Published:Updated:

அழகா... அதிரடியா?

அழகா... அதிரடியா?
பிரீமியம் ஸ்டோரி
அழகா... அதிரடியா?

பு.விவேக் ஆனந்த்

அழகா... அதிரடியா?

பு.விவேக் ஆனந்த்

Published:Updated:
அழகா... அதிரடியா?
பிரீமியம் ஸ்டோரி
அழகா... அதிரடியா?

ந்திய ஆண்கள் அணி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் மண்ணைக் கவ்வினாலும், பெண்கள் அணி அதே இங்கிலாந்தில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது.  
இங்கிலாந்தில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல், பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. 11-வது உலகக் கோப்பையின் சாம்பியன் யார் என்பது, இந்த மாதம் 23-ம் தேதி இரவு தெரிந்துவிடும். அதில்தான் நம்ம கேர்ள்ஸ் களமாடிக்கொண்டிருக்கிறார்கள்!

இந்தமுறை பெண்கள் உலகக் கோப்பையில் எட்டு அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வோர் அணியும் மீதி ஏழு அணிகளுடன்  ஒரு போட்டியில் விளையாடியே  ஆகவேண்டும். இதனால், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடுபவர்களுக்கு மட்டுமே அரை இறுதி வாய்ப்புக் கிடைக்கும். அதனாலேயே, இந்த முறை போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது.

அழகா... அதிரடியா?

உள்ளூர் பலம்

இங்கிலாந்து பெண்கள் அணி, உலகக் கோப்பையை இதுவரை மூன்றுமுறை ஜெயித்திருக்கிறார்கள். `இந்த முறை சொந்த மண்ணில் தொடர் நடப்பதால், நிச்சயம் சாம்பியன் ஆவோம்’ என நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ஆனால், முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியதில் இங்கிலாந்து ரசிகர்கள் அப்செட். அடுத்த போட்டியில் பாகிஸ்தானைத் துவைத்து எடுத்தது இங்கிலாந்து. பெண்கள் கிரிக்கெட்டில் 277 ரன்கள் எடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 377 ரன்கள் குவித்து அசத்தியது ஹெதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி.  இதே வேகத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடினால், அரை இறுதி நிச்சயம்.

அழகா... அதிரடியா?

ஏழாவது முறை

பத்து உலகக் கோப்பைகளில் ஒருமுறைகூட அரை இறுதியை மிஸ் செய்தது கிடையாது ஆஸ்திரேலியா. ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற கெத்து டீம்! பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என எல்லா டிபார்ட்மென்டிலும் அசத்துகிறது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கில் க்ளாஸ். கேப்டன்சியில் மாஸ் காட்டுகிறவர்கள். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றப்படாமல் வெற்றிக்காக ஆடுவது ஆஸ்திரேலியாவின் ப்ளஸ். அந்த அணியில் பல வீராங்கனைகளுக்கு இதுதான் முதல் உலகக் கோப்பை. ஒரு சிலர் ஸ்விங் மற்றும் சுழற்பந்துகளில் தடுமாறக்கூடியவர்கள்.  எனவே, இந்தியா மற்றும் இங்கிலாந்தைக் கவனமாக எதிர்கொண்டால், ஆஸ்திரேலியா ஏழாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பிருக்கிறது.

அதிரடிதான் அடையாளம்

நியூசிலாந்து அணி இதுவரை நான்குமுறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று இருக்கிறது. ஆனால், ஒருமுறைதான் சாம்பியன்! வலுவான அணியாக இருந்தாலும், கடைசி நேர சொதப்பல்களில் வெற்றியைத் தாரைவார்ப்பது நியூஸி-யின் வழக்கம். நியூஸி-யின் அதிரடி பேட்ஸ்வுமனும் கேப்டனுமான சூஸி பேட்ஸ், நல்ல ஃபார்மில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலேயே  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.  ``எங்கள் வீராங்கனைகள், கவுன்டியில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். இங்கிலாந்து மைதானங்கள் எங்களுக்கு அத்துபடி. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சமாளித்தால், நாங்கதான் சாம்பியன்ஸ்” என்கிறார் கெத்தாக!

செமியே போதும்

பாகிஸ்தான் அணி  கன்சிஸ்டன்சி இல்லாத அணி. ஒரு போட்டியில் அடித்து நொறுக்குகிற பேட்ஸ்வுமன்கள் அடுத்த போட்டியிலேயே சுணங்குவார்கள். முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்குக் கடும் சவால்தந்த பாக் பெளலர்கள் அடுத்த போட்டியிலேயே இங்கிலாந்திடம் 377 ரன்கள் கொடுத்தார்கள். பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி என்பதே கனவுதான்.

ஒன் வுமன் ஆர்மி

இலங்கை அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. அந்த அணியில் சமாரி  அட்டப்பட்டு மட்டுமே தனி ஒருத்தியாகப் போராடுகிறார். நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் எடுத்தவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பொளந்துகட்டினார். அந்தப் போட்டியில் இலங்கை அணியின் ஸ்கோர் 257.  அதில் சமாரி அட்டப்பட்டு மட்டும் 178 ரன்கள் குவித்தார். இலங்கை  வீராங்கனைகளிடம் போராட்டகுணம் அதிகமாகியிருக்கிறது. கொஞ்சம் முயன்றால், அரை இறுதிக்குத் தகுதிபெறாவிட்டாலும் கடைசி இரண்டு இடங்களைப் பிடிப்பதைத் தவிர்க்க முடியும்.

அழகா... அதிரடியா?

வீக் விண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்  கடந்த  உலகக் கோப்பையில் ரன்னர் அப். தற்போதைய அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ். இருந்தும் பேட்டிங், பெளலிங் என எல்லா ஏரியாவிலும் வீக்காக இருக்கிறது அணி.  வெஸ்ட் இண்டீஸுடன் ஆடினால், இரண்டு புள்ளிகள் நிச்சயம் என்ற ரேஞ்சிலேயே எதிரணிகள் விளையாடுகின்றன. 
தேறுமா தென் ஆப்பிரிக்கா?

பெண்கள் கிரிக்கெட்டில் சுமாராக ஆடக்கூடிய அணிதான் தென் ஆப்பிரிக்கா. ஆனால், இந்தமுறை இளம் படையுடன் களமிறங்கியிருக்கிறது. 2000-க்குப் பிறகு உலகக் கோப்பையில் அரை இறுதிச்சுற்றுவரைகூட வரவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு முதன்முறையாகக் கறுப்பினத்தைச் சேர்ந்த ஹில்டன் மொரீங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக, சில மாதங்கள் ஓய்வில் இருந்த டேன் வான் நீகெர்க் அணிக்குத் திரும்பியுள்ளார்.  `என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொட்டியிருக்கிறேன். எங்களது அல்டிமேட் குறிக்கோள் அரை இறுதிக்குச் செல்வது கிடையாது. கோப்பையை வெல்வதுதான்’ எனச் சொல்லியிருக்கிறார் ஹில்டன் மொரீங். கன்சிஸ்டன்சி இல்லாமல் ஆடுவதுதான் தென் ஆப்பிரிக்காவின் பெரிய பிரச்னை.

இந்தியாவுக்கு வாய்ப்பிருக்கா?

 கடந்த உலகக் கோப்பை இந்தியாவில்தான் நடந்தது. அதில் ஏழாம் இடம் பிடித்தது இந்திய அணி. அதன் பிறகு, பி.சி.சி.ஐ. பெண்கள் அணி மீது அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஃபீல்டிங்கில் சிறப்புப் பயிற்சிகள் தரப்பட்டன. அணியில் சொதப்பிய வீராங்கனைகளைப்  பாரபட்சமின்றி நீக்கிவிட்டு இளரத்தம் பாய்ச்சியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்தியப் பெண்கள் அணி சிறப்பாக விளையாடிவருகிறது. இந்திய அணியின் புலிப்பாய்ச்சலால், அனைத்து அணிகளுமே இந்தமுறை மித்தாலி ராஜ் அணியின்மீது ஒரு கண் வைத்திருக்கின்றன. மித்தாலி ராஜுக்கு, இது கடைசி உலகக் கோப்பை.  இந்தமுறை நிச்சயம் கோப்பையை வென்றே தீர வேண்டும் என உறுதியோடு இங்கிலாந்துக்கு விமானம் ஏறியுள்ளார். இப்போதைய இந்திய அணியில் பல வீராங்கனைகள் செம ஃபார்மில் இருக்கிறார்கள். ஸ்மிருதி மந்தானா அதிரடி பாணியைக் கையில் எடுத்திருக்கிறார். அவரது அபார ஆட்டத்தால், முதல் இரண்டு போட்டிகளையும் எளிதில் வென்றது இந்திய அணி. ஹர்மன்ப்ரீத் கவுர், தீப்தி ஷர்மா ஆகியோர் நம்பிக்கை தரும் இளம் வீராங்கனைகள். ஏக்தா பிஷ்ட் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்கிறார். முதல் போட்டியில் வலிமைமிக்க இங்கிலாந்தை அபாரமாக வென்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை நேர்த்தியாகத் தோற்கடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளைக் கவனமாகச் சமாளித்தால், அரை இறுதி வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிடும். அரை இறுதி மட்டுமல்ல, இறுதிப்போட்டியிலும் நுழைந்து சாம்பியன் பட்டத்தை வென்று திரும்ப நிறையவே வாய்ப்பிருக்கிறது.