Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

#MakeNewBondsசுகிதா, ஊடகவியலாளர்படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

#MakeNewBondsசுகிதா, ஊடகவியலாளர்படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 42
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

யல் வேலை முடித்து மாலை, கோயில் குளத்தில் குளித்துவிட்டு குறுக்கு மாராப்போடு ஈரச்சேலையோடு ஊருக்குள் எந்தச் சலனமும் இன்றி வரும் வீரம்மா அத்தையிடம்தான் உடல் அரசியலின் நுணுக்கம் பயின்றேன். இதுபோன்று கிராமங்களில் குளித்துவிட்டுப் பெண்கள் வருவது இயல்பு. ஆனால், அப்படி வந்ததால் ஆண்களால் பாலியல் பலாத்காரம் நிகழ்ந்ததாக எந்தச் சம்பவமும் இல்லை. இன்னும்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

சொல்லப்போனால், 90-களின் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்காக ஹீரோயின்களை ஈரத்துணியோடு காட்சிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஆனாலும், கிராமங்களில் குளங்களில் குளிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இருந்தது.

ஆனால், `உச்ச நீதிமன்ற வளாகத்தில் நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டேன்’ என்று வெளிப்படையாகக் கூறுகிறார் இந்தியாவின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல். இந்திரா ஜெய்சிங்கின் அதிகாரம் அவரை பாலியல் தொந்தரவுகளில் இருந்து காப்பாற்றவில்லை. உண்மையாக உடல் சார்ந்த, பாலினம் சார்ந்த அதிகாரப் பகிர்வு இன்னும் பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் இந்திரா ஜெய்சிங்கிற்கு நேர்ந்த அநீதி நமக்கு உணர்த்தும் பாடம்.

என் அண்ணன் வீட்டின் முகப்புக்கூடத்திற்கு வரும் போது, அங்கு நான் எனக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், உடனடியாக அங்கிருந்து எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட வேண்டும் என்று சொல்லப்படாத, கட்டளையிடாத விதிகளுக்கு நடுவே வளர்ந்தவள் நான். ஆண்கள் முன்னால் பெண்கள் உட்காரக் கூடாது என்பது இன்னும் கிராமங்களில் எழுதப்படாத சட்டம்தான்.   ஐந்து பேரோடு பிறந்த எனக்குக் குடும்பமாக அமர்ந்து பேசி, உணவு சாப்பிட்டு, வெளி இடங்களுக்கு ஒன்றாகச் சென்று என அப்படியான ஒரு நெருக்கம் இல்லாமலே போனது. ஏன், ஒரு குடும்பப் புகைப்படம்கூட எடுத்துக்கொண்டது  கிடையாது.

மாதவிடாய் நாள்களில் தனி டம்ளர், தட்டு, போர்வைச் சகிதம் கொல்லைப்புறம் அமர்ந்து சாப்பாட்டிற்கும் மாற்று உடைக்கும் அம்மாவிடம் கையேந்தும் வழக்கத்தைக் கொண்ட ஊரில் அதனை உடைத்தெறிந்து மாதவிடாய் காலங்களிலும் வீட்டிற்குச் செல்லும் அனுமதியை நானேதான் எனக்கு உண்டாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. வீட்டில் எல்லோரும் தூங்கும்வரை வைக்கோல்போர் மறைவில் உட்கார்ந்திருந்து, பிறகு திண்ணையில் குளிரில் உறங்கி எல்லோருக்கும் முன்பாக எழுந்து திண்ணையைக் கழுவிவிட்டு கடுங்குளிரில் குளித்து உடை மாற்றி வீட்டிற்குள் நுழைவதெல்லாம் கிராமங்களின் விதி. உடல்ரீதியாகச் சந்திக்கும் வலியைவிட இந்தச் சடங்குகளில் ஒன்று தவறினாலும் அம்மாவிடம் வாங்கப்போகும் வசைக்குப் பயந்து அதில் காண்பிக்கும் அக்கறையே அதிகமாக இருக்கும்.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

அப்பா ஏதாவது வேலை சொல்ல நம்மை அழைக்கும்போது `வீட்டுக்கு தூரம், அவளுக்கு தீட்டு, அவள் தலைக்கு ஊத்திகிட்டா’ என்று அப்பாவை உஷார்படுத்துவார் அம்மா. ஊர்த் திருவிழா, பண்டிகை நாள்களில் மாதவிடாய் வந்துவிட்டால், வீட்டுக்குத் தரித்திரம் பிடித்தவள் என்கிற வசைபாடுகளோடு பெண்கள் படும் அவஸ்தையை என்னவென்று சொல்வது?

சொத்து சுகம் இருந்தாலும், கழிப்பறைகள் கட்டுவது தொடங்கி நாப்கின்கள் வாங்குவது வரை வீண் செலவு எனக் கணக்கிடும் கிராமங்களில் பெண்களின் வலியை உணர முயல்வதே மகத்தானதுதான் இல்லையா? பெண்களுக்கு இயல்பாக மாதந்தோறும் தோன்றும் மாதவிடாய் பிரச்னையை இன்றைக்கு இப்படியாக அணுகும் பழக்கம் இருக்கும்வரை ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வது என்பது சாத்தியமற்றது.

கிராமங்களில் மட்டுமல்ல, சென்னையிலும் பெண்களை அந்த நாள்களில் தொடக்கூடாது, தீட்டு என்று ஒதுக்கிவைப்பதும், தனியாகப் படுத்துறங்கச் சொல்வதுமான பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. மாதவிடாய் நாள்களில் வீட்டிற்குள் செல்லவே போராட்டம் நடத்தும் காலத்தில்தான் வடக்கில் திருப்திதேசாய், சபரிமலை ஐயப்பன் கோயில் தொடங்கி சனிசிக்னாப்பூர், ஹாஜ்யாலி முதலான வழிபாட்டுத் தலங்களுக்குள் பெண்களை அனுமதிக்கப் போராட்டம் நடத்துகிறார்.

15  வயதில் பருவம் எய்தியபோது, நாப்கின் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விடுதியில் உள்ள பெரிய கிளாஸ் அக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இன்று 10 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவம் எய்துகிறார்கள். ஐந்து வயது கடந்தாலே குழந்தைகளுக்கு நாப்கின் பயன்பாடு குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. `நானும் என் அண்ணனும் டி.வி பார்த்துக்கொண்டிருந்தபோது நாப்கின் விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டேன்’ என்று விடுமுறைக்குப் பின்னான விடுதி உரையாடலில் வினோ அக்கா எங்களிடம் பகிர்ந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் இன்று நிலைமை ஒரளவு மாறி இருக்கிறது. நாப்கினுக்கு 12  சதவிகித வரியை ரத்து செய்து ஜிஎஸ்டியில் வரி விலக்குக் கொடுங்கள் என்று நிதி அமைச்சகத்துக்கே பெண்கள் நாப்கின் அனுப்பும் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கே ஒதுக்கப்பட்ட கடைசி இருக்கைக்காக பலமுறை ஆண்களிடம் சண்டையிட்டு அமர்ந்திருக்கிறேன் அல்லது மற்ற பெண்களை அமரவைத்திருக்கிறேன்.

ஆண்கள் என்மீது கொலைவெறியோடு சண்டையிட்டுள்ளார்கள். மாதவிடாயின்போது தொலைக்காட்சிகளில் நாப்கின் விளம்பரத்தில் காண்பிப்பது போன்று மூன்று சொட்டோடு கர்ப்பப்பை நிறுத்திக் கொள்ளாது. அந்த அவஸ்தையோடு அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில், சிறு இளைப்பாறுதல் பெண்களுக்குத் தேவைப்படும். அதனை ஆண்கள் உணர்ந்தால், அது இருக்கைக்கான சண்டையில்லை என்பது புரியும்.
 
மீனோ, கறியோ அண்ணன்கள்  தட்டில் மட்டும் ஒரு துண்டு  அதிகம் விழவைக்கும் அம்மாவின் கைகள் எந்த உணவையும் சாப்பிட்டதே இல்லை. இதுதான் பெரும்பாலும் நம் எல்லா அம்மாக்களின் நிலை. குழந்தை வளர்ப்பில் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், உணவில் ஆரம்பித்து இரவு தாமதமாக வீடு திரும்புவது வரை காண்பிக்கப்படும் சலுகைகள் எல்லாம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான உணவு உண்ண நம் வீட்டுப் பெண்களைப் பழக்காமல், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறப்பது வெட்கக் கேடானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொல்வதாலோ அல்லது  இந்நாள் பிரதமர் மோடி ரேடியோவில் பேசுவதாலோ  தீர்வு கிடைக்கப்போவதில்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

எங்கள் ஊரில் போகிப் பொங்கலன்று மாலை வள்ளியம்மன் சாமி கும்பிடுவதற்காகப் பொங்கல் வைப்பார்கள். அந்தப் பொங்கலை ஆண்களே வைப்பார்கள். பருவம் எய்திய பெண்கள் விடுத்துக் குழந்தைகள் அல்லது மூதாட்டிகளுக்கு பொங்கல் வைக்க அனுமதி உண்டு. பொங்கல், வடை, பாயசம் என்று சமைத்து சாமி கும்பிட்ட பிறகு, அப்பாவிடம் ஒரு சாகசம் செய்த உணர்வு வெளிப்படும். சாமி கும்பிட்டபிறகு, பெண்கள் அதனைச் சாப்பிடலாம். வீட்டில் இறந்துபோன பெண்களுக்கான வழிபாட்டுமுறைதான் வள்ளியம்மன் சாமிக்கு பொங்கல் வைத்து கும்பிடும் பழக்கம். இவ்வளவு பயபக்தியாக இறந்த பெண்களுக்கு சாமி கும்பிடும் ஊரில்தான், பெற்ற பிள்ளையை ஆணவக் கொலை செய்வதும் நடைபெறுகிறது. ``வயசுக்கு வந்தப் பொம்பள புள்ள மேல கை நீட்டுற பழக்கம் என்ன இது?’’ என்று கடிந்து கொள்ளும் சமூகத்தில்தான் சுவாதிகள், வினோதினிகள் கொல்லப்படுகிறார்கள்.

அப்பா பொங்கல் வைப்பதை  சாகசம்போல் செய்வதுபோலவே சில ஆண்கள் அவர்களது வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். இங்கே இன்னும் ஆண்களுக்கான வேலைகளை அவர்களே செய்யப் பழகவே இல்லை. தாய், சகோதரி, மனைவி இப்படி ஏதாவது ஓர் உறவில் அந்த வேலைகள் பெண்களுக்கே பணிக்கப்படுகின்றன. கணவன்களின் உள்ளாடையைத் துவைக்கும் மனைவிகள் நிறைந்த நாட்டில் `ஒருநாள் உன் உள்ளாடையைத் துவைக்கக் கூடாதா?’ என்று பெண்களால் கேட்கப்படும் கேள்விகள் ஆண்களை எரிச்சலூட்டுகின்றன. மேற்கத்திய நாடுகளில் ஆண்களும் பெண்களும் அவரவர் வேலையை அவரவர் செய்யும் விதமாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

கொரியா,  ஸ்வீடன் , மொரீஷியஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாலினச் சமத்துவத்திற்கென தனி அமைச்சகம் செயல்படுகிறது. அந்த அமைச்சகம் பாலினச் சமத்துவம் சார்ந்த விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் மேம்பாடு அனைத்தையும் கவனித்துக் கொள்கிறது. இப்படியான  ஓர் அமைச்சகம் இந்தியாவின் உடனடித் தேவையாக இருக்கிறது. நிர்பயாக்களுக்கு மெழுகுவத்தி ஏந்துவதைவிட இப்படியான ஓர் அமைச்சகத்தை உடனே ஏற்படுத்துவதுதான் நிர்பயாக்களுக்கான முழுமையான அஞ்சலியாக இருக்க முடியும். 

அரசால் அமைக்கப்படும் திட்டங்கள் மற்றும் மேம்பாடு  சார்ந்த அனைத்துக் குழுவிலும் பெண்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதை இதுவரை சிந்தித்துக்கூட பார்த்ததில்லை. பெண்கள் ஆளும் மாநிலங்களில்கூட இது நடைமுறையில் இல்லை. பெண்கள் உறுப்பினர்களாக இருக்கும்போதுதான் பெண்களுக்கான உரிமைகள் சார்ந்து திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

சமீபத்தில், ஸ்கேண்டினேவியன் நாடுகளில் ஸ்னோஒயிட் போன்ற பெண்களை அழகுப்பொருட்களாக மட்டுமே உருவகிக்கிற கற்பனையான தேவதைக் கதைகளைப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாலினச் சமத்துவம், ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் என்று காலமாற்றத்திற்கு ஏற்ற புதுமையான கதைகளைக் கல்வியாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வாழ்வியலில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கதைகளாகப் பாடங்களில் வைப்பதனால், யதார்த்தக் களத்தில் அந்தக் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று அந்நாட்டு அரசுகள் நம்புகின்றன.

சமீபத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வில் பாலின சமத்துவம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்கிறது. அப்பா இறந்து விடுகிறார். மகன் மருத்துவமனைக்கு ஆபத்தான கட்டத்தில் கொண்டு செல்லப்படுகிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ‘இவன் என் மகன், என்னால் மருத்துவம் பார்க்க முடியாது’ என்று மறுத்துவிடுகிறார். `அப்படி என்றால் அந்த மருத்துவர் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நீங்கள் என்ன பதில் யோசிக்கிறீர்கள்? அந்தக் கேள்விக்கான பதில், அந்த மருத்துவர் அந்தச் சிறுவனின் தாயார். மருத்துவர் என்கிற சொல்லைக் கேட்டதும், ஏன் நமக்கு ஓர் ஆணின் உருவமே மனதில் எழுகிறது? இப்படியான யதார்த்தமான பாலினம் குறித்த புரிதலை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களே இன்றைய தேவை.

பெண்கள் கல்வி அறிவு பெற்றுவிட்டார்கள். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக் குறியீட்டில் பெண்களின் பங்கும் இருக்கிறது. இருப்பினும் இன்னும் முறையாக, திறமையான ஆண்களுக்கு நிகரான ஊதியம் கிடைப்பதில்லை. பெண்களின்  சுயச்சார்பை உணர்ந்தாலும் ஆண்கள் இன்னும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், பெண் எதிர்க்கேள்வி கேட்டால் கோபம் வருகிறது. இதன் நீட்சிதான், அதிகமான பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம் குடும்ப நல நீதிமன்றங்களில் நிற்கின்றன.
 
உலக மானுடம் ஆண் – பெண் என இரண்டு சிறகுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பெண் சிறகு சற்று பலவீனமாக இருக்கிறதென்றால், உயரப் பறப்பதில் சிக்கல் ஏற்படும். சிறகுகள் சமமாக இருக்கும்போதுதான் எல்லை கடந்து பரந்து விரியும், அங்கிருந்தே தொடங்கும் ஒரு தேசத்தின் நீடித்த ஒருங்கிணைந்த வளர்ச்சி...

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

பிள்ளை பெறுவதனாலேயே மொத்த ஜனத்தொகையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அநேக ஆபத்துகளுக்கும், வியாதிகளுக்கும் உள்ளாகி, அற்ப ஆயுளுடன் கஷ்டமும் பட வேண்டியதாகியுள்ளது. அவர்களது வாழ்வே பரிதவிக்கத்தக்கதாக முடிகின்றது.

– தந்தை பெரியார் (குடியரசு இதழ் 14.12.1930)

ஆண்பால் பெண்பால் அன்பால் - 42

னது காடுகளை, ஆறுகளை, வயல்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான அடிப்படை, இயற்கையிடம் தொடர்ந்து இருக்கிறது. இதைப் பேணி காப்பதில் இயற்கையோடு இணைந்து பணியாற்றிய பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

-வந்தனா சிவா (`உயிரோடு உலாவ’ நூலில்)