Published:Updated:

பித்தன்களின் ‘ஆலாபனை!’

பித்தன்களின் ‘ஆலாபனை!’
பிரீமியம் ஸ்டோரி
பித்தன்களின் ‘ஆலாபனை!’

கவிஞர் அறிவுமதி, ஓவியம்: பாரதிராஜா

பித்தன்களின் ‘ஆலாபனை!’

கவிஞர் அறிவுமதி, ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
பித்தன்களின் ‘ஆலாபனை!’
பிரீமியம் ஸ்டோரி
பித்தன்களின் ‘ஆலாபனை!’

திக் குகை ஓவியங்களின் பச்சிலை வண்ணங்களில் தமிழ் பிழிந்துவந்து நமக்குக் கவிதைகள் தந்தவர்... அய்யா அப்துல் ரகுமான்.

வேட்டைக் குணாம்சங்களால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைக்கும் மேய்ச்சல் குணாம்சங்களால் பண்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே கரை திணறப் பெருகிய வெள்ளமே... பாட்டாய், பேச்சாய், கவிதையாய், உரைநடையாய் வாய்த்தது.

மேய்ச்சல்காரனின் பாட்டும் மேய்க்காதவனின் உணவானது போல், உழைத்தவரின் மொழி உழைக்காதோரின் கவிதையானது.  கட்டுரையானது.

பித்தன்களின் ‘ஆலாபனை!’

அதற்குள் நுழைந்து சிலம்பம் சுழற்றித் தமிழை மீட்டவன் பாரதி. அவன்தான் உழைப்பவர்தம் சந்தங்களைத் தேடித்தேடி, உழைப்பவர்தம் வியர்வையின் கவுச்சிகளைத் தேடித் தேடித் தமிழ் செய்தவன்.

மக்கள் தமிழை மீட்டெடுத்து மக்களிடம் சேர்ப்பித்தவன் பாரதிதான். அதன் சூட்சும வெற்றியைப் புரிந்துகொண்டு வழிமொழிந்தவன் பாரதிதாசன்.

இவர்களுக்குப் பிறகான காலகட்டத்தில்தான் கண்களுக்கானத் தமிழ் காதுகளுக்கானத் தமிழாகிறது. ஆம்... அகவல் தமிழ் அடுக்குமொழித் தமிழாகிறது.

உழைக்கும் மக்களின் உள்பதுங்கியிருந்த தமிழ் அடவுகளை அந்த அடுக்குமொழிகளே உசுப்பி எழுப்பின.

அதன் அடுத்த வெற்றியாகத்தான் கவியரங்கக் கவிதைகள் வாய்க்கின்றன. கண்களுக்கான தமிழையே சிற்றிதழ்கள் தூக்கிப்பிடிக்கின்றன என்பதை உணர்ந்த கவிக்கோ அதற்காகத் தூக்கிப் போட்டதுதான் `பால்வீதி'.
மலையடிவாரங்களிலிருந்து எழும் பனிப்புகையுள் தொலைந்த காடுகளுக்குள் கேட்கும் அருவிச் சத்தமாய் மிரட்டும் அதன் அர்த்தம் கேட்க அவரிடமே வந்தவர்கள் பலர்.

அதே காலகட்டத்தில் காதுகளுக்கான கவிதைகளாய் அவர் தந்ததுதான் நேயர் விருப்பம்.

கையடக்கத் தாள்களில் எழுதி வைத்துக் கொண்டு கவியரங்க மேடைகளில் அவர் படிக்கப் படிக்க எழுந்த கைத்தட்டல்களின் பேரோசை அடங்க அவ்வளவு நேரமாகும்!

அவற்றைக் கண்டுமகிழ்ந்த ஆனந்த அனுபவத்தில்தான் கவியரங்கத் தாயாகிய கலைஞர் ஒருமுறை, ``வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்று சொன்னார்.

வாணியம் பாடி இசுலாமியக் கல்லூரியில்

கவிராத்திரி முடிந்த இரவுகளில்

பேராசிரியர்களும் மாணவர்களுமாய்
விருந்தினர் இல்லத்தில் குழுமிக் கிடப்போம்.

அய்யா... அதற்குள் நுழைந்து கேலியும்

கிண்டலுமாய்ப் பேசி எங்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்.

இரவு ஒரு மணிக்குத் தேநீர்
குடிக்கலாம் என்று அழைத்துப்
போய் இடியாப்பம், புரோட்டோ,
பாயா, பிரியாணி எனச்
சாப்பிடவைத்துத்தான் எப்போதும்
எங்களை
அழைத்து வருவார்.

குடியாத்தம், திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர், சோலையார்பேட்டை எனப் பல்வேறு ஊர்களுக்கும் எங்களை இப்படித்தான்
பேருந்துகளில் அழைத்துப்போய்
இலக்கிய மேடைகளில் கவிதைகளைப் படிக்க வைத்து
அழகு பார்த்து அழைத்து வருவார்.

பெரியோர்... இளையோர் என எப்போதும் எவரையும்
பிரித்துப் பார்த்தவரில்லை
அய்யா.

அண்ணன்கள் மீரா, சிற்பி, இன்குலாப், மு.மேத்தா, அப்துல்காதர் போன்றவர்கள் கூடியிருக்கும் வேளைகளிலும்
அவ்வளவு கள்ளங்கபடமற்ற
நட்போடு சிரிக்கவைத்து அழகு பார்ப்பார்.

அண்ணன் இக்பால் வீட்டிற்கு
வருகிறபோது சிறு குழந்தையான
மகள் இராணியிடமும் அதே
தொணியில்தான் பேசி அதனை வம்புக்கிழுப்பார்.

நான் வானம்... என்பார்
நான் நிலா... என்று இராணி சொல்லும்
நான்  முகம்... என்பார்
நான்  கண்கள் என்று இராணி சொல்லும்

இப்படியே இழுத்துப்போய்
நான் குடை என்று சொல்லி
அந்தக் குழந்தையைக்
கவிதை மழையில் நனைய
வைத்துவிட்டுத்
துவட்டாமல் திரும்பிவிடுவார்.
இவரது இந்தச் சமநிலை
மனோபாவம்தான் இருபத்தொன்பது
ஆண்டுகாலம் இளங்கலை
மாணவர்களிடம் பாடம் நடத்துகிற
பக்குவத்தை இவருக்குத்
தந்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு வேலூர்
சோலையண்ணனின் ஒருங்கிணைப்பில்
நடந்த ஏற்பாடு. அதுதான் அவரது பிறந்த நாளில் அவர் நடத்திய கடைசி
வகுப்பு என்பது
தெரியாமல் போய்விட்டது!

வருகிற பிறந்தநாளில்
அவரது மாணவர்கள்
அதே முறையில் ஒன்று
கூடுவோம்
தமிழ் அலை தம்பி இசாக்
ஏற்பாட்டில் கவிக்கோ மன்றத்தில்
அய்யா எடுத்த
அய்க்கூ வகுப்புப் பேச்சை
ஒளிபரப்பிக் கேட்டுத்
திருப்தியுறுவோம்.

ஒரு கவிஞன், தான் எழுதுகிற
கவிதைகளால் வளரலாம்.
அவன் எழுதுகிற உரைநடைகளால்
மட்டுமே அவன் நிற்க
முடியும்.
கவிதை... முகம்.
உரைநடை... பாதம்

அய்யாவின் உரைநடைப்
பேச்சாக மட்டுமே காற்றில் கரைந்து காணாமல் போய்விடுமோ
என்று கவலைப்பட்ட காலமுண்டு.

ஒற்றை மாணவனாக என்னை
அமரவைத்து விடிய விடிய
அவர் எடுத்த உலக இலக்கிய
வகுப்புகளின் செய்திகள்
எல்லோருக்குமாகப் பயன்பட
வழியில்லையா என்ற
தவிப்பும் உண்டு.

அந்தக் காலகட்டத்தில்தான்
அப்பாவிற்கு வாசல் திறந்து
விட்டது விகடன்.

ஜூனியர் போஸ்டில்
ஆறாவது விரல்... 102 கட்டுரைகள்.

ஜூனியர் விகடனில்
இது சிறகுகளின் நேரம்...
200 கட்டுரைகள்.

வேறு சில இதழ்களிலும்
அய்யாவின் உரைநடை
தொடர்ந்தது... குவிந்தது.

தத்துவங்களில் இலேசாகத்
தோய்த்தெடுத்த யதார்த்த நடை அய்யாவுடையது.

மேடைகளில் சுவைபடப்
பேசிப்பேசி அவருக்குள்ளாகவே
அவர் அமைத்துக் கொண்ட அலகுகளாய்
அமைந்தது அவரது உரைநடை.

சொந்தச் சிறகுகளில் ஒரு பத்தி...

“சூரியன் வண்ண ஞானி.
அதனால்தான் அவன் ஓவியம்
வரைவதில்லை.
வானவெளியில் அவன்
வண்ணங்களை அவிழ்த்து
விட்டுவிடுகிறான். அவை
கூடிக் கும்மாளமிடுகின்றன;
காதலித்துக் கொள்கின்றன;
திடீரென்று ஊடல்
கொள்கின்றன; பிறகு
உருகிக் கலவி செய்கின்றன;
குழந்தைகளும் பெற்றுக்
கொள்கின்றன.”

இப்படி இவர் எழுதி எழுதித்
தந்த கவிதைகளையும் கவித்துவமான
கட்டுரைகளையும்
படித்துப் படித்துப்
படைப்பாளிகளானவர்கள் பல பேர்.
ஆனால், இவரால்தான்
படைப்பாளியானேன் என்று
சொல்லும் மனசாட்சியுள்ளவர்கள்...
சில பேர்தான்.

அய்க்கூ... இலக்கிய வரலாற்றில்
இவரது தாய்ப்பால்
வாசனையை மறைக்க... சிலர்
முயன்றது அய்யாவிற்கு
வலி செய்தது.

ஆனாலும், அதையும் தாண்டி...

‘மரத்தடியில் பாடம் நடத்துகிறார் ஆசிரியர்
சொல்லிக் கொடுக்கிறது மரம்’

தம்பி லிங்குசாமியின் அய்க்கூக்களைப் படித்துவிட்டு மகிழ்ந்து அவர் தந்துள்ள அணிந்துரை அவரது தாய்மைப் பண்பாட்டின் உச்சம்.
இயக்குநர் வாசுதேவ்மேனன் வீட்டில் லிங்கூ வெளியீட்டு விழாவில் படைப்புலகமே
கூடியிருந்தது. அதில் அய்யா கலந்துகொண்டு
மகிழ்ந்து நெகிழ்ந்து...
தன்னை அப்படியே கவிழ்த்துக்
கொட்டிய நிகழ்வு மறக்க முடியாது.

துண்டுபோர்த்திய அழகோடு
வரவேற்கும் அய்யா கண்ணாடிப் பெட்டிக்குள் தத்துவங்களை அதனதன் அடுக்குகளில்
சேர்த்துவிட்டு...
இயல்பாய்
தூங்கிக்கொண்டிருக்கிறது
`அய்யா' என்கிற அந்த நம்
இயற்கை நூலகம்.

விம்மி அழுகிறேன்.
கடைசியாக அய்யாவை நான்
பார்த்தது... 13.05.17
தம்பி சௌரிராசனோடு.

மகுடம் தமிழர் வல்லிசைக்
குழு பற்றிய செய்திகளைக் கேட்டு மகிழ்ந்து உலக நாட்டுப்புற இசைகளைத் தேடித்தேடிப் பார்த்து மகிழும்
அலுவலங்களைச்சொல்லிப்
பாராட்டினார்.

அய்யா இழப்புச் செய்தி கேட்டு
விருத்தாசலத்திலிருந்து... பனையூருக்குப்
புறப்பட்டு வருகையில்...
அதுவையைத் தாண்டுகிற
நேரம்.
இரா.மீனாட்சி அக்காவின்
தொலைபேசி அழைப்பு.

‘‘அக்கா... ஆரோவில் தாண்டி
போகிறேன்’’ என்கிறேன்.
‘‘நான் இப்போது மதுரை
தியாகராயர் கல்லூரியில் நின்று
அழுது கொண்டிருக்கிறேன்’’
என்கிறார் அக்கா.
ஆரோவில்லில்
இருந்தபடியே.

கவிக்கோ இல்லம்
செல்லும் வழி என்ற அறிவிப்புப்
பலகை அழுகையைத்
தொடங்கி வைக்கிறது.

சௌரிக்குப் ‘பித்தன்' நூல்
ஒன்று கொடுங்களய்யா என்றேன்.
எடுத்தவர்...
நூலில்...

`தமிழ்க்கலைகளை
மீட்டுருவாக்கம் செய்யும்
சௌரிக்கு
அன்புடன்
அப்துல்ரகுமான்
13.5.2017’
என்று எழுதி நீட்டினார்.

ஆயிரம் ரூபாய் ஒரு கையால் தம்பி சௌரி நீட்டுகிறார்.
``பணம் வேண்டாம் சௌரி’’ என்கிறார்... அய்யா.

``பணம் கொடுக்காமல் நூல்கள் வாங்குவதில்லை அய்யா’’ என்கிறார் சௌரி.

``அன்புடன் என்று போட்டிருக்கிறேன் சௌரி... பணம் வாங்கக் கூடாது’’ என்று சொல்லிவிட்டுப்
பித்தனை நீட்ட
செளரி வாங்கிக்கொள்ள
விடைபெறுகிறோம்.

அதுதான் அய்யாவைப் பார்க்கிற
கடைசி நிகழ்வு என்பது
புரியாமல் போனது.

இதோ அவர்... ஞானியாய்
தூங்கிக் கொண்டிருக்கிறார்
அவர் வளர்த்த
பிள்ளைகள் நாங்கள்
பித்தன்களாய்ப்
புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism