Published:Updated:

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

கார்க்கிபவா

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

கார்க்கிபவா

Published:Updated:
பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

மீபத்தில் இந்தியாவையே அதிரவைத்த, திரும்பிப் பார்க்கவைத்த ஒரு வார்த்தை ஜியோ. அந்நிறுவனத்தைத் துவங்கும்போது ``டேட்டாதான் இனி ஆயில்” என்றார் அம்பானி. அவர் சொன்னது போல நேற்றுவரை எண்ணெய்யின் பின்னால் ஓடிய உலகம், இன்று டேட்டா பின்னால் ஓடுகிறது.

கூகுளில் சர்ச் செய்யும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். அதில், நம்மைப்பற்றி நாமே எப்போதாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? உங்கள் பெயரைப் போட்டுத் தேடிப் பாருங்கள். உங்களுக்கே தெரியாத பல தகவல்களை கூகுள் சொல்லும்.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

“போன வருஷம் ‘கபாலி’ படம் பார்த்தேன். ஆனா, எந்த தியேட்டர்னு மறந்துடுச்சு. அதான் கூகுள் பண்றேன்” என்று கூகுளில் தேடிய நண்பர் ஒருவருக்கு சில நொடிகளில் விடை தந்தது கூகுள். “சத்யம்ல டிக்கெட் கிடைக்கலை. ஐநாக்ஸ்ல பாத்திருக்கேன். இதோ ட்வீட் போட்டிருக்கேனே” எனக் காட்டினார்.

கேட்டதும் அதிர்ச்சியையோ, சிரிப்பையோ ஏற்படுத்தும் நிகழ்வுதான். யோசித்தால், ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மைப்பற்றி நமக்கே தெரியாத விஷயத்தைக்கூட இணைய நிறுவனங்கள் நமக்குத் தருகின்றன. இதைத் தேவையான சமயத்தில் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் சரி.  தவறாகப் பயன்படுத்தினால்... மேலே சொன்ன சம்பவத்தில் நண்பர் ஐநாக்ஸில் படம் பார்த்த தகவலை அவரே சொல்லியிருக்கிறார். அதனால், பிரச்னையில்லை. ஆனால், நமக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்றால்... அது எப்படிப் பெற முடியும் என யோசிக்க வேண்டாம். நம்மிடமிருந்து எடுக்கப்படும் தகவல்களை வைத்து உலகம் முழுவதும் 203 பில்லியன் டாலர் மதிப்பிலான வியாபாரம் நடக்கிறது. இந்திய மதிப்பில் சொன்னால் 13 லட்சம் கோடி ரூபாய் பிசினஸ்!

1999-ல் அமெரிக்காவில் யாட்லி(Yodlee) என்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் வேலை, பயனர்களின் செலவுகளைத் தொகுத்துப் பிரித்து, விரும்பிய வடிவில் ரிப்போர்ட் தருவதுதான். ஒரு ஃபைனான்ஸ் எக்ஸ்பர்ட் செய்யக்கூடிய வேலை, அதுவும் இலவச சேவை என்பதால், நிறுவனம் அதிரடியாக வளர்ந்தது. இலவசம் என்றால் அவர்களுக்கு ஏது லாபம்? யாட்லி எப்படிப் பணம் சேர்க்கும் என அப்போது யாரும் யோசிக்கவில்லை.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

யாட்லி செய்தது இதுதான். மக்களின் செலவுகளை வைத்து தரமான புள்ளி விவரங்களைச் சேகரித்தது. எந்தத் துறையில் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள், எந்த வகை சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள், எந்த நிறுவனத்தின் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள் எனத் துல்லியமான தகவல்கள் யாட்லியால் திரட்டப்பட்டன. எவ்வளவு செலவு செய்து சர்வே நடத்தியிருந்தாலும், இந்தத் தகவல்களை யாராலும் திரட்ட முடிந்திருக்காது. இந்த டேட்டாவை யாட்லி தனது பொருளாதார நிறுவனப் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொண்டது. வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் யார் யார் என்பதை மிகச் சரியாகக் கண்டறிய யாட்லி உதவியது. இதனால் விளம்பரச் செலவுகள் தொடங்கி, அனைத்தும் குறைந்தன. பயனர்களின் பெர்சனல் தகவல்களை வைத்து யாட்லி கோடிக்கணக்கான டாலர் சம்பாதிக்க ஆரம்பித்தது.

இன்று உலகின் டாப் 100 நிறுவனங்களில் டெக் நிறுவனங்கள்தான் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை செயல்படுவதே தனி நபரின் பெர்சனல் தகவல்களை மூலதனமாகக் கொண்டுதான். கூகுள், ஃபேஸ்புக் என அத்தனை ஜாம்பவான்களும் அடுத்தவன் ஆட்டோவுக்குத் தான் ஆயுதபூஜை போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். டெக் நிறுவனங்கள் நிற்காமல் ஓட உதவும்  இந்தக் கச்சா எண்ணெய்யை `பிக் டேட்டா’ என்கிறார்கள்.

‘‘பல பேரிடமிருந்து தகவல்களைத் தொகுத்து, தொகுக்கப்பட்ட தகவல்களை அலசி, அதிலிருந்து ஒரு ட்ரெண்ட் பிடித்து, இது நடந்தா அடுத்து என்ன நடக்கும் எனக் கணிக்கும் முறைதான் பிக் டேட்டா.  டேட்டா விஷயத்தில் நாம் மூன்று தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். முதல் தலைமுறை என்பது டேட்டாவை வெறுமனே தொகுத்து வைத்தது. நம் வீட்டுப் பரண் மேல் பொருட்களைப் போட்டு மூடி வைப்போமே, அப்படி. அடுத்த தலைமுறையில் அதைப் பிரித்து வைத்தார்கள். துணியைத் தனி ஷெல்ஃபிலும், புத்தகங்களைத் தனியாகவும் அடுக்கி வைப்பதுபோல்.  மூன்றாம் தலைமுறையில், தொகுக்கப்பட்ட தகவல்களை வைத்து ஒரு ட்ரெண்டைக் கண்டறிந்தார்கள். இதன் அடுத்த கட்டம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ். இதுவரைக்கும் பிக் டேட்டாவைப் பயன்படுத்தி என்ன செய்ய வேண்டுமென்பதை மனிதர்கள் தலையிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் தலைமுறையில் அதுவும் மெஷினின் வேலை ஆகிவிடும். ஆனால், அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் டெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோகுல்.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

வாட்ஸ்அப் வராத காலத்திலே ஒரு ஃபார்வர்ட் மெசேஜ் உண்டு. சச்சின் சதமடித்தால், அன்று இந்தியா முழுவதும் அதிக வியாபாரம் நடக்குமாம். இந்தியர்கள் ஒவ்வொருவரும் எப்போது, எங்கு சாப்பிடுவார்கள், ஷாப்பிங் செய்வார்கள் என்ற தகவல் நம்மிடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில், யாரெல்லாம் சச்சின் சதமடிக்கும் நாளில் வெளியே சாப்பிடுகிறார்கள், ஷாப்பிங் செய்கிறார்கள் என்ற தகவலை கம்ப்யூட்டர் கண நேரத்தில் சொல்லிவிடும். அடுத்தமுறை சச்சின் சதமடித்தால், அவர்கள் மொபைலுக்கு ‘சாப்பிட வாங்க பாஸ்... சச்சின் சதமடிச்சதால் 10 சதவிகிதம் தள்ளுபடி. உங்களுக்கு மட்டும்!” என ஒரு குறுஞ்செய்தி போகும். 10 சதவிகிதத் தள்ளுபடி, கூடவே சச்சின் டச் என்றதும் அவர்களும் அந்த ஹோட்டலுக்குத் தான் விசிட் அடிப்பார்கள்.

 டிஜிட்டல் மார்க்கெட்டிங்

நாம் எல்லோருமே ஜிமெயில்வாசிகள்தான். காதல் கடிதங்கள் தொடங்கி ராஜினாமா கடிதம் வரை ஜிமெயில் மூலம்தான் அனுப்புகிறோம்; பெறுகிறோம். இவை அனைத்தும் கூகுள் சர்வரில்தான் சேகரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்க, படிக்க, பயன்படுத்த கூகுளுக்கு நாம் அனுமதி தந்திருக்கிறோம். கூகுள் என்ன செய்யும்?

நாம் ஒரு வீடு வாங்கத் திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்கான லோன் அனுமதிக் கடிதத்தை வங்கி நமக்கு மின்னஞ்சல் அனுப்பும். அதைப் படிக்கும் கூகுள் ‘இவன் புதுசா வீடு வாங்கப்போகிறான்’ எனப் புரிந்துகொள்ளும். புதிதாக வீடு வாங்குகிறவர்களுக்கு காலிங் பெல்லில் தொடங்கி சோபா வரை ஆயிரம் தேவைகள் இருக்கும். அந்தப் பொருள்களை விற்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு அனைத்தையும் கூகுள் கொடுத்துவிடும். அவர்கள் நமக்கு ‘லைட் வேணுமா சார்? பெட் வேணுமா சார்’ என மெயில் அனுப்புவார்கள். குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

உலகம் முழுவதுமே விளம்பரத்துக்குத்தான் எந்த ஒரு நிறுவனமும் அதிக முக்கியத்துவமும், அதிக நிதியும் ஒதுக்கும்.  ‘என்கிட்ட இந்த விஷயம் இருக்குப்பா’ என வாடிக்கையாளரிடம் சொன்னால்தான், அதை அவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உருவாகும். முந்தைய விளம்பர உத்திகளில் ஒரு பிரச்னை இருந்தது. நூறு பேரில் ஒருவருக்குதான் ஒரு பொருள் தேவைப்படும். ஆனால், அந்த நூறு பேருக்கும் சேர்த்துதான் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், செலவு அதிகம். ஒரு பொருள் அல்லது சேவை யாருக்குத் தேவை என்ற தகவல் இல்லாததால், வந்த பிரச்னை அது. ஆனால், டிஜிட்டல் யுகத்தில் இந்தச் சிக்கல் இல்லை. இதனால்தான் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கை நோக்கி நிறுவனங்கள் படையெடுக்கின்றன.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்
பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

இன்ஃபார்மர்!

காவல்துறையில் இன்ஃபார்மர் என்றொரு வேலை உண்டு. குற்றங்கள் பற்றியோ, குற்றவாளியைப் பற்றியோ ரகசியமாக உளவு பார்த்து காவல்துறைக்கு வேண்டிய தகவல்களை இன்ஃபார்மர் கொடுப்பார். அதற்கான சன்மானம் அவருக்கு வழங்கப்படும். ஃபேஸ்புக்கில் தொடங்கி கூகுள் வரை அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் இன்ஃபார்மர்கள் தான்.

உலகம் முழுதும் 125 கோடி பேர் வாட்ஸ்அப் உபயோகிக்கிறார்கள். நாம் வாட்ஸ்அப்புக்குப் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் விளம்பரங் களையும் காட்டுவதில்லை. பின் எப்படிப் பணம் வரும்?

``பெருவாரியான உலக மக்களின் தொடர்புச் சாதனம் வாட்ஸ்அப்தான். மக்களின் மனவோட்டத்தை மிகத் துல்லியமாக வாட்ஸ்அப் டேட்டாபேஸ் இன்ஜின்களால் கணிக்க முடியும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் 50 கோடி இந்தியர்கள் பேசும் வார்த்தை காம்பினேஷன்கள் மூலமாக, மக்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைத் துல்லியமாக அறியமுடியும். ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் ஒரு புதுப் பொருளுக்கான சந்தை இருக்கிறதா என்பதை அறிய நினைக்கிறது. அதை ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் இவர்களிடம் கேட்டால், துல்லியமாகவே எத்தனை பயனர்களுக்கு அந்தப் பொருள் தேவைப்படும் என்பதைச் சொல்லிவிடுவார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2014 தேர்தல். பி.ஜே.பி. இதை முயன்று பார்த்து மக்களின் மனவோட்டத்தைத் துல்லியமாக அறிந்து டிஜிட்டல் மார்கெட்டிங் செய்தும், தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தும் வெற்றி பெற்றார்கள்” என்கிறார் சாஃப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஃபாஸ்டுரா.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் User profiling எனச் சொல்வார்கள். ஒருவரைப் பற்றிய தகவல்களைத் துல்லியமாக, தரமாக, விரிவாக சேகரித்து வைப்பதுதான் யூஸர் புரொஃபைலிங். இதை யார் திறம்படச் செய்கிறார்களோ, அவர்களிடம் பணம் கொடுத்து டேட்டாவை வாங்க நம் தெருமுனை அண்ணாச்சி வரை தயாராக இருக்கிறார்.

இந்தக் கட்டுரைக்காக ஒரு விர்ச்சுவல் எக்ஸ்பெரிமென்ட்டுக்குத் தயாரானேன். முதலில், கூகுளுக்குச் சென்று, சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானப் பயணத்துக்கான கட்டணத்தைத் தேடினேன். அடுத்த சில மணி நேரங்களில் என் மின்னஞ்சலுக்கும், மொபைல் எண்ணுக்கும் அத்தனை விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களும் படையெடுத்தன. அடுத்து, டெல்லியில் இருக்கும் ஹோட்டல்கள் வரிசைகட்டி வந்தன. உண்மையாகவே டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து ஃபேஸ்புக்கில் ‘டெல்லி வந்தாச்சு’ என ஒரு ஸ்டேட்டஸ் தட்டினேன். ஓலா நிறுவனத்திடம் இருந்து ஒரு வெல்கம்  தகவலும்,  டெல்லி ஓலா விலைப் பட்டியலும் வந்தன. அன்று மாலை, நான் அடிக்கடி உணவருந்தப்போகும் பீட்ஸா நிறுவனம் ஒன்று, நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் தனது கிளையின் முகவரியை அனுப்பி வைத்தது. மீண்டும் சென்னைக்குத் திரும்பும்வரை எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எப்போது என்ன செய்வேன் என்பதை அறிந்து அந்தந்தச் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரியாக என்னை வந்தடைந்தன. ‘சார்ஜரை சென்னைலயே விட்டுட்டேன்’ என ஸ்டேட்டஸ் தட்டியிருந்தால், உடனே டோர் டெலிவரி ஆகியிருக்கும். அப்படி இருந்தது அந்த விர்ச்சுவல் உபசரிப்பு.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

டிஜிட்டல் பயனர்களைக் குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்த டேட்டா நுகர்தலைப் பற்றி அவர்களுக்கும் தெரியும். மூன்று விஷயங்கள் இருந்தால், எந்த வாடிக்கையாளரும் தன்னைப் பற்றிய டேட்டாவைத் தருவார் என்கிறது ஓர் ஆய்வு.

1) வெளிப்படைத்தன்மை (Transparency)

2) நம்பிக்கை (Trust)

3) பலன்கள் (Benefits)


இது ஒருவிதத்தில் உண்மைதான். நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன. அவை தவறான விஷயங்களுக்குப் பயன்படும் ஆபத்தும் இருக்கிறது. மற்றபடி, இந்த மூன்றையும் ஒரு நிறுவனம் தந்தால், டேட்டாவைப் பகிர நமக்கும் ஆர்வம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்காக, லேப்டாப் ஒன்றைப் பள்ளி நிர்வாகமே தந்திருக்கிறது. அதில், மாணவன் வீட்டுப்பாடம் செய்வதைக் கண்காணிக்க அப்ளிகேஷன் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது கேமராவை ஆன் செய்து, மாணவனின் வீட்டில் நடப்பவற்றைப் பள்ளி நிர்வாகத்துக்குக் காட்டியிருக்கிறது. ‘எனக்குத் தெரியாமல் என் வீட்டை நீங்க எப்படிப் பாக்கலாம்’ என மாணவனின் தந்தை நீதிமன்றம் சென்றிருக்கிறார். ‘நாங்க மாணவனின் நல்லதுக்குத்தானே செய்கிறோம்’ எனப் பதில் சொல்லியிருக்கிறது நிர்வாகம். ஆனால், முடிவில் மாணவனின் தந்தைக்குப் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு தரச் சொன்னது நீதிமன்றம்.

வளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில் கில்லி. என்ன நடந்தாலும் அவர்களின் நாட்டுமக்கள்தான் முக்கியம். ஆனால், அவர்களுக்கு இணையம் என்ற ஒன்று வந்தபோது அதன் நீள, அகலம் தெரியவில்லை. ‘நீட்டிய இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டேனே... இப்படி ஏமாத்திட்டானே’ எனப் புலம்பும் சராசரி மனிதனைப் போலத்தான் இப்போது கவலைப்படுகின்றன. சீனா போன்ற ‘ரஃப் அண்ட் டஃப்’ நாடுகள் கொஞ்சம் தாமதமாக விழித்துக்கொண்டு இப்போது தடை போட்டுக் கொண்டிருக்கின்றன.

நாடுகளுக்கு இடையே எல்லைக்கோடுகள் உண்டு. ஒரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு பொருளும், எந்த ஒரு விஷயமும் இன்னொரு நாட்டின் எல்லையைத் தாண்டிப் போக முடியாது. மீறிச் சென்றால், போர்தான். ஆனால், இணையத்திடம் இது வேலைக்காகாது. ராமநாதபுரத்தில் ஒரு  ப்ரெளசிங் சென்டரில் இருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு மெயில் அனுப்பலாம்.  நிறைய விவரம் தெரிந்தால், வெள்ளை மாளிகை சிஸ்டத்தையே ஹேக் பண்ணலாம். இந்தக் காரணத்தால், வளர்ந்த நாடுகளிலும் இணையத்தால் சிக்கல்கள் எழுகின்றன. மக்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகிறது.
உணவு, உடை, உறைவிடம் போல இன்றைய யுகத்தில் பிரைவசி என்பதும் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையாகிவிட்டது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இருள் பக்கம் என ஒன்றிருக்கும். இந்த டேட்டா பிசினஸ் அந்த இருண்ட பக்கத்துக்கு பெரிய சோடியம் வேஃபர் விளக்கைப் போடுகிறது.

ஒரு இன்டர்வியூவுக்குப் செல்கிறீர்கள். `வார விடுமுறையில், சொந்த ஊருக்குப் போயிடுவீங்களா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’யென்று சொல்வீர்கள். ஆனால், அவங்க ‘இல்லையே. போன வருஷம் 52 வாரத்துல 32 வாரம் ஊருக்குப் போயிருக்கீங்களே’ன்னு சொல்வாங்க. காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்போம் என்பதில் தொடங்கி நமது கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் வரைக்கும் அவர்களுக்குத் தெரியும். இந்த உலகத்தில் எதுவுமே ரகசியம் இல்லை என்பது விரைவில் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சி.சி.டி.வி கேமரா போட்டு நம் அனைத்து நடவடிக்கை களையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. ஜிமெயிலை நீங்கள் பணம் கொடுத்து வாங்கினால், நம் தகவல்களை அவர்கள் பார்க்க மாட்டோம் என்கிறார்கள். ஆப்பிள், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம் இதுதான். ஆப்பிள் மொபைலில் உங்களால் கால் ரெக்கார்ட் செய்ய முடியாது. ஏன் என்றால், ‘பேசும் இரண்டு பேரில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பதிவு செய்வதே பிரைவசியை மீறும் செயல். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்கிறது ஆப்பிள். ஆனால், ஆண்ட்ராய்டு கூகுளின் சேவை. அவர்கள் நிறுவனத்தில் 90 சதவிகித சேவைகள் இயங்குவதே தனிநபர் பற்றிய தகவல்களை வைத்துதான். அதனால், ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்பிள் அளவுக்குப் பாதுகாப்பு இருக்காது.  பிரைவசி என்பதும் ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது. விலையும் அதிகம். பணம் இல்லாத வர்களுக்கு பிரைவசி கிடையாது. ஒரு பொருளையோ, சேவையையோ நாம் பெற விரும்பினால், அதற்குப் பணம் கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம் எனச் சொல்லப்படும் சந்தையில் நாமே ஒரு பொருளாக மாற வேண்டியிருக்கிறது.

‘மைனாரிட்டி ரிப்போர்ட்’ என்றொரு படம். அதில் டாம் க்ரூஸ் இன்னொருவனைக் கொல்லத் திட்டமிடுவார். அனைத்து ஆயத்தங்களும் முடிந்து, சம்பவம் நடக்கப்போகும் சமயத்தில் போலீஸ் அவரைக் கைது செய்யும். ‘‘அடுத்த  ஐந்து நிமிஷத்துல அவனை நீ கொல்லப் பார்த்தாய். அதனால், கைது பண்றோம்” எனச் சொல்லும் காவல்துறை. கொலை செய்யத் திட்டமிடுபவனின் அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறைக்கு முன்பே தெரிய வந்ததால், கொலை நடப்பதற்கு முன்பாகவே அவனைப் பிடிப்பதாக லாஜிக் சொல்வார்கள். இது நடப்பது 2054-ம் ஆண்டில். டேட்டா பிசினஸ் போகும் வேகத்தைப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளிலேயே அது சாத்தியமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

``நாங்கள் கடவுளை நம்புகிறோம். மற்ற அனைவரும் டேட்டா கொண்டு வரவும்”
 
- எட்வர்ட்ஸ் டெமிங், பேராசிரியர்.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

``டேட்டா இல்லையென்றால், எந்த ஒரு நிறுவனமும் காட்டுக்குள் கண் தெரியாத, காது கேட்காத மானைப்போலத்தான் அலைய வேண்டியிருக்கும்”

- ஜெஃப்ரி மூர், பேராசிரியர்

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

``போர் என்பதே 90 சதவிகிதத் தகவல்கள்தாம்”

- நெப்போலியன், பிரெஞ்ச் பேரரசர்.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

``உங்களிடம் டேட்டா இருந்தால், அதைப் பார்க்கலாம். ஐடியா மட்டும்தான் இருக்கிறதென்றால், நான் சொல்வதைக் கேளுங்கள்”

- ஜிம் பார்க்ஸ்டேல், பொருளாதார நிபுணர்.

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

``களிமண் இல்லாமல், செங்கல் செய்ய முடியாது. டேட்டா அதுபோலத்தான்!”

- சர் ஆர்தர் கேனன், எழுத்தாளர்.