நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம். ஆனால், `கட்டிப்பிடி’ வைத்தியத்தை எல்லோரிடமும், எல்லா இடங்களிலும் பிரயோகப்படுத்துவது சரி ஆகாது. ஏனெனில், இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு Haphephobia உண்டு. கமல் ரசிகர்களுக்கு ஃபோபியாக்கள் பரிச்சயமானதாக இருக்கலாம். மற்றவர்களுக்கு..? Haphephobia என்றால், மற்றவர்கள் நம்மைத் தொடுவது பற்றிய பயம்.
 
நண்பரைச் சந்திப்பததற்காக கார்ப்பரேட் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே மேனேஜர் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 40 வயதிருக்கும். அவர், 20 வயதிருக்கும் ஜூனியர் ஒருவரின் கன்னங்களில் தவில் வாசித்துக்கொண்டிருந்தார். அதிகப்படுத்தியெல்லாம் சொல்லவேயில்லை. நிஜமாகவே, இரண்டு கன்னங்களையும் வேகமாக இழுத்து இழுத்து சத்தம் வர விளையாடிக்கொண்டிருந்தார். தனது பாஸ் என்பதால், அந்தப் பச்சிளம் ஜூனியரும் செய்வதறியாமல் நின்றுகொண்டிருந்தார்.

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 11

அந்த ஜூனியரை ஜாமீனில் எடுக்க 30 வயதுக்காரர் ஒருவர் வந்தார். அவரிடமும் மேனேஜர் படு ஜாலியாகப் பேசத் தொடங்கி, இரண்டே நிமிடங்கள்தான்... அந்த 30 வயது வாலிபரின் கையைப் பிடித்து முறுக்கத் தொடங்கிவிட்டார். கிளையன்ட்டுக்கு அனுப்பவேண்டிய மெயில் ஒன்றை அனுப்பாமல் விட்டுவிட்டார் போலும். அதற்குத்தான் அந்த முறுக்கு. பள்ளியில்கூட இப்படியெல்லாம் எனக்குத் தண்டனை கிடைத்ததில்லை. இத்தனைக்கும் அந்த மேனேஜர் ஜாலியாக, சிரித்தபடி அனைத்தையும் செய்துகொண்டிருந்தார்.

இந்த இரண்டும் உதாரணங்கள்தான். பெர்சனல் வாழ்க்கையிலும் சரி, அலுவலகத்திலும் சரி... நாம் எத்தனை பேரின் உடலை அவர்கள் அனுமதி இல்லாமல் தொல்லைப்படுத்துகிறோம். தோளில் கை போடுவது நட்பில் சகஜம். அலுவலகத்தில்..? `செல்லமாகத் தட்டினேன்’, `பாசமாகக் கிள்ளினேன்’, `அக்கறையாக அணைத்துக்கொண்டேன்’ எனச் சாக்குகள் சொல்லலாம். எதிர்ப்பக்கத்தில் இருப்பவரும் அப்படித்தான் நினைக்கிறாரா என்பதை அறிவோமா?

உடல் தொட்டுப் பேசுவது கவனமாகக் கையாளவேண்டிய விஷயம். இது சிலருக்கு அச்சத்தைத் தரலாம். சிலர், கிருமிகள் தொற்றுமோ எனப் பயப்படலாம். சிலர் மற்றவர்கள் பார்க்கிறார்களே எனக் கூச்சப்படலாம். சிலருக்குத் தங்களை அனுமதியின்றி தொடுவதே அத்துமீறலாகத் தெரியலாம். ஒருவரின் அனுமதியின்றி அவர் நகத்தைத் தொடுவதுகூட மனரீதியாக மிகப்பெரிய வலியாகப் பதிவாகும்.

கார்ப்பரேட் அலுவலக நண்பரிடம் அந்த மேனேஜரைப் பற்றிக் கேட்டேன். ``அவ்வளவு நல்லவர்; ஆனால், அவரிடம் பேசவும் அவர் டீமில் பணிபுரியவும் யாருமே முன்வருவதில்லை’’ என்றார். குறிப்பாகப் பெண்கள். தவறான எண்ணத்தில் எல்லாம் இல்லை. இருந்தாலும், அவரால் பெண் ஊழியர்களிடம்கூட அவர்கள் கைகளைக் கிள்ளாமல் இருக்க முடிவதில்லை.

கைகளின் இந்த ‘எக்ஸ்ட்ரா’ நடவடிக்கைகள் மூலம் மூளைக்கு சிக்னல் சென்றே பழகியிருக்கும். இதை திடீரென நிறுத்திக்கொள்வது சிரமம்தான். அதற்காக சில விஷயங்களை நாம் பின்பற்றலாம்.

1) Stress free பந்துகள் வாங்கி அதைப் பயன்படுத்தலாம். அந்த ஆக்‌ஷன் இந்த அடிக்‌ஷனுக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

2) யாரிடமாவது பேசும்போது கைகளில் புத்தகங்களை வைத்துக்கொள்ளலாம். அல்லது டேப்லெட் போன்ற பெரிய கேட்ஜெட்கள்கூட ஓகே.

3) நம்மை அறியாமல் தொடர்ந்து அடுத்தவர்களைத் தொட்டுப் பேசுகிறோமோ என்பதை நண்பர்களைக் கவனிக்கச் சொல்லலாம். இருவருக்கும் மட்டுமே புரியும் சமிக்ஞைகள் மூலம் இதுபற்றிப் பேசி உடனே நிறுத்தலாம்.

4) எதிரில் இருப்பவரிடம் பேச்சைத் தொடங்கும்போதே விஷயத்தைச் சொல்லி அவரையே நினைவுபடுத்தச் சொல்லலாம். நிச்சயம் அவர்களும் நமக்கு உதவத்தான் செய்வார்கள்.

`அடுத்தவர் மூக்கு நுனி வரைதான் நம் சுதந்திரம். மூக்கைத் தொடுவதல்ல’ என்பார்கள். அது நிதர்சனமான உண்மை.

- பெர்சனல் பேசுவோம்...