Published:Updated:

முடிவு கட்டுவோம்!

முடிவு கட்டுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
முடிவு கட்டுவோம்!

மு.நியாஸ் அகமது, படம்: செந்தில்

முடிவு கட்டுவோம்!

மு.நியாஸ் அகமது, படம்: செந்தில்

Published:Updated:
முடிவு கட்டுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
முடிவு கட்டுவோம்!

``சென்னை வெள்ளத்தின்போது மாநகரம் முழுக்கக் குவிஞ்சு கிடந்த கழிவுகளைச் சுத்தம் செய்யத் தமிழகம் முழுக்க இருந்து துப்புரவுப் பணியாளர்கள் அடிமாடுகளைப்போல அழைத்து வரப்பட்டார்கள். ஊரே மனிதம் மனிதம்னு சிலாகிச்சிட்டிருந்தப்போ, அழுகி, நாறிக்கிடந்த அத்தனை கழிவுகளையும் அவங்க வெறுங்கைகளால் சுத்தம் செஞ்சாங்க. அதிலிருந்து ரெண்டு மாசத்துல, ஒரு ஹோட்டலின் பாதாளச் சாக்கடையில இறக்கிவிடப்பட்டு நாலு பேர் கொல்லப்பட்டாங்க. செத்துப்போன எல்லோருமே முப்பது வயசுக்குட்பட்டவங்க. அவங்களோட இறுதி ஊர்வலத்துக்குப் போயிருந்தேன். நாலு உயிர் போயிருக்கு... ஆனா, அந்த மக்களுக்கு இது பச்சைப்படுகொலைனு தெரியவே இல்லை. அற்பாயுசுல போயிட்டியேனு அழுதாங்களே தவிர, உன்னை இப்படி அநியாயமா கொன்னுட்டாங்களேடான்னு யாரும் கதறலை. மலக்குழிக்குள்ள மடியும் ஒவ்வொரு துப்புரவுப் பணியாளரின் மரணமும் கொலைதான். பொதுச்சமூகமும் அரசும் சேர்ந்து பண்ற படுகொலை” கோபத்துடன் பேசுகிறார் ஜெய்பீம் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி. ``சாதியை ஒழிப்போம். கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, தொடர் பிரசார நிகழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜெயராணி.

முடிவு கட்டுவோம்!

``மனித மலத்தைக் கைகளால் அகற்றும் பணியாளர்கள் தமிழகத்தில் நானூற்று சொச்சம் பேர்தான் இருக்கிறார்கள் என்கிறது தமிழக அரசு. ஆனால், இது அப்பட்டமான பொய். ஒவ்வொரு துப்புரவுப் பணியாளரும், தன் பணியின் காரணமாக மனித மலத்தை அகற்றும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இது, சட்டத்துக்குப் புறம்பானது. இந்த இழிவை, ஒரு முடிவுக்குக் கொண்டுவரக்கோரி எடுக்கப்பட்டிருக்கும் தொடர் பிரசாரம்தான் இது.

துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனால்,  சாதியின் காரணமாகதான் இந்தத் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்வதில்லை. இதை ஒரு சாதிய அநீதி என்ற பார்வையில் அணுகுவதில்லை. மலக்குழிச் சாவும் இந்தச் சமூகத்தின் முக்கிய பொதுப் பிரச்னை என்று பொது சமூகத்திடம் உணர்த்தத்தான் இந்தப் பிரசாரம். பொது சமூகத்திடமும், அரசியல் கட்சிகளிடமும் ஒரு நீண்ட உரையாடலை நிகழ்த்தி, அவர்களை இதற்கு எதிராகப் பேச வைப்பதும், சாதிய ஒழிப்பை முக்கிய செயல்திட்டமாக மாற்றவைப்பதும்தான் எங்கள் நோக்கம். உறுதியான  திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டு, மனித மலத்தை மனிதர்களே அகற்றும் இந்த மனிதத்தன்மையற்ற செயலையும் நம் காலத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம்”  தீர்க்கமாகப் பேசுகிறார் ஜெயராணி.

இந்தத் தொடர் பிரசாரத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ பதிவில், திரைப்பட இயக்குநர் ராம், “மனித மலங்களை மனிதனையே சுமக்கவைப்பதும், பாதாளச் சாக்கடையில் சக மனிதர்களை இறங்கவைத்துக் கொல்வதும் அரச பயங்கரவாதம்தான்” என அழுத்தமாகத் தன் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். ராம் மட்டுமல்ல... நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மிஸ்கின், பாண்டிராஜ், ரோகிணி கம்யூனிஸ்ட் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், வசந்தி தேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கலைஞர்களும் செயற்பாட்டாளர்களும் என நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் மனித மலத்தை மனிதனே சுமக்கும் அவலத்துக்கு எதிரான தங்கள் காத்திரமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜூன் 30-ம் தேதி, நீலம் அமைப்பின் தயாரிப்பில் ‘மஞ்சள்’ என்ற பெயரில் ஒரு விழிப்பு உணர்வு நாடகமும் சென்னை காமராஜர் அரங்கத்தில் அரங்கேற்றப்படுகிறது. இதில், தமிழகத்தின் அனைத்து முற்போக்கு அரசியல் இயக்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன.

நல்ல நோக்கம் வெல்லட்டும்!