Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

#MakeNewBondsஆதிரன், படங்கள்: சி.சுரேஷ் பாபு, அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

#MakeNewBondsஆதிரன், படங்கள்: சி.சுரேஷ் பாபு, அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 43
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

`பெண்கள், மனிதகுலத்தின் சிறப்பான பாதி’ எனச் சொன்ன தேசத்தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைப்போல கடுமையான ஓர் ஆணை மனித வரலாற்றில் இனம் காண்பது அபூர்வம். அவர் சொன்னார், `பாரம்பர்யத்தின் நதியில் நாம் நீந்தலாம். ஆனால், அதில் மூழ்குவது என்பது தற்கொலைக்கு ஈடானது.’

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

பல்வேறு சர்ச்சைக்குட்பட்ட அவரின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையையும் தாண்டி ஆயிரக்கணக்கான பெண்களால் அவர் நேசிக்கப்பட்டார். ஜனவரி 30, 1948-ம் ஆண்டில் நாதூராம் கோட்சேவால், துப்பாக்கியால் மூன்றுமுறை சுட்டுக் கொல்லப்பட்ட கணம் வரை மகாத்மா ஓர் ஆணாகவே வாழ்ந்தார்.

தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டியில் நானும் ஓர் ஆணாகப் பிறந்து ஓர் ஆணாகவே வளர்ந்துகொண்டிருக்கிறேன் இன்றளவும். யோசித்துப்பார்த்தால், ஓர் ஆணாக இருப்பதற்காக இறுமாப்பு கொண்டதிலிருந்து குற்ற உணர்வுக்கு வந்தடைந்த காலமே என் மொத்த வாழ்க்கையாக இருக்கிறது.

பள்ளிகளிலும் தெருக்களிலும் சக ஆண் நண்பர்களால், எந்த விளையாட்டிலும் சேர்த்துக்கொள்ளப்படாது தனித்துவிடப்பட்ட என்னைப் போன்ற சிறுவர்களை, அந்தத் தெருவின் கண்கள் கண்டுபிடித்துவிடும். எள்ளுசீடைகளைக் கைநிறையக் கொடுத்து ஈரப்பாவாடை வாசனையில் இருக்கும் தன் திண்ணையில் அமர்த்திக்கொள்ளும். உயிர் இருக்கும்வரை அந்த ஈரம் மூளையில் இருக்கும்தானே! பிறகு நான் புரிந்துகொண்டது என்னவென்றால், அந்த ஈரத்துக்காகத்தான் ஆண் நண்பர்களிடமிருந்து நானாகவே ஒதுங்கத் தொடங்கினேன் என்பது. தெருவில் சொட்டாங்கல், தாயம், பல்லாங்குழி விளையாட்டுகளில் என் பாண்டித்தியம் கொஞ்சம் கொஞ்சமாகப் பன்மடங்கானது. ஆனாலும், நான் தொடர்ந்து ஆணாகவே வளர்ந்தேன். அதற்குப் பால்ய தோழர்கள் புஷ்பராஜும் கணேசனும் காரணமாக இருந்தார்கள். தனித்துத் திரிந்த என்னை, குறிப்பிட்ட ஒரு காலத்திலிருந்து அவர்கள் ஸ்வீகரித்துக்கொண்டார்கள். நாங்கள் தனித்திருக்கும்போது எங்கள் பேச்சில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். குறிப்பிட்ட வயதுவரை எங்கள் மூவருக்கும் `பெண்கள், சுகிப்பதற்கு மட்டுமே’ என்ற சிந்தனை இருந்தது. இந்தச் சிந்தனையைத் தலைகீழாக மாற்றியதும் எனக்கான பெண்கள்தான்.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிறப்பாக நம்மைத் தகவமைத்துக்கொள்ள, நமக்கு ஐந்து வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் தெரிந்தால் போதும். பார்வை (Perspective), இரட்டை அடைப்பு (Double bind), நிராகரிப்பு (Rejection) அந்நியமாதல் (Alienation) நுண்ணறிவு (Intelligence). இந்த ஐந்து சொற்களையும் நான் முக்கியமான வார்த்தைகளாகக் கருதுகிறேன். இவற்றை எனக்கு இயல்பாக வாழ்கையினூடாக  அறிமுகப்படுத்திய அத்தனை பேருமே பெண்கள்தான்.

எனக்கு ஒரு சித்தி இருந்தார். தூரத்து உறவு. ஆசிரியை. பத்தாம் வகுப்புவரை தமிழ் மீடியத்தில் படித்த நான், மிக மோசமான மதிப்பெண்ணுடன் பதினொன்றாவது ஆங்கிலம் மீடியத்தில் படிக்கவேண்டிய கட்டாயத்துக்குள்ளானேன். என் முதல் இயற்பியல் பரீட்சையில் எனக்குக் கிடைத்த மதிப்பெண் சுழியம். பெரிய சோகம் எதுவும் இல்லையென்றாலும், என்ன செய்வது என விளங்கவில்லை. சித்தி, `மகனே… ஃபிசிக்ஸ் டெஸ்ட்ல யாரு அதிக மார்க்?’ என்று கேட்டார். நான் சொன்னேன், `சுபாகரு… 86 மார்க்.’ என் வகுப்பில் மொத்தம் பன்னிரண்டு பேர். பன்னிரண்டு பேரும் வெவ்வேறு மதிப்பெண் எடுத்திருந்தார்கள். இதைக் கேட்ட சித்தி சொன்ன அறிவுரை இதுதான், `மகனே, பன்னிரண்டு பேரும் ஃபிசிக்ஸை அவங்க அவங்களுக்கு ஏற்ப புரிஞ்சுக்கிட்டிருக்காங்க. அதுதான் பெர்ஸ்பெக்டிவ். சுபாகர் ஃபிசிக்ஸை எப்படிப் பார்க்கிறான்னு புரிஞ்சிக்க ட்ரை பண்ணு.’ இன்று ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் `நேரம்’ பற்றிய சித்தாந்தத்தை ஓரளவுக்கு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்குக் காரணம், இந்த பெர்ஸ்பெக்டிவ் என்கிற சொல்தான். இன்றுவரை இந்தச் சொல் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

கடந்த வருடம் என் அத்தை ஒருவர் இறந்துவிட்டார். அவரும் ஒரு பள்ளி ஆசிரியை. அவரின் கணவருக்கு வனத்துறையில் வேலை. அவரின் அம்மா அதாவது என்  அத்தையின் மாமியார், இரண்டு பெண்கள் உள்பட அவர்களின் ஐந்து பிள்ளைகள் ஆகியோர் அனைவரும், எங்கள் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அத்தைக்கு உடல் நலமில்லாததால், மருத்துவமனையில் சேர்த்தோம். அன்று இரவு நான் அங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை. என்னைத் துணைக்கு விட்டுவிட்டு அனைவரும் சென்றுவிட்டார்கள்.  அந்த இரவில் என்னிடம் அத்தை சொன்ன சொற்களை முடிந்த அளவுக்குப் பிசகாமல் சொல்ல முயல்கிறேன். `மகேந்து… 19 வயசுல வேலைக்குப் போயிட்டேன். அந்த வருஷமே கல்யாணமும் ஆகிடிச்சு. 38 வருஷங்களா வேலையும் பார்த்துக்கிட்டு, 50 வருஷங்களா இந்தக் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு இதோ இப்ப இங்கே படுத்துக்கிட்டு யோசிக்கிறப்போ, `எதுக்கு இந்த வாழ்க்கை?’னு படுது. யோசிச்சுப்பார் மகேந்து… அப்பன் சொன்னாருன்னு ஆத்தா பேச்சைக் கேட்க முடியாம வாக்கப்பட்டேன். புருஷன் சொல்றதைக் கேட்கிறதா... மாமியா சொல்றதைக் கேட்கிறதான்னு தெரியாம, அந்தக் கெழவி இருக்குமட்டும் கெடந்து அல்லாடினேன். கூடவே பள்ளிக்கூடத்துல, சுத்தியிருக்கிற ஆம்பள வாத்தியாருங்க கொடுத்த தொந்தரவு, புள்ளைங்களை வளர்க்க பட்டபாடு, தூக்கமுமில்லாம… அம்பது வருஷங்களா ஜன்னலும் கதவும் இல்லாத ஒரு ரூம்ல அடைபட்டுக் கிடக்கிறது மாதிரி… ஒரே புழுக்கமா இருக்குடா.’ அந்த இரவுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் அத்தை உயிரோடு இருந்தார். வளர வளர, இந்த நிலை நம் பெண்களுக்கு எவ்வளவு பொதுவானதாக இருக்கிறது எனப் புரியத் தொடங்கியது. நான் ஆணாக இருப்பதற்காகக் குற்ற உணர்வுகொள்ளத் தொடங்கிய காலமும் அதுவே.

பெண்களின் இந்த `ரெண்டுங்கெட்டான்’ நிலையைத்தான் மூத்த அறிவுஜீவியான காயத்ரி ஸ்பிவக் `இரட்டை அடைப்பு நிலை’ என வர்ணிக்கிறார். அதாவது, தான் நினைப்பதையும் செய்ய முடியாமல், அடுத்தவர் சொல்வதையும் செய்ய முடியாமல், தாம் அடிமைப்பட்டுக்கிடக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் அந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள்; தன்னிலிருந்து வேறோர் ஆளாக மாறிப்போகிறார்கள். இதுதான் அந்நியமாதல்.

பல வருடங்களுக்கு முன் என் கிராமத்தில் ,  தன் கைகளையும் கால்களையும் சேலையில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்தபோது, பஞ்சவர்ணத்துக்கு 21 வயது. தன் உயிரைப் போக்கிக்கொள்ள அவளின் கணவன் முத்துப்பிச்சை அவளை `வேண்டாம்’ எனச் சொன்ன ஒரு சொல் போதுமானதாக இருந்தது. இதேபோன்று, தூரத்துச் சொந்தமான அண்ணன் கோவிந்துலுவின் தொழில் முடக்கம், அவரின் மனைவிக்கு அவரை நிராகரிக்கப் போதுமானதாக இருந்தது. குடிகாரராக மாறிப்போன கோவிந்துலுவின் உடல், சாலையோரமாகக் கிடந்தது. போகப்போக, ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி நிறைய நடக்கின்றன எனத் தெரிந்துகொண்டேன். நிராகரிப்பு எதனால் நிகழ்கிறது என யோசித்துப்பார்த்தால், தீவிரமான எதிர்பார்ப்பும் புரிந்துகொள்ள முடியாத தன்மையும்தான் எனப் புரியத் தொடங்கியது. பஞ்சவர்ணம் தொடங்கி, நிராகரிப்பின் உளவியல் பற்றி நிறைய பெண்கள் தொடர்ந்து எனக்குச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் நிராகரிக்கப்படாமல் இருப்பது எப்படி என அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதன் பிறகு, ஒருவகைப் புரிதலுடன் தம்மை நிராகரிக்க என்னை நிர்பந்திக்கும் மனிதர்களையும் அவர்கள் மூலமாகவே கடந்து வந்துள்ளேன். சுகந்தி சுப்ரமணியன், ஸில்வியா ப்ளாத் போன்ற நிறைய பெண் கவிஞர்கள் வழியாக, நிராகரிப்புப் பற்றிய புரிதல் என்னுள் கவிதையாக இறங்கியது. 

நண்பன் ரமேஷ் வைத்யாவின் நாவலின் முன்னுரையில், என் பாட்டி எனக்கு ஒரு கதை சொல்வதற்கு முன்னால் கேள்வி ஒன்றைக் கேட்டது பற்றி எழுதியிருந்தேன்.  அந்தக் கேள்வி இதுதான்: `மோனை இல்லாத மரம் எது?’ இந்தக் கேள்வியை அவர் என்னிடம் கேட்டபோது, எனக்கு ஐந்து வயது. நம் தலைமுறைகள் நமக்கு நுண்ணறிவை ஊட்டுவதற்கு, கதைகளையே ஊடகமாகப் பயன்படுத்தின. மனித உறவுகளை, அவர்களின் உணர்வுகளை, நல்லது-கெட்டதுகளைப் புகட்டியது பாட்டிகளின் கதைகள் மட்டுமே. இப்போது உயிருடன் இருக்கும் பாட்டிகளிடம் பேரக்குழந்தைகளுக்குச் சொல்வதற்கு  `நிராகரிக்கப்பட்ட தன் சொந்தக் கதைகள்’ தவிர வேறெந்த கதையும் இல்லை. குழந்தைகள் என்ற வகையில் ஓர் ஆணுக்கு எத்தனை வயதானாலும் தன் அம்மாக்களையும் பாட்டிகளையும் நுண்ணுணர்வில் விஞ்சவே முடியாது. எத்தனை வயதானாலும் அவர்கள் தங்கள் `வளர்ந்த’ குழந்தைகளின் வலியை உணர்ந்துவிடுகிறார்கள். அவர்களால் அந்தப் பிள்ளைகளுக்கு உதவ முடியுமா என்றுகூடத் தெரியாது. ஆனால், நீண்டதூரப் பயணங்களில் இளம்பறவைகள் தங்கள் பாதைகளைத் தம் உள்ளுணர்வால் புரிந்துகொள்வதைப்போல அவர்கள் உணர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைளைப் பார்த்துப் புன்னகைக்கிறார்கள். எனக்கு நுண்ணறிவு மற்றும் பட்டறிவு என்று ஏதாவது இருந்தால், அது என் உலகத்துப் பெண்களால் வந்தது எனத் தயங்காமல் சொல்வேன்.

காய்கறிச் சந்தையில் குருவித்தலை பாகற்காய் விற்பவளுக்கு 87 வயது. வெந்தயக்கீரையின் குணத்தை, அவள் ஒவ்வோர் அணுவாக அறிந்திருக்கிறாள். மேகங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப் பற்றிய குறிப்பை அறியத் தருகிறாள். சிறுவயதில் வளர்த்த எருமையின் வாசத்தைத் தன் கனவில் சுமக்கிறாள். ஐந்நூறு வருட அரசமரத்தின் மெளனத்தை, தன் சுருங்கிய தோலில் படரவிட்டிருக்கிறாள். அவள் விற்ற பாகற்காயில் ஒரு நூற்றாண்டின் சுவை.

நான் மேற்குறிப்பிட்ட ஐந்து வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை என மேலோட்டமாகத் தெரிந்தாலும், அனைத்தும் உட்சார்புடையவை. அந்தச் சாரத்தைப் புரியவைத்தவர்கள் பெண்கள் என்றால், முரணை, எதிர்மறைவை தார்மிகமாகப் புரியவைத்தவர்கள் என் சக ஆண்கள். உண்மையில் எனக்கு வாழக்கையைச் சமைக்கக் கற்றுக் கொடுத்தவர்கள் ஆண்கள். எங்கள் கிராமத்தில் அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இடையேயான உறவு என்பது அவ்வளவு புரிந்துகொள்ளும்படியாக இருந்ததில்லை.  ஆனால், ஒருவகையான அபூர்வ உறவு மகனுக்கு அப்பாவின் நண்பர்களிடமும், அப்பாவுக்கு மகன்களின் நண்பர்களிடமும் இருந்தது. வாஞ்சையுடன் உணர்வுபூர்வமாக வலிமையோடு அந்த உறவு படர்ந்திருந்தது. அப்படிப்பட்ட உறவுமுறையை நான் என் மகனிடம் இழந்துவிட்டேன் என நினைக்கிறேன். என் மகன் ஒரு தனிப் பிராணியாகத் திரிகிறான். அவனின் நட்பு வட்டங்கள், என்னைத் துண்டித்துவிட்டிருக்கின்றன. எங்களுக்குள் ஒரு பிரச்னையும் இல்லை. நண்பர்களாகத்தான் பழகுகிறோம். ஆனாலும், ஏதோ ஒன்று காணாமல்போய்விட்டது. ஒரு கண்ணி அந்தரத்தில் தொங்குகிறது. இல்லை... அவன்தான் இந்த உறவு அமைப்பை இழந்துவிட்டானா என்றும் தெரியவில்லை. அப்போதெல்லாம் ஏதாவது ஒருவகையில் எனக்கும் எனது நண்பர்களின் குடும்ப உறவுகளுக்கும் வலுவான ஓர் இணைப்பு இருந்தது. ஊரில்  இருக்கும் ஒவ்வோர் ஆணுக்கும் இது பொருந்தியது; பெரும்பாலான பெண்களுக்கும்கூட. பெரிய ஆலமரத்தின் விழுதுகள்போல ஒன்றுக்கொன்று பின்னிப் பெரிய வலையாகக் கிடந்தது கிராமம். சாதிகள் இருந்தும் இல்லாததுமாக எல்லோரும் பங்காளிகளாகவோ அல்லது மாமன் மச்சான்களாகவோ இருந்தோம். ஆனால், என் மகன் இப்போது வேறொரு வலையில் அலைகிறான். என் வீட்டில்தான் இருக்கிறான். ஆனாலும், எனக்கும் அவனுக்கும் இடையிலான  தூரம்  ஒளியாண்டுகளால் நிரம்பியுள்ளது. என் நண்பர்கள் அவனுக்கு வெறும் ‘அங்கிள்’கள் மட்டுமே.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

நான் மனிதனாக இருக்கக்கூட லாயக்கற்றவன் என்று முகத்தில் அடித்துச்சொல்லும் ஆணையும் எனக்குத் தெரியும். என் மனைவிக்கு, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்திருந்தார்கள். பிழிந்த துணியாக  அரை மயக்கத்தில் வடமதுரை சுகாதார மையத்தின் வராண்டாவில் கிடத்தியிருந்தார்கள். பிரசவம் முடிந்த கையோடு அந்த உடலை `அறுவைசிகிச்சை’ என்ற பெயரில் அதகளப்படுத்தியிருந்தார்கள். என் மனைவியைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்தது. மாலையில் வண்டியை வைத்து என் மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, என் இருசக்கர வாகனத்தில் ஏறும்போது ஒருவர் என்னிடம் `போற வழியில இறங்கிக்கிறேன்’ என்று ஏறிக்கொண்டார்.  `நான் பக்கத்து ஊருதாங்க… தண்ணி கேன் போடுற யாவாரம். வாசக்டமி பண்ணணும்னு வந்தேங்க. ரெண்டோட நிறுத்திக்கலாம்னு சொல்லிட்டாப்ல. அதான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கலாம்னு சொன்னாங்க. நான்தான் வேணாம்னு சொல்லி, நான் வாசக்டமி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேனுங்க. நம்மளுக்காகப் புள்ளையப் பெத்துக் கொடுக்கிறாங்க. பிரசவம் மாதிரியான எவ்வளவோ வேதனைக்கு இடையில நமக்கு எல்லாத்தையும் செய்றாங்க. பதிலுக்கு நாம கொஞ்சமாச்சும் முட்டுக்கொடுக்க வேணாமாங்க...’  எனப் பேசிக்கொண்டே ஓர் இடத்தில் நிறுத்தச்சொல்லி இறங்கிப் போய்விட்டார்.

என் மூளைக்குள் ஆணி இறங்கியதுபோல் இருந்தது. எனக்கு ஏன் தோன்றவில்லை? ஒருவேளை தோன்றியிருந்தாலும் அந்தச் சிகிச்சைக்கு நான் உடன்பட்டிருப்பேனா என்றால், `மாட்டேன்’ என்றே தோன்றுகிறது. பிறகு, வராண்டாவில் கிடத்தப்பட்டிருந்த என் மனைவியைப் பார்த்துப் பாவப்பட எனக்கு என்ன அருகதை இருக்கிறது? இந்தக் குற்ற உணர்வை வெளியே சொல்ல எனக்கு ஏன் 18 வருடங்கள் ஆகியிருக்கின்றன?

நான் வளர்கிற காலத்தில், என் அம்மாவும் அப்பாவும் எனக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார்கள். வாழ்வில் பிடித்ததைச் செய்ய அவர்கள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. நம் சமூகத்தில் சிக்கலான குடும்ப அமைப்பில், அந்த வகையான சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அந்த வகையான சுதந்திரத்தை என் மனைவிக்கு நான் அளிக்கிறேன் எனச் சொல்வதும் எவ்வளவு பெரிய அதிகாரமாக இருக்கிறது. இருந்தாலும், அவருக்கும் என் பெண் உறவுகளுக்கும் தோழிகளுக்கும் சுதந்திரத்தை அளிப்பதை என் கடமையாகவே கருதுகிறேன்.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

ந்த மரம் என்னை திட்டியதில்லை
அல்லது எந்த மரமும்
என் நன்றியைத் தெரிவிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
என் உணர்வுகளின் வெளிச்சங்களாய்
இந்த மரங்களின் மௌனம்
எனக்குள்
எதற்குமே கவலைப்படாமல்
உயிரை வளர்க்கும்.

-சுகந்தி சுப்ரமணியன்

“கொடிது கொடிது
வறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை
அதனினும் கொடிது
ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது
அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில்
உண்பது தானே”

-ஔவையார்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

ண்கள் என்னை சிறந்த பெண் ஓவியர்கள் வரிசையில் வைத்தார்கள். ஆனால், மிகச் சிறந்த ஓவியர்களுள் ஒருவர் என என்னை நான் நினைக்கிறேன்.

- ஜார்ஜியா ஓ கீஃப் (அமெரிக்க ஓவியர்)

ஆண்பால் பெண்பால் அன்பால் - 43

ன்னைக் காணும் வரை
நான் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தேன்
படங்களை வரைந்து கொண்டிருந்தேன்
நடைக்காக
நண்பர்களுடம் வெளியில் சென்று வந்து கொண்டிருந்தேன்
இப்பொழுது உன்னை காதலிக்கிறேன்
வயதேறியதொரு நாயைப் போல சுருண்டு கிடக்கிறேன்
என் வாழ்வில், திருப்தியாக
உன்னுள்.

-கமலாதாஸ் (`கல்கத்தாவின் கோடையில்’ தொகுப்பிலிருந்து)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism