Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

#MakeNewBondsமு.குணசேகரன் (ஊடகவியலாளர்), படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

#MakeNewBondsமு.குணசேகரன் (ஊடகவியலாளர்), படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 41
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

தொழில்முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டவர் ஒருவரின்  வீட்டில் ஒருவாரம் விருந்தினராகத் தங்கியிருந்தேன். பெரும் பதவியொன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற அந்த முதியவர் 75 வயதைக் கடந்தவர். அவரின் மனைவி விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுக்குப் பிறகு மணம் புரிந்துகொண்டவர்கள். தத்தமது முந்தைய துணையை இழந்த அவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் உண்டு. ஒரு ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாட்ட நாள் அது. இருவரின் பிள்ளைகளும் வந்திருந்தனர். இரு தரப்பில் இருந்தும், இருவரும் இருவரிடமும் மிக இயல்பாக அன்பு பாராட்டினார்கள். தங்கள் பெற்றோர் தேர்ந்தெடுத்த துணையை இயல்பாக ஏற்றுக்கொண்டு உரையாடினார்கள். அந்த உறவில் எந்த நெருடலும் இல்லை. முதிர்ச்சியும், கண்ணியமும் நிரம்பியிருந்தது.

 என் சித்தி இறந்தபிறகு, 50 வயதைக் கடந்த என் சித்தப்பா ஒருவர், ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

அவரது துணை சித்தப்பாவுக்கு அவசியமாக இருந்தது. அந்த அன்பின் அரவணைப்பில் அவரது காலம் இப்போது நிம்மதியாகக் கழிகிறது. சித்தியின் இடத்தில் வேறு ஒருவரை ஏற்றுக்கொள்வதில் ‘பரந்த’ என் மனதுக்கே தயக்கம் இருந்தது. என் சகோதரிகளுக்கும் அப்படியே. சித்தி, இயல்பாக உறவாட விரும்பினாலும், அந்த அன்பின் தூய்மையை அப்போது உணர முடியவில்லை. ஒரு குற்ற உணர்ச்சியோடு அந்தத் தாயிடம் இப்போது மன்னிப்பை யாசிக்கிறேன்.

 இரண்டாம் தாரமாக ஒரு முதியவருக்குத் துணையாகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிராமங்களில் நேரும் அவமதிப்பும் இழிவும் சொற்களால் வர்ணிக்க முடியாதவை. வாழ்வு என்பது சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே தீர்மானிப்பதாக நம் மண்ணில் இல்லை. அது அவரவர் சுதந்திரம் எனக் கெளரவமாகச் சற்றே விலகி நிற்கும் பக்குவம் எப்போது வரும் என்ற ஏக்கம் கவிகிறது.

 ‘குப்பம்மாள்’ என்ற தன்னுடைய பெயரை எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூடத் தெரியாத என் அம்மாதான், ‘நீ என்ன வேணும்னாலும் படி... என்னால முடிஞ்சவரைக்கும் உன்னைப் படிக்க வைக்கிறேன்’எனச் சொல்லி கல்வியின் வாசலை அகலத் திறந்து வைத்தார். வறுமையும், பசியும் சூழ்ந்த வாழ்வின் இருளில் இருந்து கல்வி மட்டுமே பிள்ளையைக் கரை சேர்க்கும் என்பதைத் தன் உள்ளுணர்வால் உணர்ந்திருந்த என் அம்மா, தர்மபுரியைத் தாண்டி எங்குமே சென்றது இல்லை. அதைப்பற்றிய கவலையும் அவருக்கு இல்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் தன்னைச் சார்ந்தோர்க்கு அன்பு செய்வது மட்டுமே. நண்பர்கள், தோழர்கள் என எப்போதும் ஒரு கூட்டத்துடன்தான் வீடு வந்து சேர்வேன். அனைவருக்கும் அன்பு பரிமாறும் மனமும், குணமும் அவருக்கு இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

பழனிமலையின் படிக்கட்டுகளிலும், தீர்த்தமலை படிக்கட்டுகளிலும் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஏறிய நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. பை நிறைய சில்லறையை மாற்றி வைத்துக்கொண்டு ஒவ்வொரு படியில் அமர்ந்திருப்போருக்கும் என் கரங்களால் கொடுக்க வைப்பார். பசியென யார் வந்து நின்றாலும், தன்னிடம் இருப்பது ஒரு கை பிடி உணவாயினும் பாதியைப் பகிர்ந்தளிப்பது அவர் இயல்பு. அருட்பெருஞ்சோதியால் அவர் மனம் நிரம்பியிருந்தது. அதில் இருந்த தனிப்பெருங்கருணை என் ஆளுமையின் பேர்பாதியை வடிவமைத்தது. என் தாய்தான், என் முதல் ஆசான்.

 சிறிய அளவில் விவசாயம், சின்னதாக ஓர் இட்லிக் கடை... இரண்டிலும் தன் வாழ்நாள்  முழுவதும் உழைத்துக்கொண்டே இருந்தார் அம்மா. என் அம்மாவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவர் ஏதோ ஓர் வேலை செய்துகொண்டிருக்கும் சித்திரம்தான் மனதில் வந்துபோகிறது. முதுமையிலும் அவரது உழைப்புக்கு ஓய்வு கிடைக்கவில்லை. உழைப்பு அவரது உடல் உறுப்பாக, ஓர் அனிச்சை நடவடிக்கையாக மாறிப்போனது. இது என் அம்மாவின் கதை மட்டுமல்ல... பிள்ளையின் எதிர்காலத்தின் மீது விளக்கேற்ற தன் வாழ்வின் முழுமையையும் கரைத்துக்கொள்ளும் தமிழகத் தாய்களின் குறுக்குவெட்டுச் சித்திரம் இது.
என் மாமியாரை, ‘வாங்க, போங்க’ என்றுதான் அழைப்பார் மாமனார். ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தொடரும் மரபு. திருமணமான புதிதில் நானும் என் மனைவியை இப்படி அழைக்க முயன்றேன். நீண்ட காலம் தொடரவில்லை; படுதோல்வி. வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். வார்த்தைகளில்தான் வாழ்க்கை இருக்கிறது; இனிக்கிறது. ‘ஏங்க...’ என்பது அப்பாவின் பெயர் எனவும், ‘ஏய்..’ என்பது அம்மாவின் பெயர் எனவும் கருதிக்கொண்டிருக்கும் குழந்தைகளும் அத்தகைய குடும்பங்களும் இங்கே அதிகம்.

 தாய், தங்கைகள், தோழிகள் என விரிந்த என் பெண்ணுலகில், பிரபஞ்சன் உருவாக்கிய பெண்களின் தாக்கம் காத்திரமானது. விசாலமான பார்வை கொண்ட, சுய மரியாதையும், சுய சார்பும் கொண்ட, சரி-தவறு பற்றி தர்க்கம் செய்கிற பெண்கள் அவர்கள்.  பிரபஞ்சன்  நம் கண் முன்னே விவரிக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம் அற்றவர்கள். எளிமையும், உறுதியும், கம்பீரமும் கொண்டவர்கள்.

 நான் எப்போதுமே, விமானப் பணிப் பெண்களின் இதழ்களில் வெளிப்படும் செயற்கைப் புன்னகையையும், செவிலியர் சகோதரிகளின் முகம் மலர்ச்சியில் வெளிப்படும் வாஞ்சையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. முன்னதில், பதிலுக்குப் புன்னகைக்கும்போது நம்மையும் அந்த செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்ளும். பின்னதில், மானுடத்தை நேசிக்கத் தூண்டுகிற அன்பின் சுடர் ஒளிவிடும்.

 கண் புரை சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் தங்கி இருந்த என் தந்தைக்குப் பள்ளி மாணவனாக உதவி செய்த தருணம் அது. பணியில் இருந்த மலையாளி நர்ஸ் ஒருவர் வாஞ்சை காட்டினார். ஒரு ஞாயிறு விடுமுறையில் அவரின் தோழிகளைச் சந்திக்கச் சென்றபோது என்னையும் துணைக்கு அழைத்துப் போனார். அவர் யாரென எனக்குத் தெரியாது. என்னை எவ்வாறு அவர் உணர்ந்தாரென அறியேன். ஒரு சகோதரனைப்போல என் விரல் பிடித்து அழைத்துச்சென்று தன் தோழிகளிடம் அறிமுகப்படுத்திய தருணம், நினைவில் ஈரத்துடன் பதிந்திருக்கிறது. இந்த இணையற்ற அன்பை பெண்களால்தான் வழங்க முடியும் என தீர்மானமாக  நம்புகிறேன். அன்பின் பேரொளியைத் தங்கள் சொல்லில், பார்வையில், ஸ்பரிசத்தில் பெண்கள் நிறைத்து வைத்திருக்கிறார்கள்.

 அன்புமதி. என் மனைவி. எனக்கு எல்லாமுமானவர். இக்கட்டான தருணங்களில், ‘என்ன வந்திடப் போகுது, பார்த்துக்கலாம்’ என உந்தித் தள்ளுவார். முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், ‘இது உங்களால முடியும்’ என என் வலிமையை என்னைவிடக் கூடுதலாக நம்புவார். என்னைவிடக் கல்வியிலும், வயதிலும் மூத்தவர். நகைகள், உடைகள், ஆபரணங்கள் எனப் புற உலகின் பொது நாட்டங்களில் இருந்து விலகியிருப்பவர். ‘எத்தனையோ பேர் கை தூக்கிவிட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கோம். முடிஞ்சவரைக்கும் நாலு பேருக்கு உதவிக்கிட்டே இருக்கணும்’  என்ற என் எண்ணத்துக்குப் பக்கபலமாக இருப்பவர். அவர் என்னைவிட அதிகம் சம்பாதித்த நாட்களிலும், நான் அதைக் கடந்த நாட்களிலும் ஊதியம் சார்ந்து மன வேறுபாடுகள் வந்தது இல்லை. அன்புமதி இல்லை என்றால், இந்தக் கட்டத்துக்கு நான் வந்திருப்பேனா என்பதும் சந்தேகம்தான்.

 கொஞ்சம் அரசியலும் சமூகமும் புரிபடத் தொடங்கிய நாளில், பெங்களூரில் தோழி கலைச்செல்வியின் அறிமுகம் கிடைத்தது. அரசு ஊழியரான அவர் தமிழுணர்வும், சமூக உணர்வும் மிகுந்தவர். தனியே வீடெடுத்து தங்கி இருந்தார். விடிய விடியப் பேசினாலும் உற்சாகம் மட்டும் வடியாது. ஒரு பெண்ணோடு தனித்துத் தங்க முடியும்; நண்பர்களாக விவாதிக்க முடியும் என்பதை சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன். அந்தப் பேச்சின் கதகதப்பு என்னை இப்போதும் பின்தொடர்கிறது. 

 கிராமப்புறங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்துவரும் பல தம்பதியரின் ஆணிவேர் பெண்கள்தான். புறக்கணிப்பை புறந்தள்ளி, வைராக்கியத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த ஒருவர் தமிழ்ச்செல்வி அக்கா. கல்லூரி மாணவனாகவும், வேலைதேடும் இளைஞனாகவும் அடிவயிற்றில் பசியோடு என் கால்கள் அவர் வீட்டைத்தான் நாடிச் செல்லும். அங்கு எப்போதும் வற்றிய வயிற்றோடு உறங்கப்போனதில்லை. வளரும் பருவத்தில் தாக்கம் செலுத்தியவர்களில் ஒருவர் சித்தி ஜெயக்கொடி.  வீட்டில் அணையாது எப்போதும் எரியும் அடுப்பு. கணவரின் நண்பர்கள், திடீரென வரும் விருந்தாளிகள் என எந்தச் சூழலானாலும் அவர் உற்சாகம் ஒருபோதும் குறைந்ததில்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41

பெண்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற கருத்து என்னை ஆட்கொண்டிருந்தாலும், பணி நிமித்தம் நான் சந்தித்த பல தோழிகளின் ஊடாகவே அந்த உலகம் சாத்தியப்பட்டது. செய்தியாளனாகக் கோவையில் பணியாற்றிய நாட்களில், லலிதாவின் துணிச்சல் பலரையும் அசரவைக்கும். எக்ஸ்பிரஸ் செய்தியாளர். எப்போதும் யமஹாவில்தான் வலம் வருவார். கிராமப் பின்புலத்தில், சிறு நகரான தர்மபுரியில் வளர்ந்த எனக்கு, இந்த யமஹா யாத்திரை புதிதாகப்பட்டது. ஆனால், பிறருக்கு உறுத்தியதைப்போல எனக்கில்லை.

 இதழியலில் பிரமிப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் ராதா வெங்கடேசன்.  ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய செய்தியிலிருந்து, சாத்தான்குளம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள் தந்ததுவரை ஏராளமான செய்திகளை பிரேக் செய்தவர். அடுத்த நாள் காலையில் அவர் எந்தச் செய்தியை பிரேக் செய்வாரோ என்ற பதற்றம், அந்த பீட்களைப் பார்க்கும் மற்ற நண்பர்களுக்கு எப்போதும் இருக்கும். அந்த அளவுக்குத் துடிப்பானவர்; நேர்மையாளர்.

 ஆங்கிலப் பத்திரிகைக்கு மாற வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டதும் அவரைத்தான் சந்தித்தேன். ஆங்கிலத்தில் எழுத மட்டுமல்ல, அலுவலக இன்டர்வியூ எப்படி இருக்கும் என்று பயிற்சியும் தந்தவர். இரவு பத்து மணியைக் கடந்த பல பொதுக்கூட்டங்களுக்கு அவர் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் பயணம் செய்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றிய நாட்களில், எனது தலைமைச் செய்தியாளர் ஜெயா மேனன். இலங்கையில் போர் முடிந்து முள்வேலி முகாம்களில் மக்கள் அடைபட்டிருந்த துயரத்தை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட சிரத்தை ஒரு சாகசம். ரம்யா கண்ணன், கவிதா முரளிதரன், ஜூலி மாரியப்பன், லஷ்மி சுப்பிரமணியன், சந்தியா ரவிசங்கர், தன்யா ராஜேந்திரன், ப்ரியம்வதா எனக் களத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் தோழிகளாகட்டும், நிகரற்ற ஸ்கிரிப்ட் ரைட்டர் ஜெயராணி, புள்ளிவிவரங்களைப் பகுத்து எழுதுவதில் முத்திரை பதிக்கும் ருக்மிணி எனப் பல பெண்கள் தலைநகரை அலங்கரிக்கிறார்கள். ஆனால் மாவட்டங்களில் பெண் பத்திரிகையாளர்கள் களப் பணியாற்றும் சூழ்நிலை தமிழ்நாட்டிலேயே இன்னும் சாத்தியம் ஆகவில்லை என்பது வருந்த வேண்டிய செய்தி.

 மகன் பிறந்திருக்கிறான் என்பதைச் சொல்லிப் பூரிக்கும் பெற்றோரை இன்னும் காண்கிறோம். ‘இதுவும் பொண்ணு புள்ளையாமே’ என சலிப்புறும் தாத்தா, பாட்டிகள் இன்னும் இருக்கிறார்கள். உலகம் அன்பால் ஆனது. ஆனால், ஆண்கள் மீது பொழியப்படும் அன்பின் சிறுதுளிகூட பல நேரங்களில் பெண்களுக்கு வாய்ப்பது இல்லை. காலம் கண் முன்னால் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. பெண்களின் காலம் இன்னும் வேகமாக மாற வேண்டும் என மனம் துடிக்கிறது.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ண்பர்கள் இருப்பதால் இருக்கிறோம்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41


தோழிகள் இருப்பதால் மறுபடி துளிர்க்கிறோம்
வானம் இருப்பதால்
வாழ்கிறோம் என்பதெல்லாம்
ஒரு கவிதையா
மடையா
என்றது மழை.
மழை போல நட்பு.
மழையின் வெள்ளமென காதல்.
தள்ளாடும் படகென நாம்.
கரம் தாங்க ஒரு தோள்.
ஆமென்.

- குமரகுருபரன்

த்தத்தில் யாருக்கும் கேட்கவில்லை
இயந்திரங்களின் தடதடப்பில் அமுங்கிப்போன

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41


பட்சியின் கிரீச்சிடல்
தனக்கான ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்தது அது
அருகருகே இருக்கும் இயந்திரங்களின்
இடையே
நுழைந்தென்னவோ விட்டது
வெளியே வரும் அவசரத்தில்
முறிந்துவிட்டன
அதன் சிறகுகள்
எதுவும் தெரியாத நாங்கள்
குர்த்தாக்களில் பொத்தான்களைப்
பதிப்பதில் மும்முரம் காட்டியபடி.

- விம்மி

புதைத்துப் பார்த்தேன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 41


முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.

- ரவி சுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism