Published:Updated:

சினம் குறையாத சித்திரப் புலி!

சினம் குறையாத சித்திரப் புலி!
பிரீமியம் ஸ்டோரி
சினம் குறையாத சித்திரப் புலி!

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

சினம் குறையாத சித்திரப் புலி!

ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
சினம் குறையாத சித்திரப் புலி!
பிரீமியம் ஸ்டோரி
சினம் குறையாத சித்திரப் புலி!

செத்த புலிபோல படுத்துக் கிடந்தார் ஓவியர். இறந்த புலியைப் பார்க்கும்போதும் சிலிர்ப்பு இல்லாமல் போகுமா? அந்த உடலிலிருந்து குரல் எழுந்து வருவதாகவே உணர்கிறேன்.

‘`நாங்கள் தோற்றுவிட்டோம் என்று நினைக்கி றாயா? உண்மைதான். நாங்கள் தோற்றுவிட்டோம். நாங்கள் வெல்வோம். அதுவும் உண்மை” - வீர.சந்தானம் இதைத்தான் மேடைகளில் சொல்வார்.

‘`நாதியற்றுப் போனதா தமிழினம்? நாதியற்றே போய்விடுமா தமிழினம்? இதுதான் நம் தலையெழுத்தா? விடமாட்டோம். அப்படியே இருந்துவிடமாட்டோம்” - இதுதான் அவரது நம்பிக்கை வார்த்தைகள்.

‘காந்தி தேசம் ஆயுதம் கொடுத்தது. புத்த தேசம் கொன்று முடித்தது’ என்பது அவரது இனக்குறள். அவரது உயிரற்ற உடலும் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதுபோலத்தான் அந்தத் தாடிக்குள் தலை புதைத்துப் படுக்க வைக்கப்பட்டுக் கிடந்தார் அந்த ஓவியக்காரர்.

முதல் 18 ஆண்டுகள் திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயிலில் படுத்துக் கிடந்து ஓவியமும் சிற்பமும் படித்துக்கொண்ட சந்தானம், தான் கற்ற கலை அனைத்தையும் இனம், மொழி, நாட்டுக்கு அர்ப்பணித்து மக்களுக்கு விதைத்தார். பொதுவாக இது போன்ற கலைஞர்கள், சமயோசிதமாய் ‘கலை கலைக்காகவே’ என்று கிளம்பிவிடுவார்கள். அதுதான் வாழ்க்கைக்கு வசதியானது. ஆனால், சந்தானம் லட்சியவாதி என்பதால், கடினமான மக்கள் பாதைக்கு வந்தார். வசதியான மத்திய அரசுப் பணி கிடைத்தது. ‘அது வேலை, சம்பளம் கொடுப்பான். அந்தச் சம்பளத்துக்கு வேலை பார்ப்போம். மற்ற நேரத்துல இனத்துக்குச் சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்போம்’ என்பார்.

சினம் குறையாத சித்திரப் புலி!

1980-களில் வெளியான நவீனப் புத்தகங்கள் பெரும்பாலானவற்றுக்கு சந்தானம்தான், அட்டை என்னும் சட்டை வரைந்து தந்திருப்பார். கோயில் அன்னதானம் வாங்குவது மாதிரி எல்லோரும் ‘சும்மா’ வாங்கிச் செல்லக் கூட்டமாக அவரது வீட்டில் குவிந்து கிடப்பார்கள். சிறுபத்திரிகைகள் அனைத்தும் அவரது பிரதிபலன் பார்க்காத அர்ப்பணிப்பால் உயிர் வாழ்ந்தன.

கலையில் அவர் ஏற்படுத்திய புதுமை என்னவென்றால், நம் மூத்தோர் சொத்தை நவீனத்துக்குள் கொண்டுவந்து சேர்த்ததுதான். யாழ், மரச் சிற்பம், கோயில் சிலைகள் இவை அனைத்தையும் நவீன ஓவியங்களுக்குள் புகுத்தி அவற்றை அழியாமல் காத்தவர். தோல்பாவைக் கூத்து முதல் இன்றைய பிரபல துணிக்கடைகளில் உள்ள பட்டுச்சேலைகளுக்கான வடிவமைப்பு வரை சந்தானம் கைவண்ணம்.
வெறுமனே வீர.சந்தானம் கலைஞனாக மட்டும் இல்லாமல், மக்கள் கலைஞனாக மாறிய காலம் ஈழம் நெருப்பாற்றில் நீந்தியபோது... அந்தக் கலைஞனுக்குள் தமிழன் எழுந்தான். உணர்ச்சி மொத்தத்தையும் ஓவியமாய் தீட்டிக் கண்காட்சி வைத்தார். காசி ஆனந்தன் தனது கவிதைகளைத் தொகுத்துப் புத்தகமாக்க நினைத்தபோது ஓவியம் வரைந்தார் இவர். அப்போதுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானார். அன்று பல போராளிக் குழுக்கள் ஈழத்தில் இருந்தன. அவர்கள் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். சந்தானத்தை தங்களது ஆதரவாளராக ஆக்கிக்கொள்ள அவர்கள் முயற்சித்தபோதெல்லாம், ‘ஒரே தலைவன், ஒரே இயக்கம்’ எனப் பிரபாகரனும் புலிகளும் என்று இருந்த சித்திரப் புலி.

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தப் புலி படுத்ததே இல்லை. தூங்கும்போதும் உருமிக் கொண்டே இருந்தது. எங்கு பிரச்னை என்றாலும், இவரது கால்கள் வீடு தங்காது. எல்லா போராட்டங்களிலும் அவரைப் பார்க்கலாம். கர்ஜனை கேட்கலாம். அவர் சந்திக்காத தலைவர்கள் இல்லை. இயக்கங்கள் இல்லை. ‘ஓவியர் சந்தானம் வந்திருக்கேன்னு சொல்லு’ என்றபடி எந்த இரும்புக் கதவுகளையும் திறப்பார். ‘உங்களை நம்பித்தான் இந்த இனமே இருக்கு’ என்று கெஞ்சுவார். அவர்களே மாறான முடிவுகள் எடுத்தால், சந்தானம் சினத்தைத் தாங்க முடியாது. பல தலைவர்கள் அவரைப் பார்க்கவே அஞ்சுவார்கள். இவருக்கு இன எதிரிகளிடம்கூட எப்போதும் அச்சம் இருந்தது இல்லை.

ஓவியர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக நடிகர், திரைப்பட நடிகர்... அனைத்துக்கும் மேலாகப் போராட்டக்காரர். களப்போராளி. இந்த இரண்டும்தான் சந்தானத்தை வீர சந்தானமாக வழியனுப்பி வைத்திருக்கிறது. ‘முகிலின் மீது நெருப்பு’ என்பது அவரது ஓவியப் புத்தகம். அரை நூற்றாண்டுகள் எரிந்த நெருப்பு அது. இன்னும் அரை நூற்றாண்டுக்கு சூடு தரும் நெருப்பும் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism