மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு முக்கியப் பிரச்னை அதிகமான குளிர். சைனஸ்காரர்களால், அந்தக் குளிரை தாங்கிக்கொள்ளவே முடியாது. ``ஏ.சி-யைக் கொஞ்சம் குறைங்க’’ எனப் பராமரிப்புத் துறைக்கு, பாதிக்கப்பட்டவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். பிரெட் லீயின் பவுன்சர் வேகத்தில் பதில் வந்திருக்கிறது.

``ஏ.சி உங்களுக்கு இல்லை, கம்ப்யூட்டருக்கு. மாற்ற முடியாது.’’

ப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 13

இன்று பெரும்பாலான அலுவலகங்களில் ஏ.சி-தான். அதுவும் ஓப்பன் ஆபீஸாக இல்லாமல், சின்னச் சின்ன அறைகளாக இருந்தால், இன்னும் சிக்கல். இந்த ஏ.சி அறைகளுக்கு நல்ல மணம், கெட்ட மணம் என இரண்டையுமே வஞ்சகம் இல்லாமல் பரப்பும் பிரச்னை உண்டு. அதில் சீரியஸானது  நம்மவர்கள் அணிந்துவரும் காலுறை (சாக்ஸ்).

செய்யும் தொழிலே தெய்வம்தான். அதற்காக வேலை செய்யும்போது ஷூக்களைக் கழற்றிவைத்துவிட்டா, வேலை செய்ய முடியும்? கழற்றவேண்டிய சூழ்நிலைகளும் வரும். அது வரை `அம்பி’யாக இருக்கும் சாக்ஸ், ஷூக்களைக் கழற்றிய வேகத்தில் `அந்நியன்’ ஆகும். அடுத்த அரை கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒருவர் வேலை செய்ய முடியாது. ஏ.சி அறை என்றில்லை. இந்த சாக்ஸின் சவுக்கடியில் இருந்து சாதாரண இடம்கூட தப்பிக்க முடியாது.

`Bromodosis.’ துர்நாற்றம் வீசும் கால்களை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள். நம் உடலின் மற்ற எந்தப் பகுதியைவிடவும் கால்களில் இருந்துவரும் துர்நாற்றம்தான் அதிகம். இதற்கும் வியர்வைதான் முக்கியக் காரணம். ஆனால், கால்களில் வியர்வையில் துர்நாற்றத்தைக் கலக்கும் கிருமிகள் நிறைய இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், கால்களைத்தான் நாம் சாக்ஸ் போட்டு முழுவதுமாக மூடிவைக்கிறோம்.
சிலர் இந்தச் சங்கடங்களுக்குப் பயந்து, சாக்ஸ் போடாமல் ஷூ மட்டும் அணிவதுண்டு. அது இன்னமும் சிக்கல். பிறகு, அந்த ஷூவில் நிரந்தரமாகக் குப்பைத்தொட்டி மணம்தான்.

கால்களில் வளரும் பாக்டீரியா ஷூவுக்கு இட மாற்றம் ஆகிறது. வீட்டுக்குத் திரும்பியதும், அந்த ஷூவை எடுத்து இருட்டுப் பிரதேசத்தில் வைத்துவிடுகிறோம். இதனால், பாக்டீரியா இன்னும் குஷியாகிவிடும். இரண்டு மடங்கு வேகத்தில் வளரும். எனவே, ஷூக்களை வெளிச்சம்படும் இடத்தில் வையுங்கள். விடுமுறை தினங்களில் அனைத்துக் காலணிகளையும் `சன் பாத்’ எடுக்க வைப்பது நமக்கு நல்லது.

``பேட் ஸ்மெல்தானே... வந்துட்டுப் போகட்டும்’’ என விட்டுவிடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கிருமிகள் நம் பாதங்களைப் பதம் பார்க்கும். பாதங்களில் வெடிப்புக் கிளம்பும். விரலிடுக்குகள் அரிக்கத் தொடங்கும். மூக்கு அரித்தாலோ, தலை அரித்தாலோ எளிதில் சொரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறை குனிந்து கால்களைச் சொரிவது, அவ்வளவு வசதியாக இருக்காது.

எப்படிச் சமாளிப்பது?

1) சரியான சாக்ஸை வாங்க வேண்டும். விலை குறைவு என்பதற்காக நைலான் சாக்ஸ் அணிந்தால், உங்கள் அலுவலகம் மட்டுமல்ல; அடுத்த அலுவலகம் வரை உங்கள் புகழ் மணம் பரவும்.

2) காலணிகள் வாங்கும்போதும் கவனம் தேவை. சரியான அளவில், சரியான மெட்டீரியலில் அவை இருக்க வேண்டும்.

3) சென்னையும் சரி. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களும் சரி... ஆன் செய்த அயர்ன்பாக்ஸ்போலத்தான் இருக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் சாக்ஸை மாற்ற வேண்டும் என்பது விதி.

4) தினமும் பாதங்களை மிதமான சூடுள்ள நீரில் கழுவலாம். இது வியர்ப்பதைக் குறைக்கும்

5) ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீர் அல்லது பிளாக் டீ (நிஜமாகத்தான்) ஆகியவற்றில் பாதங்களை அரைமணி நேரம் ஊறவைத்தால், துர்நாற்றம் குறையும்.

6) ஆன்டிபாக்டீரியல் க்ரீம் அல்லது பவுடரையும் பயன்படுத்தலாம்.

7) அனைத்துவிதமான துர்நாற்றங்களுக்கும் முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவு. மருத்துவரைக் கலந்தாலோசித்து, உங்கள் டயட்டை மாற்றவும்.

`யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே’ என்பார்கள். நாம் யானையோ இல்லையோ, இந்த சாக்ஸ் மணியோசை ஆகாமல் பார்த்துக்கொள்வோம்.

- பெர்சனல் பேசுவோம்...