Published:Updated:

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

சி.சரவண கார்த்திகேயன்

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

சி.சரவண கார்த்திகேயன்

Published:Updated:
ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

``சார், எங்க அப்பா ஓர் ஆடிட்டர். ‘நீ சி.ஏ படி. வேலைக்குக் கஷ்டப்பட வேண்டிய  அவசியமே இருக்காது. நல்லா சம்பாதிக்கலாம்’ என்றார். நானும் சி.ஏ படிச்சு இன்னைக்கு நல்ல வசதியோட இருக்கேன். ஆனால், நான் என் மகனை சி.ஏ படின்னு சொல்ல முடியாது. இன்னும் ஐந்து வருஷத்துல, ஒரு சி.ஏ பண்ற வேலையை கம்ப்யூட்டரே பண்ணிடும். எல்லாமே ஆட்டோமேஷன்’’ என்று எதிர்கால பயத்தைப் பகிர்ந்துகொண்டார் நண்பர் ஒருவர். ஆமாம். ஐ.டி துறையில் மட்டுமல்ல, உலகின் அத்தனை துறைகளுக்குள்ளும் ஆழம் போட ஆரம்பித்துவிட்டது ஆட்டோமேஷன்.

தொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது. அதனால், செலவு குறைவு, வேலை விரைவு போன்ற சாதகங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அது வேலை
வாய்ப்புகளைக் காவு கேட்கிறது என்பதுதான் மனிதர்களின் பயம்.

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

இது இன்று நேற்று எழுப்பப்படும் பிரச்னை அல்ல; உலகின் முதல் இயந்திரமான சக்கரத்தை மனிதன் கண்டுபிடித்த காலத்திலேயே அதுவரை வெறுங்கையால் செய்துவந்த வேலைகளுக்கு ஆபத்து வந்திருக்கக்கூடும். அது தொடங்கி தொழிற்புரட்சி, தொலைத்தொடர்பு வளர்ச்சி, கணினிப் பெருக்கம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் இயந்திரங்களின் வருகை எச்சரிக்கையோடும் பயத்தோடும் மானுட குலத்தால் எதிர் கொள்ளப்பட்டிருக்கிறது. அது நியாயமானதும்கூட. காரணம், ஒவ்வொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் சில பல பணிகளைத் தின்று செரித்தே பிறக்கிறது.

எந்தெந்த நிறுவனங்கள் தவறுகளைக் குறைத்து, வேலையை வேகமாக்கி, காசை மிச்சம் செய்யவும் விரும்புகின்றனவோ, அவை இயந்திரமயமாக்கலை நோக்கி நகர்கின்றன. ஒரு காலத்தில், இன்ஜினுடன் பேட்டரியை இணைத்து காரை உருவாக்குவதையும் மனிதனே செய்தான். கிளட்ச் மிதித்து கியர் மாற்றி கார் ஓட்டுவதையும் அவனே செய்தான். பிறகு, காரை உருவாக்குவதை இயந்திரங்கள் எடுத்துக்கொண்டன. இன்று காரை ஓட்டுவதையும் கூட இயந்திரங்கள் செய்யத் தொடங்கியிருக்கின்றன. முன்பு கார் தொழிற் சாலைகளில் உதிரி பாகங்களை இணைத்தோர் வேலை இழந்தார்கள். இப்போது கார் ஓட்டுநர்கள் தங்களது பணியை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள்.

டொயோட்டா போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே அரிதாய் இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கின்றன. அவை இயந்திரங்களை நாடாமல், கூடுதல் பணியாளர்களை அமர்த்தி உற்பத்தியை மேற்கொள்கின்றன. `இயந்திரங்கள் சராசரிப் பணியாளர்கள் போன்றவை. மாறாக, மனிதர்களோ முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டால், அபார வேலைக்காரர்களாக உருவாக முடியும், அதன்மூலம் உற்பத்தியின் தரம் கூடும்’ என்பது அந்நிறுவனத்தின் சித்தாந்தமாக இருக்கிறது. ஆனால், இது ஆபூர்வம்.

இன்று  ஒரு வங்கிக் கிளையை எடுத்துக் கொண்டால், முன்பை விடவும் குறைவான ஆட்களே பணிபுரிகிறார்கள்.

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

ஏ.டி.எம்-களிலும் ஆன்லைனிலுமே பெரும் பாலான பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்ட பிறகு, கிளை எதற்கு? சிட்டி பேங்க் போன்ற சில வங்கிகளின் கிளைக்குச் சென்றாலே, அதற்குக் கணிசமான ஒரு தொகையைச் சேவைக் கட்டணமாக‌ வசூலிக்கிறார்கள். மருந்தகங்களில் பரிந்துரைச் சீட்டைப் புரிந்துகொள்ளக்கூட ரோபோக்கள் வந்து விட்டன. சட்ட ஆவணங்களைச் சரிபார்க்க மென்பொருள் வந்துவிட்டது. இன்று இருந்த இடத்தில் இருந்தபடி வீட்டுக் குத்தகை ஒப்பந்தத்தை முத்திரைத்தாளில் அடித்துப் பெற்றுவிட முடிகிறது. சிக்கலான வருமான வரித் தாக்கலைக்கூடச் செய்துவிட முடிகிறது. முன்பு இதற்கெல்லாம் முகவர்கள் அல்லது நிபுணர்கள் தேவைப்பட்டார்கள்.

விண்வெளி வீரர்களுக்கு இணையான ரோபோக்களை நாசா உருவாக்கியிருக்கிறது. ராணுவத்தில் பணிபுரிய ரோபோக்களைத் தயாரிக்கிறார்கள். `எந்திரன்’ படத்தில்கூட விஞ்ஞானியான ரஜினி உருவாக்குவது ராணுவத்தில் சேவை செய்யும் திட்டத்திலான ஒரு ரோபோவைத்தான். இதனால், போரில் உயிரிழப்புகள் குறையும் என்பதுதான் ரோபோக்களுக்கான மூலகாரணம்.

எங்கும் ரோபோ... எதிலும் ரோபோ!

அமேஸான் நிறுவன‌ம் Amazon Go என்ற விஷயத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்திருக்கிறது. பணியாளர்கள் இல்லாத ஒரு சூப்பர் மார்க்கெட். வழக்கமான கடைகள் போலவே பொருள்கள் அடுக்கப்பட்டிருக்கும். கடையில் பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பில்லிங் கவுன்ட்டர்கள் கிடையாது. வாடிக்கையாளர் அங்கிருந்து வேண்டுமென்பதை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்துவிடலாம். எந்த வரிசையிலும் நிற்க வேண்டியதில்லை. சென்ஸார்கள் மூலம் என்னென்ன‌ பொருள், யார் எடுத்தது என்பது அறியப்பட்டு, அவர்களின் கணக்கில் தொகை பிடிக்கப்படும். தற்போது பரிசோதனை நிலையில் இருக்கும் இந்தத் திட்டம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். முழு தானியங்கிமயமாக்கத்தின் ஓர் அபார உதாரணம் இது.

அதே நிறுவனம் செய்துள்ள‌ இன்னொன்று Amazon Prime Air. வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் பொருளை `ட்ரோன்’ எனப்படும் சிறிய, ஆளற்ற ஹெலிகாப்டர் மூலம் வீட்டில் டெலிவரி செய்யும் முறை.  சட்டப்பூர்வ அங்கீகாரங்களுக்காகக் காத்திருக்கிறது அமேஸான்.

காக்டெய்ல் கலப்பதற்குக்கூட ரோபோ வந்து விட்டது. Royal Caribbean Quantum of the Seas என்ற கப்பலில் இருக்கும் பாரில் உள்ள இரண்டு ரோபோக்கள் (பெயர் N1-C மற்றும் B1-O) சுமார் 300 விதமான காக்டெய்ல்களை நொடிகளில் செய்யவல்லவை.

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

இவ்வளவு ஏன், விரைவில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒரு ரெஸ்ட்ராண்ட் முழுக்க முழுக்க ரோபோ சர்வர்களைக் கொண்டு இயங்குவதற்கான வேலைகளை செய்துகொண்டிருக்கிறது. ஆர்டர் எடுப்பது, உணவுகளைக் கொண்டுவந்து வைப்பது என எல்லாமே ரோபோக்கள்தான் செய்யுமாம்.

இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் உலகின் பாதிப் பணியாளர்களை நீக்கிவிடும் என்கிறார் மோஷே வர்டி என்ற ரைஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர். சர்வதேசியத் தரவு நிறுவனத்தின் (International Data Corporation) ஆய்வுப்படி உலகில் எந்த வேலையும் பாதுகாப்பானதல்ல; எல்லாமே ஒழிக்கப்படும் சாத்தியம் கொண்டவையே. பாலியல் தொழிலாளிகளின் வேலைக்குக்கூடப் பாதுகாப்பு இல்லாத நிலை வரும் என்கிறார்கள்.

சர்வதேச ரோபோடிக்ஸ் கூட்டமைப்பு (International Federation of Robotics - IFR) இன்று அமெரிக்காவில் மொத்தம் 15 முதல் 17.5 லட்சம் ரோபோக்கள் தொழிற்சாலைப் பணியில் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 40 முதல் 60 லட்சமாக உயரும் எனக் கணித்துள்ளது.

2032-ல் பாதிக்குப் பாதி வாகனங்களை மனிதர்கள் ஓட்ட மாட்டார்கள். இதனால், 17.5 லட்சம் வாகன ஓட்டிகள் வேலை இழப்பார்கள். இது ஒரு துறை பற்றிய பார்வை. இதுபோல் ஒவ்வொரு துறையிலும் ஆட்டோமேஷனின் பங்கு அதிகரிக்கும். 2028-ல் 95 சதவிகிதம் விமானப் போக்குவரத்து ரோபோக்களால் கட்டுப்படுத்தப்படும். 2034-ல் Fortune 500 பட்டியல் நிறுவனங்களில் மேலாண்மைப் பணிகளைக்கூட ரோபோக்கள் செய்யத் துவங்கிவிடும். 2036-ல் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் இருபதுக்கும் குறைவான‌வ‌ர்களே பணிபுரிவர்.

வேலைவாய்ப்பு குறையுமா, கூடுமா?

எம்.ஐ.டி-யின் டேரன் அசிமாக்லு, போஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேஸ்குவல் ரெஸ்ட்ரெபோ இருவரும் பொருளாதார வல்லுநர்கள். அவர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத்தால் விளையும் வேலை இழப்புகள் பற்றிய ஆய்வைச் சமீபத்தில் நடத்தினார்கள். அதன் முடிவுகள் ஆச்சரியமானவை மட்டுமல்ல; அச்சமூட்டுபவை.

1990 முதல் இன்றுவரை அமெரிக்காவில் ரோபோக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பறிக்கப்பட்ட வேலைகள் 3.6 முதல் 6.7 லட்சம். குறைந்த பாதிப்பே நிகழும் என்ற உத்தேசத்தில் கணக்கிட்டாலும், அடுத்த பத்தாண்டுகளில் 17 லட்சம் முதல் 32 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள். புதிதாக வரும் ஒவ்வொரு ரோபோவும் 5.6 மனிதர்களின் வேலைக்கு உலை வைக்கிறது; மீதமிருப்பவர்களின் கூலி முக்கால்வாசி அல்லது பாதியாகிவிடும்.உலக வங்கியின் 2016-ம் ஆண்டு அறிக்கை, முன்னேறிய நாடுகளில் ரோபோக்களால் அடுத்த இருபதாண்டுகளில் 57 சதவிகிதப் பணியிழப்புகள் ந‌டக்கும் எனச் சொல்கிறது.

இயந்திரமயமாக்கலால் வேலைகளுக்குப் பிரச்னை வராது, அவை கூடுதல் வேலை வாய்ப்புகளையே உருவாக்கும் என்று சொல்லும் பொருளாதார நிபுணர்களும் இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் உதாரணம் ஏ.டி.எம்-கள் வந்த‌ காலத்தில் அவை வங்கிப்பணிகளுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; அதற்கு மாறாக, அது உயர்ந்தே இருக்கிறது. ஏ.டி.எம்-கள் வங்கிச் செயல்பாடுகளைப் பரவலாக்கின; மக்களுக்கு எளிதாக்கின. அதனால் வங்கிகளுக்கான தேவை அதிகரித்தது. அதன் காரணமாகப் புதிய வாடிக்கையாளர்கள் உருவாக, வங்கிகள் கூடுதல் கிளைகளைத் திறக்க வேண்டி இருந்தது. நகரங்கள் தாண்டி குக்கிராமங்களுக்கு விரிய‌ வேண்டி இருந்தது. அதனால், கூடுதல் ஆள்கள் வங்கிப்பணியில் அமர்த்தப்பட்டார்கள்.

ஆனால், இங்கே ஒரு  விஷயம்  கவனிக்கத்தக்கது. வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும் எவ்வகை வேலைகள் அதிகமாகின? உழைப்பை நம்பும் கடைநிலை ஊழியரின் பணிகள் சுருங்கி அவற்றுக்குச் சற்று மேலான, அறிவைப் பயன்படுத்தும் வேலைவாய்ப்புகள் பெருகி யிருக்கின்றன. ஆக, இயந்திரமயமாக்கல் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்பது அரை உண்மை. எப்போதும் அரை உண்மைகள் பொய்களைவிட ஆபத்தானவை.

அமெரிக்காவில் அடுத்த பத்தாண்டுகளில் புதிய வகைத் தொழிலாளர்கள் உருவாகி வருவார்கள். 2025-ல் அங்கு 2.27 கோடி வேலைகள் ரோபோக்களால் நிரப்பப்படும். இதனால், மனிதர்களுக்கு 16 சதவிகிதம் வேலை இழப்பு நிகழும். அதே சமயம், இது 1.36 கோடி புதிய வேலைகளை உருவாக்கும். இது 9 சதவிகிதம் வேலைவாய்ப்பு வளர்ச்சி. இயந்திரங்கள் இல்லாமல் இந்தப் புதிய வேலைகள் உருவாகியிருக்கவே முடியாது. இயந்திரத்தால் பத்து வேலை அழிந்தால், ஒரு புதிய வேலை அதனால் உருவாகிறது.

தற்போது இருக்கும் பணிகளில் 25 சதவிகிதம் மாற்றம் பெறும். 1960-களின் நிதி இயக்குநர், கால்குலேட்டர்கள், லெட்ஜர்கள் கொண்டு நிதிநிலை அறிக்கை தயார் செய்திருப்பார். இன்று அவரது வேலை மென்பொருள்களால் ஆனவை. அதன் காரணமாக அவரது வேலையின் இயல்பு உயர் ரகமாக மாறிவிட்டது. இன்று அவர் வேலையானது முதலீட்டு முடிவுகள், நிதி நிர்வாக உத்திகள் என மாறிவிட்டது. இரண்டுக்கும் கல்வித் தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் வித்தியாசமுண்டு என்பதைக் கவனிக்க வேண்டும். ரோபோக்களை எதிர்கொள்ள இது புரிய‌ வேண்டும்.

இன்று படிக்கவில்லை என்றால், மூட்டைத் தூக்கியேனும் பிழைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். நாளை ரோபோக்களின் பரவலாக்கத்துக்குப் பின் அது சாத்தியமில்லை. பிழை இல்லாமல், சுணக்கம் காட்டாமல், கூலி கேட்காமல், கொடி பிடிக்காமல், எட்டுமணி நேரம் என்ற வரையறை இல்லாமல் மூட்டை தூக்க ஒரு ரோபோ இருக்கும்போது, எதற்கு மனிதன்? அப்போது சுயத்தொழில் என்ற வாய்ப்பைத் தவிர்த்துப் பார்த்தால், மனிதன் பிழைப்பதற்குப் படித்தே ஆக வேண்டும் என்றாகிவிடும்.

கல்வியிலும் மேலோட்டமாய் கணக்கு வழக்குப் பார்க்கும் பணிகள் இல்லாமல் போகும். எதில் சிந்தனைத் தேவை உள்ளதோ, அப்பணிகள் மட்டும் மிஞ்சும். நம் கல்வி அதற்குரிய வகையில் மக்களைத் தயார் செய்வதாய் மாற வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு!

இயந்திரமயமாக்கலை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று ரோபோக்கள்; மற்றது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). அதாவது, தானாக அறிவைப் பெருக்கிக்கொண்டு சுயமாய்ச் சிந்தித்துச் செயலாற்றக்கூடிய இயந்திரங்கள். இதில் முதல்வகை இயந்திரங்கள் தாம் இன்றைய தேதியில் வெற்றிகரமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. இரண்டாவது வகை இன்னும் ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. அவற்றுக்கான செலவும் மிகமிக அதிகம். தற்போதைக்கு இயந்திரங்களைக் கொண்டு பெரும்பாலும் வழமையான செயல்களை மட்டுமே செய்கிறார்கள். உதாரணமாக, தொழிற்சாலைகளில் உதிரிபாகங்களை இணைப்பது போன்றவை. கற்பனைத்திறனைக் கோரும் அல்லது சிக்கல்களைத் தீர்க்கும் திறன் தேவைப்படும் கணிக்கமுடியாத பணிகள் இன்னும் மனிதர்களின் வசம்தான் இருக்கின்றன.

ஆனால், இவ்விரண்டு வகைப் பணிகளுக்கு மான எல்லைக்கோடு மெள்ள அழியத் தொடங்கியிருக்கிறது. இன்று இயந்திரங்கள் தம் பணிகளைச் செம்மையாக்குவது எப்படி என்று புள்ளியியல் படிமங்களின் (Statistical Patterns) அடிப்படையில், தானே கற்றுக் கொள்ளும் வசதியைப் பெறத் துவங்கி இருக்கின்றன. அமெரிக்காவில் தொலைபேசி வாடிக்கையாளர் சேவை, நெடுஞ்சாலைச் சுங்கவரி வசூலிப்பு போன்ற பணிகளில் ஏற்கெனவே இது நடந்தேறி வருகிறது. விரைவில் பொதுவான மருத்துவப் பரிசோதனைகளை ரோபோக்களைக் கொண்டு செய்யும் திட்டம் இருக்கிறது. இப்போதேகூட‌ துல்லியம் கருதி வழமையான‌ சில‌ அறுவை சிகிச்சைகளை இயந்திரங்கள் கொண்டு செய்யும் நடைமுறை இந்தியாவரை வந்துவிட்டது.

நாளை செயற்கை நுண்ணறிவு பெருமளவு முன்னேறி மனிதர்களுக்கு இணையான சிந்தனைச்சக்தி கொண்ட ரோபோக்களை உருவாக்க முடிகிறது என்றால், அப்போது மனிதர்களின் இருப்பு உண்மையிலேயே கேள்விக்குள்ளாகிவிடக்கூடும். காரணம், அப்போது மனிதர்களுக்கான தனித்துவம் என்று ஏதும் இராது. தனித்துவத்தை நாம் தக்கவைத்துக் கொண்டிருக்கும்வரைதான் மனித இனம் ஜீவித்திருக்க முடியும்.

ரோபோக்களால் பணியிழப்பு நிகழும்போது, மனிதர்கள் த‌ங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாமல் போகும். அது ஒரு புரட்சிக்கான, உள்நாட்டுக் கலகத்துக்கான தொடக்கம். அரசியல் தலைவர்கள் இதன் விபரீதத்தை உணர்ந்ததுபோலவே தெரியவில்லை.

ஆட்டோமேஷன் என்னும் அசுரன்!

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இவ்விஷயம் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசப்படவில்லை. ட்ரம்ப் அரசின் கருவூலச் செயலர் ஸ்டீவ் நூச்சின், சமீபத்தில் `இயந்திரங்கள் மனிதர்களின் வேலையை எடுத்துக்கொள்வது பற்றித் தற்போது கவலைப்பட ஏதுமில்லை, அது நடக்க ஐம்பது நூறு ஆண்டுகள் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார். அது ஆழமற்ற‌ அலட்சியமான பேச்சாகவே கருதப்படுகிறது.
பில் கேட்ஸ் `ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும் . அப்படிக் கிடைக்கும் வருமானத்தை அதனால் பணியிழந்தோருக்கான மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு நல்வாழ்வுத் தொகையாய்ச் செலவழிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதை அரசாங்கங்கள் பொறுப்புடனும் புத்தியுடனும் முன்னெடுக்க வேண்டும். மாறாக ரோபோக்களின் பரவலாக்கம் வேலைகளைக் கொல்லும் எனத் தயங்கித் தவிர்க்க முடியாது.

ரோபோக்கள் நடுங்காக் கரங்கள் பெற்றவையாக இருக்கலாம். அதன்மூலம் அதீத துல்லியத்தன்மை கொண்டவையாக‌ அவை இருக்கலாம். ஆனால், ஒரு மருத்துவரின் அனுபவ அறிவையோ, ஒரு செவிலியின் சேவைக் குணத்தையோ அவை கொண்டிருக்காது.

உண்மையில், தானியங்கிமயம் நாம் எண்ணியிராத புதிய வேலைகளை உருவாக்கும். சொல்லப்போனால், எதிர்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களோடு அருகருகே நின்று பணிபுரிவார்கள். மனிதர்களும் எந்திரங்களும் கைகோத்துப் பணிபுரிவதும் புரட்சியே!