Published:Updated:

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்
பிரீமியம் ஸ்டோரி
ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்
பிரீமியம் ஸ்டோரி
ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

``ஹேய்,  ஓடு... ஓடு...  `விகடன்லேருந்து வந்திருக்காங்க’ன்னு சொல்லி ப்ரீத்தியோட அம்மாவைக் கூட்டிகிட்டு வா...’’ - தலைமை ஆசிரியர் உத்தரவு பிறப்பிக்க, மாணவர்கள் உற்சாகமாக ஓடுகிறார்கள். ``சத்துணவுக் கூடத்துல ஏதாவது வேலை பார்த்துட்டிருப்பாங்க. இப்ப  வந்துருவாங்க’’ என்கிறார் தலைமையாசிரியர்  சரவணன்.

ப்ரீத்தி என்ற ஒரே ஒரு மாணவிக்காக பதினொன்றாம் வகுப்பில்,  பிசினஸ் மேத்ஸ் பிரிவைத் துவக்கி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கோயம்புத்தூர், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளி. ப்ரீத்தி... எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண். பதினாறு வயதானாலும் உடலளவில்  ப்ரீத்தி இன்னும் குழந்தைதான். அவரால் எழுந்து நிற்க முடியாது. தவழ்ந்த நிலையிலேயேதான் இருக்கிறார்.  பெருத்த தலை, சின்னஞ்சிறிய கை, கால்கள்... ப்ரீத்தியின் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையால் சுழல்பவை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 468 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறார் ப்ரீத்தி.

டெஸ்க்கில் தலையைத் தூக்கியபடி  ப்ரீத்தி படுத்திருக்க, அவர் ஓர் ஆளுக்காக, ‘பிசினஸ் மேத்ஸ்’ வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர்.

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

`` `ஊனமா பொறந்துட்டா.... இவ பள்ளிக்கூடத்துக்குப் போய் என்ன பண்ணப் போறா?’ன்னு என் அம்மாவும் அப்பாவும் யோசிச்சிருந்தாலோ இல்லை, `இவளெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறா?’ன்னு என் ஆசிரியர்கள் நினைச்சுப் புறக்கணிச்சி ருந்தாலோ நான் வீட்லேயே முடங்கி  இந்நேரம் செத்துப்போயிருப்பேன்’’ - முதிர்ந்த வார்தைகளை உதிர்க்கின்றன ப்ரீத்தியின் இதழ்கள்.

``நல்லா ஞாபகம் இருக்கு. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு மஞ்சள்காமாலை வந்துடுச்சு. ஏற்கெனவே, நான் இப்படி இருக்கேன். கூடவே, மஞ்சள் காமாலை. அம்மாவும் அப்பாவும் பயந்துபோய் என்னைப்  பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திடலாம்னு முடிவெடுத்துட்டாங்க.  ஜூலின்னு ஒரு டீச்சர். அவங்கதான், `எக்காரணத்தைக்கொண்டும் பிள்ளையோட படிப்பை நிறுத்திடாதீங்க. பாதி நேரமாவது அனுப்புங்க.  நான் பாத்துக்குறேன்’னு சொன்னாங்க. ஆறு மாசம் பாதி நேரம்தான் பள்ளிக்கூடம் போனேன். ஜூலி டீச்சர்தான் என்னை அவங்க பொண்ணைப்போல பார்த்துக்கிட்டாங்க. அஞ்சாவது படிக்கிறவரைக்கும் அப்பாதான் ஸ்கூலுக்குத் தூக்கிக்கொண்டு போய்  வருவார். அப்பா பேப்பர் போடுற வேலைதான் பார்க்கிறார். ஆனால், நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்திடுவார். அவருக்கு நான்தான் எல்லாமே!

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

ஆறாவதுல என்கூட படிக்கிற பொண்ணுங்க பெரிய பொண்ணுங்களா இருந்ததால, அம்மா என்னை ஸ்கூலுக்குத் தூக்கிட்டு வர ஆரம்பிச்சாங்க.  பாத்ரூம் போகணும்னா, என்னைத் தூக்கிட்டுப் போறதுக்காக, அம்மா நாள் முழுக்க ஸ்கூல்லயே உட்கார்ந்திருப்பாங்க. எல்லா டீச்சர்ஸும் அவ்வளவு அன்பா என்னைப் பார்த்துக்குறாங்க. ஸ்கூல்ல எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அதுல ஜெனிஃபர் மேரிதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எனக்கு எல்லா உதவிகளையும் அவதான் செய்வா.  இவங்க எல்லாருடைய ஒத்துழைப்பினாலதான்  என்னால 468 மார்க் எடுக்க முடிஞ்சுது. பதினொன்றாவது சேரணும். என்னால படம் வரைய முடியாது. எங்க ஸ்கூல்ல ஆர்ட்ஸ் குரூப் இல்லை. என்ன பண்றதுன்னு எங்க ஸ்கூல் ஹெச்.எம் சார்கிட்ட போய் கேட்டப்போதான். `நீ நல்லாப் படிக்கிற பொண்ணு; வேற எங்கேயும் போய் சிரமப்படக் கூடாது’னு சொல்லி சி.இ.ஓ-கிட்ட ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி பிசினஸ் மேத்ஸ் கொண்டுவந்திருக்கிறார். கடைசி நேரத்துல ஆரம்பிச்சதால நான் மட்டும்தான் இந்த குரூப்ல இருக்கேன். என் ஒரு ஆளுக்காகத் தனியா பாடம் நடத்துறாங்க.  கலெக்டர் ஆகணும்ங்கிறதுதான் என் லட்சியம். நிச்சயம் ஆவேன்’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ப்ரீத்தி.

``எட்டாவது வரைக்கும் பாப்பாவை க்ளாஸ்ல விட்டுட்டு வாசல்லயே சும்மா உட்கார்ந்திருப்பேன். ஓடியாடி விளையாடுற பிள்ளைங்களைப் பார்க்கும்போது மனசுக்குள்ள ஏக்கமா இருக்கும். இந்த ஹெச்.எம் சார் வந்தபிறகுதான்,  என்னோட நிலைமையைப் பார்த்துட்டு, `சும்மா உட்காந்திருந்தா அப்படித்தாம்மா இருக்கும். ஸ்கூல்ல இருக்கிற சின்னச்சின்ன வேலைகளைப் பாரும்மா’ன்னு சொல்லி, அவரோட சொந்தப் பணத்துல மாசம் 1,500 ரூபாய் சம்பளமும் கொடுத்தாரு.  இப்ப  நானும் இந்தப் பள்ளிக்கூடத்துல ஒருத்தியாவே ஆகிட்டேன்.  இவ்வளவையும் செஞ்சு கொடுத்து இப்போ என் பொண்ணுக்காக ஒரு குரூப்பே ஆரம்பிச்சி கொடுத்திருக்கிறார். ஹெச்.எம் சாருக்கும், என் மகளைத் தாங்கும் டீச்சருங்களுக்கும் நான் எப்படி  நன்றி சொல்லப் போறேனோ!’’ - நெகிழ்ச்சியால் கலங்கிய கண்களைத் துடைத்தவாறே சொல்கிறார் புவனேஸ்வரி.

ஜூலி டீச்சர்களும், சரவணன் சார்களும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.