இயல்பான அன்பையும் நட்பையும் சிதைக்கும் படியான பலவிதமான அறமற்ற ஆதிக்கப் பண்புகள், கேடுள்ள சாயங்கள் ஏற்றப்படுகின்றன.

என் பதின்வயதின் கடைசி இரண்டு ஆண்டுகள், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி  நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நான் வாசித்த புத்தகங்களுக்கு இணையாக,  என் வாழ்வைப் பயின்ற நாள்கள் அவை. 100 பெண்கள் அடங்கிய தையல் பிரிவில், இயந்திரங்களைப் பராமரிக்கும் வேலை. அந்த நூறு பெண்களில், குறைந்தது 96 பேர் என்னோடு நட்பாகப் பழகக்கூடியவர்கள்.

அந்த 96 பெண்களும் காட்டிய கருணையும் அன்பும், எனக்குக் கற்றுத்தந்தது ஏராளம். முதன்முதலில் பெண்கள் யூனிட்டுக்கு என்னை நியமித்தபோது, மிரண்டுபோய் நின்றேன். `தையல் இயந்திரத்தில் எப்போது பிரச்னை வருமோ, எப்போது அழைப்பார்களோ?’ என அஞ்சுவேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கமான ஒருநாளில் உடைந்த ஊசி ஒன்றை மாற்ற முயன்றபோது ஸ்குரூ டிரைவர் என் உள்ளங்கையில் பாய்ந்துவிட்டது. ரத்தம் கொப்பளிக்க, நான் கைகளை உதற, தையல் இயந்திரத்துக்குரிய அந்தப் பெண் என் காயத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டு கண் கலங்கிய அந்தத் தருணம், என் பதின்வயதுக்குரிய லேசான பதற்றம், கசடு எனப் பலவற்றை எரித்துச் சாம்பலாக்கியது.

அந்தக் காயம் ஆறும்வரை விபூதி கொண்டு வந்து தருவார். நான் மறுத்தாலும் கண்டிப்போடு பூசிவிடுவார் அந்தப் பெண். அந்த அன்புக்கு ஈடாக எதைச் சொல்வது? அந்தக் காலகட்டத்தில் நான் அலெக்ஸாந்தர் குப்ரின் படைப்புகளிலும், சிங்கிஸ் ஐத் மாத்தவ் படைப்புகளிலும் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தேன். வ.ரா-வின் `சுந்தரி’யையும், ரவீந்திரநாத் தாகூரின் `கோரா’வையும் வாசித்த நாள்கள் அவை. அந்தக் காலகட்டத்தில் கட்டுச்சோற்றுடன் பணிபுரியச் செல்வதாகக் கருதவில்லை. பயில்வதற்குப் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதுபோல் கருதிய நாள்கள் அவை. என் தாய் கற்றுத்தந்ததைவிட ஏராளமானதைக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் போல்தான் அந்தக் குறைந்த கூலிக்கு உழைத்துக்கொண்டிருந்த ஏழைப் பெண்களைக் கருதுகிறேன்.

என் அளவில் என்னைச் செப்பனிட்டவர்கள்; என்னை இலகுவாக்கியவர்கள்; என்னுள் கனவுகளை வளர்த்தவர்கள்; என் கண்களில் கண்ணீரை உண்டாக்கியவர்கள்; என்னை எழுதத் தூண்டியவர்கள், எழுதுகிறவன் எனச் சுட்டிக்காட்டியவர்கள்... அன்பால் எதுவும் சாத்தியம், அன்பால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் எனக் கற்பித்தவர்கள் பெண்கள்தான். ஆளுமையுள்ள பெண்ணை, ஆணுக்கு நிகரானவள் எனச் சொல்வதைவிட பாசாங்கான கெட்ட வார்த்தை ஏது?

இன்று `ஆண் இல்லாத உலகில், பெண்களால் எதுவும் சாத்தியம்’ என அறிவியல் நிரூபித்திருக்கிறது. நாளை ஆண் துணையின்றி பெண்ணுடலில் இருந்து பெறப்பட்ட திசுவைக் கருவாக்கி, அவளே பெற்றெடுக்கும் `க்ளோனிங் முறை’ சாத்தியம்.  ஆனாலும், பெண்களற்ற ஆண்களின் உலகமோ, ஆண்களற்ற பெண்களின் உலகமோ கற்பனைக்கெட்டாத கொடூரமானது. சக மனு‌ஷியின்மீது அன்பைச் செலுத்துவதும், செலுத்தப்படும் அன்பை அங்கீகரிப்பதுமான சமூகமாக மாறுவது ஒன்றே ஆண்-பெண் உறவின் சிக்கல்களைத் தீர்க்கும் சாத்தியமுள்ளது.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்..

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

`எப்போது நிராகரிப்பாய் என்னை?’
எனக் கேட்டாய்.
`எப்போது வெறுப்பாய் என்னை?’
எனக் கேட்டாய்.
சற்றும் யோசிக்காமல் சொன்னேன்,
`நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.
நீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு.’

- மனுஷி

முத்தங்களின் கடவுள் கவிதைத் தொகுப்பிலிருந்து

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

`நாம் ரெண்டு பேரும் `வாடி, போடி’னு பேசிக்கலாமா?’ என்று அவர் கேட்டதும், எனக்கு மகிழ்ச்சியில் ஒன்றும் புரிபடவில்லை.

பல விஷயங்கள் பல சைகைகள் எங்களுக்குள் ஒன்றாக இருந்தன. இருவருக்கும் உள்ள ஆசைகள், தேவைகள், அவமானங்கள், வலி, தனிமை, எல்லாமே ஒன்றுபோலவே இருந்தது தெரிந்தது.

- `லிவிங் ஸ்மைல்’ வித்யா -  `நான் வித்யா’ நூலில் இருந்து

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

அன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்

கணவனின் அன்பற்ற அதிகாரத்திற்குக் கட்டுப்படாமல் வேறொருவனின் அன்புக்குக் கட்டுப்பட்டுத் தடுமாறி பின் அந்த வாழ்வும் இனிக்காமல், மரணத்தை விரும்பி ஏற்கும் அன்னாவின் வாழ்வு மூலம் ஆண் பெண் உறவுபற்றி பல நுட்பங்களைப் புரியவைக்கிற சிறந்த நூல்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

தாய் - மக்ஸிம் கார்க்கி

ஆண்-பெண் நட்புறவுச் சமூகம் குறித்த அவர்களின் பார்வையினூடே, அரசியல் பங்கெடுப்புகளில் அவர்களது புரிதல். அந்தப் புரிதலுக்குக் காரணமான அரசியல் எனப் பல விஷயங்களை அலசும் நுட்பமான படைப்பு.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 39

தமிழகத்தில் அடிமை முறை

- ஆ. சிவசுப்பிரமணியன்


பெண்ணடிமைச் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு குரூரமாக ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள். இந்தச் சமூகத்தில் சடங்கு சம்பிரதாய முறைகளால், நாசமாகும் பெண்கள் குறித்து, ஆதாரங்களுடன் மனம் பதைக்க எடுத்துரைக்கும் நூல்.