Published:Updated:

இனிதான் திருவிழாவே!

இனிதான் திருவிழாவே!
பிரீமியம் ஸ்டோரி
இனிதான் திருவிழாவே!

நித்திஷ்

இனிதான் திருவிழாவே!

நித்திஷ்

Published:Updated:
இனிதான் திருவிழாவே!
பிரீமியம் ஸ்டோரி
இனிதான் திருவிழாவே!

சிலருக்கு அவர்களைக் கண்டாலே பயம், சிலருக்கு அவர்கள் கேலிக்குரிய ‘பொருள்கள்’, வேறு சிலருக்கு

இனிதான் திருவிழாவே!

அவர்கள் இச்சை தீர்க்கும் இயந்திரங்கள். இப்படித் திருநங்கைகளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களே நம் சமூகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. மாற்றுமுயற்சியாக அவர்கள் மேல் பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சுகிறது ஓர் இளைஞர் குழு. PeriFerry என்ற அந்த அமைப்பின் பிரதான நோக்கமே பிரபல நிறுவனங்களில் திருநங்கைகளுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான். இந்த அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ்ஸிடம் பேசினேன்.

``அதென்ன PeriFerry?’’

‘`ஆங்கிலத்துல Pheriphery-னு ஒரு வார்த்தை இருக்கு. அதுக்கு அர்த்தம் ‘விளிம்புநிலை’. சமுதாயத்துல எல்லோரையும் தாண்டி விளிம்புநிலையில இருக்கிறது திருநங்கைகள்தான். அவங்களுக்கான ஓர் அமைப்புக்கு இந்தப் பெயர்தானே சரியா இருக்கும்? போக, ferry-னா இரண்டு கரைகளையும் இணைக்கும் சின்னப் படகுனு அர்த்தம். மூன்றாம் பாலினத்தையும் மற்ற இரண்டு பாலினங்களோடு இணைக்கிற குட்டிப் படகு நாங்கன்னும் வெச்சுக்கலாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனிதான் திருவிழாவே!

``இந்த அமைப்பிற்கான ஆரம்பப் புள்ளி எது?’’

`‘இது முழுக்க முழுக்க என் தோழி நீலம் ஜெயினோட ஐடியா. அவங்க பெங்களூருவுல ஃபினான்சியல் அனலிஸ்ட்டா வேலை பார்த்துட்டுருந்தப்போ, அவங்க நிறுவனத்துல ஒரு போட்டி நடந்தது. சமூக மாற்றத்திற்கான வித்தியாசமான திட்ட முன்வரைவை அவங்க பார்வைக்கு வைக்கணும். அதுக்காக நீலம் யோசிச்ச ஐடியாதான் இது. பெரும்பான்மை மக்களால வெறுத்து ஒதுக்கப்படுற திருநங்கைகளுக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரணுங்கிற அந்த கான்செப்ட்டே புதுசு. ஆனா, சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியலை.

இது நீலத்தை உறுத்திக்கிட்டே இருக்க, ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு முழு நேரமா இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த களமிறங்கினாங்க. நானும் அவங்களோட கைகோத்தேன். தொண்டு நிறுவனங்கள் மூலமா நிறையத் திருநங்கைகளைச் சந்திச்சு எங்களோட நோக்கத்தைச் சொன்னோம். இரவு நேரங்கள்ல அவங்க தென்படுற இடங்களுக்கு எல்லாம் போய் அவங்களுக்கு முறையான வேலைவாய்ப்பு எவ்வளவு முக்கியம்னு எடுத்துச் சொன்னோம். அவங்களும் எங்களை நம்பி வந்தாங்க. ஒவ்வொருத்தரோட தனித்திறமை, கல்வித்தகுதி, ஆர்வம் போன்றவற்றை வெச்சு ஒரு டேட்டாபேஸ் உருவாக்கியிருக்கோம்.’

``பொதுவா திருநங்கைகளை வேலைக்கு எடுக்கிறப்போ, அந்த நிறுவனத்துக்கு ஒரு தயக்கம் இருக்குமே? அதை எப்படி சமாளிச்சீங்க?’’

‘`நாம நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை. எங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு நிறைய நிறுவனங்கள் தானாகவே திருநங்கைகளை வேலைக்கு எடுத்துக்க முன் வந்தாங்க. நாங்களும் Linkedin மாதிரியான தளங்கள்ல பல நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்படி முன்வர்ற நிறுவனங்களுக்கு நேரில் போய், ‘ஒரு திருநங்கையைச் சக பணியாளரா ஏத்துக்கிறது எப்படி?’னு சின்னச் சின்னப் பயிற்சிகள் மூலம் அங்கே இருக்கிற ஊழியர்களுக்குப் புரியவைப்போம். அதேபோல, ஒரு நிறுவனத்துல எல்லோர்கூடவும் சகஜமா பழகி வேலை பார்க்கிறது எப்படினு திருநங்கைகளுக்கும் ட்ரெய்னிங் கொடுப்போம். இந்தப் பயிற்சிகளோட முடிவுல ரெண்டு தரப்புக்கும் நடுவுல இருக்கிற சுவர் உடைஞ்சு சகஜமாயிடுவாங்க. அதுக்குத்தானே இவ்வளவும்!’’

இனிதான் திருவிழாவே!

``இந்த முயற்சிகளை மேற்கொள்வது சுலபமா இருக்காதே...’’

‘`கஷ்டம்தான். ஆனா, ஒரே நாள்ல எல்லோரும் திருநங்கை சமூகத்தைப் புரிஞ்சுக்குவாங்கனு நாங்க நம்பலை. மாற்றங்கள் மெள்ளத்தான் நிகழும். நாங்க திருநங்கைகளுக்குக் கொடுக்கிற ஆதரவைப் பார்த்துட்டு நிறைய ஓர்பால் ஈர்ப்புடையவர்கள் தங்களை எங்ககிட்ட வெளிப்படுத்திக்க ஆரம்பிச் சுருக்காங்க. எங்களுக்கு இதுவே கெளரவமான வெற்றி. அடுத்து அவங்களுக்காகவும் களமிறங்கப் போறோம். நந்திதா, த்ரிசாலா, திருநங்கை பாரா,  ஜோசப்னு எங்களோட டீமும் இந்த முயற்சிகள் சாத்தியமாகிறதுக்கு முக்கியக் காரணம். இப்பதானே நடக்க ஆரம்பிச்சிருக்கோம். ட்ராக் ரெடியானதும் ஓட ஆரம்பிச்சுடலாம்.’’

``அடுத்தகட்ட திட்டம் என்ன?’’

‘திருநங்கைகள்/ திருநம்பிகளுக்காக இந்த மாதக் கடைசியில ‘திருவிழா’னு ஒரு ஈவென்ட் நடத்தப்போறோம். இன்னும் குறிப்பா சொல்லணும்னா திரு(நங்கை) விழா அது. பொதுச்சமூகத்தோட இவங்க உரையாடிக்கொள்ள இந்தத் திருவிழா ஒரு நல்ல தளமா இருக்கும். இதன்மூலம் பரஸ்பர புரிதல் வந்தா, எங்களோட பயணம் இன்னும் எளிமையா இருக்குமே!’’ எனச் சிரித்தபடி முடிக்கிறார் ஸ்டீவ்ஸ்.

ஏராளமான திறமைசாலிகளைக்கொண்ட மூன்றாம்பாலை, காமத்துப்பால் நோக்கித் தள்ளியதில் நம் அனைவருக்குமே பங்கு இருக்கிறது. நமக்கான நியதிகளைக்கொண்டு அவர்களுக்கான கூண்டுகளை வடிவமைத்து வைத்திருக்கிறோம். இறுக்கம் தளர்த்தி நியதிகளை உடைப்போம். அவர்களுக்கான வெளியை அவர்களே தீர்மானிக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism