Published:Updated:

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

#MakeNewBondsகிருபா முனுசாமி, வழக்கறிஞர்; படங்கள்: அருண் டைட்டன்

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

#MakeNewBondsகிருபா முனுசாமி, வழக்கறிஞர்; படங்கள்: அருண் டைட்டன்

Published:Updated:
ஆண்பால் பெண்பால் அன்பால் - 46
பிரீமியம் ஸ்டோரி
ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

யிற்றில் இருப்பது ஆணா ­அல்லது பெண்ணா என்பது அப்போது அம்மாவுக்குத் தெரியாது. ஆனால்,

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

பெண்ணாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை. அதனாலேயே கருவிலேயே கலைக்க முயன்றார். அது தோல்வியடைந்ததால், பிறந்த மூன்றாவது பெண் குழந்தை நான். அம்மாவுக்கு வேண்டாத கறுப்புக் குழந்தை!

தன் வீட்டில் மூத்தவளாகப் பிறந்தவள் என் அம்மா. சிறுமியாக இருந்தபோதிலிருந்தே தம்பி தங்கைகளைக் கவனித்துக்கொண்டவர். வீட்டின் வருமானத்துக்காகக் காட்டுவேலைக்குச் சென்று கஷ்டப்பட்டவர். தன் பால்யத்தைக் குடும்பத்துக்காகத் தொலைத்தவர். தனக்குக் கிடைக்காத ஏதோ ஒன்று தன் தம்பிகளுக்குச் சிரமமில்லாமல் கிடைப்பதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவர். தனக்குப் பிறக்கிற குழந்தை ஆணாக இருந்தால், இந்தச் சிரமங்களுக்கு ஆளாகாது என்று அவர் நினைத்திருக்கலாம். அதனாலேயே ஒவ்வொரு குழந்தைப் பிறப்பின்போதும் இது ஆணாக இருக்கும் என எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அவ்வெதிர்பார்ப்பிற்கு மாறாக, மூன்றாவது குழந்தை என்ற கடைசி நம்பிக்கையும் பெண்ணாக இருந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அதுவும் கறுப்பாக வேறு பிறந்துவிட்டேன். அதற்காகவே, என் அம்மா எனக்குத் தாய்ப்பால் கொடுக்க மறுத்த கணத்திலிருந்து தொடங்கியது என் மீதான நிறம் சார்ந்த சமூகப் புறக்கணிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

அவர் கடைசி நம்பிக்கையும் பொய்யாய் போக நான் காரணமாக இருந்ததால், ஏற்பட்ட வெறுப்பு இன்று வரையிலும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்றும்கூட நானும் என் அம்மாவும் ஒரு நாளைக்கு மேல் ஒன்றாக ஒரே இடத்தில் இருக்க முடியாது. குறைந்தது நான்குமணி நேரத்தில் வாக்குவாதமோ, சண்டையோ ஏற்பட்டுவிடும். இருப்பினும், இன்று இருக்கும் நான் என் அம்மாவின் பிரதிபலிப்பே. என் அம்மா அத்தனை தைரியமானவர். அவர் எதற்கும் யாருக்கும் அஞ்சி நான் கண்டதில்லை.பலவற்றிலும் இறுக்கமாக இருந்த என் அப்பாவின் எண்ணப்போக்கை மாற்றி, அவரை மிகவும் தேர்ந்த மனிதராக உருவாக்கியவர் அம்மாதான். மூன்று மகள்களிடமும் `கல்விதான் நமக்கான பாதுகாப்பு; வாழ்க்கைக்கு அதுவே முக்கியம்’ என்று சொல்லிச்சொல்லி வளர்த்தவர் அம்மாதான். நாங்கள் மூவரும் படித்து அவரவர் தொழிலில் இறங்கும்வரை திருமணம் என்ற சொல்கூட எங்கள் வீட்டில் ஒலித்ததில்லை. அதற்குக் காரணம் அம்மாதான்.

“படிச்சு வேலைக்குப் போய் உங்க கைல நாலு காசு இருந்தாதான், உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க மதிப்பாங்க. நாளைக்கு நாப்கின் வாங்ககூட அவங்ககிட்ட ஒரு ரூபா கையேந்தி நிற்கக் கூடாது’’ என்று சுயமரியாதையைச் சொல்லிச் சொல்லி வளர்த்தவர். இன்று அப்பா எங்களோடு இல்லை. அப்பா மட்டும்தான் இல்லை. மற்றபடி எங்கள் வீடும், வாழ்க்கையும் அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்குமோ, அப்படியே தொடர்கிறது. அதற்கு ஒரே காரணம் என் அம்மா. அவர் மட்டும் அவராக இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் என்றோ சிதைந்திருப்போம். அந்த வகையில் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் உறுதியாகக் கூறுவேன், என் வாழ்வில் ஒவ்வொரு நகர்தலையும் தன்னை அறியாமலேயே இயக்குவது என் அம்மாவின் தைரியமான குணநலன்கள் என்று.

தாய்ப்பால் கொடுக்க மறுத்த மனைவியிடம் சண்டைபோட்டு,  மூன்று  பெண் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டு அதைப் பெருமையாகவே கருதி வாழ்ந்தவர் என் அப்பா. பெண்ணுக்குக் கிடைக்கிற கல்வியே அவளுக்கான கண்ணியமான வாழ்க்கையைச் சாத்தியமாக்கும் என்ற புரிதலோடு மூன்று பெண்களையும் மருத்துவம், பொறியியல், சட்டம் என்று படிக்கவைத்தவர். இன்று நாங்கள் வாழும் வாழ்க்கையைச் சாத்தியமாக்கிய அப்பாவே, எத்தனையோ புறக்கணிப்புகளை எதிர்கொண்ட போதும், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை விதைத்த முதல் ஆண். அச்சங்கள் ஏதுமின்றி என்னை வளர்த்தெடுத்தவர் என் தந்தை மட்டுமே அல்ல. பதின்பருவம் வரையிலும் மாமன்கள், தொடக்கப் பள்ளியில் வகுப்புத் தோழர்கள், கல்லூரியில் நண்பர்கள் என இன்று வரையிலும் என் வாழ்க்கை ஆண்கள் சூழ் உலகாகவே இருந்து வருகிறது.

இங்கே ஒரு பெண் ஆண்களோடு பேசுவதும், நட்பாக இருப்பதும் அவ்வளவு எளிதல்ல. நான் படித்த பள்ளியில்  பால்பேதமின்றி மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். முதல் பன்னிரெண்டு மதிப்பெண்கள் எடுக்கும் பையன்களோடு ஒற்றை மாணவியாக நான் வளர நேர்ந்தது அப்படித்தான். அது என்னை இயல்பாகவே ஆண்களோடு கூச்சமுமின்றிப் பழகும் மனநிலையை உருவாக்கியது. அதுவே, சக மாணவிகளுடன் இருந்து என்னைத் தள்ளிவைக்கவும் காரணமாக இருந்தது.

ஆண்களுடன் இயல்பாகப் பழக முயலும் பெண்ணை ஒழுக்கங்கெட்டவள், காமத்திற்காக அலைபவள் என்று ஆண்கள் மட்டும் கேலி பேசுவதில்லை. மாறாகப் பெண்களும் இம்மாதிரியான சித்தரிப்புகளைச் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். பள்ளிக்காலத்திலேயே நான் அவ்விதம் சித்தரிக்கப்பட்டேன். சட்டக்கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்த காலகட்டம். என்னோடு படித்த வகுப்புத்தோழி ஒருத்தி அம்மாவை எங்கோ சந்தித்திருக்கிறாள். அம்மாவைப் பார்த்ததும் ‘`கிருபா என்ன செய்றாம்மா?’’ என்று ஆர்வத்தோடு விசாரித்திருக்கிறாள். அம்மா என்னைச் சட்டக்கல்லூரியில் சேர்த்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

 ‘`அய்யோ, கிருபா ஏற்கெனவே நிறையப் பசங்களோட ஊர் சுத்துவா, இதுல அவளைப்போய் லா காலேஜ்ல சேர்த்திருக்கீங்களேம்மா’’ என்று கேட்டிருக்கிறாள்.

இதில் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, ஒரு பெண் நிறைய ஆண்களோடு நட்பில் இருப்பது என்பது இங்கே அதிர்ச்சிக்குரிய விஷயமாகவே முன்வைக்கப்படுகிறது. அவளுடைய ‘நடத்தை’ தொடர்ச்சியாக அது சார்ந்தே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆண்-பெண் நட்பு என்பதே உடலுறவு தொடர்பானது என்பதாக நம்பவைக்கப்படுகிறது.

அடுத்து சட்டக்கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய ஆண் நட்பு குறித்த புரிதல். சட்டக்கல்லூரி மாணவிகள்மீது மட்டும் அல்ல, பெண் வழக்கறிஞர்கள்மீதும் சமூகம் சில பொய்யான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது. பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்திற்குச் சரி வராதவர்கள், எதையும் செய்யத் துணிவார்கள், ரெளடித்தனமானவர்கள், கணவனுடன் சேர்ந்து வாழ மாட்டார்கள், திமிர் பிடித்தவர்கள் என இப்படி... ஆனால், உண்மையில் சட்டக் கல்லூரி மாணவிகளோடும், பெண் வழக்கறிஞர்களோடும் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் இந்த நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானது.

சட்டக்கல்லூரி மாணவிகள் மிகவும் அமைதியானவர்கள். சக ஆண்களால் கேலிசெய்யப்படும்போதும் தலை குனிந்தபடி கடந்து செல்கிறவர்களாக இருந்தனர். ஆனால், அதையெல்லாம் நான் எதிர்த்துக் கேட்கிறவளாக இருந்தேன். அப்படி எதிர்த்துக் கேட்பதாலேயே ஆண்களோடு நட்பாகவும் இருக்க முடிந்தது. அதனாலேயே பள்ளியைப்போலவே கல்லூரியிலும் எனக்கு ஆண் நண்பர்களே அதிகம். ஆண்களோடு நட்பாக இருப்பதால், பள்ளியில் எப்படிச் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்டேனோ, அதுபோலவே கல்லூரியிலும் புறக்கணிக்கப்பட்டேன்.

பெண்கள் எப்படிக் கல்லூரியிலும் பள்ளியிலும் என்னை விலக்கி வைத்தார்களோ, அதுபோலவே என்னுடைய பல ஆண் நண்பர்களும் சக பையன்களால் கேலிக்கும் அவமானத்திற்கும் ஆளாகினர். பெண்களோடு நட்பாக இருக்கிற பையன்கள் தொடர்ச்சியாகக் கேலிக்குள்ளாவார்கள். அவர்கள் ஆண்தன்மையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். அவர்கள் விலக்கிவைக்கப்படுகிறார்கள். அதனாலேயே பெரும்பாலான பையன்கள் பெண்களிடமிருந்து விலகுகிறார்கள். ஆணாதிக்கத்தன்மையோடு பெண்களிடம் நடந்துகொள்வதையும் பழகுவதையும் இயல்பான ஒன்றாகக் கருதவும் தொடங்குகிறார்கள்!

இன்று நம் கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் பேசுவதைக் கல்வி நிறுவனங்களே அனுமதிப்பதில்லை. அது ஒரு குற்றச்செயலாகப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால், தண்டனைகூட தரப்படுகிறது. ஆணும் பெண்ணும் உரையாடுவதும் ஒன்றாக இருப்பதும் குற்றச்செயல் என்று பள்ளியிலிருந்தே கற்றுக்கொண்டு முன்னேறி வருகிற ஒருவனுக்கு ஆண்-பெண் உறவுகள் பற்றி என்ன புரிதல் இருக்கும்? அந்த இளைஞர்கள் படித்து முடித்து சமூகத்திற்குள் வரும்போது அவர்கள் எதிர்பாலினத்திடம் இயல்பாகப் பழகவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

நான் சட்டக்கல்வியை முடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் பயிலத் தொடங்கும்வரையிலும், சாதியும், நிறமும், உடலும் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைக்கும் என்பதைத் தெரிந்திருக்கவில்லை. ஜூனியராகப் பணியாற்றிய இடத்தில் நான் கறுப்பாக இருக்கிறேன் என்கிற காரணத்திற்காகவே பல அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன். கூடவே நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பது இன்னும் அதிகப் புறக்கணிப்புகளைப் பெற்றுத்தந்தது. என் சாதியும் என் நிறமும் என் மீது திருட்டுப்பட்டம் சுமத்துவதற்குப் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. திருட்டுப்பட்டத்தைச் சுமந்துகொண்டு அவமானத்தால் கூனிக்குறுகச் செய்திருக்கிறது. ஆனால், என்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுகளை, அவ்வளவு எளிதாக ஒரு மேட்டுக்குடி வெள்ளைப்பெண்மீது சுமத்திவிட முடியாது! இயற்கைக்கு மாறாக வரையறுக்கப்பட்டிருக்கும், ஒழுக்க வரையறைகளின் விளைவாக உருவாகியிருக்கும் இறுக்கமான சமூகத்தில் பெருமளவு பாதிக்கப்படுவது கறுப்புப் பெண்களாகவே இருக்கிறார்கள்.

இன்றுவரையிலும் என் வாழ்க்கையில் சந்தித்த பல ஆண்களும் பெண்களும்கூட ‘கறுப்பாய் இருந்தாலும் களையாக இருக்கிறாய்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அது கேட்க நல்ல வாக்கியம்போல இருந்தாலும், இந்த `கறுப்பாய் இருந்தாலும்’ என்பதில்தான்  சிக்கலே இருக்கிறது. இங்கே கறுப்பு என்பது தொடர்ச்சியாகக் கீழ்மையின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. கறுப்பாக இருப்பவர்களும் கீழானவர்கள், அழகற்றவர்கள் என்கிற எண்ணமும் பரவி இருக்கிறது. அதனாலேயே  வெள்ளைத்தோலுடைய, ஒல்லியான உடல் வாகுடைய பெண்ணிற்கு இயல்பாகக் கிடைக்கும் வாய்ப்பும், சிறப்புரிமையும், மரியாதையும் ஒருபோதும் கறுப்பாய், குண்டாக இருக்கும் பெண்ணிற்குக் கிடைப்பதில்லை. அதுவும், அந்தப் பெண் சமூகத்தின் விளிம்பு நிலையில், சாதிய அமைப்பில் தீண்டப்படாத சமூகத்திலிருந்து வந்துவிட்டால், இவ்வுலகில் அவளின் இருத்தல் மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.

இளமைக் கனவுகளோடும், காதல் ஆசைகளோடும், யாரேனும் என்னிடம் “எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது, நான் உன்னைக் காதலிக்கிறேன்” எனச் சொல்ல மாட்டார்களா என்று பதின்பருவத்தில் ஏங்கிக் காத்திருந்திருக்கிறேன். அம்மாவுடன் சண்டை ஏற்படும்போதெல்லாம், “என்னைக் காதலிக்கும், உயிருக்கு உயிராகப் பார்த்துக்கொள்ளும், திகட்டத் திகட்ட அன்பைப் பொழியும் என் இளவரசன் வந்து மீட்டுச் செல்ல மாட்டானா?’’ என்று எதிர்பார்த்தபடியே, கண்ணீரோடு பல இரவுகளைக் கடந்திருக்கிறேன். அதையும் மீறி காதலை வெளிப்படுத்திய சில சந்தர்ப்பங்களிலும் கூட அவமானத்தையே எதிர்கொண்டிருக்கிறேன்.
காரணம் நிறம்!

இங்கே ஆண்கள், பெண்களின் பின்னால் அலைந்து, காத்திருந்தால் அது உண்மைக்காதல். ஆனால், பெண்களோ, ஆண்கள் பின்னால் திரியக்கூட வேண்டாம், ஓர் ஆண்மீது ஏற்பட்ட ஈர்ப்பினைச் சுதந்திரமாக வெளிப்படுத்தினாலும் குற்றம்தான்! இந்தச் சமூகப் பொதுவிதியிலிருந்து என்னால் மட்டும் தப்பித்துவிட முடியுமா என்ன?

பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பாலியல் சுதந்திரம் என்று இன்று மேடைகளில் பேசினாலும், வழக்கறிஞராக உச்ச நீதிமன்றம் வரைக்குமே சென்றுவிட்டாலும் உள்ளுக்குள் இன்னமும் நான்  பழமைவாதியாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை ஐரோப்பிய பயணம் ஒன்று உணர்த்தியது. ஐரோப்பியர்களின் வாழ்வியலையும், அணுகுமுறையையும், உறவுகளைக் கையாளும் விதமும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

நெதர்லாந்தில் ஓர் ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, இரு கன்னத்திலும் மாறி மாறி மூன்று முத்தங்கள் கொடுப்பது வழக்கம். இந்தியாவில் ஓர் ஆணுடன் கை குலுக்குவதையும், ஆண் நண்பர்களுடன் தொட்டுப் பேசி பழகுவதையுமே பெரும் முற்போக்காகக் கருதிக்கொண்டிருந்த நான், அவர்கள் ஒவ்வொருவரும் எந்தவிதத் தயக்கமுமின்றி என்னைக் கட்டிப்பிடித்து, என் கன்னங்களில் முத்தமிட்ட பொழுதில் 3,000 வருட தீண்டாமை எத்தனை கொடூரமானது என்பதை உணர்ந்தேன். ­ தீண்டாமை என்ற பெயரில் எத்தனை கோடி தலித்துகளின் வாழ்க்கையை வேட்டையாடியிருக்கிறது இந்தியச் சமூகம். ஒரு மனிதனை செயல் இழக்கச்செய்ய, `தான் நேசிக்கப்படவில்லை; புறக்கணிக்கப்படுகிறோம்’ என்கிற ஒற்றை உணர்வே போதும்! அதைச் சாதியால், நிறத்தால், பாலின அடையாளத்தால் இங்கே தொடர்ச்சியாக எதிர்கொண்டிருக்கிறேன். இத்தனை கோடி மனிதர்கள் வாழும் பூமியில், ஓர் உயிர் அன்புக்காக ஏங்குவதும், நேசிக்கப்படவில்லை என உணர்வதும் மனித இனத்தின் ஆகப் பெரும் தோல்வி இல்லையா? விஞ்ஞானத்தில் விண்ணை எட்டிய நாம், அருகிலிருக்கும் மற்றொரு உயிரைப் பேணத் தவறிவிட்டோம் என்பதைவிட பேரிழுக்கு மனிதகுலத்திற்கு இல்லை.

ஆண்பால் பெண்பால் அன்பால் - 46

என் வாழ்க்கையில் முதன்முதலாக, நெதர்லாந்தில்தான் முழுமையாக எல்லோராலும் நேசிக்கப்பட்டதாக உணர்ந்தேன். நானும் நேசிக்கப்படத் தகுதியுடையவள் என்பதை என் உடலும், மனமும் முதன்முதலாக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு முறையும் புதுப்புது மனிதர்களால்  கட்டியணைத்து, முத்தமிடப்பட்டபோதும் புதியவளாகப் பிறந்தேன். ஆற்றல் மிக்கவளாக உணர்ந்தேன். முத்தத்தைவிட அன்பை இயல்பாக வெளிப்படுத்த சிறந்த வழி இல்லை என்று தோன்றியது.

அன்பு அரவணைப்பு மட்டுமல்ல; காதல், உறவு போன்றவற்றிலுள்ள தனி மனிதச் சுதந்திரத்தை மதிப்பதையும் நாம் ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தங்களின் இணையர்களின், குழந்தைகளின் காதல் மற்றும் திருமண முறிவுகளை எவ்விதக் குற்றச்சாட்டோ, அவமான உணர்வோ இன்றி, அது குறித்து மிகச் சாதாரணமாக உரையாடுகிற குடும்பங்களை ஐரோப்பாவில் கண்டு அதிர்ச்சியுற்றேன். காதல் முறிவையோ, திருமண முறிவையோ அங்கே யாருமே தோல்வியாகக் கருதுவதில்லை. புனிதமாகவும் கருதுவதில்லை. மாறாக, இருவரின் விருப்பு வெறுப்பு சார்ந்த தனிப்பட்ட முடிவாகக் கருதுகின்றனர். அதன் காரணமாகவே, தம் இணையரின் முன்னாள் உறவு முறிவைக் குறித்து அத்தனை இயல்பாக, வெளிப்படையாக அவர்களால் பேச முடிகிறது.

உண்மையில் காதல், புனிதமானதா, ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணுடனும், ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணுடனும் மட்டும்தான் காதல் ஏற்படுமா, ஒருமுறை ஒருவர்மீது வந்துவிட்டால், இறுதிவரை அது மாறாதா, ஒருவர் நம் காதலை மறுத்துவிட்டால் அந்த நொடியே நம் வாழ்வில் காதல் என்ற அத்தியாயம் முடிந்துவிட்டதா என்றால், இல்லை என்கிறார் தந்தை பெரியார்.

பெண்களும்கூட கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெண்ணுரிமை பேசிய தந்தை பெரியார் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில், `காதல் என்பது விருப்பமான உணவகமொன்றில் தனக்குப் பிடித்த பண்டத்தை வாங்கி உண்பதுபோல’ என்கிறார். அவ்வளவுதான்!

பெண்களின் பாதிப்புகளைப் பற்றி அதிகம் விவாதிக்கும் உரையாடும் நாம்,  ஆண்கள் சந்திக்கிற சிக்கல்களைப் பற்றிப் பேசுவதில்லை. ஆணாதிக்கச் சமூகத்தில் பெரும்பான்மை பெண்கள் அடிமைகளாக அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பதனாலேயே ஆண்களின் தரப்பைக் கேட்க நாம் முற்படுவது கிடையாது. பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், எல்லா பெண்களும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்களா? ஆண்கள் எல்லோரும் அடக்குமுறையைக் கட்டவிழ்க்கும் ஆணாதிக்கவாதிகளாகத்தான் இருக்கிறார்களா? குறிப்பாகக் குடும்ப உறவுகளுக்குள் ஆண்கள் துன்புறுத்துபவர்களாக மட்டும்தான் இருக்கிறார்களா என்றால், என் பத்தாண்டுகால வழக்கறிஞர் தொழில் அனுபவத்தில் இல்லையென்பதே பதிலாக இருக்கும்.

பொதுவாகவே, துன்புறுத்தல் என்பதைக் குறித்து நாம் கொண்டிருக்கும் உருவமென்பது இரத்தமும், காயங்களுமாக இருக்கின்றன. உளவியல்ரீதியான துன்புறுத்தலையோ, மனநலத்தைப் பாதிக்கக்கூடிய உறவு நெருக்கடிகளையோ, உறவுச் சிக்கல்களினால் ஏற்படும் மனத்தழும்புகளையோ நாம் துன்புறுத்தலாகக் கருதுவதில்லை. ஆண்கள் எதிர்கொள்வது அவ்வகை துன்புறுத்தல்களையே!

நண்பர்களின் முன்னிலையில் கணவனை அல்லது காதலனை அவமதிப்பது; இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியவைகளில் அவனுக்கென்ற தெரிவோ, முடிவோ கொண்டிருக்கவில்லை என்று குற்றம் சாட்டுவது; மற்ற பெண்கள் அவன் தோழிகளாக இருந்தாலும் கூட அவர்களுடன் பேசக் கூடாது என்று தொல்லை கொடுப்பது; கண்காணிப்பது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அப்பெண்ணுடன் செலவிடக் கட்டாயப்படுத்துவது; அவனின் இயலாமைகளைச் சுட்டிக்காட்டி எப்போதும் சிறுமைப்படுத்துவது; தவறிழைக்கும்போது முட்டாள் என்று கேலிப்பொருளாக்குவது; தன் விருப்பப்படியெல்லாம் நடக்காதபோது, உறவை முறித்துக்கொள்வதாக மிரட்டுவது; தான் விரும்புவதைச் செய்யும்வரையோ அல்லது வாங்கித்தரும்வரையோ அழுது உணர்ச்சிப்பூர்வமாக பிளாக்மெயில் பண்ணுவது; வெளியே வர முடியாதபோதோ, எதிர்பார்க்கும் போது நேரம் செலவிட முடியாதபோதோ ஏமாற்றுக்காரர் எனக் குற்றம் சாட்டுவது;  ஆணுடைய தனியுரிமையை அத்துமீறிக் கைப்பேசி, கணினி ஆகியவற்றை வேவு பார்ப்பது; கடவுச்சொல்லை மாற்றும் பட்சத்தில் அதனைத் தெரிவிக்க வற்புறுத்துவது; வீட்டில் உள்ள பொருள்கள் கொண்டு அவனைத் தாக்கி, காயங்கள் ஏற்படுத்துவது; கத்தியால் கையை வெட்டுவது;  தான் காயங்கள் ஏற்படுத்திக்கொள்ளப் போவதாக, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுவது; மன வேறுபாடு ஏற்படும் போதோ, அவன் அறிவுக்கொவ்வாத ஒன்றை செய்ய மறுக்கும்போதோ அவன் குடும்பத்தார் மீது காவல் நிலையத்தில் பொய்ப் புகார் அளித்துக் கைது செய்ய வைப்பது; அப்படிச் செய்யப்போவதாக மிரட்டுவது போன்ற அனைத்தும் ஆண்களுக்கெதிரான துன்புறுத்தல்கள்தானே! ஆனால், இதைப்பற்றி இங்கே பேசுவதற்கான சூழல் இருப்பதில்லை.

அதிலும் குழந்தை இருந்துவிட்டால், அப்பாக்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கும். சிறு வாக்குவாதம் வந்தாலும் உடனே குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என மிரட்டப்படுவதை எங்கும் பார்க்கலாம். மனக்கசப்பு என்பது அப்பெண்ணுடன் மட்டும் தானே தவிர, குழந்தையோடு இல்லை என்ற பக்குவமில்லாது ஒரு தந்தையாக அவரின் கடமையை ஆற்றவிடாமல் தடுப்பார்கள். கோர்ட் வாசல்களில் இத்தகைய தந்தைகளை எப்போதும் பார்க்க முடியும். குழந்தையைத் தந்தையின் வாசமே இல்லாமல் பிரிப்பது, தந்தையை எதிரிபோலப் புரிந்துகொள்ளும்படி குழந்தையைத் தவறாக வழிநடத்துவது, தந்தைக்கு அடிப்படையிலேயே இருக்கும் பார்வையிடல் உரிமையை மறுப்பது எனப் பல வகைகளில் அந்த ஆணின் உரிமைகள் மறுக்கப்படும் தருணங்களில், அவை பேசப்படுவதே இல்லை. இதுவே, மேற்கத்திய நாடுகளை எடுத்துக்கொண்டால், திருமணத்தை முறித்துக் கொண்ட ஆணும், பெண்ணும் அதன்பிறகு எத்தனை திருமணம் செய்துகொண்டாலும், அக்குழந்தைக்கு அவள்தான் தாய். அவன்தான் தந்தை. இது, இங்கே சாத்தியமா?

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஓர் உறவில் தொடர முடியாத  நிலை ஏற்படுமாயின் முடிந்தவரை அதனைப் புரிந்துகொண்டு, அந்த உறவிலிருந்து வெளியேறும் வெளியை பரஸ்பரம் வழங்குதல் வேண்டும். அதுவே ஆரோக்கியமான உறவைக் குறிக்கும். அதைவிடுத்து, ஒருமுறைக் காதலிப்பதாகக் கூறிவிட்டால், திருமணம் செய்துகொண்டு விட்டால் அதனை ஆயுளுக்குமான கமிட்மென்ட்டாக எண்ணித் தள்ளப்படும் போது, அது அன்பான உறவாக இல்லாது வெறும் நகர்தலாக மட்டுமே இருக்கும்.

ஒருவருடன் உறவை முறித்துக்கொள்ள நினைக்கும்போதோ, அடுத்தவர் விலக நினைக்கும் போதோ அவர்களை எதிரிகளாகப் பாவிக்க வேண்டியதில்லை. நண்பர்களாகப் புன்னகைத்துக்கொண்டே பிரியலாம். என்றேனும் ஒருநாள், பிரிந்தவர்களைச் சந்திக்க நேரும்போது, குறைந்தபட்சம் ஒரு புன்னகையை உதிர்க்க முடிவதே, நாம் வாழ்ந்த காலத்தில் அன்போடு இருந்ததற்கான வெளிப்பாடு. இந்த அடிப்படையை புரிந்துகொண்டால் உறவுகளின் பெயரில் அரங்கேறும் ஆணவக்கொலைகளிலிருந்து, அமில வீச்சு, தற்கொலைகள் வரை மனிதத்திற்கு எதிரான பல சமூக அவலங்களையும் களைந்துவிடலாம்.

நம்மை சுற்றி வாழும் மனிதர்களின் அன்பை எந்தவிதக் கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ இன்றி புரிந்துகொள்ளும்போது, நாம் ஒவ்வொருவரும்  அற்புதர்களாகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் இத்தகைய அற்புதர்களால்தான் மனிதம் இன்னும் தொலைந்துபோகாமல் இங்கே  வாழ்கிறது. புறக்கணிப்புகளைப் புறந்தள்ளிய, அகதிகளற்ற, சமத்துவமான, அன்பால் சமைக்கப்பட்ட உலகை நோக்கி நம்மால் நகர முடிகிறது.

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

சை, அன்பு, நட்பு, காதல் என்பதாக ஒன்றும் இல்லை. அவைகள், மக்களுக்கு அஃறிணை, உயர்திணைப் பொருள்கள் இடத்தில் ஏற்படுவது போல்தான். ஆக, அன்பு, ஆசை, நட்பு மற்ற எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமே ஒழிய, மனத்திற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பு, ஆசை, நட்பு இருப்பதாகக் காட்டுவதற்காக அல்ல.

- தந்தைப் பெரியார்,

`பெண் ஏன் அடிமையானாள்?’

“அடிமையிடம் நீ அடிமை எனச் சொல், அவன் கிளர்ந்தெழுவான்.”

- டாக்டர் அம்பேத்கர்

`ஒரு கறுப்புப் பெண்ணாக இருப்பதன் அனுபவத்தை, கறுப்பாக இருப்பதன் அடிப்படையிலோ அல்லது பெண்ணாக இருப்பதன் அடிப்படையிலோ புரிந்துக்கொள்ள முடியாது.’
 
- கிம்பெர்லே க்ரென்ஷா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism