Published:Updated:

“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”

“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”

வெ.நீலகண்டன், படம்: அ.குரூஸ்தனம்

“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”

வெ.நீலகண்டன், படம்: அ.குரூஸ்தனம்

Published:Updated:
“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”

பூங்கொத்துகள் குவிகின்றன. மொபைல் போன், வாழ்த்துகளால் ஸ்தம்பிக்கிறது. மாறாத புன்னகையோடு அனைவரையும் எதிர்கொள்கிறார் மனுஷி பாரதி. இந்த ஆண்டுக்கான இளம் சாகித்ய அகாடமி (யுவ புரஸ்கார்) விருது, `ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’ என்ற கவிதை நூலுக்காக மனுஷி பாரதிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் பிறந்த ஜெயபாரதிதான் இந்த மனுஷி பாரதி. கிராமத்திலிருந்து கல்லூரியைத் தொட்ட முதல் தலைமுறை மனுஷி. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், பாரதியாரையும் தாகூரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துவருகிறார்.  

``இதை நான் எதிர்பார்க்கல. இதுபோன்ற ஒரு சந்தோஷத்தை முதலில் குடும்பத்தில் உள்ளவர்களிடம்தான் பகிர்ந்துக்கணும். ஆனால், நான் `மனுஷி பாரதி’ என என்  பெயரை மாற்றியதோ, கவிதைகள் எழுதுவதோ என் குடும்பத்துக்குத் தெரியாது. `வேலை கொடுப்பாங்களா... பணம் கொடுப்பாங்களா?’ என்றுதான் கேட்பார்கள். அவரவர் பாடு அவரவர்களுக்கு” எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் மனுஷி.

மூன்று கவிதை  நூல்களை எழுதியிருக்கிறார் மனுஷி. முதல் தொகுப்பு, `குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’. மூத்த படைப்பாளிகள் மத்தியில் நல்லதொரு கவனத்தை உருவாக்கியது.  `முத்தங்களின் கடவுள்’, இரண்டாவது தொகுப்பு.  `ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள்’, 2015-ம் ஆண்டில் உயிர்மை வெளியீடாக வந்தது. 

“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்!”

தொழில்நுட்பங்களும் வளர்ச்சியும் பெண்களின் மீது நிகழ்த்தும் வன்முறைகளை, பெண்களின் மீதான ஆணாதிக்கத் தாக்குதல்களை, தன் இயல்பான வெள்ளந்தி மொழியில் பதிவுசெய்கிறார் மனுஷி.

``கவிதை, இலக்கியம் இவையெல்லாம் எனக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு வந்தபிறகுதான் அறிமுகம். இந்த இடத்துக்கு வர, நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். தாயின் சூடு உணராத பிள்ளை நான். என்னுடைய பத்து வயசுக்குள் அம்மாவை இழந்து விட்டேன்.  அப்பாவுடன் ஒட்டுதல் இல்லை. அக்காதான் அம்மாவாக இருந்து என்னை வளர்த்தாள். அவளுக்கும் அந்தக் கிராமம்தான் உலகம்.

 எங்கள் ஊர் பெண்களுக்கு, பத்தாம் வகுப்புக்குமேல் படிப்பு வாய்க்காது.  இருப்பினும், `எப்படியும் ஊரைக் கடந்து வெளியூர் சென்று படித்துவிட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளிக் காலத்திலேயே சிறுவர்களுக்கு டியூஷன் நடத்தி, அதன்மூலம் கிடைத்த காசைச் சேர்த்துவைத்தேன். தட்டுத்தடுமாறி பட்டப்படிப்பை முடித்தேன்.

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ சேர்ந்தபிறகுதான், இப்படியொரு வெளிச்சமான உலகம் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. `இப்படிப் படிக்கிறேன்... படிக்கிறேன்னு போயி வாழ்க்கையை வீணடிக்கிறாளே’ என்று அக்காவுக்குக் கவலை. விடுதியில் தங்கினேன். எனக்கான தேவைகளுக்காக, கிடைத்த நேரத்தில் பேராசிரியர்களின் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தேன். 

அந்தக் காலகட்டம்தான் என்னை வாசிப்புக்குள் தள்ளியது. தனிமை, குழப்பம், விரக்தி எல்லாமும் என்னை வதைக்கத் தொடங்கிய சூழலில் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். புத்தகங் களுக்குள் எனக்கான எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு இருந்தது. பக்குவத்தையும் கொடுத்தது.

என் மொழிதான் என் கவிதைகளின் மொழி. என் முகம்தான் என் கவிதைகளின் முகம். என் அனுபவங்கள் அல்லது ஏதோ ஒரு ஜெயபாரதியின் அனுபவங்கள்தான் எல்லாம். `முத்தங்களின் கடவுள்’ எழுதிய நேரம், மிகக் கடினமான காலகட்டம்.  சில துரோகங்கள்  என்னை வாழ்க்கையின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியது. அங்கிருந்துதான் அந்தக் கவிதைகளை எழுதினேன். `ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகளில்’ இருப்பது பண்பட்ட பாரதி. எல்லாவற்றையும் எளிதாக, ஒரு புன்னகையோடு, அலட்சியத்தோடு கடந்துபோகப் பழகிய பாரதி.

எனக்கு இந்த இலக்கிய உலகத்திடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஒரு பேராசிரியை ஆகவேண்டும். என் கிராமத்திலிருந்து உருவாகும் முதல் பேராசிரியை, சாப்பாட்டுக்கான உழைப்பைக் கடந்து கனவுகளுக்காக, லட்சியங்களுக்காக உழைக்கும் ஒரு தலைமுறையை என் கிராமத்தில் உருவாக்க வேண்டும். அதில்தான் நான் ஜெயிக்க நினைக்கிறேன். 

`என் புன்னகையை
வேரொடு பிடுங்கிச்
சென்றுவிட்டபோதும்
மீண்டும் என்னால்
புன்னகைக்க முடிகிறது
உன்னைக் கொல்ல வேறு வழியில்லை எனக்கு!’
’’ கவிதையோடு முடிக்கிறார் மனுஷி பாரதி!