Published:Updated:

வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்

வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்

ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்

வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்

ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்

‘‘பல டி.வி சேனல்களிலிருந்தும் பேட்டி கேட்டாங்க. ‘வேண்டாம்’னு சொல்றதுக்கு தர்மசங்கடமாத்தான் இருந்துச்சு. ஏன்னா, இதை நான் பப்ளிசிட்டிக்காகப் பண்ணலை. பார்க்கிறவங்க கவனம், நான் சொல்ற விஷயத்துல இல்லாம, ‘சத்யராஜ் பொண்ணு போட்டிருந்த அந்த டிரெஸ் நல்லா இருந்துச்சுல்ல...’னு வேறு பக்கம் சிதறிடுமோனு சின்னத் தயக்கம்’’ - சத்யராஜே பெருமைபட்டுக்கொள்ளும் வகையான விஷயத்தைச் செய்திருக்கிறார் அவரின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா.

``உங்களிடம் ஆலோசனைக்கு வருபவர்களிடம், எங்கள் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைச் செய்யுங்கள்’’ என அமெரிக்க மருந்து கம்பெனியைச் சேர்ந்தவர்கள் இவரை அணுகியுள்ளனர். அவர்கள் தந்த மருந்தின் மாதிரிகளில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் ஸ்டிராய்டுகள் இருப்பதால், அதைப் பெற திவ்யா மறுத்திருக்கிறார். அவர்கள் இவருக்கு அதிகப்படியான லஞ்சம் தருவதாகக் கூறியுள்ளனர். அவர்களிடம் கடுமையாகப் பேசிய திவ்யா, உடனடியாக அவர்களை வெளியேறச் சொல்லியுள்ளார். உடனே  தங்களின் மேல்மட்ட அரசியல் தொடர்புகளைக் கூறி இந்திய மருத்துவத் துறை மற்றும் மருத்துவர்கள் பற்றித் தவறாகப் பேசி திவ்யாவை மிரட்டியவர்கள், பிறகு வெளியேறினர். இதைத் தொடர்ந்து மருத்துவத் துறையின் முறைகேடுகள் மற்றும் அலட்சியம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு திவ்யா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், மருத்துவத் துறையின் தற்போதைய நிலை குறித்துப் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து திவ்யாவிடம் பேசினேன்.

வெளிநாட்டவனே வெளியேறு! - திவ்யா சத்யராஜின் எதிர்க்குரல்

* திவ்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நான் டாக்டர் அல்ல, ஒரு நியூட்ரிஷியனிஸ்ட். அதாவது ஊட்டச்சத்து நிபுணர். `கவுன்சலிங் அண்ட் நியூட்ரிஷியன்’-ல் எம்.ஃபில் முடிச்சுருக்கேன். தனியார் மருத்துவமனை ஒன்றில் நியூட்ரிஷியனிஸ்ட்டாக வேலை பார்க்கிறேன். `சத்யராஜின் மகள், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்ற பரபரப்பு எழுந்ததே தவிர, அந்தக் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறேன் என இதுவரை எங்குமே முழுமையா வரலை. அது முழுமையா வெளிவந்தால், மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்பட ஒரு வாய்ப்பா இருக்கும்’’ என்றவர், அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை நம்மிடம் தந்தார்.

அந்தக் கடிதம்...

விடுநர்:

திவ்யா சத்யராஜ்

ஊட்டச்சத்து நிபுணர் (Nutritionist),

தமிழனின் மகள்,

தமிழ்நாடு.

பெறுநர்:

மதிப்புக்குரிய இந்தியத் திருநாட்டின் பிரதம மந்திரி அவர்கள்,

பொருள்: மனிதநேயத்தைவிட பணம் பெரியதா?

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களுக்கு, எங்களின் கருத்துகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த ஒரு களம் அமைத்துத் தந்ததற்கு நன்றி. மருந்து என்பது, மனித உயிர்களைக் காப்பதற்கே. ஆனால், அது இன்றளவில் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

சமீபத்தில் என்னுடைய அலுவலகத்துக்கு அமெரிக்காவிலிருந்து மருந்து தயாரிக்கும் அமெரிக்கர்கள் வந்தனர். அவர்கள் மல்டிவைட்டமின் (Multivitamin) மற்றும் உடல் எடையைக் குறைக்கும் (Fat burner), உடல் எடையைக் கூட்டும் (Weight/Muscle gainer) மருந்துகளை எனக்கு அறிமுகப்படுத்தினர். அதை மக்களிடம் கொண்டுசெல்லவும் வலியுறுத்தினர். அந்த மருந்தில் ஸ்டிராய்டுகள் (Steroids) இருந்ததைக் கண்டேன். இதை உட்கொள்வதால் பார்வை மங்குதல், கல்லீரல் பாதிப்புகள் எனப் பல உடல் உபாதைகள் வரக்கூடும் என்பதால், அதைப் பெற மறுத்தேன். அவர்கள் அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தால், எனக்கு அதிகப்படியான லஞ்சம் தருவதாகக் கூறி என்னைச் சம்மதிக்கவைக்க நினைத்தனர்.

`மனிதநேயத்தைவிட பணம் முக்கியமா?’ என்று நான் கேட்டவுடன், அவர்கள் என்னை மிரட்டும்விதமாக தாங்கள் ஓர் அமைச்சரின் வீட்டில் தங்கியிருப்பதாகவும், பல அரசியல் தலைவர்கள் தங்களுக்குத் தெரியும் எனக் கூறி, இந்திய நாட்டைப் பற்றியும், மருத்துவர்கள் பற்றியும் தவறாக விமர்சித்தனர்.

அவர்களின் தவறான மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக வந்தவர்களுக்கு, நம் நாட்டின் மருத்துவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய எந்தத் தகுதியும் இல்லை. அவர்களை நான் உடனே என் அலுவலகத்திலிருந்து வெளியேறச் சொன்னேன். எனக்கு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களை மதிக்கத் தெரியவில்லை என மிரட்டிவிட்டு வெளியேறினர். அந்த மருந்துகளின் குறிப்புகளை (ingredients list) உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் அமைப்புகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, வெளிநாட்டில் தடைசெய்யப்பட்ட, மனிதனுக்கு அளிக்கத் தகுதி இல்லாத மருந்துகள் நம்மைக் குறிவைத்து வருகின்றன. இதை யார் தடுப்பது? உடல்நலம் குன்றிய நடுத்தர மனிதனின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கும் தேவையில்லாத பல மருத்துவப் பரிசோதனைகள் எதற்கு?

உடல்நலம் சரியான பிறகும் மதுரையைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர், மேலும் 10 நாள்கள் ஏன் மருத்துவமனையில் தங்க வேண்டும்? மருத்துவமனையில் கவனக்குறைவும், அலட்சியமும், தாமதமும் ஏன்? நோயாளிகள், வருவாய் உருவாக்கும் இயந்திரங்களாக நடத்தப்படுவது ஏன்? ஒரு புத்திசாலி மாணவனால் 50 லட்சம் ரூபாய் செலவு செய்ய இயலாதபோது, அவனின் மருத்துவர் கனவை யார் நினைவாக்குவது? மருத்துவப் படிப்பு நல்ல புத்திசாலிகளுக்கா அல்லது வசதி படைத்தவர்களுக்கா?

இது ஒரு தீய வட்டம் (Vicious Circle). இதை, தங்களைப் போன்ற மக்கள் நலன் காக்கும் தலைவனால் மட்டுமே தடுக்க முடியும். வெளிநாட்டிலிருந்து வரும் ஆபத்தான மருந்துகளைத் தடுக்க, நீங்கள் முயற்சி எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மருத்துவ முறைகேடு (Medical Malpractice) மற்றும் மருத்துவ அலட்சியம் (Medical Negligence) ஆகியவற்றுக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். மருத்துவமனைக்குச் செல்பவர்களின் நலனும் பணமும் காக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் ஒவ்வோர் இந்தியனும் அச்சமின்றிச் செல்ல வேண்டும். நம் நாட்டில் வாழும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குப் பயம் இல்லாமல் மருந்தளிக்க வேண்டும். அதேபோல் பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் மகள்கள் நம்பிக்கையுடன் தைரியமாகச் செல்ல வேண்டும்.

நம்பிக்கையுடன்

திவ்யா சத்யராஜ்.


திவ்யா முன்னெடுத்திருப்பது முக்கியமான பிரச்னை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியர்கள் மீது திணிக்கும் மருந்துகள் குறித்து அரசும் நாமும் கூட விழிப்படைய வேண்டிய தருணம் இது. ‘‘மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார் திவ்யா. நம்பிக்கை பலிக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism