Published:Updated:

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

இரா.கலைச் செல்வன்

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

இரா.கலைச் செல்வன்

Published:Updated:
எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?
பிரீமியம் ஸ்டோரி
எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

புகையும் இரைச்சலும்தான் நம் போக்குவரத்தின் நிரந்தர அடையாளங்கள். இந்த இரண்டுமே  இல்லாத சாலைகளை 2030-க்குள் உருவாக்குவோம் என்கிறது மோடி அரசு. இந்தக் கனவின் சாவி... மின்-வாகனங்கள்!

பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களுக்குப் பதிலாக, மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் 1800-களிலேயே தங்களுடைய பயணத்தைத் தொடங்கிவிட்டன. 1828-ல் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த அன்யஸ் ஜெடிக் என்ற ஆராய்ச்சியாளர் முதன்முதலாக ஒரு எலெக்ட்ரிக் காரை வடிவமைத்தார். அதைத் தொடர்ந்து எத்தனையோ, ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற வாகனங்களை வடிவமைத்து, சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் பெட்ரோல், டீசலுக்கான தேவை அதிகரிப்பு, உற்பத்திக் குறைவு போன்ற பிரச்னைகள் எழவே, இன்றைய காலகட்டத்தில் அது அதி அவசியமான ஒரு விஷயமாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

டீசல்  இன்ஜின் ரயில்களை, சத்தமே இல்லாமல் பக்கத்தில் வந்து நிற்கும் எலெக்ட்ரிக் ரயில்கள் எப்படி  இடம் மாற்றினவோ... அப்படித்தான் இனி சாலைகளிலும் நடக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் திட்டம். ஆனால், அதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நிலையில் என்னவாக இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடை ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

2013-ம் ஆண்டு, `தேசிய மின்சார இயக்கப் பணித்திட்டம்’ என்பதன் அடிப்படையில் 2020-ம் ஆண்டிற்குள் 70 லட்சம் எலெக்ட்ரிக் வண்டிகள் இந்தியச் சாலைகளில், பயணிக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது அன்றைய மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு. இதற்காகப் பல கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் சரிவர முன்னெடுக்கப்படாததால், பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து 2015-ல் `எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான துரித முன்னெடுப்புத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கு மானியம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதன்படி 2016-17-ம் ஆண்டில் 123 கோடி ரூபாயும், 2017-18-ம் ஆண்டில் 175 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்பு கொண்ட எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த முறை மானியத் தொகை சென்றடைந்திருந்தது.

 “மக்கள், அரசின் எந்தவித மானியச் சலுகைகளும் இல்லாமலேயே, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் அளவிற்கு அரசாங்கம் திட்டங்களைத் தீட்ட வேண்டும். உதாரணமாக, எந்தவித முன்பணமும் இல்லாமல், மாதாமாதம் குறைந்த அளவிலான தவணையைக் கட்டலாம் என்ற முறையைக் கொண்டுவந்தால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களை மாற்றத்திற்குத் தயார்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும், அரசாங்கம் இந்த மாற்றத்திற்கு தயாராக இருக்கிறதா?

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அடிப்படையான விஷயம் மின்சாரம்.  இந்திய அளவில் இன்னும் 18,500 கிராமங்களுக்கு மின்சார வசதியே எட்டவில்லை. இன்றைய தொழில்நுட்பத்தில் லித்தியம் பேட்டரிகள்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குச் சிறப்பாக பொருந்தக்கூடியவை. ஆனால், அவை விலை அதிகம். அதனால், இன்று பல எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் லெட்-ஆசிட் பேட்டரிகளையே உபயோகிக்கின்றனர். லித்தியம் பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்வதற்கே நான்கு மணி நேரம் தேவைப்படும். கிட்டத்தட்ட ஏ.சி-யைவிட மூன்று மடங்கு அதிக அளவிலான கரன்ட்டை இது இழுக்கும். ஒரு வண்டிக்கே இவ்வளவு என்றால், இந்தியா முழுக்க  இருக்கும் வண்டிகளை சார்ஜ் செய்வதற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால், இந்த மின்சாரத்தை உற்பத்திச் செய்வது பெரிய விஷயமில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

சூரிய சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினாலே தேவையான மின்சாரத்தை உருவாக்கலாம். அமெரிக்காவில் ஓடும் எலெக்ட்ரிக் கார்களில், 32 சதவிகிதம் அதில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல்களின் மூலம் தன்னைத்தானே சார்ஜ் செய்துகொள்கின்றன.

சரி...தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடுகிறோம் என்று சொன்னாலும், அடுத்ததாக நாம் தயார் செய்ய வேண்டியது சார்ஜிங் பாயின்ட்டுகள். அதாவது இன்றைய பெட்ரோல் பங்குகள் போன்றது. இந்தியா முழுக்கப் பல லட்சம் சார்ஜிங் பாயின்ட்டுகளை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமான விஷயம். இன்றைய நிலையில் ஐரோப்பாவில் 72,000 சார்ஜிங் பாயின்ட்டுகள் இருக்கின்றன. அமெரிக்காவில் ஒரு லட்சம் சார்ஜிங் பாயின்ட்டுகள் இருக்கின்றன.

உலக அளவில் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில், அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம்தான் மாஸ்டர். 2015-ல் ஆண்டிற்கு 50,000 கார்களை உற்பத்தி செய்த டெஸ்லா, 2020-ல் ஐந்து லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. பனிமழையில்கூட டெஸ்லா கார்களை முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் மக்கள் நிற்பது அமெரிக்காவில் சாதாரணமான நிகழ்வாக இருக்கிறது. மேலும் நிஸான், செவர்லே, ஃபோக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யூ, ஹூண்டாய் போன்ற நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களும் அமெரிக்கச் சந்தையில் இருக்கின்றன. இந்தியாவிலோ, மஹிந்திரா மட்டும்தான் இ20 என்னும் எலெக்ட்ரிக் காரைத் தயாரிக்கிறது. எலெக்ட்ரிக் பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இந்தியாவில் இருக்கின்றன.

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

நம்மைவிட  பலமடங்கு  வேகத்தில் எலெக்ட்ரிக் வாகனக் கனவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே 2040-ல்தான், நூறு சதவிகித எலெக்ட்ரிக் வாகனங்கள் கனவை அடைய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். கனவை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைத்திராத நாம், 2030-க்குள் அதை அடைய இன்னும் பல மடங்கு வேகத்தோடு ஓட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தத் தகவல்கள் எல்லாமே எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை அடிப்படையாக வைத்துப் பேசப்படுவதுதான். இவை மட்டுமல்லாமல், நூறு சதவிகித எலெக்ட்ரிக் வாகனக் கனவை அடைய, பேருந்துகள், ஆட்டோக்கள், மினி வேன்கள் போன்றவற்றையெல்லாம்கூட எலெக்ட்ரிக்காக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இதையெல்லாம், யோசித்துப் பார்க்கும்போது பெரும் மலையைக் குடையும் சிறு எலியாகத் தான் இருக்கிறோம்.

இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களைவிட சிறந்தது ஏதுமில்லை. அதே போல், பொருளாதார ரீதியிலும் பல மடங்குப் பணத்தை மிச்சப்படுத்தும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள். இந்திய பெட்ரோலியத் துறையின் திட்டம் மற்றும் ஆய்வுப்பிரிவு அறிக்கையின்படி, வருடத்திற்கு 19 மில்லியன் டன் பெட்ரோலும், 69 மில்லியன் டன் டீசலும் நுகரப்படுகிறது. அதேசமயம், 16 மில்லியன் டன் பெட்ரோல், 25.5 மில்லியன் டன் டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் உபயோகிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். இதன்மூலம் அந்நியச் செலாவணியை அதிகப்படுத்த முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் உலகிலேயே 100 சதவிகித எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்ட முதல் நாடாக நார்வே தன்னை அறிவித்தது. 2030-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகன நாடாகத் தன்னை மாற்ற ஜெர்மனி, முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சீனாவும் இதில் முழு முனைப்புக் காட்டி வருகிறது. 2040-ற்குள் உலகின் 35 சதவிகித நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டவையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ற வகையில் உதிரி பாகங்களின் விலையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2010-ல் 1,000 அமெரிக்க டாலர்களாக இருந்த பேட்டரி இன்று 200 டாலராக விலை குறைந்துள்ளது.

கார்பன் வெளியேற்றத்தைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்பதில் தொடங்கி, பல நல்ல விஷயங்கள் எலெக்ட்ரிக் கார்களில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அதிலும் சில பிரச்னைகள் இருப்பதாகக் கருத்துகளை முன்வைக்கிறார்கள் சிலர்.

# சாதாரண கார்களைத் தயாரிப்பதைக் காட்டிலும், எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதில் சூழலியல் கேடுகள் அதிகம். குறிப்பாக, அதற்கான பேட்டரிகளைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை எடுக்க பல சுரங்கங்களைத் தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படும்.

# கார்பன் வெளியேற்றத்தில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது. வாகனங்கள் வெளியேற்றும் புகைக்கு நிகராக, எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கார்பனை வெளியேற்றும்.

#  அதிக அளவிலான  சார்ஜிங் பாயின்ட்டுகளை உருவாக்க வேண்டியிருக்கும்.

# எலெக்ட்ரிக் கார்கள் நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவகையில் இன்னும் தயாரிக்கப்படவில்லை.  குறைந்த அளவிலான வேகத்திலேயே அது செல்கிறது. விலையும் அதிகமாக இருக்கின்றன...
இப்படியாக மின்-வாகனங்களுக்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

“எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் உபயோகத்தில் எந்த உலக நாடுகளையும் பின்பற்றாமல், மொத்த உலகமும் நம்மைப் பின்பற்றும் வகையில் பெரும் முன்னேற்றத்தை  அடைய வேண்டும் என்பதுதான் இந்த அரசின் கனவு” என்று பியூஷ் கோயல் சொல்லியிருக்கிறார்.

சரிதான்... இந்தத் திட்டம் வராது, வரக் கூடாது, வர முடியாது என்பதல்ல மக்களின் எண்ணம். `வந்தால் நல்லாயிருக்கும்’ என்று தான் சொல்கிறோம். ஆனால் அது இருக்கிற பாதிப்பை இன்னும் அதிகமாக்கிவிடாத ஒன்றாக, மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும்.

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

“2030-ன் எலெக்ட்ரிக் கனவு தொழில்நுட்ப ரீதியில் பலிக்குமா என்று கேட்டால், நிச்சயம் நடக்கும் என்று சொல்வேன். ஆனால், தேவை அரசின் ஒத்துழைப்பும், ஈடுபாடும், தொடர் திட்டங்களும்தான். அமெரிக்காவில் ஆயிரத்தில் 800 பேர் கார் ஓட்டுகிறார்கள், இந்தியாவில் 80 பேர்தான் ஓட்டுகிறார்கள். பொதுப்போக்குவரத்துதான் இங்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதிலிருந்தே அரசாங்கம் தன் திட்டத்தைத் தொடங்கலாம். முதலில் அனைத்து அரசுப் பேருந்துகளை எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்திற்கு மாற்றலாம். கூடவே, குப்பைகள் அள்ளும் வாகனங்கள் போன்ற அரசுத் துறைகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களையும் மின்மயமாக மாற்றலாம். ” - ஹேமலதா, ஆம்ப்பியர் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு நிறுவனம்.

எலெக்ட்ரிக் இந்தியா, கனவா?

``எதிர்கால உலகம் இப்படித்தான் இருக்கும். மக்கள் வீட்டிலேயே தங்கள் கார்களை சார்ஜ் செய்வார்கள். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு ஆங்காங்கே சார்ஜிங் பாயின்ட்டுகள் இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் எளிய மக்களும் வாங்கும் விலையில் எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்கும். இந்தியாவில் மிக விரைவிலேயே டெஸ்லா கார்கள் அறிமுகப்படுத்தப்படும். எதிர்காலத்தில் உலகம் முழுக்கவே எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும்தான் இருக்கும்.”

- எலன் மஸ்க், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனர்.