பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஃ
பிரீமியம் ஸ்டோரி
News

வெய்யில், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வீன இலக்கியத்தில் மிக அரிதாகப் பயன்படுத்தப்படும் தமிழ் எழுத்துகளுள் ஒன்று ஃ. இலக்கியத்தில் மிக அரிதாக நிகழ்கிற அற்புதங்களில் ஒன்று அஃக். வடிவ நேர்த்திக்காகவும் அச்சுத் தரத்துக்காகவும் பதிப்புக்காகவும் மூன்று முறை தேசிய விருதை வென்றது அஃக் சிற்றிதழ். இதுவரை தமிழில் வேறு எந்த இதழுக்கும் கிடைக்காத மரியாதை இது. தன் வியர்வையால் இதைச் சாத்தியப்படுத்தியவர் ‘அஃக்’

ஃ

பரந்த்தாமன். யாவையும் வறுமை அவரிடமிருந்து பிடுங்கி விழுங்கிக்கொள்ள, வயோதிகத்தின் மறதிநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கும்கூட இரவுபகலாகத் தன் கடந்தகால நினைவுகளையும் புதிய புதிய கனவுகளையும் வைத்துத் தனக்குத்தானே பகடையாடிக்கொண்டிருந்தவர், இப்போது தன் மூச்சை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார்.

தமிழ்ச் சமூகத்தின் தீவிர சிந்தனைத் தளங்களுள் முதன்மையானது சிறுபத்திரிகை உலகம். அது மகத்தான இயக்கம் கொண்டிருந்த 70-களில் வெளியான பல்வேறு சிற்றிதழ்களில் மிக முக்கியமானது அஃக். பிரமிள், சுந்தர ராமசாமி, நகுலன், கி.ரா, சார்வாகன், ந.முத்துசாமி, அம்பை, வெங்கட் சாமிநாதன், க.நா.சு, ஞானக்கூத்தன், ஜெயகாந்தன், வண்ணதாசன் எனத் தமிழின் பல பெருமித அடையாளங்கள் தங்களை நிறுவிக்கொள்ள களம் அமைத்துக் கொடுத்த இதழ் அஃக். பஞ்சாலையில் இரும்பு ராட்டை இழுத்து வேலை செய்த பரந்த்தாமனின் தாயாருடைய பி.எஃப் பணத்தால் உருவானது ‘பிருந்தாவனம் பிரின்டர்ஸ்’. அதன் வழியாகத் தனது இலக்கியக் கனவுகளை ஓய்வின்றி அலங்கரித்துக்கொண்டிருந்தார் பரந்த்தாமன். ஆள்வைத்துக் கூலி கொடுக்க முடியாமல் அவரும் அவர் மனைவியுமாக எழுத்துகளை அச்சுக்கோத்தார்கள். ஒரு பக்கத்தை வடிவமைக்க ஒருநாள் என ஒரு தவம்போல அஃகைச் செதுக்கி எடுத்தார்.

ஃ

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என நவீனப் படைப்புலகின் ராஜபாட்டையாக விரிந்தது அஃக். ஆனாலும், விற்பனை- லாபம் என்ற கணக்குகளில் ஆர்வமில்லாத பரந்த்தாமனின் ‘பிருந்தாவன’த்தை நோக்கி வறுமை வேகமாகச் சுழன்று வந்தது. `இலக்கியத்துக்காக மட்டுமே இந்த அச்சகம், திருமணப் பத்திரிகைகள், பில் புத்தகங்கள் அடிக்க அல்ல; தனது ‘அற்ப’ லௌகீகப் பொருளாதாரத் தேவைக்காக அதைப் பயன்படுத்துவதில்லை’ எனப் பிடிவாதமாக இருந்தார்.

அஃக் நின்றது. அச்சகம் விற்கப்பட்டது. கனவுகளின் குடில் சரிந்தது. சினிமா இயக்குநராக வேண்டும் என்ற அவரது மற்றொரு கனவும் கனவாகவே உதிர்ந்தது. வயோதிகத்துடன் கண்ணாமூச்சி ஆடும் நினைவுகளோடு ஒரு தனியார் முதியோர் இல்லத்தில், சில ஆண்டுகளாக ‘ஓய்வெடுத்து’க்கொண்டிருந்த அஃக் பரந்த்தாமனைக் காலம் நிரந்தர ஓய்வுக்குள் அழைத்துக்கொண்டுவிட்டது. இது ஒரு தோல்வியின் கதை போலிருக்கலாம். ஆனால்,  வெற்றியை நோக்கிய முடிவற்ற மனிதப் பிரயத்தனம்!

ஃ

2006 - ல் அஃக் இதழ் தொகுப்பை நூலாகக் கொண்டுவந்தபோது, அதன் முன்னுரையில் பரந்த்தாமன் இப்படி எழுதியிருந்தார்: ``புதுமையையும், படைப்பையும் இலட்சியமாகக்கொண்டு ஒரு யுகசந்தியின் விளிம்பில் நிற்பவனுக்குக் காலமாற்றங்கள், கலை இலக்கியப் போக்குகள் ஒரு தடையாக இருக்க முடியாது. அவன் நேற்றிலிருந்து இன்றைக்கும், இன்றிலிருந்து நாளைக்கும் ஊடுருவிச் சென்றுவிடுவான்.”

ஆம். பரந்த்தாமன் தோற்றுவிடவில்லை; மறைந்துவிடவில்லை. அவரது தீராத கனவுகளோடு நாளைக்குள் ஊடுருவிச் சென்றுவிட்டார். ஒரு புதிய வாசகன் பழைய அஃக் இதழைப் பரவசத்தோடு புரட்டும் சத்தம் கேட்கிறது!