Published:Updated:

எண்ணெயா, உணவா?

எண்ணெயா, உணவா?
பிரீமியம் ஸ்டோரி
எண்ணெயா, உணவா?

எண்ணெயா, உணவா?

எண்ணெயா, உணவா?

எண்ணெயா, உணவா?

Published:Updated:
எண்ணெயா, உணவா?
பிரீமியம் ஸ்டோரி
எண்ணெயா, உணவா?

மிழகத்தின் இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்காகப் பற்பல போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில், இடிபோல இறங்கியிருக்கிறது இன்னொரு செய்தி. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலத்தில் 92,000 கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளை அமைக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

எண்ணெயா, உணவா?இந்தக் கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளன. அதேசமயம், இந்த மண்டலத்தில் எண்ணெய்க் கிணறுகளோ, எரிவாயுக் கிணறுகளோ அமைக்கப்படாது என்றும் அரசுத்தரப்பில் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ‘மக்களின் விருப்பத்துக்கு மாறாக, மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம்’ என்று தமிழக அரசு பலமுறை சொல்லி, அந்த உறுதிமொழிகளை அரசே மீறியதற்கு பல்வேறு உதாரணங்கள் இருப்பதுதான் பயத்தை அதிகரிக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள்... அவசியம். இயற்கை வளங்களையும் விளைநிலங்களையும் பாதுகாப்பது... அத்தியாவசியம். அதேசமயம், `எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சுற்றுச்சூழல் சீர்கேடு என்கிற பெயரில் எதிர்ப்பது நியாயம்தானா?’ என்று எழும் குரலிலும் நியாயமிருக்கிறது. ஆனால், `குறுகிய கால பலன்களை அளிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்காக இயற்கை வளங்களை நாமே அழிக்கலாமா?’ என்று எழுப்பப்படும் கேள்வியையும் பரிசீலிக்க வேண்டும்.

ஏற்கெனவே ‘தொழில்துறை வளர்ச்சி’ என்ற பெயரில் திருப்பூரில் அமைக்கப்பட்ட சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளால் பொருளாதாரம் வளர்ந்தது உண்மையென்றாலும், சாயப்பட்டறைக் கழிவுகளால் நொய்யலாறு சீர்கெட்டுப் போனதும், ஒரத்துப்பாளையம் என்ற அணையின் நீரும், அதையொட்டிய நிலப்பரப்பும் விஷமாகிப் போனதும் சமீபகாலத்தில் நாம் கண்முன் கண்ட யதார்த்தம். நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் இந்தக் கொடுமைகளுக்கு ஓரளவாவது தீர்வு கிடைத்தது.

தற்போது பெட்ரோலிய மண்டலம் அமையவுள்ள கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகியவை நிலத்தடி நீர்வளம் நிறைந்த, செழிப்பான விவசாய பூமி. காவிரியில் தண்ணீர் வராவிட்டாலும் வேளாண்மை பொய்க்காத நிலப்பகுதி. அத்தகைய அற்புத பூமி, பெட்ரோலிய மண்டலத்தால் சீர்கெடவே அதிகம் வாய்ப்புள்ளது. குஜராத் மாநிலம் பரோடாவில் பெட்ரோலிய மண்டலம் கடலையொட்டிய பகுதியில் அமையவில்லை. ஆனால், தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கிராமங்கள் அனைத்தும் கொள்ளிடம் மற்றும் வங்கக்கடலை ஒட்டிய வளமான பகுதிகள். இப்பகுதிகளின் நிலத்தடியில் கடல்நீர் கொஞ்சம்கொஞ்சமாக உள்ளே புகுந்து விவசாயத்தையும், குடிநீர் ஆதாரங்களையும் ஏற்கெனவே சிதைக்க ஆரம்பித்திருக்கிறது. கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைக் கழிவுகள், விவசாய நிலத்தில் புகுந்ததால், நிலவளம் கெட்டுப்போனதோடு, சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகையச் சூழலில் இந்த பெட்ரோலிய மண்டலங்களும் அங்கே அமைந்தால்?

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மாற்றுத்திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் வளர்ச்சியடைய முடியும். புல் வளர்ப்பு, கரும்புச்சக்கை ஆகியவற்றின் மூலம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் சுற்றுச்சூழலும் கெடாது; நிலத்தடி நீருக்கும் பாதிப்பில்லை. `குளிர் நாடுகளேகூட சூரியசக்தி மின்சாரம் போன்ற மரபுசாரா எரிசக்தியில் கவனம் செலுத்தும்போது நாம் ஏன் இயற்கை வளங்களைப் பாதிக்கும் திட்டங்களை ‘வளர்ச்சி’ என்ற பெயரால் செயல்படுத்தத் துடிக்கிறோம்?’ என்று விவரமறிந்தவர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசாங்கங்களிடம் ஆக்கப்பூர்வமான பதில் இல்லை.

சுற்றுச்சூழலைக் கெடுத்து, நிலத்தடி நீரைப் பாதித்து உருவாக்கப்படும் இத்திட்டத்தால் நம் நெல் உற்பத்தியே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ‘எதிர்காலத்துக்குத் தேவை... எண்ணெயா, உணவா?’ என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism