Published:Updated:

ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!
ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!

கு.ஆனந்தராஜ்,, படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

ரு பெண்ணின் நிறைவேறாத கனவு என்னவாகும்? காலத்தின் கரங்களில் தடமில்லாமல் கரைந்துபோகும்.  ஆனால், வள்ளி பாடகியாக வேண்டும் என்ற தன் கனவை, டி.டி.இ ஆன பின்னும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆமாம். அவரின் நேயர்கள்... ரயில் பயணிகள்!

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பயணம், சுகம். தடக் தடக் என்ற இன்ஜின் ஓசை பின்னணி இசையாக, ரசிக்கவைக்கிறது வள்ளியின் தேன்குரல். அவர் டி.டி.இ-யாகப் பணியாற்றும் மேட்டுப்பாளையம் - குன்னூர் வழித்தடப் பயணிகளுக்கு ஜன்னல் வழி மலை, மேகம், பச்சை, பசுங்காற்றுடன் போனஸ்  மகிழ்வு தருவது வள்ளி பாடும் திரைப்பாடல்கள். ‘`தண்டவாளத்தைக் கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளரா வேலையில் சேர்ந்து இன்னைக்கு டி.டி.இ ஆகியிருக்கேன். வாழ நினைக்கிறவங்களுக்கு வழி கொடுக்கத்தான் செய்யுது இந்த வாழ்க்கை” என, அவர் பயோகிராஃபியைக் கேட்கும் ஆர்வத்தை சில வார்த்தைகளிலேயே தூண்டிவிடுகிறார். 

ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!

“எங்க வீட்டுல ஆறு பிள்ளைங்க. நான் அஞ்சாவது பொண்ணு. பிறந்து வளர்ந்ததெல்லாம் கேரள மாநிலம் ஷொர்ணூர். ஏழ்மையான குடும்பம். அம்மா முனிசிபாலிட்டியில துப்புரவுப் பணியாளராவும், அப்பா ஷொர்ணூர் ரயில்வே ஸ்டேஷன்ல பாயின்ட்ஸ்மேனாவும் வேலைபார்த்து எங்களை வளர்த்தாங்க. மேடை நாடகங்கள்ல பாடவும், நடிக்கவும்னு இருந்த எங்கப்பா, வீட்டுல எங்களுக்கும் பாடச் சொல்லிக்கொடுத்தார். பத்தாவது முடிச்சதும் திருச்சூர்ல ஓர் இசைக்குழுவுல சேர்ந்து மூணு வருஷம் பாடிக்கிட்டு இருந்தேன். ஒருநாள் சம்பளமா நான் வாங்கின 200 ரூபாய், குடும்பத் தேவைக்குப் பெரிய உதவியா இருந்துச்சு. பொழப்புக்காக பாடுறோம்னு இல்லாம, பெரிய பாடகி ஆகணும்ங்கிறது என் வாழ்நாள் கனவாகவும் வளர்ந்தது. நிறைய தமிழ், மலையாளப் பாடல்களைப் பாடக் கத்துக்கிட்டு, மேடை, கைத்தட்டல்கள், ஆட்டம், பாட்டம்னு போயிட்டிருந்த என் வாழ்க்கை திடீர்னு தலைகீழாயிருச்சு’’ என்றவர் சட்டெனப் பயணிகளைப் பார்த்து, ‘ஊருசனம் தூங்கிருச்சு...’ எனப் பாடி, ஒரு குறிப்பிட்ட எழுத்தில் முடிக்கிறார். ரசிகர்களாகிப் போன பயணிகள் அந்த அந்தாக்‌ஷரியை வள்ளியுடன் எடுத்துச் செல்ல, காற்றின் வேகத்தையும் மீறுகிறது அந்தப் பயணத்தின் குதூகலம். ஹில்குரோவ் ஸ்டேஷனில் ரயில் 10 நிமிடங்கள் நின்று புறப்பட, தொடர்கிறார் வள்ளி. 

 “திடீர் உடல் நலக்குறைவால் 1983-ல் தன்னோட பணிக்காலத்துலயே எங்கப்பா இறந்துட்டார். எங்க வீட்டுல பத்தாவது வரை படிச்ச ஒரே ஆள் நான்தான் என்பதால, அவரோட வாரிசா எனக்கு ரயில்வேயில வேலை கிடைச்சது. அப்போ எனக்கு 20 வயசு. ஜானகி அம்மா மாதிரி நானும் சினிமாப் பின்னணிப் பாடகியாகணும்; கேரளா முழுக்க என்னோட குரல் ஒலிக்கணும்ங்கிற ஆசையை  எல்லாம் மூட்டை கட்டிட்டு வேலையில் சேர்ந்தேன். ஆனால், ரயில்வேயில் துப்புரவுப் பணியாளர் வேலை அதுனு தெரிஞ்சப்போ உடைஞ்சுபோயிட்டேன். மனசைக் கல்லாக்கிட்டு, மைக் பிடிச்ச கையால துடைப்பத்தைப் பிடிச்சு வேலை செய்தேன். முன்பு நான் வேலைபார்த்த இசைக்குழுவுல என்கூட வேலை செஞ்ச பலர், ஷொர்ணூர் ரயில் நிலையத்திலிருந்துதான் தினமும் வேலைக்குப் போய் வருவாங்க. அவங்க என் பணிக்கோலத்தைப் பார்த்தா, அவமானமாகிடுமேன்னு துடைப்பத்தோடு அவங்க கண்ணுல பட்டுடாம இருக்க, அவங்க வர்ற நேரம் ஓடிப்போய் ஒளிஞ்சுக்குவேன். இதைக் கவனிச்ச அந்த ஸ்டேஷன் ஹெல்த் இன்ஸ்பெக்டர், என்னைக் கூப்பிட்டு சில வார்த்தைகள் சொன்னார். 

‘எந்த வேலையும் இழிவானதில்லை. வேலை செய்யும் நேரத்துல உனக்குப் பிடிச்ச மாதிரி நீ பாட்டுப்பாடிப் பாரேன்... நீயும் உன்னைச் சுற்றி இருக்கிறவங்களும் சந்தோஷமா இருக்க முடியும்’னு சொன்னார். எந்த இடமா இருந்தாலும், செய்றது என்ன வேலையா இருந்தாலும் நமக்குள்ள இருக்கிற சந்தோஷத்தைக் கொண்டுவர்றது நம்ம கையிலதான் இருக்குங்கிறது அன்னைக்குதான் எனக்குப் புரிஞ்சது’’ என்று சொல்லும் வள்ளிக்கு, இடைப்பட்ட காலத்தில் திருமணம் முடிந்திருக்கிறது. 

ஊட்டி ரயிலில் உற்சாகப் பாடகி!

“மூன்றரை வருஷம் ஷொர்ணூர் ஸ்டேஷன்ல வேலை, அப்புறம் பாலக்காடு ஸ்டேஷனுக்குப் பணிமாறுதல்னு போயிட்டிருந்த வாழ்க்கைக்கு நடுவிலேயும், கூடுதலா இசை கத்துக்கிட்டு வாய்ப்புத் தேடலாம்னு நினைப்பேன். ஆனால், காலையில ஆறு மணிக்குக் கிளம்பி நைட்டு ஏழு மணிக்கு வீடு திரும்புற சூழல்ல, அடுத்தடுத்து மூணு குழந்தைகளும் பிறக்க, சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கேட்டே இசை கத்துக்க ஆரம்பிச்சேன். வெளியூர் பயணிகளுக்கு நான் இங்கிலீஷ்ல பதில் சொல்ல முயல்வதை கவனிச்சிட்டே வந்த ஓர் அதிகாரி, ‘உனக்குத் திறமை இருக்கு. ஏதாச்சும் புரமோஷனோட டிரான்ஸ்ஃபர் வாய்ப்பு வந்தா சொல்றேன்’னு நம்பிக்கை கொடுத்தார்” என்று சொல்லும் வள்ளி, 17 ஆண்டுகள் குன்னூர் சுற்று வட்டார ஸ்டேஷன்களில் வேலை செய்து வந்த நிலையில், தனது விடாமுயற்சியால் 48-வது வயதில் டி.டி.இ சீருடை அணிந்திருக்கிறார்.

“பிள்ளைங்க வளர்ந்த பிறகு, இனியாச்சும் படிச்சுப் பரீட்சை எழுதி டி.டி.இ வேலைக்குப் போகணும்னு முடிவெடுத்தேன். 47 வயசுல எக்ஸாம் எழுதி ஃபெயில் ஆகிட்டேன். காலம் போன காலத்துல தேவையா இதெல்லாம்னு துவண்டு போகாம, என் கடைசிப் பொண்ணுகிட்ட பொது அறிவு, கணக்கு எல்லாம் கத்துக்கொடுக்கச் சொல்லி, வீட்டுலயும் ரயில்வே பிளாட்ஃபாரத்துலயும், ரயில்லயும் உட்கார்ந்து படிச்சேன். ரெண்டாவது முயற்சியில பாஸ் பண்ணிட்டேன். இப்போ ரெண்டரை வருஷமா மேட்டுப்பாளையம் ஸ்டேஷன்ல டி.டி.இ ஆக இருக்கேன்’’ என்று சொல்லும் வள்ளி, வெளியூர்ப் பயணிகளுக்கு ஊட்டியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பிட, தங்குவதற்கான ஹோட்டல்கள் என்று வழிகாட்டுவதையும் தானாக முன்வந்து இன்முகத்துடன் செய்கிறார்.

வெளி மாநிலப் பயணிகளைப் பார்த்தவுடன்  இந்தி, மலையாளப் பாடல்களையும் பாடி அசத்துகிறார். வெளிநாட்டுப் பயணிகளுடன் கைகோத்து ஆடி உற்சாகமாக்குகிறார். ``ஊட்டிக்கு வர்றவங்க எல்லோரும் டென்ஷன், கவலையெல்லாம் மறந்து ரெண்டுமூணு நாள் சந்தோஷமா இருந்துட்டுப் போகத்தானே வருவாங்க? என்னால முடிஞ்சளவு அவங்களை உற்சாகப்படுத்தத்தான் இதெல்லாம் செய்றேன். எந்தெந்த  ஊரு, நாட்டுல இருந்து வர்றவங்கெல்லாம் ‘சூப்பரா பாடுறீங்க’னு கைகுலுக்கிச் சொல்லிட்டு இறங்கும்போது நிறைவா இருக்கும். மேடை, மைக் இல்லைன்னா என்ன? பார்வையாளர்களா இருக்காங்க என் பயணிகள்... அது போதும்! இப்போ 55 வயசாகுது. இன்னும் அஞ்சு வருஷம் பணிக்காலம் இருக்கு. அதுக்கு அப்புறம் சினிமாவுல சான்ஸ் தேடணும். கிடைக்குமான்னு தெரியலை!”

- வள்ளியின் கண்களில் தேங்கும் நீரை எதிர்க்காற்று வெளியே இழுத்துப்போட்டுக் காட்டிக்கொடுக்க,  புன்னகையால் சமாளிக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு