Published:Updated:

“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”
“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”

ஞா.சக்திவேல் முருகன், படங்கள்: தி.குமரகுருபரன்

பிரீமியம் ஸ்டோரி

தொடர்ந்து இந்த ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டின் தங்கங்கள். இந்த ஆண்டு சிவில் சர்வீஸில் வென்றிருக்கும் 70-க்கும் மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானவர்கள்,  பைசா செலவில்லாமல் அரசுப் பயிற்சி மையத்தில் படித்தவர்கள். அதாவது, இந்த ஆண்டு மட்டும் அரசுப் பயிற்சி மையத்தில் படித்த 44 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதில் நாம் சந்தித்த 12 பேருமே  வெவ்வேறு சூழல்களில் இருந்து போராடி வெளியே வந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”

“என் பெற்றோர் பள்ளிப் பக்கமே எட்டிப் பார்த்ததில்லை. நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலையில் இருந்த என் தந்தை, சுவாசக் கோளாறால் சுகமில்லாமல் இருக்கிறார். விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து என்னையும் என் சகோதரியையும் வளர்த்து ஆளாக்கியவர் என் தாய் மட்டுமே. இவர்கள் இருவருக்கும் நான் என்ன தேர்வு எழுதுகிறேன் என்றுகூடத் தெரியாது. பட்டாசுத் தீயால் பாதிப்புக்குள்ளாகி உபயோகமற்றுப்போன கரும்புத் தோகையால் வேயப்பட்ட கூரை வீடுதான் எங்கள் சொத்து. இனிவரும் காலங்களில் என் முயற்சியால் பெற்றவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும்” என்கிறார் ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழில் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்றிருக்கும் நெய்வேலி வடமேலூரைச் சேர்ந்த மணிகண்டன்.

“நான் பள்ளியில் படிக்கும்போது சுனாமி வந்தது. அப்போது எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் ககன்தீப்சிங் பேடி. அவர் சிறப்பாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உதவிகளைச் செய்தார். மீனவர்கள் வீட்டில் சாமிப் படங்களுக்கு மத்தியில் அவருடைய புகைப்படமும் இடம்பிடித்தது. இது எனக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தது. 2010-ம் ஆண்டிலிருந்து படித்துவருகிறேன். இந்த முறை இலக்கை அடைந்துவிட்டேன். இனிவரும் காலங்களில், தமிழகத்திலிருந்து வரும் பல மாணவர்களின் வெற்றிக்கு உதவியாக இருப்பேன்” என்கிறார் மணிகண்டன். இவர் பல பயிற்சி மையங்களுக்கு இலவசமாகத் தமிழ் வகுப்பு எடுத்துக்கொண்டே தேர்வுக்கும் தயாராகியிருக்கிறார்.

மணிகண்டனின் மாணவர்களில் ஒருவர் பிரதாப் முருகன். இவர் தமிழக அளவில் முதல் இடத்தையும் அகில இந்திய அளவில் 21-வது இடத்தையும் பெற்றிருக்கிறார். “முதல் முயற்சியிலேயே, அதுவும் தமிழகத்திலேயே முதல் மாணவனாக வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதை நினைக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக  இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2011-2015-ம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். அரசியல்வாதியால் தீர்க்க முடியாத பிரச்னையையும் ஆட்சியாளர்கள் தீர்க்க முடியும் என நம்புகிறேன். எனக்குக் கிடைத்த துறையில் மாற்றத்தைக் கொண்டுவர முழு முயற்சியோடு செயல்படுவேன்” என்கிறார் பிரதாப். இவர் விருதுநகர் மாவட்டம்  ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை விவசாயி.

“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”

“அப்பா சைக்கிள் கடை வைத்திருந்தார். அக்காதான் என்னைப் படிக்க வைத்தார். அப்பா, சிறுநீரகம் பழுதடைந்து மிகவும் கஷ்டப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சமயங்களில்தான் ஐ.ஏ.எஸ் தேர்ச்சிபெற வேண்டும் என்ற பொறி எனக்குள் எழுந்தது. முதல்முறை நேர்முகத்தேர்வு வரை சென்றாலும், வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை நேர்முகத்தேர்வில் அதிக மதிப்பெண்ணில் வெற்றிபெற்றிருக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்ததும் விவசாயம் சார்ந்த பட்டப்படிப்பையும் முடித்த எனக்கு, ஆனந்த விகடன் வாசிப்பு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்கிறார் அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்திலிருந்து வெற்றிபெற்றிருக்கும் குலோத்துங்கன்.

“அப்பா கலெக்டர் ஆபீஸ் பக்கத்தில் காபி கடை வைத்திருக்கிறார். அவர் பார்த்த சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார். நான் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்திருந்தாலும், அப்பாவின் கனவை நிறைவேற்ற ஐ.பி.எஸ் படித்தேன். மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும், பாதுகாப்பை மக்கள் முழுமையாக உணர வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக இந்தியக் காவல் பணி வேலையைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கிறேன்” என்று ஐ.பி.எஸ் சல்யூட் வைக்கிறார் மதுரையைச் சேர்ந்த விஷ்ணு.

23 வயதிலேயே ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன். “படித்தது பி.டெக் பயோடெக்னாலஜி என்றாலும், படிக்கும்போதே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. இறுதி ஆண்டிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். மக்களுக்கும் அதிகாரிக்கும் பெரிய அளவில் இடைவெளி இருக்கிறது. இதைக் குறைப்பதே என் வேலையாக இருக்கும்” என்கிறார் விஸ்வநாதன்.

“நான் ஆழ்வார்பேட்டை பையன். அப்பா பிளாஸ்டிக் வியாபாரம் செய்கிறார். 2013-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் இரண்டரை வருடங்கள் வேலைபார்த்தேன். முதல்முறையாக 2016-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல்முயற்சியிலேயே வெற்றிபெற்றிருக்கிறேன். நேரத்தை வீணடிக்காமல் முயற்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தாலே எளிதில் வெற்றிபெறலாம்” என்கிறார் மணிமாறன்.

“அப்பாவுக்கு, தூத்துக்குடித் துறைமுகத்தில் வேலை. அம்மா ஆசிரியை. நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2013-ம் ஆண்டு பி.இ., முடித்துவிட்டு ஹூண்டாய் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். படிக்கும்போது இன்டர்ன்ஷிப் செய்வதற்காகக் கனடா போனேன். அப்போதுதான் இந்தியன் ஃபாரீன் சர்வீஸஸ் குறித்துக் கேள்விப்பட்டேன். வேலை பார்க்கும்போது கொரிய நிறுவனங்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவங்கள் என்னை இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு எழுதும் ஆசையைத் தூண்டின. வேலையை விட்டுவிட்டுத் தேர்வுக்குத் தயாரானேன். முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருக்கிறேன். தற்போது தேர்வுக்கு நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் படிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்ந்தெடுத்துப் படித்தால்  போதும். கல்லூரி படிக்கும்போதே ஆரம்பித்துவிட்டால், இளம் வயதிலேயே வெற்றி பெற்றுவிடலாம்” என்கிறார் மரியா ஷைன்.

“நான் ஏழாவது படிக்கும்போது நடந்த விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டார்கள். சித்தியின் உதவியோடு பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினேன். முதல் முறை வெற்றிபெற முடியவில்லை. முதல் தேர்வில் நிறைய தவறுகள் செய்தேன். அவற்றைத் திருத்தி இரண்டாவது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறேன். அரசுப் பணிகள், மக்களை எளிதில் சென்றடைய வேண்டும். இதற்காக என் பணியைப் பயன்படுத்திக்கொள்வேன். நான் ஒரு சராசரி மாணவிதான். என்னாலேயே வெற்றிபெற முடியும்போது, நல்ல முயற்சி உள்ளவர்கள் குடிமைப்பணி தேர்வில் நிச்சயம்  வெற்றிபெற முடியும்” என்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கியா.

“வேலூர் அணைக்கட்டுப் பக்கத்தில் உள்ள சின்னகெங்கநல்லூர்தான் என்னுடைய ஊர். வாணியம்பாடியில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு, சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். படித்து முடித்தவுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், உள்ளுக்குள் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற ஆசை. ஒரு வருடம் இலவசமாகப் பயிற்சிபெற வாய்ப்பு கிடைத்தது. இரண்டு முறை முயன்றும் எல்லைக்கோட்டைத் தொட முடியவில்லை. மூன்றாவது முறை வெற்றிபெற்றுவிட்டேன்” என்கிறார் பிரியங்கா.

“நாங்கதான் புதிய அதிகாரிகள்!”

“அப்பா பஞ்சு வியாபாரம் செய்துவருகிறார்.சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பாவும் தாத்தாவும் சின்ன வயதில் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என விளையாட்டாகச் சொன்னார்கள். அது என்னுடைய மனதில் பதிந்தது. நான்கு முறை முதல் நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்தும் தளரவில்லை. இந்த முறை அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்று, பட்டியலில் இடம்பிடித்திருக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றால், அது அதிகாரம் உள்ளவர்களால்தான் முடியும்” என்கிறார் திவ்யா.

``திருவண்ணாமலை போளூரில், பாத்திரக் கடை வைத்திருக்கிறார் அப்பா. நான்தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி. பி.டெக். பயோடெக்னாலஜி படிக்கும்போது நாட்டுநலப் பணித் திட்டத்துக்காகக் கிராமத்துக்குப் போனபோதுதான் `மக்களுக்குப் பெரிய அளவில் உதவ வேண்டும் என்றால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற உயர்நிலை அதிகாரிகளால்தான் முடியும்’ என்பதை அறிந்துகொண்டேன். கல்லூரியில் படிக்கும்போது நான்காவது ஆண்டிலிருந்தே தேர்வுக்குத் தயாரானேன். மூன்று வருட உழைப்புக்கு இப்போதுதான் பலன் கிடைத்திருக்கிறது. அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது. திறமையாகச் செயல்பட்டாலே மக்களின் பாதிப் பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம்” என்கிறார் விஜயலட்சுமி.

“திருநெல்வேலி சங்கராபுரம்தான் என் சொந்த ஊர். 2013-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் களமிறங்கினேன். மூன்றாவது முயற்சியில் எல்லைக்கோட்டைத் தொட்டிருக்கிறேன்” என்கிறார் செல்வப்பிரியா.

அசத்துங்க ஆபீசர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு