Published:Updated:

வேலை இருக்கும் பட்டதாரி!

வேலை இருக்கும் பட்டதாரி!
பிரீமியம் ஸ்டோரி
வேலை இருக்கும் பட்டதாரி!

தமிழ்ப் பிரபா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

வேலை இருக்கும் பட்டதாரி!

தமிழ்ப் பிரபா - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
வேலை இருக்கும் பட்டதாரி!
பிரீமியம் ஸ்டோரி
வேலை இருக்கும் பட்டதாரி!

ணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தருகிறோம் என்கிற ஒப்பந்தத்துடன் இயங்குகிற பணித்தரகு நிறுவனங்கள், தமிழ்ச்சூழலில் குறைவு எனினும் சிலரின் வியாபார யுக்திக்கு வேலை தேடுவோர் வெந்து மடியவே செய்கிறோம்.

இணையதளங்களில் ரெஸ்யூம் அப்லோடு செய்ததிலிருந்து பொழுதொரு வண்ணமும் மின்னஞ்சல் பெட்டியைத் துழாவியும், யாராவது அழைப்பார்களா என்று அலைபேசியை வெறித்துப் பார்த்து கஸ்டமர் கேரிலிருந்து அழைத்தால்கூட கருணையுடன் பேசும் மனோபாவத்தில் நம்மைப் பழக்கப்படுத்தியிருப்போம்.

மன அழுத்தத்துடன் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏதேனும் பணித்தரகு நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். ஒரு கையால் வாயையும் மறு கையால் செல்போனையும் அணைத்தபடி இரையை நோக்கிச் செல்லும் பூனையைப்போல பதுங்கிப் பதுங்கி ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்குச் சென்று உரையாடத் துவங்குவோம்.

விவரத்தைக் கேட்ட பிறகு பரிகாரம் சொல்லும் ஜோசியக்காரரின் தன்னம்பிக்கையுடன் ``நீங்கள் கலந்துகொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு வேலை கிடைக்கும். அந்த நிர்வாகத்துக்குத் தேவையான அனுபவம் உங்களிடம் மட்டுமே சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது. ஆகையினாலே உங்களைத் தொடர்பு கொண்டோம்” என்று வழவழப்பான ஆங்கிலத்தில் பேசிவந்து, சடாரென நம்முடைய பிராந்திய மொழியில் பேசி முதன்முறை பள்ளிக்குச் செல்லும் குழந்தையைக் கொஞ்சி அனுப்புவதுபோல அனுப்பி வைப்பார்கள்.

வேலை இருக்கும் பட்டதாரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் எதிர்காலத்துக்காக அந்தரங்கமாக உரையாடுவதுபோல ஒரு நட்புறவைப் பேணுவார்கள். சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போய்ச் சேர்வதுவரை அலைபேசியில் குசலம் விசாரிப்பார்கள். சொந்தபந்தங்களுக்குக்கூட நம் மீது தனிப்பட்ட முறையில் இவ்வளவு அக்கறையும், நம்பிக்கையும் இல்லையே என்று உணர்ச்சி மேலிட உட்கார்ந்திருக்கும்போது பக்கத்துக்கு இருக்கை நபருடன் பேச்சுவார்த்தை நடந்த பிறகு புரியும். அதே பணித்தரகு நிறுவனம் பல பிள்ளைகளைத் தத்தெடுத்து அனுப்பி இருக்கிறதென்று. வந்திருப்போர்களில் சிலரின் ப்ரொஃபைலுக்கும் நிர்வாகத் தேவைக்கும் சம்பந்தமே இருக்காதென்று அங்கு போனபிறகே தெரியும்.

வேலை நாடிப்போன நிறுவனங்களில் இந்த சம்பந்தமின்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்றுமணி நேரம் ஆகும். மற்ற நிறுவனங்களில் அதுவும் mass requirement நடக்கிற இடங்களில் காலையில் சென்றால், நம்முடைய ப்ரொஃபைல் அவர்களுக்குத் தேவையா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவே கதிரவன் மேற்கில் ஒளியும்வரை காத்திருக்க வேண்டும்.

வெளியே வந்து பணித்தரகரைக் கைப்பேசியில் அழைத்தால், “நம்ம கன்சல்டன்சி பெயரை ரெஸ்யூமில் போட்டீர்களா” என்று சந்தேகத்துடன் கேட்பார். ‘ஆம்’ என்று சோர்வுடன் நாம் தலையாட்டுவதை அவர்கள் அறிய வழியில்லை. “சரி கவலைப்படாதீங்க. அடுத்து அருமையான வாய்ப்பு வருது, உங்க பேரைப் பட்டியல்ல முதல்ல போடுறோம்” என்று அவர்கள் சொல்வதையும் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. நம்பிக்கை அதானே எல்லாம் என்கிற வாக்கியத்தைச் சாறாகப் பிழிந்து தொண்டைக்கட்டுக்குப் பச்சிலை மருந்தை தடவுவதுபோல தடவிக்கொண்டு பல நேர்முகத் தேர்வுகளுக்குச் சென்றாலும், அத்தனை ஆழமான நம்பிக்கையையும் தகர்த்தெறியக்கூடிய ஒரு கூரியச் சொல் “will call you back”

பிரமாண்டான தொழிற்நுட்பப் பூங்காக்களில் அமைந்துள்ள கம்பெனிக்கு இன்டர்வியூ செல்வதென்றால், முகப்பில் வீற்றிருக்கும் செக்யூரிட்டி குழுமத்தாரிடம் இடுப்பில் சுற்றப்பட்ட அரைஞாண் கயிற்றிலிருந்து ஆதார் கார்டுவரைக் காண்பித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதோடு பிணையமாக ஏதேனும் ஓர் அடையாள அட்டையைக் கொடுத்து விசிட்டர் பாஸ் வாங்கி உள்ளே நுழையும்போது வேறு நாட்டுக்குள் நுழையும் அகதியைப் போன்றதொரு உணர்வு வந்துவிடும்.

நமது ரெஸ்யூமைப் புரட்டும் ஹெச்.ஆர், மேனேஜர் ஸ்தம்பித்துப்போய் இரண்டு நிமிடத்தில் ஆஃபர் லெட்டர் கொடுத்துவிட வேண்டுமென்கிற நப்பாசையில், பக்கம் பக்கமாக ரெஸ்யூம் தயாரித்துக்கொண்டுவந்து கொலைவெறியுடன் காத்திருந்து சோர்ந்து போயிருப்போம். அந்தநாள் முடிவுறுகிற சமயத்தில் நம் பெயர் அழைக்கப் பட்டதும் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சியுடன் உள்ளே நுழைந்து, அவருக்கு ஒரு மாலை வாழ்த்தைச் சொல்லி உட்காருவோம். எதிர்த்தரப்பிலிருந்து `டெல் அபெளட் யுவர் ஸெல்ப்’ என்று கேட்டுவிட்டுக் காது குடைய ஆரம்பித்துவிடுவார். காலையிலிருந்து இதே கேள்வியைக் கேட்டுக் கேட்டு புளித்துப்போன பாவனை அவர் முகத்தில் தேங்கியிருக்கும்.

முந்தைய கம்பெனியில் லெமன் ஸ்பூன் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியது முதற்கொண்டு ஆபீஸில் எரியாத டியூப்லைட்டை ஒளிரவைத்த சாகசம்வரை ரெஸ்யூமில் அப்டேட் செய்து வைத்திருப்போம். அவர் ``ok. can you go through your profile’’ எனச் சொன்னதும், `வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி என்ன சுகம் இங்கு படிக்கும் பெண்மையில் சுகமன்றி சந்தனமும் சங்கத் தமிழும்...’ என எஸ்.பி.பி. மாதிரி மூச்சுவிடாமல் மனதுக்குள் பாடி முடித்து இன்டர்வியூ செய்பவரைப் பார்த்ததும் அவர் ஒரு மெல்லிய ஏப்பத்தைவிட்டு ``Ok. Fine’’ என்பார்.

வேலை இருக்கும் பட்டதாரி!

பிறகு ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கேள்வியை நமக்கென பிரத்யேகமாகக் கேட்பது போல கேட்பார். அதற்கு பதில் சொல்லியதும் அதிலிருந்து ஒரு கிளைக்கேள்வி பிறக்கும். அதற்கு பதில் சொல்ல எத்தனிக்கையில் அவருடைய கைப்பேசி சிணுங்கும். `எக்ஸ்கியூஸ்மி’ எனச் சொல்லிவிட்டு அவருடைய லௌகீக வாழ்க்கையில் சில நிமிடங்கள் திளைத்துவிட்டு ‘ஸாரி, ப்ளீஸ் ப்ரோசீட்’ என்பார். நமக்கு  எல்லாம் மறந்திருக்கும்.

வேலை  கிடைக்காது என்ற நம்பிக்கையின்மை உருவாகும் அச்சமயத்தில் அதை இன்னும் வலுவாக்கும் விதமாக ‘`நடுவுல கொஞ்சநாள் gap இருந்திருக்குபோல... என்ன ரீசன்” எனக் கேட்பார்கள். அதைச் சொல்ல சற்றுத் திணறினால், ஆயுதப்பயிற்சி எடுக்க தீவிரவாதிகளுடன் சென்றிருந்தீர்களா என்கிற சந்தேக த்வனி எதிர்த்தரப்பின் முகத்தில் தெரியும்.

இன்டர்வியூவுக்கு வந்திருப்பது பெண் என்றால், அவருக்குக் குழந்தை இல்லை அல்லது புதுமணப்பெண் எனத் தெரிந்தால், கேள்வியில் ஒன்றாக “பேபி ப்ளான் இருக்கா” என்பதை தெளிவுபடுத்திக்கொண்டுதான் தொழில்முறைக் கேள்விகளுக்கே செல்கிறார்கள்.

இன்டர்வியூ சமயத்தில் எவ்ளோ நாள் நோட்டிஸ் பீரியட் என்று கேட்டு அறுபது நாள்கள், தொண்ணூறு நாள்கள் எனச் சொன்னால், வேலைக்கு எடுக்கவே யோசிக்கிறார்கள். கம்பெனியிலிருந்து உடனே வெளியேற முடியாத சிக்கல்களைப் பற்றித் தெரிந்தும் `சீக்கிரம் வந்து சேர்ந்துகொள்ள முடியுமா... அதுதான் எங்களுக்குத் தேவை’ என்று நெருக்கடி கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் கம்பெனியிலும் அதே நாள்களைத்தான் நோட்டிஸ் பீரியடாக வைத்திருப்பார்கள் என்பதை அறிந்தும் பலவீனமான குரலில் ‘ட்ரை பண்றேன்’ எனச் சொல்லி வைத்துவிட்டு வர வேண்டியிருக்கிறது. 

துறை சார்ந்த அறிவு இருந்தாலும், அரைமணி நேரத்தில் அதைச் சொல்லி நிரூபிக்கிற தைரியம் இல்லாததாலேயே பலருக்கு வேலை கிடைக்காமல் போகிறது. அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தரவுகள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் அதைப் படிக்கிறவர் அதையே பிரதி எடுக்க முயலும் பதற்றம் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.

இப்போதெல்லாம் ரெஸ்யூமில் நாம் என்ன சொல்லியிருக்கிறோமோ, அதிலிருந்துதான் கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. முடிந்த அளவு நம்மைப்பற்றியும் வேலை அனுபவங்களைப் பற்றியும் அதில் சுருங்கச்சொல்லி மற்ற விவரங்களைக் கேள்வி கேட்பவரின் தேவைக்கேற்ப விளக்கலாம் என்கிற பொறுமை இல்லை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது தினசரி வேலையாகிவிட்ட சூழலில் ரெஸ்யூமில் அடக்கி வாசிக்க வேண்டுமென சொல்வதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனமாகத்தான் தெரியும்.

ரெஸ்யூமில் கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட நபர் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார் என்பதுவரை நுணுக்கமான ஆராய்ச்சிகள் சமீபமாக நடைபெற்று வருகின்றன. அதுபோலவே வாட்ஸ் அப் வதந்திகளும் இதுவரை எத்தனை அனுப்பியிருக்கிறார் என்பதையும் நிறுவனங்கள் கணக்கில் கொள்ள வேண்டுமென்கிற ஏக்கம் இல்லாமல் இல்லை.

ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷனில் அடுத்தடுத்த கட்டம் என்று தொழிற்நுட்பத்தை வைத்துப் பணியை எளிமைப்படுத்த நிறுவனங்கள் தயாராகிக்கொண்டிருப்பதால், வேலையில் இருப்பவரைச் சுலபமாக வெளியே அனுப்புகிறார்கள். எல்லோர் மனதிலும் தன் பணியின் நிரந்தரத்தன்மை குறித்த அச்சம் கூடியிருக்கிறது.  நாற்பது வயதைத் தாண்டியவர்கள் எல்லாம் கைநடுக்கத்துடன் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அந்த வயதுக்கு மேல் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால், “உங்க பையன் வரலியா” என்று கேட்கிற மனசாட்சியற்ற காலத்தில் வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது.

அதிகச் சம்பளம் வாங்குவதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்ததும், அந்தரங்க வியாதியைச் சொல்வதுபோல சம்பள விவரங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஐ.டி/பி.பி.ஓ. துறைகளில் கட்டாய ஆட்குறைப்பு இலக்காகிவிட்ட சூழலில் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வது பெரும்பாலோனர்க்கு வாராந்திர நிகழ்வாக மாறி வருகிறது. இந்தக் காலக் கொடுமைக்குள்ளும் கொடுமைகள் நிகழ்வதை எங்கே போய் முறையிடுவது? எங்களுக்கும் ஒரு பிக் பாஸ் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் வராமலில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism