Published:Updated:

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!
பிரீமியம் ஸ்டோரி
வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

ம.செந்தமிழன், படங்கள்: பால் கிரகோரி

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

ம.செந்தமிழன், படங்கள்: பால் கிரகோரி

Published:Updated:
வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!
பிரீமியம் ஸ்டோரி
வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

`பால் வளத்தைப் பெருக்குதல், குடிமக்களுக்கு ஊட்டச்சத்து அளித்தல், பொருளாதாரத்தில் முன்னேறுதல்’ ஆகிய முழக்கங்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெண்மைப் புரட்சி’, அதன் அனைத்துத் தளங்களிலும் படுதோல்வியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நம்  சமூகத்தில்  நாட்டு மாடுகள் வழியாக மட்டுமே பால் கிடைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மனிதரும் அளவாகப் பால் அருந்தினர். தயிர், நெய் உண்டனர். ஒவ்வோரு கிராமத்திலும் பால் கறவை, தன்னிறைவான தொழிலாக இருந்தது. நகரங்களிலும் வீதிக்கு ஒருவர், மாடுகள் வளர்த்த காலம் அது.

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

வெண்மைப் புரட்சியின் பெயரால், சீமைப் பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டு, செயற்கையாகப் பால் `தொழில்’ வளர்த்தெடுக்கப்பட்டது. சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி, மலைப்பகுதிகளில் பிரீசியன் என்ற கணக்குடன் அரசுகள் களத்தில் இறங்கிச் செயலாற்றின. விளைவாக, நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை குறைந்து, சீமை மற்றும் சீமைக் கலப்புப்பசுக்களின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்தது. தேவைக்கு அதிகமாகப் பால் ‘உற்பத்தி’ செய்யப்பட்டது. பால் எனும் அரும்பொருள் பசுவின் உதிரத்தில் உருவாகிறது. தனது கன்றுக்காகப் பசு சுரக்கும் அமுதம் அது. கன்றுக்குட்டிகளின் உணவை மனிதர்கள் பகிர்ந்துகொள்வதுதான் பால் கறவை. நிச்சயமாக, பால் மனிதர்களுக்கே முற்றும் முழுவதுமாக உரிமையுடைய பொருள் அல்ல. இந்தப் புரிதலும் அக்கறையும் நமது மரபில் ஊறிக்கிடந்தன.

இப்போது, சீமைப்பசுக்களில் பால் கறப்பதற்குக் கன்றுக்குட்டிகளே தேவையில்லை. பிறந்த கன்று காளையாக இருந்தால், இரண்டே நாள்களில் அவை கறிக்கடைக்கு அனுப்பப்படுகின்றன. கிடாரி (பசுங்கன்று) பிறந்தால், மிகக் குறைவான பால் அவற்றுக்கு அனுமதிக்கப்படுகிறது. நிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கைத் தீவனங்களும் ஊசிகளும் கன்றுகளை வளர்க்கின்றன. பால் கறவைப்பசுக்களின் உடலுறவு முற்றிலும் மறுக்கப்பட்டு, சினை ஊசிகள் அவற்றின் பிறப்புறுப்பில் செலுத்தப்படுகின்றன. காளையுடன் இணை சேர்ந்தால், பால் கறக்கும் தன்மையில் சேதம் ஏற்படும் என்ற கணக்கே காரணம்.  ஆய்வகங்களில் காளைகளைத் துன்புறுத்தி அவற்றின் விந்து சேகரிக்கப்பட்டு, சினை ஊசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவு பாவங்களையும் கூச்சமோ அச்சமோ இல்லாமல் செய்த பிறகுதான் ‘பால் வளம்’ பெருக்கெடுத்து ஓடுகிறது.  இவ்வளவுக்குப் பிறகும், மக்களுக்குக் கிடைக்கும் பால் தரமானதாக இருக்கிறதா?

`பாலில் கலப்படம்’ என்ற சொல்லுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பொருள்தான் இருந்தது. பாலில் தண்ணீர் கலப்பது என்பதுதான் அப்போதிருந்த கலப்பட முறை. இப்போது தொழிற்சாலைகளில் தயாராகும் பாலில் கலக்கப்படும் வேதிப்பொருள்கள், மற்ற பொருள்கள் பட்டியலைப் பார்த்தால், அச்சமும் வேதனையும் மேலிடுகின்றன.

ஃபார்மல் டிஹைட் (Formal Dehyde) எனும் வேதிப்பொருள், பால் `கெட்டுப்போகாமல்’ இருப்பதற்காகக் கலக்கப்படுகிறது. பாலில் உள்ள புரத மூலக்கூறுகளுக்குள் நுழைந்து அவற்றோடு இணைந்துவிடுவது இதன் இயல்பு. ஃபார்மல் டிஹைட் கலக்கப்பட்ட பாலில் நுண்ணுயிரிகள் வளராது. பாலில் உள்ள செல்களின் இயக்கத்தை முடக்கிவைப்பது இந்த வேதிப்பொருள். அளவுக்கு அதிகமாக ‘ஃபார்மல் டிஹைடு சேர்ந்தால், புற்றுநோய் உருவாகும்’ என்பது உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை. புற்றுநோய்க் காரணிகளில் ஒன்றாக இந்த வேதிப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்தான் ஃபார்மல் டிஹைடு கலக்கிறோம்’ என்பது வழக்கமாக நிறுவனங்கள் உதிர்க்கும் வாசகம்.

25 மி.லி பாலில் 0.1மி.கி ஃபார்மல் டிஹைடு கலக்கலாம் என்பது பொதுவான அளவு. பால் நிறுவனங்கள் இந்த அளவைத்தான் கடைபிடிக்கின்றனவா என்பது எவருக்கும் விடை தெரியாத கேள்வி. சோதனை செய்து பார்த்தால், கண்டறியலாம். கோடிக்கணக்கான லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறான சோதனைகளைச் செய்வதும், சரிபார்ப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது. `எங்கள் பால் பல மாதங்களுக்குக் கெடாது’ என்று பெருமிதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த `சாதனைகளுக்கு’ காரணமான வேதிப்பொருட்கள் எவை, அவை எந்த அளவில் கலக்கப்படுகின்றன என்று மக்களுக்குத் தெரியாது.

ஒருவேளை எல்லா நிறுவனங்களும் மிக நேர்மையாக நடந்துகொண்டு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டும் ஃபார்மல் டிஹைடு கலப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு கேள்விக்கு அந்த நிறுவனங்கள் பதில் சொல்ல வேண்டும்.

25மி.லி பாலில் 0.1மி.கி ஃபார்மல் டிஹைடு இருக்கலாம் என்பது விதி. ஒரு நபர் ஒரு நாளைக்கு அரை லிட்டர் பால் பருகினால், அவர் உடலுக்குள் செல்லும் இந்த வேதிப்பொருளின் அளவு ஏறத்தாழ 20 மடங்கு அதிகரிக்கிறது. நான்கு முறை தேநீர் அருந்தினால், ஏறத்தாழ 250 மி.லி பால் உடலுக்குள் செல்கிறது. குழந்தைகளும் சிறுவர்களும் பால் அருந்துவது மிக நல்ல பழக்கம் என்றொரு பாடம் நவீன மருத்துவர்களால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளைக்கு 250 மி.லி பால் பருகினால், அவர்கள் உடலுக்குள் செல்லும் இந்த வேதிப்பொருளின் அளவு என்னென்ன விளைவுகளை உருவாக்கும் என்ற கேள்விக்கு என்ன பதில்? சிறுவர்களும் குழந்தைகளும் பல ஆண்டுகளாக இந்த நிறுவனங்களின் பாலைப் பருகிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் உடலில் உருவாகும் நோய்களுக்கும் இந்த வேதிப்பொருளால் உருவாகும் தீய விளைவுகளுக்கும் என்ன உறவு என்பதைப் பற்றி முறையான ஆய்வு இங்கே நடத்தப்படுவதில்லை.

எந்தக் கேள்வி கேட்டாலும், பால் நிறுவனங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் அளிக்கும் பதில், ‘எங்கள் பால் தரமானது. சர்வதேசத் தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டது’ என்பதுதான். சர்வதேசத் தரம் என்ற சொல், இந்த நிறுவனங்களின் பதுங்கு குழி. அந்த சர்வதேசத் தரம் என்பதுதான் என்ன என்ற கேள்வியை மக்கள் கேட்பதே இல்லை.

‘ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றில்கூட ஃபார்மல் டிஹைடு உள்ளது’ என்றொரு விளக்கத்தை பால் தொழில் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். ஆப்பிளில் 6 முதல் 22 மி.கி வரை, வாழைப்பழத்தில் 16 மி.கி வரை ஃபார்மல் டிஹைடு உள்ளது. சரிதான். ஆப்பிள் பழத்தைச் சிறிதளவு கடித்துவிட்டு வெளியே வைத்தால், சில நிமிடங்களில் பழத்தின் உள்ளும் புறமும் நுண்ணுயிரிகள் வளர்ந்துவிடுகின்றன. அதாவது, ஆப்பிள் உடனடியாக ‘கெட்டுப் போகிறது’. வாழைப்பழத்தின் முனைப்பகுதி சிறிதளவு தோல் நீங்கி இருந்தாலும், அதன் உள்ளே நுண்ணுயிரிகள் வளர்ந்து பழம் பழுப்பு வண்ணமாக மாறுகிறது.

இயற்கையாகப் படைக்கப்பட்ட பழங்களில் அதிகமான அளவு ஃபார்மல் டிஹைடு இருக்கிறது. அதனால், அந்தப் பழங்கள் சில நிமிடங்களில் கெட்டுப் போகத்துவங்குகின்றன. இந்த நிறுவனங்களின் பாலை ஒரு குவளையில் ஊற்றி வெளியே வைத்தால், பல மணி நேரத்திற்கு அதில் நுண்ணுயிரிகள் உருவாவதில்லை. மிகக் குறைவான அளவு ஃபார்மல் டிஹைடு கலக்கப்படும் பால், மிகத்தாமதமாக ‘கெடுகிறது’, மிக அதிகமாக இந்த வேதிப்பொருள் உள்ள பழங்கள் உடனடியாகக் கெடுகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்.

`ஃபார்மல் டிஹைடு மிக அதிகமாக உள்ளதால், ஆப்பிள் ஆபத்தான உணவு’ என்று எந்த சர்வதேச அமைப்பும் கூறவில்லை. ‘பாலில் கலக்கப்படும்போது, ஃபார்மல் டிஹைடு புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, அதன் அளவில் எச்சரிக்கை தேவை’ என்பதுதான் நவீன அறிவியல் முன்வைக்கும் கருத்து.

பிணங்களைப் பதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்தான் இந்த ஃபார்மல் டிஹைடு என்பது மிக முக்கியமானது. மருத்துவமனைப் பிணவறைகளில் புழங்கும் பொருளை உணவில் கலப்பதற்குப் பெயர், நவீனத் தொழில்நுட்பம்! இதைக் கேள்வி கேட்பவர்களுக்குப் பெயர், பிற்போக்குவாதிகள்!

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

ஹைட்ரஜன் பராக்ஸைடு பாலில் கலக்கப்படுகிறது. பால் கலன்களைச் சுத்தம் செய்ய காஸ்டிக் சோடா பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒவ்வொரு வேதிப் பொருளும் உருவாக்கும் உடல் நோய்களைப் பட்டியலிட்டால், குலை நடுங்கும். ஹைட்ரஜன் பராக்ஸைடு அதிமாக உடலில் சேர்ந்தால், சிறுநீரகமும் கல்லீரலும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

பாலின் கெட்டித்தன்மைக்காக ஜவ்வரிசி மாவு கலப்படம் செய்வது சில நிறுவனங்களின் வழக்கம். ஒரு பால் நிறுவனம் சொந்தமாக ஜவ்வரிசி ஆலை நடத்திக்கொண்டிருக்கிறது.

`பதப்படுத்தப்பட்ட பால்’ (pasteurized milk) என்ற வாசகத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பாலில் உள்ள இயற்கையான கொழுப்பை நீக்கிவிட்டுத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பால் எண்ணெயை (butter oil) கலப்பதுதான் இதன் அடிப்படைத் தொழில்நுட்பம். இந்தப் பால் எண்ணெய் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

பாலில் உள்ள இயற்கைக் கொழுப்பை எடுத்து, பல்வேறு துணைப் பொருட்களைத் தயாரிப்பது பால் நிறுவனங்களின் தொழில். இவ்வாறு இயற்கைக் கொழுப்பை நீக்கிவிட்டால், பால் நீர்த்துப்போகும். அதைக் கெட்டியாக மாற்றுவதற்கு, பால் மாவு (skimmed milk powder) கலக்கப்படுகிறது. இந்தப் பால் மாவு தயாரிக்கப் படும் தொழில்நுட்பம் மிக வினோதமானது. ஏறத்தாழ மைனஸ் 40 முதல் 50 டிகிரி வரையில் குளிர் உருவாக்கப்பட்டு, அக்குளிரில் பால் வைக்கப்படுகிறது. இந்த அளவுக் குளிரில் நுண்ணுயிரிகள் எதுவும் வாழவே முடியாது. பால் ஒரு பனிப்பாறைபோல இறுகிப்போகிறது. பின்னர் பல தொழிற்சாலைச் செயல்பாடுகளைக் கடந்து, வெளியே வருவதுதான் பால் மாவு.

இந்த மாவுதான், மக்கள் அன்றாடம் பருகும் பாலில் கலக்கப்படுகிறது.

`கறவைப்பால் பருகுவது ஆபத்தானது. அதில் கிருமிகள் இருக்கும்’ என்ற அறிவுரையை நவீன மருத்துவர்கள் மக்களுக்கு வழங்குகிறார்கள். என்றைக்காவது ஒருநாள், இந்தப் பால் நிறுவனங்களுடைய செயல்பாடுகளைப் பற்றி, அவை கலக்கும் வேதிப்பொருள்களைப் பற்றி அவர்கள் எச்சரிப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?

`பாலில் கலப்படம்’ என்ற செய்திகளுக்குப் பின்னால் பல அரசியல் நகர்வுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘வெண்மைப் புரட்சி’ என்பதே மிக மோசமான அரசியல் சொல்லாடல்தான். நம் சமூகத்தின் மாடுகளையும் மனிதர்களையும் வணிகப் பண்டமாக மாற்றிப் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் ஏற்பாடுதான் அது.

நாட்டு மாடுகள் வளர்ப்பதும், அவற்றிலிருந்து பால் கறப்பதும் மரபுவாதிகளின் வறட்டுப் பிடிவாதம் அல்ல. நவீனச் செயல்பாடுகளின் வெறியாட்டத்திலிருந்து மீண்டெழுந்து, தற்சார்புத்தன்மையும் உடல்நலமும் செழிக்கப் பாடுபடும் போராட்டம் அது.

கிர், காங்க்ரிட்ஜ் ஆகிய இந்திய நாட்டு மாடுகள் அதிக அளவு பால் கறப்பவை. வெண்மைப் புரட்சியின் பார்வையில் இந்த மாடுகள் ஒதுக்கப்பட்டன. டென்மார்க்கிலிருந்து காளைகளை இறக்குமதி செய்கிறார்கள். குஜராத்தில் வாழும் மாடுகளைப் புறந்தள்ளி விட்டார்கள். நாட்டு மாடுகள் மீது அக்கறை கொண்ட தனிமனிதர்களும் அமைப்பினரும் கிர், காங்க்ரிட்ஜ் மாடுகளைத் தமிழகத்தில் வளர்த்துப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

ஜெர்சியும் பிரீசியனும் மிக எளிதில் நோய்வாய்ப்படுகின்றன. இந்திய மாடுகள் இயற்கையாகக் கிடைக்கும் தீவனங்களை உண்டு பால் சுரக்கின்றன. சீமைப்பசுக்களுக்கு நிறுவனங்களின் தீவனம் தேவைப்படுகிறது. தீவனம் குறைந்தால், பால் சுரப்பு குறைகிறது.

வெண்மைப் புரட்சியின் நிஜ முகம்!

பால் உற்பத்தியை முன்வைத்து நடந்து கொண்டிருப்பது மாபெரும் சதி. பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் நம்மை வஞ்சிக்கின்றன. இதுவரை ஆட்சிசெய்த, செய்துகொண்டுள்ள எல்லா அரசுகளும் ‘வெண்மைப் புரட்சி’யைத்தான் தமது கொள்கையாகக் கடைப்பிடித்துள்ளன.

‘பாலில் தண்ணீர் கலக்கிறார்கள்’ என்று கூக்குரல் எழுப்பிய சமூகம் இது. இப்போது தண்ணீரில் குளோரின் கலக்கிறார்கள். பாலில் பல்வேறு வேதிப்பொருட்களைக் கலக்கிறார்கள். இந்தத் தண்ணீருக்கு ‘ஊட்டச்சத்துக் குடிநீர்’ என்று பெயர். இந்தப் பாலுக்கு, ‘கால்சியமும் புரதமும் அடங்கிய அமுதம்’ என்று பெயர்.

இந்தக் காலத்திலும் நாட்டு மாடுகள் வளர்ப்போர், அவர்களைத் தேடிச்சென்று பால் வாங்குவோர் எண்ணிக்கையில் குறைவுதான். ஆனால், அவர்கள்தான் மரபு மீட்பர்கள்!