Published:Updated:

போராடுவோம்... போராடுவோம்...

போராடுவோம்... போராடுவோம்...
பிரீமியம் ஸ்டோரி
போராடுவோம்... போராடுவோம்...

ஆழி செந்தில்நாதன்

போராடுவோம்... போராடுவோம்...

ஆழி செந்தில்நாதன்

Published:Updated:
போராடுவோம்... போராடுவோம்...
பிரீமியம் ஸ்டோரி
போராடுவோம்... போராடுவோம்...

யற்கைவளச் சுரண்டல், ஜல்லிக்கட்டு, கூடங்குளம், மீத்தேன், மீனவர் படுகொலைகள், கெயில், பேரறிவாளன், எழுவர் விடுதலை, காவிரி நடுவம், சாதி ஆணவக்கொலைகள், தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட், டாஸ்மாக் எதிர்ப்பு, நியூட்ரினோ, விவசாயிகள் தற்கொலை, கதிராமங்கலம், நெடுவாசல், இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, தாமிரபரணி, அத்திக்கடவு-அவினாசி, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்னை, வேடியப்பன் மலை, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., மாட்டுக்கறி, கீழடி, செம்மொழி நிறுவனம்... இந்த நிமிடம்வரை தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கிற பிரச்னைகளின் நீண்ட பட்டியல் இது! அச்சில் ஏறி உங்கள் கைகளுக்கு வருவதற்குள் இன்னும் இரண்டு விஷயங்கள் இதில் சேரலாம்!    

போராடுவோம்... போராடுவோம்...

எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ்நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் சாலைகளில் இறங்கிப் போராடுகிறார்கள். ஒரு பக்கம் மத்திய-மாநில அரசுகள் அவர்களுடைய போராட்டங்களை அலட்சியப் படுத்துகிறது, அல்லது அடக்கி ஒடுக்க முனைகிறது. இன்னொரு பக்கம் எல்லா எதிர்ப்புகளையும் கடந்து போராட்டங்கள் அதிகரிக்கின்றன!

2016-ல், மக்கள் போராட்டங்கள் அதிக அளவு நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (BP&RD) அறிக்கை கூறுகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 47 போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. இந்தியாவில் நடந்த போராட்டங்களில் 25 சதவிகிதம் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டு 2015-லும் 20,450 போராட்டங்கள் நடத்தி தமிழ்நாடு, அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தில் வந்திருந்தது என்றும் அதே பி.பி.ஆர்.டி. அறிக்கை கூறுகிறது.  யார் கண்டது... 2017 புள்ளிவிவரங்கள் வரும்போது, போராட்டங்களின் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆகிவிடலாம். முன்பெல்லாம் தொழில் வளர்ச்சி, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, எழுத்தறிவு இவற்றில்தான் தமிழ்நாடு முன்னிலைப் படுத்தப்பட்டது. இப்போது போராட்டத் தொழிற்சாலையாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது!     

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போராடுவோம்... போராடுவோம்...

எப்போதிலிருந்து தமிழகம் போராடத் தொடங்கியது? மத்திய அரசின் ஆய்வின்படி 2009-லிருந்துதான். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது செய்வறியாது திகைத்து நின்ற தமிழகம்தான், தனது இனக் கோபத்தை மெள்ள மெள்ள அரசியல் சீற்றமாக இப்போது மாற்றத்தொடங்கியிருக்கிறது. ஏன் இப்படி? மூன்று முறை அறைந்தால், புத்தனுக்கும் கோபம் வரும் என்பார்கள். இங்கே நம்மை ஆளும் அரசுகள் முப்பது முறை அறைந்தால்?

களங்கள் பலவிதம் என்றாலும், அவற்றை இணைக்கும் புள்ளி ஒன்றுதான். இந்தப் போராட்டங்கள் மத்திய அரசுக்கும் அந்த அரசிடம் போராடி உரிமைகளை நிலைநாட்டாத மாநில அரசுக்கும் எதிரான போராட்டங்கள். இவை பெரும்பாலும் நிறுவனமயமான அரசியல்கட்சிகளால் தொடங்கப்பட்டவையோ வழி நடத்தப்பட்டவையோ அல்ல. இவை மக்களால், மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள். ஆனால், இந்தப் போராட்டங்களை நடத்தியவர்கள் எப்போதுமே தேச விரோத அல்லது சமூக விரோதச் சக்திகளாகவே அரசால் வர்ணிக்கப் பட்டிருக்கிறார்கள்.

இன்றைய தமிழகப் போராட்டக்களம் என்பது நமது நாட்டுப்புறக்கலைகள்போலவே வண்ண மயமானது.  இடதுசாரிகள், தலித் இயக்கத்தவர்கள், தமிழ் தேசியவாதிகள், பெரியாரியவாதிகள், விவசாயிகள், சுற்றுச்சூழல் போராளிகள், சிறுபான்மை அமைப்புகள், சமூகநல அமைப்புகள், எளிய பெண்கள் என ஊடும்பாவுமாகத் தமிழகப் போராட்ட அரசியல் தோற்றமளிக்கிறது. நூற்றுக்கும் குறைவில்லாத அமைப்புகள் இந்தக் களங்களில் செயல்படுகின்றன. நிச்சயமாக அவற்றிலிருந்து பத்துப் பதினைந்து தலைவர்கள் எதிர்கால தமிழக அரசியல் தலைவர்களாகப் பரிணமித்து வர வாய்ப்பிருக்கிறது. இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் இந்தப் போராட்டங்களை விரிவாக எடுத்துச்செல்கிறார்கள். இந்தப் போராட்டங்களுக்கான ஆதரவுத்தளம் என்பது உலகளாவியத் தமிழர்களை ஒன்றிணைக்கவும் செய்திருக்கிறது!    

போராடுவோம்... போராடுவோம்...

இன்று தமிழகத்தில் இருவிதமான போராட்டக் களங்கள் இருக்கின்றன. ஒன்று நேரடியாக வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு பிரச்னைக்காக மக்கள் உயிர் கொடுத்துப் போராடும் போராட்டங்கள். கூடங்குளம், கதிராமங்கலம், டாஸ்மாக் கடை எதிர்ப்புப் போராட்டங்கள் அப்படிப்பட்டவை. ஜந்தர் மந்தரில் உடல் மானத்தைத் துறந்தது முதல், கத்திப்பாரா பாலத்தைப் பூட்டியதுவரை விவசாயிகளின் போராட்டங்கள் அத்தனையும் அடிவயிற்றுக் கோபங்கள்.

தங்களுடைய வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதைப் பார்த்துப் பார்த்து இனி பொறுக்க முடியாது என்று முடிவெடுத்த பிறகுதான் வீட்டைவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்களின்மீது அரசு, வழக்குகளாகப் போட்டுத் தள்ளுகிறது. பெண்களிடம் உங்களை விபசார வழக்கில் போடுவோம் என்று மிரட்டிப் பார்க்கிறது. பெண்களை நடுத்தெருவில் லத்திகளால் விளாசுகிறது. தானே தீவைத்துவிட்டு அகிம்சைப் போராளிகளின்மீது அவமானத்தை ஏற்ற முயன்று தோற்கிறது. குண்டர் சட்டத்தை ஏவுகிறது. இப்போதும் இடிந்தகரையில் வீட்டுக்குப் பத்து வழக்குகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பெண்கள் இதற்கெல்லாம் அஞ்சாமல் போராட்டக்களத்தைப் பெரிதாக்கிக்கொண்டே போகிறார்கள். பெண்களுடைய வருகைக்குப்பின் இங்கே போராட்டம் அதன் அசலான வீரியத்துடன் விரிந்துகொண்டே செல்கிறது.

இன்னொரு வகையான போராட்டமும் விஸ்வரூபம் எடுக்கிறது. அது நகர்ப்புறங்களில் எல்லா வீடுகளிலும் பரவத்தொடங்கியிருக்கிறது. அந்தப் போராட்டம் வரவேற்பறைகளிலும் கைப்பேசிகளிலும் கணினிகளிலும் நடத்தப்படுகிறது. அதிலும் முன்னிலை வகிப்பது பெண்கள்தான். இன்று பெரும்பாலான பெண்களிடம் கைப்பேசி இருக்கிறது. அதில் வாட்ஸ்அப் இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டம், சமூக ஊடகங்களினூடாக இணைக்கப்பட்ட ஒரு போராட்டம். வெகுசன ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இணைந்து மிரட்டிய நாள்கள் அவை. தொலைக்காட்சி ஊடகங்கள் போராட்டத்தை ஒளிபரப்பின என்று சொல்வதைவிட போராட்டமே ஊடகங்களினூடாகத்தான் நடந்தது என்றே சொல்லலாம். அதனால்தான், நாடே தொலைக்காட்சித் திரையில் கண் குவித்திருந்த போதும், இரண்டு நாள்களுக்கு எந்த விளம்பரத்தையும் போடாமல் இருக்க வேண்டும் என்கிற முடிவை அந்த நிறுவனங்கள் எடுத்தன. இது நமக்கு முன்னுதாரணமற்றது!

பழைய போராட்ட வடிவங்களும் புதிய எதிர்ப்பு வடிவங்களும் கலந்துறவாடும் இந்தப் போராட்டங்களில் சமூகத்தில் மிகச் சிறிய ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பங்கேற்கிறார்கள் என்பதுதான் இன்றைய நடப்பு. காரணம், ஒரு சராசரித் தமிழ்க் குடும்பத்தில் இன்று எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாமும் குடும்ப அரசியல் செய்வோம் என்று மக்களும் கிளம்பிவிட்டார்கள். ஒரு குடும்பத்துக்கான வாட்ஸ்அப் குரூப்பில் போராட்டச்செய்திகளை மகன், அம்மா, தம்பி, அண்ணன், அக்கா, மாமன் எனப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இயற்கைவளம், கலாசாரம், மொழி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், உடல் நலம் எனக் களங்களின் தன்மை வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அவற்றைப் பிணைப்பது எது? மாந்தர்க்கு அழகு என்று பெரியார் சுட்டிக்காட்டிய `மானமும் அறிவும்’தான். மானம் என்பது ஒரு சமூகம் தன்மீது சுமத்தப்பட்ட தாழ்வு மனப்பான்மையை நிராகரிப்பதில் உறுதிப்படுகிறது. அறிவு என்பது தங்களிடம் பரப்பப்படும் பொய்யை நிராகரிப்பதில் வெளிப்படுகிறது. கற்றறிந்த சமூகத்தின் பல கூறுகள் இந்தப் போராட்டங்களில் வெளிப்படுவதை நாம் பார்க்க முடியும்.

கூடங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக் குழந்தைகூட அணு அரசியல் தெரியும் என்று கூறுவது எதனால்? மொழி உரிமைப் போராட்டத்தில் மத்திய அரசின் ஒவ்வொரு நகர்வுக்கும் எதிராக ஆதாரபூர்வமான முறையில் எதிர்வினைகள் ஆற்றப்படுவது எதனால்? “அன்றைய தமிழச்சி முறத்தால் அடித்தாள், இன்றைய தமிழச்சி அறத்தால் அடிப்பாள்” என்று ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் எழுந்த முழக்கம் யாருடையது? மீத்தேன், ஷேல் கேஸ் விவகாரத்தில் அரசுகள் சொல்லும் பொய்யை அக்கணமே சுக்குநூறாக உடைத்தெறியும் கிராமத்து இளைஞர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள்? ஒன்றுக்கொன்று எதிரானதுபோலத் தோன்றும் கால்நடைப் பொருளாதாரத்தையும் மாட்டிறைச்சி விவகாரத்தையும் எவ்வளவு லாகவமாக இந்தச் சமூகம் எதிர்கொண்டது? உண்மையில் தமிழனாக இருப்பதற்குப் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.     

போராடுவோம்... போராடுவோம்...


தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் மூலமாக நவீனத்துவ சமூகவியல் கூறுகளைப் பெற்ற தமிழ்ச்சமூகம், இன்று அதைத் தாண்டிச் செல்கிறது. கிட்டத்தட்ட வளர்ந்த நாடுகளில் காணப்பட்ட சில அசைவுகளை இன்று தமிழ்நாட்டிலும் பார்க்க இயலுகிறது. ஐரோப்பா போன்ற தொழில்யுகத்தைத் தாண்டிய நாடுகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட பசுமை அரசியல் தமிழ்நாட்டில் தனக்கென பச்சைத் தமிழகம் என்று ஒரு கட்சியைக் கொண்டிருக்கிறது. மொழி உரிமை அரசியல், அடையாள அரசியலாக இருப்பதைத் தாண்டி, மொழி சார்ந்த அதிகார அரசியலை நோக்கி நகர்கிறது. சமூக ஊடகவெளியில் வடநாட்டு மொழிவெறியர்களைப் பந்தாடும் தமிழக இளைஞர்களில் பலர், தனியார் பள்ளிகளில் கஷ்டப்பட்டாவது `ஏக் தோ தீன்’ படித்தவர்கள்தான் என்பது யாருக்காவது தெரியுமா? 

ஆனால், இந்தத் தலைமுறையைப் பற்றி எல்லாவற்றையுமே சாதகமாகப் பார்த்துவிட முடியாதுதான். இன்றைய இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் நிரம்பிய இந்தப் போராட்டக்களம் முந்தைய தலைமுறை திராவிட இயக்கத்தினரும் இடதுசாரிகளும் நிரம்பியிருந்த போராட்டக்களங்களிலிருந்து வித்தியாசப்பட்டது. அந்த வித்தியாசமே இன்றைய போராட்டக்களங்களில் பலத்தையும் பலவீனத்தையும் காட்டுகிறது.

தீவிரமான அரசியல் அடிப்படை இல்லை, சாதிய, பாலின, வர்க்க அரசியல் குறித்த தெளிவுகள் அவர்களிடம் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்மையானவையே. ஆனால், ஒரு களத்தில் இறங்குபவர்கள் மற்றக் களங்களையும் கற்றுக்கொள்வதற்கான சூழல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்கள்.      

போராடுவோம்... போராடுவோம்...

இப்போது பெரிய சவால் கட்சிகளுக்குத்தான். குறிப்பாக தி.மு.க., இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் போன்ற பழைய கட்சிகளுக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. புதிய கட்சிகளான நாம் தமிழர் கட்சி, பச்சைத் தமிழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவையும் சவால்களைச் சந்திக்கின்றன. ஸ்டாலின் தொடர்ச்சியாகப் புதுப்புது முயற்சிகளைச் செய்துவருகிறார்.  இடதுசாரிகளின் புதிய நகர்வுகள் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றன. தமிழகத்தில் சாதிவெறி தாண்டவமாடத் தொடங்கியவுடன்  தீண்டாமை ஒழிப்பு முன்னணியினூடாக அதை எதிர்கொண்டது சி.பி.எம். கூடங்குளம் திட்டம் தொடர்பான நிலைப்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவந்ததில் தனது தமிழ் அடித்தளத்தை அது மீண்டும் கண்டறிந்திருக்கிறது. கடந்த மாதம் சென்னையில் அவர்கள் நடத்திய தமிழர் உரிமை மாநாடு திராவிட, தமிழ் தேசியச் சக்திகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது!

இன்றைய போராட்டங்கள் தீவிரமான அல்லது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கங்களால் நடத்தப்படவில்லை. ஆனால், அதற்கு மக்களைக் குறைசொல்லிப் பயனில்லை. அரசியல் அமைப்புகளுக்கு விதைக்கத்தெரிகிறது, நிலம் பண்பட்டு இருப்பதால் விதைகள் முளைக்கவும் செய்கின்றன. ஆனால், அதை வளர்த்து, சமூக மாற்றமாக அறுவடை செய்ய அமைப்புகள்தான் தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இது டெக்ஸ்ட்புக் புரட்சி அல்ல. ஆனாலும், ஒரு புள்ளியில் மக்களின் கலக உணர்வும் போராட்ட அமைப்புகளும் இணையாவிட்டால், இப்போது நடக்கும் எல்லா போராட்டங்களுமே பழைய கனவுகளாக ஆகிவிடும்!     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism