Published:Updated:

கதறும் கதிராமங்கலம்!

கதறும் கதிராமங்கலம்!
பிரீமியம் ஸ்டோரி
கதறும் கதிராமங்கலம்!

வெ.நீலகண்டன், மு.நியாஸ் அகமது, படங்கள்: கே.குணசீலன்

கதறும் கதிராமங்கலம்!

வெ.நீலகண்டன், மு.நியாஸ் அகமது, படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
கதறும் கதிராமங்கலம்!
பிரீமியம் ஸ்டோரி
கதறும் கதிராமங்கலம்!

டைத்தெரு வெறிச்சோடிக் கிடக்கிறது. எதிர்ப்புக்கு அடையாளமாக ஆங்காங்கே, கருப்புக்கொடிகள் கிழிந்து தொங்குகின்றன. போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மொத்தச் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன. இன்னும்கூட அறிவிக்கப்படாத தடையுத்தரவு  கதிராமங்கலத்தில் அமலில் இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திருவிடைமருதூரை ஒட்டியிருக்கிறது கதிராமங்கலம். நருவெளி, குணதலைப்பாடி ஆகிய சிறு கிராமங்களை உள்ளடக்கியது கதிராமங்கலம் ஊராட்சி. சுமார் 10,000 பேர் வசிக்கிறார்கள். கிழக்கு நோக்கி நீண்டுவரும் காவிரி இக்கிராமத்தில் வடக்கில் திரும்பி பூம்புகார் நோக்கிப் பயணிக்கிறது. அதனால், தங்களூர் காவிரியை `வடகாவிரி' என்று கொண்டாடுகிறார்கள் மக்கள். காவிரியில் இருந்து பிரியும் விக்கிரமனாறு, வேலூர் வாய்க்கால், மயிலம் வாய்க்கால் எனக் கிராமத்தின் எல்லாப் பக்கங்களையும் சூழ்ந்திருக்கின்றன நீர் நிலைகள். சமீபகாலம்வரை இருபோக நெல், வாழை, உளுந்து, பாக்கு என 360 வேலி நிலப்பரப்பில் இங்கு வேளாண்மை நடந்தது. 

கதறும் கதிராமங்கலம்!

வேளாண்மை மட்டுமல்ல... தமிழும் தளைத்திருக்கிறது இந்த மண்ணில். சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். கம்பனும் ஒட்டக்கூத்தனும் வாழ்ந்த மண். மிருகண்ட முனிவர் வணங்கிய வனதுர்க்கை இங்குதான் இருக்கிறாள். கம்பர் வணங்கிய வைரபுரி காளியம்மன், தட்சிண திருப்பதி, கருப்பர், அய்யனார், மாரியம்மன் என வீதிக்கு ஒரு கோயில்; மாதத்திற்கு ஒரு திருவிழா என்றிருந்த இந்த மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு பெரும் பதைபதைப்பில் ஆழ்த்தியிருக்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். பசுமை மணந்த இந்த மண்ணில் இப்போது எண்ணெய் வாசனை.  ஆங்காங்கே குளமும் குட்டையுமாகத் தேங்கியிருக்கிறது எண்ணெய் மிதக்கும் கழிவு நீர்.

குடியிருப்புக்கு அருகில், கோயிலுக்கு அருகில், கடைத்தெருவுக்கு அருகில் எனக் கதிராமங்கலத்தின் உள்ளே நான்கு இடங்களிலும், ஊரைச்சுற்றி ஏழு இடங்களிலும் கிணறுகள் அமைத்து எரிவாயுவும், கச்சா எண்ணெயும் எடுத்துக் கொண்டிருக்கிறது ஓ.என்.ஜி.சி. கிராமத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு 'கிர்'ரென்ற ஒலியோடு இயங்கிக் கொண்டிருக் கின்றன இந்தக் குழாய்கள். நரம்பு மண்டலத்தைப் போல நிலத்துக்குக் கீழே வாயுவையும், எண்ணெயையும் சுமந்துகொண்டு குத்தாலம் வரைக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன குழாய்கள்.

`மண்ணெண்ணெய் எடுக்கிறோம்' என்று வந்தவர்களை, `நல்ல விஷயம்தானே' என்று அனுமதித்திருக்கிறது கதிராமங்கலத்து மூத்த தலைமுறை. 1990-களில் முதல் குழாய் ஊன்றப்பட்டது. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை வெடிவைத்துத் தகர்த்துக் குழாய்களைச் செருகிய வன்முறையைக் கண்டு திகைத்துப் போனார்கள் மக்கள். ஆனாலும், `நம் ஊரில் கிடைக்கும் எண்ணெயால் நாட்டுக்கு நல்லது நடப்பது பெருமைதானே' என்று சகித்துக்கொண்டார்கள். இப்படித் தோண்டப்பட்டு ஊன்றிய குழாய்களால், ஏற்பட்ட விளைவை இந்தத் தலைமுறை உணரத் தொடங்கிவிட்டது. பத்தடி, பதினைந்து அடிக்கெல்லாம் ஊறிப்பாய்ந்த தண்ணீர், 70 அடி, 100 அடிக்குக் கீழே இறங்கிவிட்டது. தெள்ளத்தெளிவாக, கண்ணாடிபோல வந்த நீர் இப்போது மஞ்சள் நிறத்தில் வருகிறது. ஆயில் வாடை. குடிக்க முடியவில்லை.

``வீடுகட்ட அடித்தளம் தோண்டுனாவே தண்ணீர் ஊறிடும். அந்த அளவுக்கு வளமான நிலம் இது. அவ்வளவு சுவையாவும், சுத்தமாவும் இருக்கும். முதல்ல கிணறு வத்திச்சு. அடி பைப் போட்டோம். அதுவும் வத்திப்போச்சு. இப்போ போர் போடுறோம். அதுலயும் தண்ணி மஞ்சள் கலர்ல வருது. இதை மோந்து பாருங்க... நாத்தம் பொறுக்காது. இதை எப்படிக் குடிக்கிறது,  எங்கெல்லாம் குழாய் பதிச்சு வெச்சிருக்கானோ, அதைச்சுற்றி இருக்கிற நிலமெல்லாம் வறண்டு போச்சு. உள்ளே இருந்து வர்ற கழிவுநீரைப் பக்கத்துல பள்ளம் தோண்டி தேக்கி வெச்சிருக்காங்க. மழை பேஞ்சா, எல்லாம் ஒண்ணாக் கலந்து வெளியில பரவிடுது. அந்த கழிவு நீர் விஷம் மாதிரி இருக்கு. கழிவு நீர் பட்ட இடம் புல்லு பூண்டுகூட முளைக்க  மாட்டேங்குது. ஏகப்பட்ட தென்னை மரங்கள் பட்டுப்போச்சு...’’ தண்ணீரை அள்ளிக்காட்டியபடி ஆவேசமாகப் பேசுகிறார் ஊரைச்சேர்ந்த நமச்சிவாயம்.

கதறும் கதிராமங்கலம்!

தண்ணீர் வீணாகி, வேளாண்மை பாதிக்கப்பட்டு ஏற்கெனவே வெறுப்பில் இருந்த மக்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது ஓ.என்.ஜி.சி. நிறுவனம். ``கடந்த மே 15-ம் தேதி கடைத்தெருவை ஒட்டி இரண்டாண்டுகளாக இயங்காமல் இருந்த எண்ணெய்க் கிணற்றின் வளாகத்திற்குள் ராட்சத இயந்திரங்களையும், குழாய்களையும் திடீரென கொண்டுவந்து இறக்கியது ஓ.என்.ஜி.சி. இது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பியபோது, மராமத்துப் பணிகள் செய்ய வந்ததாகச் சொன்னார்கள். ஆனால், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவல்துறையைக் களத்தில் இறக்கியது.

கதறும் கதிராமங்கலம்!

ஜூன் 1-ம் தேதி இரவு ஒன்பது டி.எஸ்.பி-க்களின் தலைமையில் ஏராளமான போலீஸார் கதிராமங்கலம் கிராமத்தில் குவிக்கப்பட்டார்கள். `மிஷன் கதிராமங்கலம்' என்ற பெயரில் களத்தில் இறங்கியிருக்கிறது காவல்துறை. தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனங்கள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் வாகனம், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கொண்டுவந்து நிறுத்தப் பட்டன. ஊரைச்சுற்றி அத்தனை எல்லைகளிலும் தடுப்புகள் போட்டு யாரும் உள்ளே நுழையாமலும், வெளி யேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். கிராமத்தில் 144 தடையுத்தரவு போட்டிருப்பதாக வதந்தி பரப்பினார்கள். இரண்டாம் தேதி விடியலில் தங்கள் வீட்டு வாசலில் கையில் தடியோடு காவலர்கள் நிற்பதைப் பார்த்து மிரண்டு விட்டார்கள் மக்கள். வீட்டில் இருந்த பெண்களைக் கடுமையாக மிரட்டியபடி ஓ.என்.ஜி.சி.-யைக் கண்டித்து வீட்டின் முன் கட்டியிருந்த கருப்புக்கொடிகளைக் கிழித்து எரிந்தது காவல்துறை. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 10 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து,  மக்களையும் ஒடுக்கிவிட்டு வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிட்டது ஓ.என்.ஜி.சி. ’’ என்கிறார் கதிராமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் தர்மராஜ்.

கதறும் கதிராமங்கலம்!

எரிவாயுக் குழாய்களால், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கதிராமங்கலத்தில் உள்ள நருவெளி பகுதிதான். காவிரிக்கும், விக்கிரமனாறுக்கும் நடுவில் இருப்பதால், `நடுவழி'யாக இருந்து `நருவெளி'யாகி விட்டது. இக்கிராமத்தின் தண்ணீர் மொத்தமும் வீணாகி விட்டது. தண்ணீர் பிடிக்கும் பாத்திரங்களே  சிவப்பு நிறம் பூத்துக் கிடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பாக மக்களை சமாதானப்படுத்துவதற்காகப் பஞ்சாயத்தில் குடிநீர்க் குழாய் பதித்துச் சென்றிருக்கிறார்கள். இப்பகுதியில் மூன்று முறை எரிவாயுக் குழாய்கள் வெடித்து விபத்துகள் நடந்திருக்கின்றன. ஒருமுறை ஒரு பெண் கடும் தீக்காயமுற்று மீட்கப்பட்டிருக்கிறார்.

``எங்க ஊருல பெரும்பாலான வீடுகள்ல கழிப்பறை இல்லை. அதோ அந்த ஆலமரம் பக்கம்தான் போவோம். அதுக்குக் கீழே எரிவாயுக் குழாய் போகுது. ஒருமுறை, எங்க மாமியார் ஜெயலட்சுமி அந்தப் பக்கமா போயிருந்தப்போ, குழாய் வெடிச்சி தீப்பிடிச்சுடுச்சு. முகம் கையெல்லாம் கருகிப்போச்சு. அதுக்கப்புறம் ஓ.என்.ஜி.சி. அதிகாரிங்கதான் தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப்போய் காப்பாத்தினாங்க. ஆனா, அடிக்கடிக் குழாய்கள்ல தீப்பிடிக்கும். ஒருமுறை எண்ணெய் மாதிரி கொப்புளிச்சு வந்துச்சு. குழந்தை குட்டிகளை வெச்சுக்கிட்டு உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கோம்...’’ என்று கண்கலங்குகிறார் ஜெயலட்சுமியின் மருமகள் ஹேமா.

``இப்பவும் நாலுபேரு கூடிநின்னு பேசினா, என்னடா பண்றீங்கன்னு போலீஸ் கேக்குது. யூனிஃபார்ம் போடாம நிறைய போலீஸ்காரங்க எங்க ஊரைச் சுத்தி வர்றாங்க. போராட்டத்துல நின்னதால என்னைத் தனியாக் கூட்டிக்கிட்டுப் போய், 'தீவிரவாதின்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவோம்'னு மிரட்டுனாங்க. `நான் இந்த மண்ணோட பிள்ளை. இதைக் காப்பாத்துறது என்னோட கடமை.  நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சுக்கங்க'ன்னு சொல்லிட்டேன்...’’- என ஆவேசப்படுகிறார் 20 வயது அரவிந்த் லெமூரியன். கோவையில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த அரவிந்த், தன் கிராமத்தில் பிரச்னை என்றவுடன் பதறிக் கிளம்பி வந்திருக்கிறார். அவரைப்போல வெளியூரில் வேலை பார்த்த நிறைய இளைஞர்கள் கதிராமங்கலம் திரும்பியிருக்கிறார்கள். அனைவரும் ஓரே குரலில் `தங்கள் மண்ணில் இருந்து ஓ.என்.சி.ஜி. நிறுவனம் வெளியேற வேண்டும்' என்கிறார்கள்.

கதறும் கதிராமங்கலம்!

ஓ.என்.ஜி.சி. நிறுவனம், கதிராமங்கலத்தில் புதிய திட்டம் எதையும் தொடங்கவில்லை என்று அறிவித்திருக்கிறது. மராமத்துப் பணிகள் மட்டுமே செய்ததாகச் சொல்கிறது. ஷேல் கேஸ் எடுக்கும் திட்டமே தங்களுக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறது. ஆனால், அதை கதிராமங்கலம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஆதாரங்களுடன் பேசுகிறார்கள்.

``சுற்றுச்சூழல் துறைக்கு 25.6.2015 அன்னைக்கு  ஓ.என்.ஜி.சி. ஒரு கடிதம் அனுப்பியிருக்கு. அதில் `17 பிரையாரிட்டி பிளாக்குகளில் ஷேல் குழாய் அமைக்க எங்களுக்கு அனுமதி வேண்டும்'னு கேட்டிருக்காங்க. அதில் 17-வது பிளாக் பெயர், குத்தாலம். கதிராமங்கலம், குத்தாலம் பிளாக்லதான் வருது. 2013-லேயே இந்தியா முழுவதும் காவிரிப்படுகை உள்ளிட்ட  ஐந்து படுகைகளில் ஷேல் எரிவாயு எடுக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவித்தும் விட்டது. இதற்காக, முதற்கட்டமாக காவிரிப்படுகையில் ஒன்பது இடங்களில் குழாய்கள் அமைக்கிற பணி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குக் கொடுத்திருக்காங்க. 2017, மார்ச் மாதத்திற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்பது உரிமத்தில் தரப்பட்டிருக்கும் காலக்கெடு. பழைய குழாய்கள் போட்டிருக்கும் வளாகங்களில் ஷேல் கேஸுக்கு புதிய குழாய்கள் அமைக்கவும் அனுமதி பெற்றிருக்கிறது  ஓ.என்.ஜி.சி. மக்கள் திரண்டதால், மராமத்துப் பணி என்று மாற்றிச் சொல்கிறார்கள். காவிரி டெல்டாவில் இனி ஒரு குழாய்கூட புதிதாகப் புதைக்க முடியாது. உயிரைக் கொடுத்தேனும் நிலத்தைப் பாதுகாப்போம்...’’ என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன்.

இது குறித்து, ஓ.என்.ஜி.சி. மக்கள் தொடர்பு அலுவலரைத் தொடர்புகொண்டு பேசினோம். “ஓ.என்.ஜி.சி. எப்போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மட்டுமே முன்னெடுக்கும். மக்களுக்கு எதிராக எதையும் செய்யாது. மக்கள் அச்சப்படுவதுபோல கதிராமங்கலத்தில்  மீத்தேனோ, ஹைட்ரோ கார்பனோ எடுக்கவில்லை. ஏற்கெனவே இங்கு போட்ட குழாய்களை மராமத்து மட்டுமே செய்திருக்கிறோம். மக்கள் தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள். ஓ.என்.ஜி.சி எப்போதுமே மக்களுக்கானதுதான். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என சிம்பிளாகச் சொல்கிறார்.

காவிரிதான் டெல்டாவின் ஜீவாதாரம். காவிரியைத் தடுத்தால் விவசாயம் நடக்காது. விவசாயம் இல்லாவிட்டால், மக்கள் இடம்பெயர்ந்துவிடுவார்கள். கீழே புதைந்து கிடக்கும் நிலக்கரியையும், வாயுக்களையும் அப்படியே அபகரித்துவிடலாம் என்பதுதான் திட்டம் என்கிறார்கள் இப்பகுதி இளைஞர்கள். 

இது நிஜமாகிவிடக் கூடாது!