Published:Updated:

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

ஐஷ்வர்யா

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

ஐஷ்வர்யா

Published:Updated:
“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”
பிரீமியம் ஸ்டோரி
“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

மது ஏவுகணைகளும் செயற்கைக் கோள்களும் மேலே மேலே உயரத்தை நோக்கிப் பறக்கத்தொடங்குகின்றன. ஆனால் இன்னமும் செப்டிங் டேங்கைச் சுத்தப்படுத்த மனிதர்கள் குழிக்குள் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வேறுபட்ட இந்தியாவின் விசித்திரத்தைப் பதிவது கலையின் நேர்மையான அடிப்படையாக இருக்கமுடியும்.

கர்ப்பிணிப் பெண் ஒருவர், மலக்குழிக்குள் இறங்கிச் சுத்தம் செய்துவிட்டு வெளியேறுகிறார். ‘`எல்லோருக்கும் பிள்ளைப்பேறு காலத்தில் மட்டும்தான் குமட்டலும் வாந்தியும் வரும். இந்தக் குழிக்குள் தினமும் இறங்கும் எங்களுக்கு எப்போதுமே குடல் கிழியுற அளவுக்கு குமட்டல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எந்த வீட்டில் சுத்தம் செய்கிறோமோ அந்த வீட்டுப் பெண்கள் எங்களைப் புழுவைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள், திட்டுவார்கள்.  நாங்கள் அங்கிருந்து நகர்ந்த பிறகு நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்தை அசிங்கம் போல சுத்தம் செய்வார்கள். அவர்களின் மலத்தை எங்களைச் சுத்தம் செய்ய வைப்பதை விடவா பெரிய அசிங்கம் இருந்துவிடப் போகிறது? பிறப்புறுப்பு ஒரே மாதிரி இருப்பதால் மட்டும் எல்லோரும் ஒரேமாதிரியான பெண்கள் ஆகிவிட முடியாது” என அரங்கம் அதிர வசன வரிகள் ஒலிக்க, எங்கும் ஆற்றாமையின் நிசப்தம்.

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

‘ஒரே தேசம் ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி அறிமுகவிழா ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்ட  அதே நாளில்தான் சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘மஞ்சள்’ நாடக நிகழ்வும் நடந்தது!

மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றிய நவீன நாடகம் அது. பத்திரிகையாளர் பாஷா சிங்கின், ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ கட்டுரைத் தொகுப்பை தழுவி ஜெயராணி எழுதிய நாடகம். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், ஜெய்பீம் மன்றம் ஒருங்கிணைப்பில் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது ‘மஞ்சள்’.

மலக்கழிவுகளுக்கு இடையில் இருந்து வெளியேறும் துப்புரவுத் தொழிலாளர்கள், கழிவுகளைச் சமூகத்தின்மீது வீசுவதுபோலத் தொடங்குகிறது நாடகம். அதற்குப் பிறகு துப்புரவுத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என ஒவ்வொருவர் மீதும் இந்த சமூகம் திணிக்கும் துன்பங்களை அடுத்தடுத்து விவரிக்க, பெரும் துயரத்தின் சாட்சியாக இரண்டரை மணிநேரம் நிகழ்ந்து முடிகிறது ‘மஞ்சள்’!

சிறுவயதிலேயே மலம் அள்ள நிர்பந்திக்கப்பட்டு, பின்னாளில் தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடி, மலம் அள்ளும் தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக ஆந்திராவை மாற்றிய நாராயணம்மாவின் வாழ்க்கையும் நாடகத்தின் ஓர் அங்கமாக நிகழ்த்தப்பட்டது. அவருடைய வைராக்கியக் கதைக்கு பார்வையாளர்களிடம் எழுந்த கைத்தட்டல் சென்னை முழுக்கக் கேட்டிருக்கும்.

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

“எல்லோரும் மழை வந்தா கொண்டாடுவாங்க. ஆனால், மழை வந்தா நாங்க தலையில் சுமந்துட்டு இருக்கிற மலக்கூடை வழிந்து எங்கள் மேல் மலம் ஒழுகிக்கொண்டு போகும். என்னை எனக்கே பிடிக்காம போனது அப்போதான்” என்று கூறி மழைத்தண்ணீரில் நின்றபடி சுத்தம் செய்யும் துப்புரவாளர்; “பிச்சை எடுக்கக்கூடப் போ... ஆனா, அந்த பீ அள்ளுற வேலைக்கு மட்டும் போகாத” என்று கணவனிடம் சண்டையிடும் மனைவி; ‘`நாட்டுக்காக உயிர் இழக்கறவங்க தியாகிகள், அப்படின்னா நாங்க...?” என்று அரங்கத்தைப் பார்த்துக் கேள்விகேட்கும் பெண் துப்புரவாளர்; “உங்களுக்கெல்லாம் மஞ்சள் என்றால் புனிதம். எங்களுக்கு, மஞ்சள் அசிங்கம், அவமானம், இழிவு” என்ற துப்புரவாளர் குடும்பம் என அசலான மனிதர்களும், அவர்களுடைய வேதனைகளுமாக `மஞ்சள்’ வந்திருந்த அத்தனை பேரையுமே உலுக்கி எடுக்கத் தவறவில்லை.

‘‘இந்த நாடகத்தை இந்தியா முழுக்க எடுத்து செல்ல இருக்கிறோம். ஆங்கிலத்தில் மொழிமாற்றி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறோம். சென்னையில் மட்டும் அல்லாது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங் களிலும் நிகழ்த்துவோம்’’ என மஞ்சளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்வேகத்தோடு பேசுகிறார் ஜெய் பீம் அமைப்பின் ஜெயராணி. 

``கையால் மலம் அள்ளும் இழிவை ஒட்டு மொத்தமாக அகற்றணும். இது குறித்து மக்களிடையே தொடர்ச்சியான விழிப்பு உணர்வை உருவாக்கவேண்டும். கலைக்கு மட்டும்தான் சமூகத்தை மாற்றக்கூடிய வலிமை உண்டு. மாற்றத்தை ஏற்படுத்துவோம், நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக அதை முன்னெடுப்போம்.’’ என்று தன் கருத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார் இயக்குநர் பா.இரஞ்சித்.

“மஞ்சள் எங்களுக்கு நரகம்!”

மனிதர்களைச் சாதிகளாகப் பிரித்த  கொடூரம், சாதியின் இருப்பை ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்பைப் பற்றி மட்டும் பேசிய காந்தியத்தின் போதாமை,விளம்பர ஆரவாரமான ‘தூய்மை இந்தியா’ திட்டம், ‘மனித மலத்தை மனிதர்களே அள்ளுவதைத் தடை செய்துவிட்டதாக’ச் சொல்லிவிட்டு, ரயில்வேயில் மனிதர்களைத் துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் போலித்தனம், வழக்குகளை இழுத்தடிக்கும் நீதித்துறை என சகல பரிமாணங்களின்மீதும் வெளிச்சக் கேள்விகளை வீசியது ‘மஞ்சள்’ நாடகம்.

நாடகம் முடிந்து வெளியே வர ``அகலட்டும் இழிவுகள். வரட்டும் மாற்றம்...’’ என்கிற குரல்கள் ஒலிக்கத்தொடங்கின...

மாற்றம் மலரட்டும்!