பிரீமியம் ஸ்டோரி

சாப்பாட்டுத் தட்டின் முன் அமரும்போதே... ‘சாப்பிடலாமா, வேண்டாமா’ என்று யோசிக்க வைக்கும்

கலப்படம் நிறுத்து!

அளவுக்குப் பால், முட்டை, அரிசி, சர்க்கரை என உணவுப் பொருட்களைப் பற்றிய அதிர்ச்சியளிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

‘நம் மாநிலத்தில் அரிசித் தட்டுப்பாடு அறவே இல்லை. அதனால் பிளாஸ்டிக் அரிசி நுழைவதற்கு வாய்ப்பே இல்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் அரிசி விஷயம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இப்படித்தான் சிலநாள்களுக்கு முன்பு பாலின் தரம் குறித்து சர்ச்சை கிளம்பியது. இதைக் கிளப்பியது தமிழகப் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திரபாலாஜி என்பது, விஷயத்தின் தீவிரத்தன்மையை மேலும் அதிமாக்கியது.

``ஆவின் பால் மட்டுமே சிறந்தது. அது தாய்ப்பாலுக்குச் சமமானது. தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் உடம்புக்கு நல்லதல்ல. கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனத்தைக் கலக்கின்றன. ரசாயனம் கலந்த பாலைப் பருகுவதால், குழந்தைகளுக்குக்கூடப் புற்றுநோய் வருகிறது. சிலசமயம் உயிர் இழப்பும் ஏற்படுகிறது” என்று கூறிப் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்தார் அமைச்சர். இதைத் தனியார் நிறுவனங்கள் மறுத்தபோது, `‘ரசாயனம் கலக்கப்படவில்லை என்று நிரூபித்துவிட்டால், தூக்கில் தொங்கவும் தயார்!’’ என்று சவால்விட்டு, அதிர்ச்சியைக் கூட்டினார்.

ஆபத்தான ரசாயனச் சேர்க்கை இருக்கிறது என்றால், உடனடியாகச் சோதனை நடத்தித் தடுத்து நிறுத்தவேண்டிய அமைச்சரே, எதிர்க்கட்சிக்காரர்கள்போலக் குற்றம் சாட்டுவதும் சவால் விடுவதும் நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. நடவடிக்கை எடுக்கவேண்டிய இடத்தில் இருப்பவர், மற்றவர்களைப்போல வெறுமனே குற்றச்சாட்டை மட்டும் எழுப்புவது எந்த விதத்தில் நியாயம்?

‘பாலில் ரசாயனம் கலப்பது தெரிந்தும் தமிழக அரசு அதைத் தடுக்காமல் ஏன் வேடிக்கை பார்க்கிறது? கலப்படக்காரர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கேட்டதோடு, ‘இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இப்போது, பால் சர்ச்சை குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், “விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று வழக்கைக் காரணம் காட்டி வாய் திறக்க மறுக்கிறார் அமைச்சர் சாமர்த்தியமாக.

அரிசி என்பது தமிழர்களின் முக்கிய உணவு. பால் என்பது குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பயன்படுத்தும் உணவு. இவை குறித்து வரும் செய்திகள் மக்கள் மத்தியில் மேலும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். உண்மைநிலை என்ன என்று மக்களுக்கு உடனடியாக உணர்த்தவேண்டியதும் உணவுக் கலப்படத்தைத் தடுத்து நிறுத்தும் பணியைப் போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியதும் தமிழக அரசின் தலையாய கடமை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு