Published:Updated:

ஒரு ‘செல்’ உயிரி!

ஒரு ‘செல்’ உயிரி!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு ‘செல்’ உயிரி!

தமிழ்பிரபா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஒரு ‘செல்’ உயிரி!

தமிழ்பிரபா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஒரு ‘செல்’ உயிரி!
பிரீமியம் ஸ்டோரி
ஒரு ‘செல்’ உயிரி!

`ஒரு செல் உயிரி அமீபா’ எனச் சொல்லிவந்த காலம் போய், அமீபாவைத் தவிர அனைவரும் ஒரு ‘செல்’ உயிரியாக ‘தலைகுனிந்தபடி’ வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆறு மாதங்களுக்குமேல் ஒரே செல்போனை வைத்திருந்தால், இன்னும் ஒருபடி தலைகுனிந்து வாழும் சூழல் நிலவுகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய கேட்ஜெட்களை வாங்குவதற்குச் சொகுசு இல்லையென்றாலும், அதைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கவில்லை என்றால், கணக்கு வாத்தியார் கடைசி இருக்கை மாணவனை நடத்துவதுபோல் நடத்துகிறார்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களை மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு புழங்கும் பயனீட்டாளர்களை எல்லாம் ‘பழங்குடிகள்’ என்ற  வகைக்குள்   வேகமாகத்   தள்ளிவிடுவார்களோ என்கிற அச்சம் மனதைக் கவ்வுகிறது.

குறைந்தபட்சம், பரவலாகப் பேசப்படும் அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து நம் பங்களிப்பை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தை, சுற்றம் உருவாக்குகிறது.

`உங்ககிட்ட அந்த App இல்லையா?’ என்பதை, `உங்கிட்ட மானம் இல்லையா?’ என்கிற தொனியில் கேட்டால், என்னதான் செய்வது?

ஒரு ‘செல்’ உயிரி!

என் வீட்டு 4G வேகத்துக்கு அவற்றை எல்லாம் தரவிறக்கம் செய்து முழுமையை அடைவதற்குள் காது முடி நரைக்கும்வரைப் பொறுமை காக்கவேண்டியிருக்கிறது. இந்த வேகத்தில் ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்து முடிப்பதற்குள் குறிப்பிட்ட படத்தைத் திரையரங்கிலிருந்து நீக்கிய அவலம் உங்களுக்கு நடந்திருக்கிறதா?

அந்தந்த நேரத்தில் பிரபலமாக இருக்கும், தேவைப்படும் என்று தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன்கள் எல்லாம், திருமணத்துக்கு வரும் பரிசுப்பொருள்கள் மாதிரிதான். பின்னாளில் அவை என்ன ஆகும், எங்கு இருக்கும் என்ற அக்கறையின்றிக் கணநேர மகிழ்ச்சிக்காகத் தரவிறக்கம் செய்கிறோம்.

எதுவாகினும், அந்த அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து `நானும் ரௌடிதான்’ என ஜீப்பில் ஏறிய தருணத்தை அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான்.

`மகிழ்ச்சி’ என்கிற பொருள் காலத்திற் கேற்றார்போல் தன் முகங்களை மாற்றிக் கொள்கிறது. சமீபத்தில் வந்த `FaceApp’யைப் பயன்படுத்தி முக ஜோசியம் பார்த்த நண்பர், தன் அழகான பெண்ணுருவத்தைக் கண்டு மகிழ்ந்தார். சில வருடங்களுக்கு முன்பு ஆண்குணம்கொண்ட ஒருவர், இத்தகைய ரீதியில் மகிழ்ச்சியை அடைவதை எண்ணிப் பார்த்திருக்க முடியுமா?

வெவ்வேறு துருவங்களில் வாழ்பவர்கூட ஒன்றிணைந்து பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும் ‘Smule’ அப்ளிகேஷன், தன் குரல்வளம் குறித்து நிறையப் பேருக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையை உடைத்துவருகிறது. எஸ்.பி.பி-யும் ஜானகியும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்தவாறு அதிலேயே தன்னை ஒப்புவிப்பதும் நோட்டிஃபிகேஷன் வருகிறதா எனப் பார்ப்பதும் தேசிய வியாதியாகப் பரவிவருகிறது. ஒரு செல் பத்தாது என்று இரு செல் உயிரிகளான க்ளாமிடோமோனஸ்களையும் அதிகம் காண முடிகிறது. இன்னும் சிலர் பாதிரியாரும் பைபிளுமாக இருப்பது மாதிரி டேப்லெட்டுடன் வந்து சமூகத்தை ஆசீர்வதிக்கிறார்கள்.

பேசுவதற்கென்றே உருவாக்கப்பட்ட களமான காபி ஷாப் போன்ற இடங்களிலிருந்த உயிர்ப்பு புதைக்கப்பட்டுவிட்டது.

நோட்டிஃபிகேஷன் வந்த உடனே அதைப் பார்த்துவிடத் துடிக்கும் ஆவேச மனம், தனக்கு எதிரில் உயிருடன் நின்று பேசுவர்களை உண்மையாகப் பொருட்படுத்த மறுக்கிறது. ஆடு, மாடு, பூனை போன்ற ஜீவராசிகளுடன் உரையாடும்போது இந்த அவமானம் நிகழ்வதில்லை. நாம் பேசுகையில் கேட்பதுபோல பாவனை செய்து நொடிக்கு ஒருமுறை அலைபேசியைத் தடவிப்பார்க்கும் வேலைகள் அவற்றிடம் இல்லை.
செல்போன்களில் பயன்பாடு அதிகரிக்கும் அதே சமயத்தில், அவை தனிமனித உரையா டல்களின் ஆழத்தையும் குறைத்துவருகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் கமென்ட்களுக்குப் பதில் சொல்ல இருக்கும் முனைப்பு, நேரில் பேசுபவர்களுக்குப் பதில் சொல்வதில் இல்லை. அப்பாவும் அம்மாவும் வந்து எதையோ கேட்கையில், செல்போனை நோண்டியபடியே அலட்சியமாக உரையாடிய இளைஞர் கூட்டத்துக்குச் சவாலாக, தற்போது அப்பாவும் அம்மாவுமே செல்போனில் மூழ்கிவிட்டார்கள்.

என் நண்பனின் அப்பா, ஏழு வாட்ஸ்அப் குரூப்களுக்கு நிர்வாகி. குடும்ப விஷயங்களில் அவர் வெளிப்படுத்தும் பரிவுகளும் கண்டிப்புகளும் தேய்ந்துபோய், forward மெசேஜ்களின் சமூக நடப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

பெரியவர்கள் மட்டுமின்றிக் குழந்தைகளுக்கும் நாம் கேட்ஜட்டுகளை அறிமுகப்படுத்திவிட்டோம். இப்போது. கதை சொல்லிகள் எல்லாம் அழிந்துவரும் உயிரினங்கள்.
 
சிறுவயதில் இப்படியே மொபைலும் கையுமாகப் பழக்கப்படும் பிள்ளைகள், நாளடைவில் தெருவில் சென்று விளையாடும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாமல் போய்விடுகிறார்கள். ஏழாங்கல், ஐஸ்பாய், கல்லா... மண்ணா..., முதுகு பஞ்சர் போன்ற ஆட்டங்களை நாம் புழுதி பறக்க ஆடுகையில், எவ்வளவு எதிரிகளையும் நண்பர்களையும் சம்பாதித்திருப்போம். நம் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பைத் தருவதில் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறோம்?

கேட்ஜட்டுகளின் தந்தையான ஸ்டீவ் ஜாப்ஸிடம் ‘உங்கள் பிள்ளைகள் ஐ பேடுகளை விரும்புகிறார்களா?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, `என் குழந்தைகளை அதைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும், அதை ஒரு எல்லைக்குள்ளேயே வைத்திருக்கிறோம்’ என்றார்.

அவர் மட்டுமல்ல, சிலிகான் வேலியில் இருக்கும் ஆப்பிள், கூகிள் உள்பட பெரும் ஐடி நிறுவனங்களின் உயர்நிலைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் தங்கள் குழந்தைகளைத் தொழில்நுட்ப வாசனையே இல்லாத பள்ளிகளுக்கே அனுப்புவதைச் சில ஆண்டு களுக்கு முன்பே தொடங்கிவிட்டார்கள். அங்கே ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர்கூட இருக்காது. மேலும், வீட்டில் டிவி பார்ப்பதையும், எலெக் ட்ரானிக் பொருள்களைப் பயன் படுத்துவதையும்கூட அந்தப் பள்ளிகள் ஊக்கப்படுத்துவதில்லை.

குழந்தைகளுக்கு டெக்னாலஜி தேவையில்லை. நேரடியான செய்முறைப் பயிற்சிகளே அவர்களை வளப்படுத்தும் என்பதை மேல்நாட்டினரே உணர்ந்து செயல்படும் சூழலில் ‘ரெண்டு வயசுல எம் புள்ள என்னமா கேம் ஆடுறான்!’ என்று நாம் பெருமையடித்துக்கொள்வதில் மேல்நாட்டினருடன் இருக்கும் முரண்களை விவாதிக்க மறுப்போம் என்றால், கற்றல் மற்றும் பார்வைக் குறைபாடுகளால் க்ரியேட்டிவிட்டி என்பதற்கு அர்த்தம் தெரியாத கூட்டமாகவே நம்முடைய அடுத்த தலைமுறை வளரும் என்பதில் சந்தேகமில்லை.

இதுதவிர, இணையத்தில் சமூக ஆவேசங்கள் தூள்பறக்கும் இந்தக் காலகட்டத்தில், குடும்ப உறவுகளைப் பேணுவதில் நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறதா?

பயணங்களின்போது சகபயணியிடம் பேசியபடியே தூரம் கடந்த நாள்கள் நாஸ்டாலஜியாக மாறிவிட்டன. ‘ரயில் சிநேகிதம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.  

எல்லா தொழில்நுட்பங்களிலும் சாதக, பாதகங்கள் இருக்கும். ஆனால், அதில் உள்ள பாதகங்களைப் பற்றியும் அவற்றால் நாம் இழப்பவற்றைப் பற்றியுமான நினைவூட்டல்கள் இருந்தால்தான், அவற்றைக் கையாள முடியும்.

நவீன தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் தனிமை உணர்வைக் குறைத்துவரும் அதேசமயம், நம்மை அங்கேயே அதிகம் புழங்கவைத்து ஒருவிதமான மனஅழுத்தத்தில் எப்போதும் வைத்திருப்பதை உணர்ந்தும் அதிலிருந்து வெளியேற முடியாத பெருங்கூட்டத்தை அது உருவாக்கிக்கொண்டிருக்கிறது. `பாட்டி இறப்புச் செய்தி போய்ச் சேர்ந்ததா’ என்ற கவலையைப் போக்க உதவிய அதே செல்போன்தான் ஊதுவத்திப் புகையில் படுத்திருக்கும் பாட்டியின் பிணத்துடன் செல்ஃபி எடுக்கும் நிலைக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

மனநோயாளிகள் கால்களில் சங்கலி பிணைக்கப்பட்டுச் சுவரைத் தேய்த்தபடி ‘யங் யங்’ என்று கத்திக்கொண்டிருப்பவர்கள் என்கிற பிம்பம் எல்லாம் உடைத்தெரியப்பட்டுவிட்டன. மனநோயாளிகள் நவீனமடைந்துவருகிறார்கள். அவர்களின் வைத்தியமும் அவர்கள் கையிலேயே இருக்கிறது என்பதை உணரும் நாள் சீக்கிரம் வரும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism