Published:Updated:

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

மறக்கடிக்கும் டிமென்ஷியா!
பிரீமியம் ஸ்டோரி
மறக்கடிக்கும் டிமென்ஷியா!

பாலு சத்யா

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

பாலு சத்யா

Published:Updated:
மறக்கடிக்கும் டிமென்ஷியா!
பிரீமியம் ஸ்டோரி
மறக்கடிக்கும் டிமென்ஷியா!

சுசீலாம்மாவுக்கு 67 வயது. நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்தார். இது என்ன இடம், ஏன் இங்கு வந்தோம், எப்படி வந்தோம், யாரைப் பார்க்க வந்தோம், நம்முடன் யார் வந்தார்கள்? எதுவும் நினைவில் இல்லை. மீண்டும் எப்படி வீட்டுக்குப் போவது, வீடு எங்கே இருக்கிறது? எதுவும் ஞாபகத்தில் இல்லை. இத்தனைக்கும் அது ஒன்றும் புதிய இடம் அல்ல. 40 வருடங்களாக வாழ்ந்த இடம். அவர் நின்றுகொண்டிருந்தது, அவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்!

***

ராமசுப்புவுக்கு வயது 65. ஒருநாள் குளியலறைக்குள் சென்றார். குளித்தார். அதை மறந்துபோனார். துண்டைக்கூடக் கட்டாமல் வெளியே வந்து நின்றார். பார்த்த மருமகள் அலறினார். தன்னிடம் தவறாக நடக்க ஆயத்தமாகிறார் என்பது மருமகளின் எண்ணம். சிக்கல்கள் தொடர்ந்தன. வீட்டில் வேலை செய்யும் பெண், மனைவி எல்லோரையும்  மோசமான வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்.  சாப்பிடுவார்; அதை மறந்துவிட்டு `என்னை யாரும் கவனிக்க மாட்டேங்கிறாங்க... சோறுகூட போடுறதில்லை’ என ஆர்ப்பாட்டம் செய்வார். இவர் வேண்டுமென்றேதான் இப்படியெல்லாம் செய்கிறார் என நினைத்தார் அவர் மனைவி.

***

`இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணம், `டிமென்ஷியா’ என்கிற மறதி நோய் என்கிறார்கள் மருத்துவர்கள். `உலக அளவில் 4 கோடியே 70 லட்சம் பேர் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2030-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7 கோடியே 50 லட்சமாக உயரும்; 2050-ம் ஆண்டில் இதுவே மூன்று மடங்காக உயர்ந்திருக்கும்’ என உலக சுகாதார நிறுவனம்  தரும்  புள்ளிவிவரம் கதிகலங்க வைக்கிறது.
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பவர்களின் நிலை இன்னும் மோசம். உடல், மனம், பொருளாதார ரீதியான அழுத்தங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

``மனிதர்களுக்கு மூன்று விஷயங்கள் முக்கியமானவை. கற்றுக்கொள்வது, கற்றதை நினைவில் வைத்துக்கொள்வது, நினைவில் வைத்திருப்பதைத் திரும்ப ஞாபகத்துக்குக் கொண்டுவருவது. பழையகால நினைவுகளை `Long term memory’ என்று சொல்லலாம். ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் அதைச் செய்துவிடுவோம். சாப்பிடுவது என்கிற செயலை எடுத்துக்கொள்வோம். சாப்பாட்டைப் பிசைந்து, கையில் இருந்து வாய்க்குக் கொண்டு போக வேண்டும். இதைத் திரும்பத் திரும்பச் செய்வதால், நம்

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

மூளையில் பாதிப்பு இருந்தால்கூட பழக்கதோஷத்தின் காரணமாக அந்த நினைவு இருக்கும்.

புதிதாகக் கற்றுக்கொண்ட விஷயங்கள் டிமென்ஷியா வந்தால் மறந்துபோய்விடும். மூளையின் மடிப்புகள் நம் உடம்பின் தலை முதல் கால் வரை சார்ந்திருப்பவை. அந்த மடிப்புகள் குறையும்போது, ஞாபக மறதி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 60 வயதுக்கு மேல் நினைவுத்திறன் குறையும். வயதாக, வயதாக தசைகளில் சுருக்கங்கள் ஏற்படுவது மாதிரி, மூளையிலும் மடிப்புகள் குறைந்து, பல விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும். இது, சாதாரணமாக முதுமையில் ஏற்படும் பிரச்னை.

சிலருக்கு முதுமை வருவதற்கு முன்பாகவே ஞாபகமறதி வந்துவிடும். அதாவது, 60 வயதுக்காரருக்கு 80 வயதுக்கான ஞாபகமறதி வந்துவிடுகிறது. இதுதான், `டிமென்ஷியா’ ’’ என்கிறார்  பிரபல மனநல மருத்துவர் அசோகன்.

வயதான காலத்தில் ஏற்படும் மன வருத்தங்களால் முக்கியமான நான்கு பிரச்னைகள் உண்டாகின்றன. மன அழுத்தம் (Depression),  சித்த பிரமை (Delirium), மருட்சி என்கிற சந்தேக நோய் (Delusion) நான்காவதாக, டிமென்ஷியா.

 ஓராண்டில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புதிதாக 99 லட்சம் பேர் கண்டறியப்படுகின்றனர். அதாவது  மூன்று நொடிக்கு ஒருவர் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார்.

`` உச்சக்கட்ட மன அழுத்தத்தில் சில முதியோருக்கு எண்ணங்கள் உருவானாலும், அதைச் செயல்படுத்தக்கூடிய சக்தி இருக்காது. சைக்காலஜியில் `பாவர்ட்டி ஆஃப் கன்டென்ட்’ என்று (Poverty of content) சொல்வார்கள். மனிதன் நிமிடத்துக்கு 140 வார்த்தைகள் பேசலாம். ஆனால், அதைவிட அதிகமான அளவுக்கு சிந்திக்கிறோம்.  மன அழுத்தத்தில் இருக்கும்போது, மிகக் குறைவாக யோசிப்போம்; வெளிப்படுத்தும் விதமும் மாறுபடும். பத்துக் கேள்விகள் கேட்டால், ஒரே ஒரு வார்த்தையைத்தான் பதிலாகச் சொல்வோம். இப்படியான மன அழுத்தத்தின் தீவிர நிலை, மறதி நோய் மாதிரியே இருக்கும். இதை `Pseudodementia’ என்று சொல்வோம்.

வயதான காலத்தில் நினைவு தப்பி, ஞாபக மறதியில் இருக்கிறார்கள் என்றால், முதலில் அவர்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டால், அவர்களுக்கு முழுமையாக ஞாபக சக்தி வந்துவிடும். பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், டிமென்ஷியாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமே தவிர, பாதிக்கப்பட்டவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது.’’ என்கிறார் மருத்துவர் அசோகன். 

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

உண்மையான டிமென்ஷியா, மூளையின் எல்லா நரம்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மூளையின் செயல்பாட்டுத்திறன் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, முழுமையாகக் குறைந்துபோய்விடும். இந்தப் பாதிப்பு வந்தவர்களை இரண்டு வயதுக் குழந்தையைப் பார்த்துக்கொள்வது மாதிரிதான் பராமரிக்க வேண்டியிருக்கும். குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, காலைக்கடன் முடிப்பது  என எல்லாவற்றுக்கும் ஒருவர் கூடவே இருந்து உதவ வேண்டும்.டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென்று சமையல் கேஸை ஆன் பண்ணிவிடுவார்கள். யாராவது கேட்கிறார்கள் என்று நகையைக் கழற்றிக் கொடுத்துவிடுவார்கள். கதவைத் திறந்துவைத்துவிட்டுப் போய்விடுவார்கள். தாங்கள் என்ன  செய்கிறோம் என்பதை அறிய மாட்டார்கள். இந்த நிலை அவர்களுக்கும் ஆபத்தானது; மற்றவர்களுக்கும் ஆபத்தானது.

மறக்கடிக்கும் டிமென்ஷியா!

டிமென்ஷியா வராமல் தடுக்க முறையான வாழ்க்கை முறை அவசியம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரையெல்லாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எளிமையான, பிரச்னை இல்லாத வாழ்க்கை, கட்டுப்பாடான உணவுப் பழக்கம்,  உடற்பயிற்சிகள் மேற்கொள்வது... இவையெல்லாம் இருந்தால், வாழ்க்கைத் தரம் நன்றாக இருக்கும். உறவினர்களுடனான உறவு நன்றாக இருக்க வேண்டும். பலவித ரசனை இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற காலத்தில்தான் ஒருவருக்கு இந்த ரசனைகள் உபயோகப்படும். சினிமா பார்க்கலாம். நண்பர்களோடு பேசலாம். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒரு செடியை வளர்ப்பதுகூட பலன் தரும். விவசாயம் செய்யலாம்.

தற்போதைய நிலவரப்படி, டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஓர் ஆண்டுக்கு 818 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்படுகிறது. டிமென்ஷியாவைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்தின் விலை மிக அதிகம்.  இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவரை அழைத்துவர இரண்டு பேர் வேண்டும். எனவே, மருத்துவச் செலவைவிட, பராமரிப்புச் செலவு அதிகமாகும். 
 
``அரசும், தனியார் மருத்துவமனைகளும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சைக் கொடுக்க முன் வர வேண்டும். இவர்களுக்கு  இல்லம்,  வார்டு,   மருத்துவமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்.  இன்றைக்கு இருக்கும் பச்சை இலை, நாளை பழுப்பு இலை. இவர்கள் சருகாகாமல் இருக்க இது மட்டும்தான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி’’ என்கிறார் அசோகன்.
 
டிமென்ஷியா குறித்த விழிப்புஉணர்வும், வெளிப்படைத்தன்மையும் நம் சமூகத்தில் அதிகரித்தால்தான், பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களைப் பார்த்துக்கொள்பவர்களையும் சரி சமமாக, ஒரு மனிதனாக நடத்தும் பண்பு உருவாகும். அதுவே உடனடித்தேவை.