Published:Updated:

கங்கிராட்ஸ் ரவிகிரண்!

கங்கிராட்ஸ் ரவிகிரண்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கிராட்ஸ் ரவிகிரண்!

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன்

கங்கிராட்ஸ் ரவிகிரண்!

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
கங்கிராட்ஸ் ரவிகிரண்!
பிரீமியம் ஸ்டோரி
கங்கிராட்ஸ் ரவிகிரண்!

மியூஸிக் அகாடமிக்கு வாய்ப்பாட்டு அலுத்துவிட்டதா அல்லது பாடகர்களுக்கு ஓய்வு கொடுக்க விருப்பமா என்பது யாம் அறியோம். தொடர்ந்து இரண்டாவது முறையாக இசைக்கருவிக்கு சங்கீத கலாநிதி விருது!

கடந்த வருடம் வயலின் ஏ.கன்யாகுமாரியைத் தொடர்ந்து இந்த வருடம் கலாநிதி விருது பெறுகிறார் சித்ர வீணை ரவிகிரண்.

சித்ர வீணை என்பதுதான் இந்தக் கருவிக்கு நிஜப் பெயராக இருந்திருக்கிறது. பின்னர் வித்வான் சகாராம ராவ் காலத்தில் கோட்டு வாத்தியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ரவிகிரணின் தாத்தாவும் ‘கோட்டுவாத்தியம் நாராயண ஐயங்கார்’ என்றுதான் அறியப் பட்டிருந்தார். டி.கே.ஜெயராமன், கலாநிதி விருது பெற்ற 1990-ம் வருடம்; அகாடமியின் காலை நேர மாநாட்டில், மறுபடியும் இந்த இசைக்கருவி சித்ர வீணை என்றே அழைக்கப்படுவதற்கு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர் ரவிகிரண்!

கங்கிராட்ஸ் ரவிகிரண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு மூன்று வருடங்களாகவே விருதுக்கு ரவிகிரண் பெயர் அடிபட்டது. இப்போது அது நிஜமாகிவிட்டது. கூட்டம் சேர்ப்பவர்களுக்கும், கூரையைப் பொத்தல் போடும் அளவு கைத்தட்டல்கள் பெறுபவர்களுக்கும் மட்டும் முன்னுரிமை தராமல், இசையில் உண்மையான ஞானத்துடன் பல்வேறு கிளைகளில் இறக்கை விரிக்கும் ரவிகிரணுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது அகாடமி. பாராட்டுவோம்!

ஐம்பது வயது நிரம்பிய ரவிகிரண், தனது இரண்டாம் வயதிலேயே ராகங்களை அடையாளம் கண்டு அதிசயிக்க வைத்த மழலை மேதை. மியூஸிக் அகாடமி அரங்கில் வீணை பாலசந்தர் உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி ரவிகிரணின் அபூர்வ ஆற்றலை சோதித்துப் பார்த்த நிகழ்வு நடந்தது உண்டு. அதேபோல், ஒருமுறை லால்குடி ஜெயராமனின் வீட்டுக்குக் குழந்தையை அழைத்துச் சென்றிருக்கிறார் தந்தை நரசிம்மன். அங்கே ஒவ்வொரு ராகமாக ரவி இனம் சொல்ல, ஒவ்வொரு முறையும் ஒரு சாக்லேட் கொடுத்தாராம் லால்குடி!

இதுவரை 800 பாடல்கள் வரை புனைந்திருக்கிறார் ரவிகிரண். எட்டு வயது முதலே புதிய ராகங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டார். ‘சாமப்ரியா’ ராகம் இவர் வடிவமைத்த முதல் ராகம். அதன் ஸ்வரங்களை முதன்முதலாகப் பாடிக்காட்டியது தனது தம்பி சசிகிரணிடம். அது மட்டுமல்ல, தனது கீர்த்தனைகளுக்கான முத்திரையில் இளவல் பெயரை இணைத்து ‘ரவிசசி’ என்று வைத்துக் கொண்டிருக்கிறார், இன்றுவரை பாசக்கார அண்ணா!

1978-ல் திருப்பதியில் ரவிகிரணின் சித்ர வீணைக் கச்சேரி அரங்கேற்றம். இன்று வளர்ந்து, உயர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று பறந்து கொண்டிருக்கிறார்.

கங்கிராட்ஸ் ரவிகிரண்!

வெறும் கட்டுப்பெட்டி கர்நாடக சங்கீத வித்வானாகக் காலட்சேபம் செய்து கொண்டிருக்காமல், பாரம்பர்ய இசையின் இலக்கணம் மாறாமல், ‘மாடர்ன் டச்’ கொடுத்து வழங்கி வருகிறார். இன்னொரு பக்கம் இவரது மெல்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா உலகப் பிரபலம். மொசார்ட், பீத்தோவன் படைப்புகளுடன் அந்தக் குழுவினரைத் தியாகராஜர், தீட்சிதர், வேங்கடகவி போன்ற நம் ஊர் மகான்கள் இயற்றிய பாடல்களை இசைக்கச் செய்கிறார். இதோ... வரும் ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் மெல்ஹார்மோனிக் சிம்பொனியுடன் இவர் கச்சேரி செய்கிறார். இயன்றவர்கள் உடன் பயணித்துக் கேட்டு ரசிக்கலாம்!

தந்தை நரசிம்மனிடமும், பின்னர் பத்து வருடங்களுக்கு டி.பிருந்தாவிடமும் இசை பயின்றவர் ரவிகிரண். இன்று பல மாணவ, மாணவிகளுக்கு இவர் பாட்டு வாத்தியார்! வயலின் / பாட்டுத்துறையில் உச்சம் தொடும் முனைப்பில் இருக்கும் அக்கரை சுப்புலட்சுமி, ரவிகிரணின் சீடர். இனிமைக்குரல் சவிதா நரசிம்மன் இவரது தயாரிப்பு. இளம் இரட்டையர் அனாஹிதா - அபூர்வாவின் அதிவேக முன்னேற்றத்துக்குப் பாதை போட்டுக் கொண்டிருப்பவரும் சங்கீத கலாநிதிதான்!

ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல்கள் மீது அதீதக் காதல் கொண்டவர் ரவிகிரண். ஆராய்ச்சிகள் பல செய்து அவரை ஆராதித்து வருபவர். ரவிகிரணின் லெக்-டெர்ம்கள் பல கவிராயரின் சங்கீத மேன்மையைத் தோலுரித்துக் காட்டி வருகின்றன.

அதேபோல், 1330 திருக்குறள்களுக்கு இசையமைத்து, பல்வேறு இசைக் கலைஞர்களைப் பாட வைத்து ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்றும் முழு வீச்சில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முடிவு பெறும் சமயத்தில் அது மணிமகுடமாக அமையும் ரவிகிரணுக்கு.

“நானே சொல்லிக்கொள்வதாக இருந்தாலும், பெருமைமிகு சங்கீத கலாநிதி விருது, இதைவிட தகுதியான ஒருவருக்குச் சென்றிருக்க முடியாது. கங்கிராட்ஸ் ரவிகிரண். நீங்கள் ஓர் உண்மையான ஜீனியஸ். இதையும், இதைவிட வேறு பல விருதுகளையும் பெறத் தகுதியானவர் நீங்கள்...”

- இப்படித் தன்னுடைய முகநூலில் ஸ்டேடஸ் போட்டிருப்பவர், ரவிகிரணின் மனைவி லதா கணபதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism